செவ்வாய், 7 ஜூலை, 2015

தண்டிக்கப்பட்ட கடைசி மன்னன்.!

250 ஆண்டுகளுக்கு மேலாகப் பரந்து விரிந்து இருந்த முகலாயர்களின் சாம்ராஜ்ஜியம் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விரைவாக சுருங்கத் தொடங்கியது. 1837ம் ஆண்டு இரண்டாம் பகதூர் ஷா சாஃபர், அவருடைய தந்தையான அகமது ஷா இறந்ததால் பதவிக்கு வந்தார். அப்பொழுது முகலாயர்களின் சாம்ராஜ்ஜியத்தின் விஸ்தீரனம் செங்கோட்டையுடன் அடங்கிவிட்டது.
பகதூர் ஷா பதவி ஏற்கும் சமயத்தில் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் உள்ள அநேக இடங்களைக் கைப்பற்றிவிட்டது, அல்லது தங்கள் வசம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டது.
பகதூர் ஷா பேருக்குத்தான் அரசர். அவரை ஒரு பொம்மை அரசராகத்தான கிழக்கிந்திய கம்பெனி நடத்தி வந்தது. பகதூர் ஷாவுக்கு கிழக்கிந்திய கம்பெனி ஓய்வூதியம் கொடுத்தது. மேலும் பகதூர் ஷா ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அவர் வரி வசூல் செய்ய அனுமதியும் வழங்கியது. பகதூர் ஷா செங்கோட்டையில் ஒரு சிறிய படையையும் பராமரித்து வந்தார். அவரால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை. அவர் சந்தோஷமாக ஆயிரக்கணக்கான கஜல்கள் எழுதினார். மிர்சா காலிப் என்ற பெரும் புகழ் பெற்ற உருது கவிஞர் பகதூர் ஷாவின் அரசவையைச் சேர்ந்தவர்தான்.
கஜலும் கவிதையுமாக இனிமையாக காலம் கழித்து வந்த 82 வயது பகதூர் ஷா அரசரின் வாழ்க்கையில் விதி சுனாமி போல தாக்கியது. கிழக்கிந்திய கம்பெனி தான் இந்தியாவில் கைப்பற்றி ஆட்சி செலுத்தி வந்த பகுதிகளில் பாதுகாப்புக்காக ஒரு ராணுவத்தை உருவாக்கியிருந்தது. அந்த ராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் அனைவரும் ஆங்கிலேயர்கள், ஆனால் வீரர்கள் அல்லது சிப்பாய்கள் என்று அழைக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் இந்தியர்கள். இந்த சிப்பாய்களுக்கு ஆங்கிலேயர்கள் போர் பயிற்சி கொடுத்து, தேவையான சமயங்களில் மட்டும் ராணுவத்தைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தினார்கள். சிப்பாய்களில் இந்துக்களும் இருந்தனர், முஸ்லிம்களும் இருந்தனர்.
கிழக்கிந்திய கம்பெனி 1853ம் ஆண்டு வாக்கில் புதிதாக உருவாக்கப்பட்ட என்ஃபீல்ட் துப்பாக்கியைத் தன்னுடைய இந்திய ராணுவத்தில் அறிமுகப்படுத்தியது. அந்தத் துப்பாக்கியில் காகிதத்தால் சுற்றப்பட்ட வெடிமருந்து நிரம்பிய தோட்டா பயன்படுத்தப்பட்டது. துப்பாக்கியில் அந்த தோட்டாவை நிரப்பவேண்டும் என்றால், தோட்டாவைச் சுற்றி இருக்கும் காகிதத்தை வாயால் கடித்து பிய்த்து எடுக்கவேண்டும். இதில் என்ன சங்கடம் என்றால் அந்த காகிதத்தில் மாடு மற்றும் பன்றியின் கொழுப்பால் உருவாக்கப்பட்ட பசை தடவப்பட்டிருந்தது.
இந்துக்களுக்கு மாடு புனிதமானது. அதனால் மாடுகளைக் கொன்று அதனுடைய கொழுப்பில் தயாரிக்கப்பட்ட தோட்டாக்களை பயன்படுத்த ஆட்சேபம் தெரிவித்தனர். முஸ்லிம்களைப் பொறுத்தவரை பன்றி என்பது ஹராம். தீண்டக்கூடாத ஒரு மிருகம். அதனால் அவர்களும் பேப்பர் தோட்டாவைப் பயன்படுத்த விரும்பவில்லை. அவர்கள் இப்படிப் புரிந்துகொண்டார்கள். மாடு மற்றும் பன்றியின் கொழுப்பால் உருவாக்கப்பட்ட பேப்பர் தோட்டாக்களை நம்மை பயன்படுத்த வைப்பதன் வாயிலாக நம் சாதி, மத நம்பிக்கைகளை வெள்ளையர்கள் போக்கடிக்க முயல்கிறார்கள். இதை நாம் அனுமதிக்கக்கூடாது. கூடுதலாக, கிறிஸ்தவ மதத்தைப் பரப்பவும் இந்த யுக்தி பயன்படுத்தப்படுகிறது என்றொரு புரளியும் பரவியது.
விளைவாக, சிப்பாய் புரட்சி வெடித்தது.
புராட்சிக்கு என்ஃபீல்ட் தோட்டாக்கள் மட்டும் காரணமில்லை. வாரிசில்லாத இந்திய ராஜ்ஜியங்களைக் கிழக்கிந்திய கம்பெனி எடுத்துக்கொண்டது. அதிகமான நில வரி வசூலிக்கப்பட்டது. ராணுவத்தில் பதவி உயர்வில் ஆங்கிலேயர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியின் மேற்சொன்ன நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த மக்கள் புரட்சியில் ஈடுபட்ட இந்திய சிப்பாய்களுடன் சேர்ந்துகொண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்தனர். அதனால்தான் 1857ல் ஏற்பட்ட சிப்பாய் புரட்சியை முதல் விடுதலைப் போர் என்று சரித்திர ஆசிரியர்கள் அழைக்கிறார்கள்.
ஆனால் இதற்கும் மன்னர் பகதூர் ஷாவுக்கும் என்ன தொடர்பு? ஒன்றுமில்லைதான். ஆரம்பத்தில், கல்கத்தாவில் மங்கள் பாண்டே என்ற சிப்பாய் கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடைய படைப் பிரிவில் உள்ள ஏனைய சிப்பாய்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். மங்கள் பாண்டே கொல்லப்பட்டார். அவருடன் பணிபுரிந்த படைப்பிரிவு கலைக்கப்பட்டது. ஆனால் பெரிய வன்முறை எதுவும் நடைபெறவில்லை.
ஆனால், கல்கத்தாவை தொடர்ந்து உத்திரப் பிரதேசத்தில் உள்ள மீரட் நகரில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவத்தில் பெரிய அமளி துமளியே ஏற்பட்டது. சிப்பாய்கள் ஆங்கிலேய அதிகாரிகளையும் அவர்களது குடும்பத்தாரையும் கொன்றுவிட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த போர்க்கொடி உயர்த்திய மற்ற சிப்பாய்களையும், ஏனையக் கைதிகளையும் விடுவித்துக் கொண்டு டெல்லியை நோக்கிப் புறப்பட்டனர்.
டெல்லியில் செங்கோட்டையில் பகதூர் ஷாவை சந்தித்து நீங்கள்தான் எங்களுடைய போராட்டத்தை வழி நடத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பகதூர் ஷா என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்தார். இதற்குள் அவரது அரசவையில் இருந்தவர்கள் இதுதான் சமயம் என்று புரட்சியில் ஈடுபட்ட சிப்பாய்களுடன் சேர்ந்து கொண்டு கண்ணில் பட்ட ஆங்கிலேயர்களை எல்லாம் தாக்க ஆரம்பித்தனர். ஏராளமான ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுடைய உறைவிடங்கள் தாக்கப்பட்டன. நிலைமை கட்டுக்கடங்காமல் போயிற்று. வெகுநாள்களாக கூட்டாமல் இருந்த தன்னுடைய அரசவையை பகதூர் ஷா கூட்டினார். போராட்டத்துக்குத் தன்னுடைய ஆதரவை தெரிவித்தார்.
புரட்சி, கலவரம், முதல் விடுதலைப் போர் என்று எப்படி அழைத்தாலும் உண்மை இதுதான். போராட்டம் கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்கு உட்பட்ட சென்னை மற்றும் மும்பை மாகாணப் பகுதிகளில் மட்டும் புரட்சி ஏதுமில்லாமல் அமைதியாக இருந்தது. ஆனால் வட மற்றும் மத்திய இந்தியாவில் நிலைமை வேறு.
ஜான்சியில் ராணி லட்சுமி பாய் போர்கொடி தூக்கினார். கான்பூரில் நானா சாகிப் மற்றும் அவருடைய தளபதி தாத்தியா தோப் எதிர்ப்பு தெரிவித்தனர். கிழக்கிந்திய கம்பெனி தன்னுடைய மற்ற பகுதிகளிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் ராணுவத்தை வரவழைத்து புரட்சியை ஒடுக்கியது. ராணி லட்சுமி போராட்டத்தில் இறந்து போனார். நானா சாகிப் ஆங்கிலேயர்களிடம் அகப்படாமல் நேபாளத்துக்குத் தப்பித்து ஓடியதாக சொல்லப்படுகிறது. தாத்தியா தோப் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். மற்ற போராட்ட கைதிகளெல்லாம் பீரங்கியின் முனையில் கட்டப்பட்டு, பீரங்கி குண்டுகளால் சிதறடிக்கப்பட்டனர்.
போராட்டத்துக்கு தலைமை தாங்குவதாக சொன்ன கிழ அரசரும் அவரது சகாக்களும் எங்கே என்று ஆங்கிலேய ராணுவம் தேடியது.
பகதூர் ஷா சாஃபரும் அவருடைய மகன்களான மிர்ஸா மொகல், மிர்ஸா கிஸிர் மற்றும் பகதூர் ஷாவின் பேரன் மிர்ஸா அபு பக்கர் ஆகியோரும் ஹுமாயூனின் கல்லறையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே கம்பெனி ராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஹட்ஸன், ஹுமாயூனின் கல்லறையை தன்னுடைய வீரர்களுடன் சுற்றி வளைத்தார். பகதூர் ஷாவை கைது செய்தார். பிடிபட்ட பகதூர் ஷாவின் மகன்களும் பேரனும் கொல்லப்பட்டனர். (இதில் பகதூர் ஷாவின் பீபியான ஜீனத் மகாலுக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சிதான். காரணம் அவளுடைய புதல்வன் மிர்ஸா ஜவான் பகத் தான் இப்பொழுது அரசரின் அடுத்த வாரிசு).
பகதூர் ஷா செங்கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் மீது, சிப்பாய்களுக்கு துணை போனது; 49 பேரைக் கொலை செய்தது; ஆங்கிலேயர்களுக்கு எதிராக தேச துரோகம் செய்தது என பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 40 நாள்கள் விசாரணை நடைபெற்றது. நாடாளும் ஒரு அரசரின் மீது தேச துரோகம் சுமத்தப்பட்டு விசாரணை நடத்தியது சரித்திரத்தில் இதுதான் முதல்முறை. இறுதிமுறையும்கூட.

திங்கள், 6 ஜூலை, 2015

சிலந்தி வலை !

அந்த நகரத்தில் இயங்கும் தீவிரவாத இயக்கத் தலைவன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.

அவனை மீட்க விரும்பிய அவனது குழவினர் போலீஸின் கெடுபிடியால் வெளியே தலைகாட்ட முடியாமல் தவிக்கின்றனர். அவர்கள் நகரத்தின் முக்கிய இடங்களில் குண்டு வைத்து ஒரு இடத்தில் வெடிக்க வைத்துவிட்டு மற்ற இடங்களில் வெடிக்காதிருக்க வேண்டுமானால் தலைவனை விடுதலை செய்ய வேண்டும் என்று அரசை மிரட்டுவதை திட்டமாக வைத்திருக்கின்றனர். போலீஸின் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பப்ளிக் மூலம் திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்கின்றனர்.
அதே நேரம் தன் மகளுடன் அந்த ஊருக்கு மாற்றலாகி வரும் ஹீரோவை காரின் டிரைவரான தீவிரவாத குழவின் புது உறுப்பினன் கடத்திச் செல்கிறான்.
மகளை பிணைக்கைதியாக்கி ஹீரோவை குண்டு வைக்கச் சொல்லி மிரட்டுகின்றனர். அவனும் அதற்கு சம்மதிக்கிறான்.

அவர்கள் யாருக்கும் ஹீரோ ராணுவத்திலிருந்து ஒய்வு பெற்ற ஒரு கமாண்டோ என்பது தெரியாது. குண்டு வைக்கும் ஹீரோ குழுவை அழித்து தன் மகளை எப்படி காப்பாற்றுகிறான்? குண்டு வெடிக்காமல் எப்படி தடுக் கிறான்?
கடைசி நேரத்தில் ஓரு குண்டை வெடிக்க வைத்து தலைவனை ரிலீஸ் செய்யும் சூழலை உருவாக்கி விடுகிறார்கள்.
வெளியே வரும் வில்லன் தன் குழுவை அழித்த ஹீரோவை மிஞ்சிய சொற்ப உறுப்பினர்களைச் கொண்டு கொல்ல துரத்துகிறான். கடைசியில் தலைவனையும், குழுவையும் அழித்து தன் மகளை காப்பாற்றுகிறான்.
சிலந்தி வலையில் சிக்கியது இன்னொரு சிலந்தி என்பது கடைசியில் தான் தெரிகிறது.

ஞாயிறு, 5 ஜூலை, 2015

பெண் எனும் தூண்டில் புழு !

ஆதி மனிதன் குழவாகவே வேட்டையாடத் தொடங்கினான். அதிக சலசலப்பை ஏற்படுத்தியதால் அவனது இரை உஷாரானதால் அவன் தன் குழவில் திறமையான வேட்டைக்காரர்களை வைத்துக் கொண்டு பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பான ஒரு இடத்தில் தங்க வைக்க விரும்பியே குகை வாழ்வை தேர்ந்தெடுத்தான்.குகை வாழ்வை தேர்ந்தெடுக்க மற்றொரு காரணமும் இருந்தது.

பெண்களின் மாதவிலக்கு காலங்களில் வன விலங்குகள் அதிகமாக தாக்குவதை அனுபவரீதியாக கண்டு கொண்டது தான் அந்த காரணம். விலங்குகளை உசுப்பும் ரத்த வாடையை தவிர்க்க இந்த குகை வாசம் உதவியது.

வேட்டை விலங்குகளுக்காக நெடுந்தூரம் அலைந்து திரிய விரும்பாத ஒரு புத்திசாலி விலங்குகள் தங்களை தேடி வந்தால் வேட்டையாடுவது சுலபம் என்று யோசித்து பெண்களை தூண்டில் புழுவாக உபயோகிக்க முயற்சி செய்கிறான். குகைக்கு வெளியே ஒரு குடிசையைப் போட்டு அதில் மாதவிலக்கான பெண்ணை கையில் தற்காத்துக் கொள்ளும் ஆயுதங்களுடன் தங்க வைக்கிறான். அவளை வேட்டையாட வரும் விலங்குகளை மறைந்திருக்கும் மற்றவர்கள் கொன்று குழவாக பசியாறுவார்கள். அந்த பழக்கம் வீடு கட்டி வாழும் போது மாத விலக்கான பெண்ணை தனியாக அரிவாள், உலக்கை போன்றவற்றுடன் படுக்க வைக்கும் பழக்கமாக மாறியிருக்க வேண்டும்.

வயது வந்த பெண்களுக்கு சடங்கு செய்யும்போது தாய்மாமன் குடிசை கட்டும் போது அதன் மேல் வில், அம்பு வைக்கும் வழக்கம் தொன்மரபின் மறக்கப்பட்ட எச்சமாகும். இந்த சிந்தனை ஒரு சடங்கின் போது தோன்றியது. அன்று விலங்குகளை கவரும் இரையாக இருந்த பெண் இன்றைய நுகர்வோர் உலகின் விளம்பரங்களிலும் அதே பாத்திரத்தை வகிப்பது காலம் மாறினாலும் பெண்களின் நிலை மாறவில்லை என்பதையே காட்டுகிறது. தான் ஒரு இரை, கவர்ச்சி பொருளாகத்தான் பயன்படுத்தப்படுகிறோம் என்று பெண் உணராதவரை அவர்களுக்கு விமோசனமோ, விடுதலையோ கிடையாது. கிடைக்காது. வேட்டி, பனியன் விளம்பரத்தில் பெண் நடிக்க வேண்டிய தேவை எங்கிருந்து, யாரால் உருவாக்கப்படுகிறது என்பதைப் பற்றி நாம் என்றைக்காவது சிந்தித்திருக்கிறோமா?

நாயும், மனிதனும்

ஆதி மனிதன் தன்னுடைய உணவுக்காக மிருகங்களை வேட்டையாடித் திரிந்த காலம். நெருப்பின் உபயோகம் அறியாமல் மாமிசத்தை பச்சையாக தின்று கொண்டிருந்தான். பசியடங்கிய பின் மீந்த மாமிசத்தை பாதுகாக்கத் தெரியாமல் வீணடித்துக் கொண்டிருந்த காலம் .

அவனை போன்றே மாமிசப் Uட்சிணியாகத் திரிந்த ஒரு ஓநாய் கூட்டம் தனியாக வேட்டையாடத் துணிபவனை இரையாக மாற்ற துடித்து வெற்றி கண்டிருந்தது. அந்த குழுவிலிருந்த சோம்பேறிகளான சில ஓநாய்கள் மனிதர்கள் வீசி எரியும் மீந்த உணவை உட்கொள்ள துவங்கின. அவனும் மூன்று வேளை உணவு உண்பதால் அவனை சார்ந்து இருந்தால் தானும் சிரமமில்லாமல் உணவு உண்ண முடியும் என்று கண்டு கொண்டன. தன்னை தொடர்ந்து வரும் ஓநாய்கூட்டத்தைப் பார்த்து முதலில் மனிதன் பயந்தாலும் தன்னை உணவுக்காகவே பின் தொடர்வதை அறிந்து ஆறுதல் அடைகிறான்.

அவனது வேட்டையில் பங்கு கொள்ளும் ஒநாய்கள், தங்கள் மோப்ப திறனாலும், ஆபத்தை முன்னறிவிக்கும் திறனாலும் மனிதனின் நெருங்கிய நண்பனாக மாறி பரிணாம வளர்ச்சியில் இன்றைய நாயாக உருவெடுத்திருக்க வேண்டும்."அட நாயே'. " என்று திட்டினால் கோபப்பட வேண்டாம். அடுத்தவன் உழைப்பின் மிச்சத்தை அனுபவிப்பவர்களுக்கு இந்த வசை சொல் பொருந்தும் தானே ?நாயின் நன்றி உணர்வு நீங்கள் போடும் ஓற்றை பிஸ்கெட்டில் அடங்கியுள்ளதென்பதும், அதன் பிறகு நீங்கள் பிஸ்கெட் போடாவிட்டாலும் என்றோ போட்ட ஓற்றை பிஸ்கெட்டிற்கு விசுவாசியாய் வாலை ஆட்டும் என்பதும் உண்மை தானே! ஆனால் பாழாய் போன மனிதன் உங்களிடம் பிஸ்கட் இருக்கும்வரைதான் விசுவாசமாய் இருப்பான் "

சனி, 4 ஜூலை, 2015

நிழலோடு ஒரு யுத்தம்.!

அவள் அந்த அலுவலகத்தில் பத்து வருடங்களாக வேலை செய்து கொண்டிருக்கிறாள்.நேர்மையான கடும் உழைப்பாளி.!சமீப காலமாக கம்பெனி ரகசியங்கள் வெளியாகி நட்டத்தை கணக்காக காட்டுகின்றது.முதலாளிக்கோ முக்கியமான ஆட்கள் யாரோ எதிர் கம்பெனிக்கு உளவு சொல்வதாக சந்தேகம்.அவருக்கு வரும் அனாமதேய போன்கால் தன்னை ஒரு உளவுத்துறை அதிகாரியாக அறிமுகம் செய்து கொள்கிறது.ஹீரோயின்தான் அந்த கருப்பு ஆடு என்றும்.,தீவிரவாத அமைப்புகளுக்கு அவள் உதவுவதாகவும் அந்த போலீஸ் நபர் குற்றம்சாட்டுகிறார்.அவளுடைய பாங்க் பாலன்ஸில் ஏராள பணம் இருப்பது அவருடைய சந்தேகத்தை அதிகரிக்கிறது.போலீஸ் நபரோ போன் வழியே அவளை துன்புறுத்தும்படி முதலாளிக்கு உத்தரவிடுகிறார்.விளைவுகளுக்கு தான் பொறுப்பேற்பதாக கூறுகிறார்.அவளை அவளுடன் பணி புரிபவர்களே துரோகி என்று சொல்லி உடல் ரீதியாகவும்,மனரீதியாகவும் துன்புறுத்துகின்றனர்.அவளோ எதுவும் புரியாமல் சித்ரவதை அனுபவிக்கிறாள்.அவளது அத்தனை துன்பங்களையும் போன்கால் மூலமாகவே அதிகரிக்கிறான் போலீஸ்.
கடைசியாக அவளிடம் பேசும் போலீஸ்காரன் தான் போலீஸ் அல்லவென்றும்.,ஏழு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொலை சம்பவத்தில் அநியாயமாக தண்டிக்கப்பட்டு சிறை சென்றவனென்றும்,அந்த வழக்கில் கம்பெனியின் நலனுக்காகவும்,உடன் பணியாற்றும் நண்பர்களுக்காகவும் பொய் சொல்லும் ஹீரோயினின் சாட்சியே தண்டனைக்கான முக்கிய காரணமாகிறது.தண்டிக்கப்பட்ட நிரபராதி தன்னை போலவே அவளும் தண்டிக்கப்பட வேண்டுமென விரும்புகிறான்.யாருக்காக பொய் சாட்சி சொன்னாளோ அவர்களே எதிரியாக மாற வேண்டும் என்ற திட்டத்தை செயல்படுத்துகிறான்.அதற்கான திட்டங்களே வாட்ச்மேன் மூலம் ரகசியத்தை திருடுவது,பேங்கில் பணம் போடுவது போன்ற நிகழ்வுகள் எல்லாம்.!கடைசிவரை தன் முகத்தை காட்டாமலே தான் நினைத்தவிதமாகவெல்லாம் அவளது நண்பர்கள் மூலம் தண்டித்து விட்டு உண்மையை சொல்லிவிட்டு காணாமல் போகிறான்.பிசிக்கல்,மென்டல் டார்ச்சர்கள் அடங்கிய கதை இது.!

மூன்று கடிதங்கள்!

அன்புள்ள லாரா.!
உன் கணவன் எட்வர்ட் பிரபு மரணதருவாயில் இருப்பதை நினைத்து ஊரோடு சேர்ந்து நாமும் துக்கப்படுவது போல் நடித்தாலும் நம் உள்ளம் எவ்வளவு மகிழ்ச்சியில் திளைக்கிறதென்பதை நீ அறிவாய்.எட்வர்டின் குடும்ப மருத்துவனான நான் எவ்வளவு சிகிச்சை தந்தாலும் அவன் பிழைக்க போவதில்லை.!அதற்கு காரணமாக இருப்பது நீ அவன் உண்ணும் உணவில் கலக்கும் ஆர்சனிக் என்னும் மெல்லகொல்லும் நஞ்சு.திரண்ட சொத்துகளை கொண்ட அவன் இறந்த பின் நாமிருவரும் வாழ்வில் இணையும் தருணத்தை எதிர் பார்த்திருக்கும் உன் ஆசை நாயகன் மார்ட்டீன்.!

இரண்டாவது கடிதம்.!

அன்புள்ள வக்கீல் டேவிட்டிற்கு.!எட்வர்டின் கடிதம்.!
லாரா என் மருத்துவனுடன் சேர்ந்து கொண்டு துரோகம் செய்கிறாள் என்று நீ சொன்னது உண்மைதான்.காலம் கடந்து விட்டது.என் முதல் மனைவி இறந்த பிறகு நான் லாராவை இரண்டாவது திருமணம் செய்திருக்க கூடாது.ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருக்கும்  என் குழந்தைகளுக்கு என் சொத்துகளை எழுதி வைத்திருக்கிறேன்.துரோகிக்கு தூரத்திலுள்ள நிர்வகிக்க முடியாத என் பண்ணை வீட்டை எழுதி வைக்கிறேன்.நான் இறந்த பிறகு வரும் இரண்டாவது சனிக்கிழமையில் லாராவும்,டாக்டரான மார்ட்டினும் ஒரு வார காலம் தங்கியிருந்தால் மட்டுமே அந்த சொத்து அவர்களை சேரும்.!
அதற்கான டாக்கு மெண்டுகளை தபாலில் உனக்கு அனுப்பியுள்ளேன்.அதனுடன் உள்ள மற்றோரு உயிலை லாரா பண்ணைவீட்டில் தங்கி முடித்த பின் திறந்து பார்க்கவும்.!
அன்புடன் எட்வர்ட்.

மூன்றாம் கடிதம்.!

அன்புள்ள டயாரியஸ்.!உன் பெற்றோரிடமிருந்து என் தந்தை அபாண்டமாக அபகரித்த உன் பண்ணை வீட்டை உனக்கு திரும்ப தர உத்தேசித்துள்ளேன்.!கூலிக்கொலைகாரனாக வாழும் உன் வாழ்நாள் கனவு அந்த பண்ணை வீடு என்பதை நான் அறிவேன்.அந்த மோசமான வழியில் உன் வாழ்க்கை பயணப்பட என் குடும்பமும் ஒரு காரணம்.இதோ உனக்கான ஒரு வாய்ப்பு.!
நான் இறந்த பிறகு வரும் இரண்டாவது சனிக்கிழமையிலிருந்து எனக்கு துரோகமிழைத்த இருவர் தங்கப் போகிறார்கள்.அவர்களை உன் முழு திறமையை பயன்படுத்தி விபத்து போல் கொலை செய்ய வேண்டும்.இதை செய்தால் அந்த பண்ணை வீடும் கணிசமான பணத்தையும் என் வக்கீலை சந்தித்து பெற முடியும்.!என்னிடமிருப்பது பழிவாங்கும் உணர்வல்ல.!என் குழந்தைகளின் உயிருக்கு அவர்களால் எந்த ஆபத்தும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த கொலை திட்டத்திற்கு உதவி செய்யும்படி உன்னை கேட்கிறேன்.இந்த கடிதத்தை படித்தவுடன் எரித்து விடவும்.!நம்மிடையேயான ஒப்பந்தத்திற்கான எந்த சாட்சியமும் இல்லாதிருப்பதையே விரும்புகிறேன்.!
அன்புடன் எட்வர்ட்.!

வெள்ளி, 3 ஜூலை, 2015

மெழுகின் ஒளி!

ஊதி அணைத்த பின்

இருளோடு கலக்கிறது.

மெழுகுவர்த்தியின் ஒளிச்சுடர் .

அந்தகார இருள் நடுவே

ஓளிந்திருக்கும்

ஓரு ஓற்றைப் புள்ளி

வெளிச்சம் !

இருள் என்பது மிகக்

குறைந்த வெளிச்சம்!

வரலாறும், சில விடை தெரியாத கேள்விகளும் !

நதிகளும், வரலாறும் நேராக பயணிப்பதில்லை என்று ஒரு பழமொழி இருக்கிறது. நதிகளின் அடி ஆழத்தில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. மூழ்கிப் போன பொக்கிசங்கள் அங்கே காணக்கிடைக்கலாம். ஆட்கொல்லி முதலைகளும் அங்கே மறைந்திருக்கலாம். ஆனால் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு நிர்ச் சலனமற்ற நதியாகவே அது காணக் கிடைக்கும்.வரலாறும் அது போலவே '

நமக்கு நன்றாக தெரிந்தது தான் மாமன்னர் அசோகனின் கதை. தன் சொந்த சகோதரர்களை கொன்று அரியணை ஏறிய அசோகர் கலிங்கத்துடன் ஏற்பட்ட போரில் மனம் திருந்தி புத்த மதத்தைத் தழுவினார் என்பது காலம் காலமாக சொல்லப்படும் கதை!தன் வெற்றிகளையும், 'நற்பணிகளையும் பாலி மொழியில் எல்லா கல்வெட்டுகளிலும் பதிவு செய்த அசோகர் தன் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்த கலிங்கப் போரில் தன்னை எதிர்த்து மோதிய கலிங்க மன்னனின் பெயரை ஒரு இடத்தில் கூட குறிப்பிடாமல் தவிர்க்கும் மர்மம் என்ன? இராஜராஜா சோழன் கடாரம் (இன்றைய தாய்லாந்த்) என்ற இடத்தை வென்றதால் கடாரம் கொண்டான் என்று சிறப்பிக்கப்பட்டான். அது போன்ற எந்த பட்டமும் அசோகர் சூடிக் கொள்ளவில்லை. இதுவரை கிடைத்த தொல்லியல் ஆய்வு முடிவுகள் கலிங்க மன்னனின் பெயரை கண்டறிய முடியவில்லை!

தற்செயலாகவோ , திட்டமிட்டோ மறைக்கப்பட்ட விசயத்தை நாம் கற்பனை செய்யும் உரிமை பெற்றவர்களாக மாறியோசித்தால்...
| .கலிங்கத்து அரசனாக ஒரு பெண் இருந்திருந்தால்?
ஒரு பெண்ணுடன் போரிட்டவன் என்ற இழி சொல்லை மாற்ற வேண்டி பெயரை அசோகர் மறைத்திருக்கும் வாய்ப்பு உண்டு.
2. பதின்ம வயது பாலகன் அதன் அரசனாக இருந்திருந்தாலும் மேலே சொன்ன காரணம் பொருந்தும்.
3. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறு குழுவொன்று கலிங்கத்தை ஆட்சி செய்திருந்தால்?
எண்ணிக்கையையும், கற்பனையையும் அதிகரித்து எழுதிக் கொண்டே போகலாம் '
இத்தகைய மர்மங்களே வரலாறை சுவராஸ்யமாக்குகின்றன'

இன்னும் விடை தெரியாத சில மர்மங்கள் விரைவில் தொடரும்!