ரகசிய தீவு
அத்தியாயம் 40
புதிதாக ஒரு அவதாரம்.
மலையமானின் இரண்டு மகன்கள் நள்ளிரவில் முயல் வேட்டையாட காட்டுக்கு சென்று விட்டதை அறியாத கருணாகரன் தன்னுடைய சிறிய படையுடன் இரவின் இருளில் மறைந்து கிடந்தான். மதிமாறனின் அடாத செயல்களை உடனுக்குடன் தயாநிதிக்கு தெரியப்படுத்தி அவனுடைய செயல்களுக்கு கடிவாளம் இடும் நபர் மலையமான் தான் என்பது தெரிந்ததும் மதிமாறன் அவனது வாழ்வை முடிக்க முடிவு செய்து விட்டான்.அதற்காகவே அவன் கருணாகரனை அனுப்பி வைத்திருந்தான்.
மலையமானும் அவனது இரண்டு மகன்களும் கொல்லப்பட வேண்டும் என்பது தான் மதி மாறனின் ஆசை. இரண்டு மகன்களில் யார் உயிர் பிழைத்தாலும் அவன் மலையமானின் இடத்தை இட்டு நிரப்பி விடுவான். தன் தந்தையை போல் பதவி மீது ஆசை இல்லாமல் இருக்காமல் ஆளுநராக ஆசைப்பட்டு விட்டால் தன் மகனையும் அவனுக்கு கொடுத்து ரகசிய தீவின் ஆளுநராகவும் அவனை நியமித்து விடுவான் தயாநிதி .
அதன் பிறகு தன்னுடைய நிலைமை கவலைக்கிடமாகி விடும் என்பதை மதிமாறன் தெளிவாக உணர்ந்திருந்தான். தன்னுடைய எதிர்கால எதிரியை முற்றிலுமாக ஓழித்து தன்னுடைய அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள அவன் விரும்பினான். ஓரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க திட்டமிட்டிருந்தான் அவன்.
மலையமானின் மாளிகையை நள்ளிரவில் தன்னுடைய ஆட்கள் மூலம் சுற்றி வளைத்த கருணாகரன் மலையமானும் அவனது மகன்களும் தப்பி வெளியேறி விடாதபடி கதவுகளை வெளியே தாழ்பாள் போட்டான். அதன் பிறகு கையோடு கொண்டு வந்த எண்ணெய்யை ஊற்றி மாளிகைக்கு தீ வைத்து விட்டான். மாளிகையிலிருந்து யாரும் தப்பி வெளியேறாதவாறு கருணாகரனும் அவனது ஆட்களும் பார்த்து கொண்டனர். தூக்கத்திலிருந்து விழித்து எழுந்த மலையமான் மாளிகை தீப்பற்றி எரிவதை பார்த்து திடுக்கிட்டான். அங்கிருந்து தப்பி வெளியேற அவன் செய்த அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. அவனது உயிர் பறவை உடலை விட்டு வெளியேறியது.
வேட்டையிலிருந்து திரும்பி வந்த மூவரில் வில்லவன் தான் முதலில் மாளிகை தீப்பற்றி எரிவதை பார்த்தான்.
"கரிகாலா! யாரோ நம்முடைய மாளிகைக்கு தீ வைத்து விட்டார்கள்" என்றான் அவன் படபடப்புடன்.
"நம்மீது இவ்வளவு பகை கொண்டவர்கள் யாரும் இல்லையே? மாளிகையினுள் அப்பா வேறு இருக்கிறார். அவருடைய நிலைமை என்னவானதென்று தெரியவில்லையே? " என்றான் கரிகாலன்.
"அவர்கள் யார் என்று நான் பார்த்து வரவா?" என்றான் பார்த்திபன்.
"அரசாங்க உடைகளை அணிந்திருக்கிறார்கள். அப்படியானால் இது மதிமாறனின் கைவரிசை தான்." என்றான் வில்லவன்.
"ஓரு வேளை தயாநிதி மாமாவுக்கு தகவல் கொடுப்பது நம்முடைய தந்தை என்பது அவனுக்கு தெரிந்திருக்குமோ?" என்றான் கரிகாலன்.
" இருக்கலாம். இல்லையென்றால் அவன் ஏன் இப்படி வெறியாட்டம் போடப் போகிறான்? நீங்கள் இருவரும் இங்கேயே மறைந்திருங்கள். நான் போய் என்ன நடக்கிறதென்று பார்த்து வருகிறேன்" என்ற வில்லவன் இரவின் இருளில் கரைந்து முன்னேறினான். சகோதரர்கள் இருவரும் ஒருவர் கையை ஓருவர் ஆறுதலாக பற்றி கொண்டனர். திடிரென தங்களுக்கு ஆதரவாக இருந்த தந்தையையும் இழந்து விட்ட அதிர்ச்சியை இருவராலும் ஜீரணிக்க முடியவில்லை. திடிரென்று உலகமே சூனியமாகி இருவரும் அனாதையாகி விட்டதைப் போல் உணர்ந்தனர்.
"அண்ணா! அப்பா?" என்று தழுதழுத்தான் பார்த்திபன்.
"கவலைப்படாதே தம்பி. உனக்கு துணையாக நான் இருக்கிறேன்" என்றான் கரிகாலன் கண்களில் வெஞ்சினம் மின்ன.
சற்று நேரத்தில் முகமெல்லாம் புகை படிந்த கோலத்தில் இருட்டிலிருந்து வந்து சேர்ந்தான் வில்லவன்.
"கரிகாலா! நாம் இங்கிருந்து கிளம்பலாம்" என்ற வில்லவனின் குரல் தழுதழுத்தது.
"வில்லவா ! அப்பாவின் நிலை என்னாயிற்று? " என்றான் கரிகாலன்.
"கரிகாலா.அப்பா நம்மை அனாதையாக்கி விட்டு தூக்கத்திலேயே போய்விட்டார். அவர்களுக்கு நீங்கள் இருவரும் உயிரோடு இருப்பது தெரியாது. நீங்களும் நெருப்பிற்கு இரையாகி விட்டதாக நினைத்து கொண்டிருக்கிறார்கள். நம்மை அபாயம் சூழ்ந்திருக்கிறது. நாம் உடனடியாக இங்கிருந்து கிளம்ப வேண்டும்"
"அப்பாவை தீக்கு பலியாக்கிய அந்த மதிமாறனின் இந்த கொடுர செயலை நாம் தயாநிதி மாமாவிற்கு தெரிவித்தாக வேண்டும்" என்று குமுறினான் பார்த்திபன்.
"அப்பா தயாநிதியின் ரகசிய ஒற்றனாக செயல்பட்டு வந்தது மதிமாறனுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. நம்மூவரைத் தவிர ரகசிய தீவில் வேறு யாருக்கும் இந்த ரகசியம் தெரியாது. விசயம் மலை நாட்டிலிருந்து தான் கசிந்திருக்க வேண்டும். அதுவும் தயாநிதியின் மாளிகையிலிருந்து "
"ஆமாம். அப்படித்தான் இருக்க வேண்டும்.மதிமாறனை பொறுத்தவரை நாங்கள் இறந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். ஆனால் மதிமாறனே தயாநிதியின் கேள்விக்கு பதில் சொல்லும் நிலைமையை உருவாக்க போகிறேன்."
" நீ என்ன சொல்கிறாய் கரிகாலா?" என்றான் வில்லவன் எதுவும் புரியாமல் .
"வில்லவா. அப்பா இறந்து விட்டார். அவரிடமிருந்து தயாநிதி மாமாவிற்கு இனி கடிதங்கள் போகாது. தயாநிதி மாமா தனக்கு கடிதம் எதுவும் வராததால் அதற்கு என்ன காரணம் என்பதை பற்றி கண்டிப்பாக விசாரிக்கத் தான் செய்வார். அப்போது அப்பா சொல்லப்பட்டது தெரிய வரும். அப்பா தயாநிதி மாமாவுடன் யார் மூலமாக கடிதத் தொடர்பு கொண்டிருந்தார் என்பது நமக்கு தெரியாது. வேறு யார் மூலமாகவாவது தான் நாம் மாமாவை தொடர்பு கொண்டு நடந்த உண்மைகளை எடுத்து கூற வேண்டும். அதற்கு முன் இங்கே ஒரு அவதாரம் நிகழ வேண்டும்" என்று கர்ஜித்தான் கரிகாலன்.
"அவதாரமா? அண்ணா நீ என்ன சொல்கிறாய்?" என்றான் பார்த்திபன் எதுவும் புரியாமல் .
" சொல்கிறேன் தம்பி .மதிமாறனின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் நாம் இடைஞ்சலாக இருப்போம் என்று நினைத்து தான் நம் குடும்பத்தையே அழித்தான் அந்த மதிமாறன். அவன் இனி நிம்மதியாக உறங்கவே கூடாது. அவன் தூக்கத்தை கெடுக்க ஒரு மாயாவியை நான் உருவாக்க போகிறேன்" என்ற கரிகாலன் தன் இடுப்பில் இருந்த சிகப்பு நிற துணியை எடுத்து முகமூடி போல் மாற்றி முகத்தில் கட்டி கொண்டான்.
"ஏழைகளின் பாதுகாவலன், ஏதேச்சதிகாரத்தின் எதிரி சிகப்பு முகமூடி இந்த கணத்தில் பிறந்து விட்டான். இது ஒரு புது அவதாரம். நாட்டின் நலன் கருதுபவர்களும், மதிமாறனின் அட்டுழியத்தால் பாதிக்கப்பட்டவர்களும் எனக்கு உதவி செய்வார்கள்" என்றான் கரிகாலன்.
மலையமான் மறைந்த அன்று இரவு மதிமாறனுக்கு தீராத தலைவலியை உருவாக்க சிகப்பு முகமூடி என்ற புதிய அவதாரம் உருவாகியிருந்தது.
மதிமாறனின் வரி விதிப்பால் பாதிக்கப்பட்டவர்களும், ஏழை மக்களும் கரிகாலனின் பக்கம் திரள ஆரம்பித்தனர். அவர்கள் யாருக்கும் தாங்கள் ஆதரிப்பது மலையமானின் மூத்த மகனை என்பது தெரியாது. தெரியாத படிக்கு தன்னுடைய நடவடிக்கைகளை அமைத்து கொண்டான் சிகப்பு முகமூடி என்றழைக்கப்பட்ட கரிகாலன்.அவனது தந்தையான மலையமானிடம் அவன் கற்று தேர்ந்திருந்த வீர விளையாட்டுகள் மதிமாறனின் ஆட்களை சமாளிக்க உதவின.
மதிமாறனின் ஆட்கள் அநியாயமான வேலைகளை செய்ய கிளம்பும் போதெல்லாம் அவற்றை இடையிட்டு தடுப்பது சிகப்பு முகமூடியின் நித்திய கடமையாயிற்று. அவனிடம் தோற்று திரும்புவது அரசாங்க வீரர்களின் அன்றாட வாழ்வானது.அவனது சாகச செயலால் கவரப்பட்ட இளைஞர்கள் சிகப்பு முகமூடியின் புரட்சி படையில் இணைய ஆரம்பித்தனர்.
மலையமானின் குடும்பத்தை அடியோடு அழித்து விட்டோம். இனி தயாநிதியிடம் தன்னைப் பற்றி உளவு சொல்ல ஆள் இல்லை. இனி தன்னிஷ்டம் போல் அரசதிகாரத்தை நடத்தலாம் என்று நினைத்த மதிமாறனின் நினைப்பில் மண்ணை அள்ளி போட்டு விட்டான் புதி காக தோன்றிய சிகப்பு முகமூடி.
அவனைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் மதிமாறன் கதிகலங்கி கொண்டிருந்தான். மாயாவியை போல் திடிர் திடிரென்று தாக்குதல் நLத்திவிட்டு மக்களோடு மக்களாக கலந்து தப்பி விடும் அவனை பிடிப்பது குதிரை கொம்பாக இருந்தது.மக்கள் அவனை காட்டி கொடுக்க மறுப்பதால் அவனது கோபம் இன்னமும் அதிகரித்தது.தன்னுடைய பயத்தை கோபமாக மாற்றி கருணாகரன் மீது காட்டி கொண்டிருந்தான் அவன்.
கருணாகரனும் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தும் சிகப்பு முகமூடியை பிடிக்க முடியவில்லை.
தன்னுடைய ஆருயிர் நண்பனான மலையமானிடம் இருந்து மதி மாறனுடைய செயல்களை பற்றிய எந்த ஓலையும் வராததால் குழப்பமடைந்தான் தயாநிதி . ரகசிய தீவிலிருந்து மலை நாட்டுக்கு வந்து செல்லும் கப்பல் மாலுமிகள் சொல்லும் தகவல்களை அவன் ரசிக்கவில்லை. யாரோ ஒருவன் சிகப்பு முகமூடி அணிந்து கொண்டு மதிமாறனின் ஆட்சிக்கு குறுக்கீடு செய்கிறான் என்பது மட்டும் அவனுக்கு தெரிந்தது.
இரண்டு விசயங்களையும் தெளிவுபடுத்தி கொள்ள நடந்த சம்பவங்களுக்கு விளக்கம் கேட்டு மதிமாறனுக்கு ஓலை அனுப்பி வைத்தான் தயாநிதி .
அவனது ஓலையை படித்து பார்த்த மதிமாறனுக்கு நடுக்கம் பிறந்து விட்டது. அவனது குள்ள நரி மூளை தயாநிதிக்கு என்ன பதில் சொல்லி சமாதானப் படுத்துவது என்று யோசிக்க ஆரம்பித்தது.
மலையமானிடமிருந்து ஓலை தயாநிதிக்கு போகாமல் நின்று விட்டால் அவன் தன்னை கேள்வி கேட்பான் என்று அவன் யோசித்து கூட பார்க்கவில்லை. உடல், மனம், மூளை எல்லாமும் வஞ்சகத்தில் ஊறிப்போன அவன் அதற்கு ஒரு பதிலை தயார் செய்ய ஆரம்பித்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக