ரகசிய தீவு
அத்தியாயம் 4 4
எதிர்பாராதது.
மதிமாறன் தீவிரமான சிந்தனையில் இருந்தான்.கருணாகரன் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருந்த கரிகாலன் எந்த தடயமும் இல்லாமல் கற்பூரம் காற்றில் கரைந்தது போல் காணாமல் போயிருந்தான். அவன் தப்பி வெளியேற வெளி ஆட்கள் யாரும் உதவி செய்திருக்க முடியாது. அரசின் உயர் பதவியில் இருக்கும் யாரோ ஒரு கருங்காலி தான் அவனுக்கு ஆயுதம் வரும் இடங்களையும் வரி வசூல் செய்த தொகை வரும் பாதையையும் கூறியிருக்க வேண்டும்
அதே மர்ம நபர் தான் சிறையில் அடைபட்டு கிடந்த கரிகாலனையும் தப்ப வைத்திருக்க வேண்டும் என்று மதிமாறன் நினைத்தான். அதனால் இந்த முறை கருணாகரனை நம்ப இயலாமல் அவனே களம் இறங்க தீர்மானித்து விட்டான். அதனால் தனக்கு அம்மை வந்திருப்பதாக பொய்யான தகவல் ஓன்றை வெளியே கசியவிட்டான்.மதிமாறன் தனிமையில் ஓய்வெடுத்து கொண்டிருப்பதாக உலகம் நினைத்து கொண்டிருந்த போது அவன் மாறுவேடத்தில் காவல் கோட்டத்திற்கு போய் சேர்ந்திருந்தான்.
அதற்கு முன்பாகவே அவன்வேண்டுமென்றே வடதிசையில் இருந்த காவல் கோட்டத்திற்கு நிறைய ஆயுதங்களையும், செல்வங்களையும் இடமாற்றம் செய்தான். அது கரிகாலனை பிடிப்பதற்காக மதிமாறன் உருவாக்கி வைத்த பொறி.
இதை அறியாத கரிகாலன் யோகியின் பேச்சை புறக்கணித்தான். யோகியின் பேச்சை மீறி அந்த காவல்கோட்டத்தை தாக்கி ஆயுதங்களை திருடி தன்னுடைய வீரத்தையோகிக்கு பறைசாற்ற வேண்டும் என்று அவன் விரும்பினான்.
தான் மேற்கொள்ளும் தாக்குதல் முயற்சி தோல்வியடைந்தால் கூட பிடிபடும் தன்னை சிறையில் தான் அடைப்பார்கள். அங்கிருந்து மீட்க யோகி இருக்கிறார் என்ற அசட்டு தைரியம் அவனை வழி நடத்தியது.
இரவு நேரம் .
வீசி எரிந்த கோலி குண்டுகளாக நட்சத்திரங்கள் திசைக்கு ஓன்றாக சிதறியிருந்தன.காவல் கோட்டத்திலிருந்து அரை காத தூரத்தில் இருந்த காட்டு பகுதியில் தன் குழுவை சேர்ந்த ஐந்து பேருடன் தீக்காய்ந்து கொண்டிருந்தான் கரிகாலன்.அவனது குழுவில் பார்த்திபனும், வில்லவனும் இருந்தனர்.
"நண்பர்களே! கவனமாக கேளுங்கள்!விடிவதற்கு சற்று முன்பாகத்தான் நாம் அந்த காவல் கோட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப் போகிறோம். அப்போதுதான் அவர்கள் நல்ல தூக்கத்தில் இருப்பார்கள்" என்றான் கரிகாலன் தொண்டையை செருமியபடி.
"கரிகாலா! நீ அவர்களை தவறாக எடை போட்டுவிட்டாய். நம் பக்கம் ஐவர் தான் இருக்கிறோம். அவர்கள் இருபது பேருக்கு மேல் இருக்கிறார்கள். நீ சிகப்பு முகமூடியுடன் அவர்களின் முன்னால் தோன்றினாலே போதும். அவர்கள் எச்சரிக்கையடைந்து விடுவார்கள்" என்றான் வில்லவன்.
"அதைக்கூட வா நான் யோசிக்காமல் இருப்பேன்?" என்று சிரித்தான் கரிகாலன்.
"பிறகு எப்படித் தான் நாம் தாக்குதல் நடத்த போகிறோம்?" என்றான் பார்த்திபன்.
" தாக்குதல் பிறகு. முதலில் அவர்களை ஆனந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கப் போகிறோம்" என்றான் கரிகாலன்.
"நீ பிடிபடுவது தான் அவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியாக இருக்கும். அதை விட மகிழ்ச்சியான செய்தி வேறு என்ன இருக்க போகிறது ?" என்றான் மற்றொருவன்.
"சரியாகச் சொன்னாய் நண்பா. நாளை காலை நான் பிடிபட்ட கைதியாக அவர்கள் முன்னால் நிற்க போகிறேன். பரிசு தொகைக்கு ஆசைப்பட்டு என்னை பிடித்து அரசிடம் ஒப்படைக்க போகிறவர்கள் நீங்கள் நால்வரும். எப்படி என் திட்டம்?" என்று சிரித்தான் கரிகாலன்.
" அற்புதமான திட்டம். இதை யாரும் சந்தேகிக்கவே மாட்டார்கள். தேடப்படும் குற்றவாளியை நாம் பிடித்து கொண்டு போய் நிறுத்தினால் அவர்கள் முன் எச்சரிக்கையாக ஆயுதங்களை எடுக்க மாட்டார்கள். சிகப்பு முகமூடியை பிடித்து வந்த நம்மையும் சந்தேகிக்க மாட்டார்கள். அவர்கள் அலட்சியமாக இருக்கும் போது நாம் தாக்குதல் நடத்தினால் நாம் தான் வெல்வோம்" என்றான் உற்சாகத்துடன் வில்லவன்.
" என் திட்டத்தை சட்டென்று புரிந்து கொண்டு விட்டாய் நண்பா! என் கைகளை எளிதாக விடுவிக்கும் படி கயிற்றால் கட்டி விட்டால் போதும். பிறகு நடப்பதை நான் பார்த்து கொள்கிறேன்." என்றான் கரிகாலன் மகிழ்ச்சியுடன் .
"எனக்கென்னவோ இது சரியாகத் தோன்றவில்லை" என்றான் பார்த்திபன்.
"பார்த்திபா! நீ உள்ளே வர வேண்டாம். குதிரைகளுக்கு காவலாக வெளியே நின்றால் போதும். எங்கள் கை தாழும் போது உதவிக்கு உடனே வந்தால் போதும். நாம் தப்பி செல்ல குதிரைகள் மிகவும் அவசியம் " என்றான் கரிகாலன்
பார்த்திபன் அறைகுறை மனதோடு திட்டத்திற்கு சம்மதித்தான்.
விடியற்காலை .
சாம்பல் நிற இருட்டு எங்கும் பரவிக் கிடந்தது. காவல் கோட்டத்தின் வெளியே குதிரைகளின் குளம் பொலி கேட்பதை உணர்ந்த காவலன் ஒருவன் அறைகுறை தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தான்.
"யார் அது?" என்றபடி வாசலுக்கு வந்தவன் அங்கே நின்றவர்களைப் பார்த்து அதிர்ந்தான். வெளியே குதிரையிலிருந்து இறங்கி நின்றவர்களில் நடுநாயகமாக நின்றான் சிகப்பு முகமூடி. அவனது கைகள் பின்புறமாக கட்டப்பட்டிருந்தன.
"யார் அது?" என்றான் காவலன் தன் கண்களை கசக்கியபடி. அவன் காணும் காட்சியை அவனால் நம்ப முடியவில்லை.
வில்லவன் சுதாரித்து கொண்டு "இவன் தான் நீங்கள் தேடும் சிகப்பு முகமூடி.இன்று எங்களிடம் வசமாக சிக்கி கொண்டு விட்டான். அவனை கையும் , காலுமாக பிடித்து வந்திருக்கிறோம். இவனை பிடித்து கொடுத்தால் அன்பளிப்பாக பெரும் தொகையை தருவதாக அறிவித்திருந்தீர்கள். அதை பெற்று கொள்ளவே இங்கே வந்தோம் " என்றான்.
"இவன் அவ்வளவு எளிதில் அகப்படுகிற ஆள் இல்லையே?காற்றில் கரையும் மாயாவியாயிற்றே? இவனை எப்படி நீங்கள் பிடித்து வந்தீர்கள்? சரி. இங்கேயே இருங்கள். நான் காவல் தலைவரை அழைத்து வருகிறேன்" என்ற காவலன் அவசர அவசரமாக உள்ளே ஓடினான்.
உள்ளே உறங்கி கொண்டிருந்த மதி மாறனை எழுப்பியவன்" பிரபு. உங்கள் கனவு நிறைவேற போகிறது. அந்த சிகப்பு முகமூடி அகப்பட்டு விட்டான். கிராமவாசிகள் சிலர் அவனை கைது செய்து கொண்டு வந்திருக்கிறார்கள்" என்றான் மகிழ்ச்சியுடன் .
தூக்கத்தில் எழுப்பியவனை திட்டுவதற்காக வாயை திறந்த மதிமாறன் அவன் சொன்ன சேதியை கேட்டதும் முகம் மலர்ந்தான்.
"நீ சொல்வது உண்மை தானா?" என்றான் மதி மாறன் .
"ஆமாம். அவர்கள் வெளியே உங்கள் வருகைக்காக காத்திருக்கிறார்கள்"
"அவர்களை உள்ளே அழைத்து வா" என்றான் மதி மாறன் .
காவலன் உடனே திரும்ப சென்று " அனைவரையும் உள்ளே வரச் சொல்கிறார் தலைவர் " என்றான்.
அனைவரும் உள்ளே சென்ற பின்னர் பார்த்திபன் வெளியே நிற்பதை பார்த்த காவலன்" தம்பி. நீ உள்ளே வரவில்லையா?" என்றான்.
"இல்லை ஐயா. இந்த குதிரைகளில் ஓன்று நான் இல்லாவிட்டால் சண்டித்தனம் செய்யும். அதனால் நான் இங்கேயே இருக்கிறேன்" என்றான் பார்த்திபன்.
முகம் கழுவி விட்டு வந்த மதி மாறனை பார்த்து அனைவரும் முகமன் கூறினார்கள்.
"யார் நீங்கள்?" என்றான் அவன்.
"மலையூர் கிராமவாசிகள் . "
"இவன் எப்படி உங்களிடம் அகப்பட்டான்?"
"இரவு நேரத்தில் கால் நடைகளை திருட முயன்றான். சத்தம் கேட்டு விழித்த நாங்கள் இவனிடம் போராடி இவனை வீழ்த்தினோம். எமகாதகப்பயல். எங்களை ஒரு வழி செய்து விட்டான்"
"ஆயுதங்களையும், பொக்கிசங்களையும் கொள்ளையடித்தவன் இப்போது ஆடு மாடுகளை கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டானா? ரொம்பவும் தரம் தாழ்ந்து விட்டதே உன் செயல்" என்ற மதிமாறன் சிகப்பு முகமூடியை பார்த்து சிரித்தான்.
"எனக்கும் பசிக்குமல்லவா?" என்றான் பரிதாப குரலில் கரிகாலன்.
" இப்படி ஒரு நிலை வரக்கூடாது என்று தான் உன்னை சிறையில் அடைத்து மூன்று வேளை உணவும் கொடுக்க செய்தேன். நீ தான் என் நல்ல மனதை புரிந்து கொள்ளாமல் தப்பி ஓடிவிட்டாய்"
"சிறை உணவு அவ்வளவு ருசியாக இல்லை"
"இந்த முறை ருசியான உணவை வழங்க சொல்கிறேன்" என்றான் மதி மாறன் .
பிறகு நண்பர்களின் பக்கம் திரும்பியவன்" கிராமவாசிகளே! நீங்கள் இவனுடன் போராடித் தானே இவனை பிடித்தீர்கள்?"
"ஆமாம் பிரபு " என்றான் வில்லவன்.
"அந்த போராட்டத்தில் உங்களுக்கும் இவனுக்கும் எந்த காயமும் ஏற்படாமல் இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது."
மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.கரிகாலன் மதி மாறனுக்கு சந்தேகம் வருவதை உணர்ந்து கொண்டவனாக கைகட்டை அவிழ்த்து தன்னை விடுவித்து கொள்ள முயன்றான்.
வில்லவன் என்ன பதில் சொல்வது என்று யோசித்து கொண்டிருக்கும் போதே மதிமாறனின் வாள் கரிகாலனின் நெஞ்சில் பாய்ந்தது.
"அதை விட ஆச்சரியம். பிடிபட்ட இவனின் வாளை இவன் இடுப்பிலேயே விட்டு வைத்தது " என்றபடி வாளை உருவிய மதிமாறன் " இவை எல்லாமே திட்டமிட்ட நாடகம் என்பதை நான் அறிவேன் கரிகாலா. உன்னுடைய கதை இப்போது முடியப்போகிறது " என்று மீண்டும் ஒருமுறை அவனது நெஞ்சில் வாளைபாய்ச்ச முயன்றான். நண்பர்களில் ஒருவன் சட்டென்று இடையே புகுந்து அந்த வாளை மார்பில் வாங்கி கொண்டான். அத்தோடு மதிமாறனையும் நகர விடாமல் இழுத்து பிடித்து கொண்டான்.
"கரிகாலா! இது ஒரு வஞ்சக வலை. இதில் நீ சிக்கக் கூடாது. உடனே தப்பித்து விடு" என்றான் அவன்.
அவனது அலறல் சத்தம் கேட்டு காவலர்கள் விழித்து கொள்ள ஆரம்பித்தனர்.
காயமடைந்திருந்த கரிகாலனை அழைத்தபடி வெளியே வந்த வில்லவனை பார்த்த பார்த்திபன் " அண்ணனுக்கு என்னாயிற்று?" என்றான் பதட்டத்துடன் .
" கத்திகுத்து காயம் .நம் திட்டம் அவர்களுக்கு தெரிந்து விட்டது. நாம் உடனே தப்பி சென்றாக வேண்டும்" என்றான் வில்லவன்.
சில நிமிடங்களில் நான்கு குதிரைகள் அங்கிருந்து சிட்டாகப் பறந்தன.
"அவர்களை துரத்தி பிடியுங்கள்" என்று அலறினான்மதிமாறன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக