வியாழன், 6 அக்டோபர், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 37

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்

மலை நாட்டின் ஆளுகைக்குட்பட்ட ரகசிய தீவினை ஆட்சி செய்யும் மதிமாறனிடம் ஆயுதங்களை ஓப்படைக்கும் பணியை தலைமை ஏற்று வந்தவன் நீலன். அவனை நம்பித்தான் அவ்வளவு ஆயுதங்களை அனுப்பி வைத்திருந்தான் மலைநாட்டு அரசன். இங்கோ நீலன் தன்னுடைய கப்பலை கைப்பற்றிய பின்பு நிலைமை தலைகீழானது.

அதே ஆயுதங்களை மதி மாறனை எதிர்த்து கிளர்ச்சி செய்யும் சிகப்பு முகமூடியிடம் ஒப்படைத்து விட்டு ஓரு உள்நாட்டு கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் வள நாட்டின் ஒற்றனான கருணாகரனின் திட்டம். நாட்டில் அமைதி குலைந்து போர் சூழல் நிலவும் போது மார்க்கதரிசியின் புதையலை எடுத்து கொண்டு இங்கிருந்து தப்பித்து ஓடி விடலாம் என்பது தான் அவனது திட்டம்.

ஆயுதங்களை பொறுத்தவரை யாரிடம் அதை ஒப்படைப்பது என்பதில் இருவருமே நேர் எதிராக நின்று கொண்டிருந்தனர்.கருணாகரனே தன்னுடைய வாயால் தான் வள நாட்டின் ஒற்றன் என்பதை வெளிப்படுத்தி விட்டான். ஆனால் அழுத்தக்காரனான நீலன் தான் மலைநாட்டின் ஒற்றன் என்பதை முற்றாக மறைத்து விட்டான்.

"இந்த ஆயுதங்கள் ரகசிய தீவிற்கு அதாவது மதிமாறனுக்கு போய் சேர வேண்டியவை தானே?" திடிரென்று நீலன் எதிர்பாராத ஒரு கேள்வியை வீசினான் கருணாகரன்.

"ஆமாம். இவை மதிமாறனிடம் ஓப்படைக்க சொல்லி என் கப்பலில் ஏற்றப்பட்ட ஆயுதங்கள் தான் " என்றான் நீலன்.

"இவை மலை நாட்டு அரசுக்கு சொந்தமானவை தானே?"

""ஆமாம். அதிலென்ன சந்தேகம்?"

"அரசின் நம்பிக்கைக்குரிய மாலுமிகளிடம் தான் இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைப்பார்கள். குடிகாரனான உன்னிடம் இந்த பணியை எப்படி ஒப்படைத்தார்கள் என்று யோசிக்கிறேன்." என்றான் கருணாகரன்.

"நீ யோசிப்பதில் பிழையில்லை. ஆனால் இன்னொரு முறை என்னை குடிகாரன் என்று சொல்லி என் கோபத்திற்கு ஆளாகாதே! நான் ஒரு நேரம் போல் இன்னொரு நேரம் இருக்க மாட்டேன் என்பதை நினைவில் வைத்து கொண்டு என்னிடம் பேசு" என்று கோபத்துடன் பதில் சொன்னான் நீலன்.கருணாகரன் கேட்ட கேள்விக்கு பதில் கூற நீலனிடம் எந்த பதிலும் இல்லை என்பதால் தற்காலிகமாக பேச்சைமாற்ற கோபம் கொள்வது போல் நடித்தான் அவன்.

"கோபப்படாதே நண்பா. உன் மீதான உரிமையில் நான் சற்று வரம்பு மீறி பேசிவிட்டேன். அதற்காக என்னை மன்னித்து விடு. நான் சொன்னது போல் உன் கப்பலை மீட்டு உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். உனக்கு துரோகம் செய்த உன்னுடைய முன்னாள் நண்பர்களையும் கைது செய்து விட்டேன். அடுத்ததாக நாம் என்ன செய்ய போகிறோம்?" என்று பதிலை நீலனிடம் வாங்கும் முயற்சியில் இறங்கினான் கருணாகரன்.

" என் கப்பலுக்கு புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும். எனக்கு ரகசிய தீவில் தான் வேண்டிய பணியாட்கள் கிடைப்பார்கள். அதனால் கப்பலை முதல் வேலையாக ரகசிய தீவிற்கு திருப்ப வேண்டும். இந்த கனமான ஆயுதங்களை காலி செய்து புதையலை ஏற்ற இடத்தை தயார் செய்ய வேண்டும். அந்த புதையலும் கூட ரகசிய தீவில் தானே இருக்கிறது?"

"ஆமாம். அங்கே தான் இருக்கிறது. முதலில் நாம் ஆயுதங்களை காலி செய்ய வேண்டும். பிறகு தான் புதையலை எடுக்கும் வேலையை தொடங்க வேண்டும்"

"இந்த ஆயுதங்களை என்ன செய்ய போகிறாய்? யாரிடம் இவற்றை ஓப்படைக்க போகிறாய்?" என்றான் நீலன் படபடக்கும் இதயத்துடன் .

" இவற்றை நான் கண்டிப்பாக மதிமாறனிடம் ஒப்படைக்க போவதில்லை. அவனிடம் ஒப்படைத்தால் சிகப்பு முகமூடியின் புரட்சி அடக்கப்பட்டு என்னால் புதையலை எடுக்க முடியாது. நிம்மதியில்லாத சூழல் நாட்டில் நிலவினால் மட்டுமே என்னால் மார்க்கதரிசியின் புதையலை மீட்க முடியும். அதற்கு ஆயுதங்களை நான் சிகப்பு முகமூடியிடம் தான் ஒப்படைக்க வேண்டும்"

"இந்த ஆயுதங்களை அவனிடம் இலவசமாகத் தான் தரப் போகிறாயா?"

"ஆமாம்"

"அவனை பிடிக்க வேட்டை நாயாக அலைபவன் நீ. உன்னை அவன் எப்படி நம்புவான்?" என்றான் நீலன்.

" அவன் நம்பும் ஒரு ஆசாமி நம் பக்கம் இருக்கிறான். அவன் இந்த காரியத்தை நமக்காக செய்து தருவான்"

"யார் அந்த ஆசாமி என்று நான் தெரிந்து கொள்ளலாமா?"

"தாராளமாக .அந்த ஆசாமியின் பெயர் மர்மயோகி"

"அவர் சன்னியாசியாயிற்றே?" என்றான் நீலன் அதிர்ச்சியுடன் .

"அது வெளி உலகிற்கு. அவர் உண்மையில் என்னுடைய ஆள்" என்றான் விசமபுன்னகையுடன் கருணாகரன்.

"அடக்கடவுளே! இந்த உலகத்தில் யாரைத்தான் நம்புவது என்று எனக்கு தெரியவில்லை"

"உன்னை மட்டும் நம்பு நண்பா." என்றான் கருணாகரன் கண்ணடித்தபடி.

" என் கப்பலை மீட்டு கொடுத்தது போல் நீ இன்னொரு சகாயமும் எனக்கு செய்ய வேண்டும்"

" என்னவென்று சொல் .நீ சொல்வதை நான் செய்து தான் தீர வேண்டும். இந்த புதையல் வள நாட்டின் எல்லைக்குள் செல்லும் வரை உன் உதவி எனக்கு தேவை."

"இந்த புதையலை நீ வள நாட்டிற்கா கொண்டு செல்ல போகிறாய்?" என்றான் அதிர்ச்சியுடன் நீலன்.இந்த செய்தி அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த புதையலை மலை நாட்டிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தான் நீலன்.அந்த திட்டம் இப்போது நிறைவேறாமல் போய்விடுமோ என்ற பயம் முதன்முதலாக அவனது மனதில் தோன்றியது.

"ஆமாம். அங்கே வந்த பிறகு நீ உன்னுடைய பங்கு பொருட்களை பெற்று கொண்டு உன் இஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் கிளம்பலாம்" என்றான் கருணாகரன் மனதிற்குள் வள நாட்டிற்குள் காலைவைத்ததும் நீலனின் கதையை முடித்துவிட வேண்டும் என்று நினைத்து கொண்டான் கருணாகரன்.

இரண்டு வஞ்சகர்களும் இரண்டு வெவ்வேறு திட்டங்களுடன் நண்பர்களாக நடித்து கொண்டிருந்தனர்.

"ஆமாம். இந்த கப்பலில் உள்ள ஆயுதங்கள் கத்தி, வாள், ஈட்டி போன்றவை தானே?" என்றான் கருணாகரன் ஆவலுடன் .

"அவையும் இருக்கின்றன. அவற்றை விட ஆபத்தான ஆயுதம் சிலவும் இருக்கின்றன. அவை பேரழிவை உருவாக்ககூடியவை. வலிமை மிக்க கோட்டை சுவர்களையே தகர்த்து மணல்மேடாக்கிவிடும் சக்தி படைத்தவை "

"நீ சொல்லும் ஆயுதத்தை நான் இதுவரை கேள்விப்பட்டது கூட இல்லையே?" என்றான் வியப்புடன் கருணாகரன்.

"அவை மேலை நாட்டு ஆயுதங்கள் .அவற்றின் பெயர் பீரங்கிகள். எனக்கும் அவற்றை இயக்க தெரியும். தொலைதூரத்தில் உள்ள இலக்குகளை குத்துமதிப்பாக தாக்கி பெரும் நாசத்தை ஏற்படுத்தகூடியவை"

"ஆஹா.அருமை. இந்த ஆயுதம் மட்டும் சிகப்பு முகமூடியிடம் கிடைத்து விட்டால் மதிமாறனின் கதை முடிந்துவிடும்"

"அவற்றை இலவசமாக அவனிடம் தர வேண்டாம். ஒரு நிபந்தனைக்கு அவன் ஒப்பு கொண்டால் ஆயுதங்களை அவனுக்கு இலவசமாக தருவதாக பேரம் பேசு"

"நிபந்தனையா? அப்படி என்ன நிபந்தனை விதிக்க சொல்கிறாய்?"

" சொல்கிறேன். அது ஒரு பழைய கணக்கு .அதை நான் தீர்த்து கொள்ள இதுவே சரியான நேரம் "

"புரியும்படியாக சொல் "

" என் கப்பலை அபகரித்தானே நஞ்சுண்டன் .அவன் இப்போது ஆயுதங்களை விற்க சிகப்பு முகமூடியிடம் போயிருப்பான். அவனை என்னிடம் ஒப்படைக்க சொல். அதுதான் என்னுடைய நிபந்தனை. "

"ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க பார்க்கிறாய்"

"நஞ்சுண்டனை நீ என்னிடம் ஓப்படைத்தால் எனக்கு புதையலில் எந்த பங்கும் வேண்டாம்" என்றான் நீலன் உறுதியான குரலில்.

"நீ உண்மையாகத் தான் சொல்கிறாயா?"

"ஆமாம். நான் சத்தியமாக சொல்கிறேன். எனக்கு நஞ்சுண்டன் கிடைத்து விட்டால் புதையலில் எந்த பங்கும் வேண்டாம்"

" நல்லது " என்றான் கருணாகரன் மகிழ்ச்சியுடன் .

நீலன் யோசிக்க ஆரம்பித்தான். ஆயுதங்களை சிகப்பு முகமூடியிடம் கருணாகரன் ஓப்படைத்து ஆட்சி மாற்றம் நடந்து விட்டால் மலைநாட்டு அரசனால் தான் தேசதுரோகி என்று தண்டிக்கப்படுவோம் என்பதை அவன் அறிவான்.

அந்த ஆயுதங்களை செயல் இழக்க செய்து விட்டால் அவை சிகப்பு முகமூடியிடம் கிடைத்தாலும் அவற்றை அவன் பயன்படுத்த முடியாதபடி செய்து விட்டால் தான் தப்பித்து விடலாம் என்று அவனுக்கு தோன்றியது.

பீரங்கிகளை எப்படி செயல் இழக்கக் செய்வது என்று அவன் யோசிக்க ஆரம்பித்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக