புதன், 12 அக்டோபர், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 38

இரும்பாய் வந்த இறைவன்

நீலன் பதட்டத்தின் உச்சியில் இருந்தான். அவன் கப்பல் திரும்ப கிடைத்த போது அவன் அடைந்திருந்த மகிழ்ச்சியை இப்போது இழந்திருந்தான்.

தான் ரகசியமாக முத்தழகியில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை மதி மாறனிடம் ஓப்படைக்க வேண்டும் என்பது தான் அவனுக்கு மலைநாட்டு அரசன் இட்டிருந்த கட்டளை அந்த ஆயுதங்களை கருணாகரன் சிகப்பு முகமூடியிடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதை அவன் கொஞ்சம் கூட விரும்பவில்லை. ஆயுதங்கள் சிகப்பு முகமூடியிடம் அகப்பட்டு அவன் மதி மாறனை வீழ்த்தி விட்டு அரச அதிகாரத்தை கைப்பற்றி விட்டால் நீலனின் நிலைமை தர்மசங்கடமாகி விடும்.

மதிமாறன் தன்னுடைய தோல்விக்கு ஆயுதங்கள் சரியான நேரத்திற்கு தனக்கு வந்து சேரவில்லை என்பதை காரணமாக கூறுவான். ஆயுதங்களை மதி மாறனிடம் ஒப்படைக்காமல் கோட்டை விட்டு விட்டு சிகப்பு முகமூடியிடம் ஆட்சியை இழக்க காரணமாக இருந்தவன் நீலன் என்பதால் மலைநாட்டு அரசனும், ரகசிய தீவின் பொறுப்பதிகாரியுமான தயாநிதியும் நீலனின் மீது கோபம் கொள்வார்கள். அந்த கோபம் தன்னுடைய தலையை வாங்கி விடும் சக்தி படைத்தது என்பதை அவன் நன்றாக அறிந்து வைத்திருந்தான். 

சிகப்பு முகமூடியிடம் கருணாகரன் ஆயுதங்களை ஓப்படைக்க வேண்டும். அதே நேரம் அவை யுத்த களத்தில் சிகப்பு முகமூடிக்கு பயன்படவும் கூடாது.அப்படி நடந்து விட்டால் நீலனின் தலை தப்ப வாய்ப்பிருக்கிறது.

ஆயுதங்களை எப்படி செயலோய செய்வது என்று தெரியாத நீலன் சிந்தனை வயப்பட்டவனாக குறுக்கும் நெடுக்குமாக நடக்க தொடங்கினான். நீலன் திடிரென்று எதையும் பேசாமல் அமைதியாக இருப்பதை பார்த்த கருணாகரன் நீலன் தன் மனதிற்குள் வில்லங்கமாக எதையோ திட்டமிடுகிறான் என்பதை உணர்ந்து கொண்டான்.

தன் அருகே நின்ற ஆட்களில் ஓருவனை அருகே அழைத்தவன்" வீரனே! இதோ இந்த நீலன் மிகவும் பொல்லாதவன். ஆள் எதிரே நின்று பேசிக் கொண்டிருக்கும் போதே அவனை விலை பேசி விற்று விடும் ஆற்றல் படைத்தவன். இவனைப் பற்றி நீயும் கேள்விப்பட்டிருப்பாயே?" என்றான் கருணாகரன்.

"இந்த நரனைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருக்கிறேன் தளபதி " என்றான் அந்த வீரன்.

"இவன் மிகவும் பொல்லாதவன். இந்த ஆயுதங்கள் விசயத்தில் இவனதுபோக்கு புதிராக இருக்கிறது. இவன் மனதில் இருப்பதை வெளிப்படையாக சொல்லாமல் உள்ளத்தின் உள்ளத்தில் மறைத்து வைத்திருக்கிறான்.இவன் வில்லங்கமாக எதையோ செய்ய முயற்சிப்பது போல் தெரிகிறது. ரகசிய தீ வை கப்பல் சென்றடையும் வரை இவனை கவனமாக கண்காணிப்பது உன்னுடையது. உன் மீது அவனுக்கு எந்த சந்தேகமும் வந்து விடக் கூடாது. எச்சரிக்கையாக இரு" என்று அவனுக்கு எச்சரிக்கை செய்தான் கருணாகரன்

"உத்தரவு தளபதி. அவன் இனி என்னுடைய பொறுப்பு" என்றான் அந்த வீரன்.

நீலன் திடும் மென ஆயுதங்கள் இருந்த நிலவறையை நோக்கி நடக்க தொடங்கினான்.
அதைப் பார்த்த கருணாகரன் " நண்பா!அங்கே எங்கே செல்கிறாய்? " என்றான்.

நடந்து கொண்டிருந்த நீலன் சட்டென்று நின்றான்.

"ஆயுதங்கள் பத்திரமாக இருக்கிறதா என்று பார்க்க போகிறேன். அந்த நஞ்சுண்டன் ஒரு விச பாம்பு. கப்பலை கடத்தி வந்த பின்பு ஆயுதங்களை ஏதாவது செய்து தொலைத்திருப்பானோ என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது" என்றான் நீலன்.

கருணாகரன் விசமத்தனமாக சிரித்தான்.

"பாம்பின் கால் பாம்பறியும் " என்று உதட்டுக்குள் முணுமுணுத்தான் அவன்.

"நானும் அவற்றை பார்க்க வரலாமா?" என்றான் கருணாகரன்.

"தாராளமாக .நாம் இருவரும் தொழில் முறை கூட்டாளிகள் .நமக்குள் ஓளிவு மறைவு இருப்பதை நான் விரும்பவில்லை" என்றான் நீலன்.

கருணாகரன் நீலனுடன் நடை பயணத்தில் இணைந்து கொண்டான். கருணாகரனின் பேச்சிலும் நடத்தையிலும் தன் மீதான சந்தேகம் எதிரொளிப்பதை அனுபவஸ்தனான நீல னால் எளிதாக உணர்ந்து கொள்ள முடிந்தது.

நிலவறையில் மற்ற சரக்குகளுக்கு நடுவே மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுத பெட்டிகளை எண்ணிப் பார்த்த நீலன் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

"அப்பாடா! மலை நாட்டின் துறைமுகத்தில் நான் எத்தனை பெட்டிகளை ஏற்றினேனோ அத்துணை பெட்டிகளும் அப்படியே உள்ளன" என்றான் நீலன்.

" கேட்கிறேன் என்று தப்பாக நினைக்காதே நண்பா.! மலை நாட்டின் துறைமுகத்தில் எத்தனையோ கப்பல்கள் இருக்கும் போது ஆயுதங்களை ஏற்றி செல்ல உன்னுடைய கப்பலை குறிப்பாக உன்னை ஏன் தேர்ந்தெடுத்தான் மலைநாட்டு அரசன் என்று எனக்கு புரியவில்லை. உனக்கு இந்த கேள்விக்கு பதில் தெரியுமா?" என்றான் கருணாகரன்.

கருணாகரன் இப்படி ஒரு கிடுக்கிபிடி கேள்வியை கேட்பான் என்று எதிர்பார்க்காத கிழட்டு மாலுமி என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறி நின்றான். விரைவிலேயே தன்னை சுதாரித்து கொண்டவன்" அதற்கு என்னுடைய கடலோடிய அனுபவம் காரணமாக இருக்கலாம். எல்லா கடல்களிலும் பயணம் செய்த அனுபவம் எனக்கு மட்டும் தானே இருக்கிறது" என்று சமாளித்தான்.

"ஆமாம். நீ சொல்வதும் உண்மைதான். உன்னளவு அனுபவம் பெற்ற மாலுமிகள் இங்கே யார் இருக்கிறார்கள்? ஆமாம். அந்த பெட்டிகளில் இருப்பவை ?"

" பீரங்கிகள் தான். தனித்தனியாக அவைபெட்டியில் பிரித்து அடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை விரைவில் ஓன்றாக இணைத்து கொடிய ஆயுதமாக்கிவிடலாம். மற்ற பெட்டிகளில் இருப்பவை பீரங்கிகளில் பொருத்தி தொலைதூரத்திற்கு வீசி எறியக்கூடிய பீரங்கி குண்டுகள் . " என்ற நீலன் குண்டுகள் அடைக்கப்பட்டிருந்த இரும்பு பெட்டிகளை பார்த்தான். அவன் முகம் திடிரென்று மாறியது. அவசர அவசரமாக அந்த பெட்டிகளை அணுகியவன் அவற்றில் ஓன்றை திறந்து பார்த்தான்.

பெட்டியின் உள்ளே குண்டுகள் நிறைய இடைவெளிகளில் இருந்தன. நிறைய வைக்கோல் போர்கள் வைக்கப்பட்டு அவற்றின் இடைவெளி நிரப்பப்பட்டிருந்தது.

அவற்றை பார்த்தவுடன் அவனது முகம் மலர்ந்தது.

"ஏன் நண்பா! ஆயுதங்களில் ஏதாவது பிரச்சனையா?" என்றான் கருணாகரன்.

"இல்லை. ஆயுதங்கள் எண்ணிக்கையில் சரியாக இருக்கிறதா என்று திறந்து பார்த்தேன். சரியாகவே இருக்கிறது" என்ற நீலன் பெட்டியை மூடினான்.

"சரி வா போகலாம். " என்ற நீலன் அவசர அவசரமாக நிலவறையிலிருந்து வெளியேறினான். அவனது விந்தையான நடவடிக்கைக்கு அர்த்தம் தெரியாமலேயே வெளியே வந்தான் கருணாகரன்

மேல் தளத்தில் நின்று கொண்டிருந்த நீலன் கடவுளுக்கு நன்றி சொல்லி கொண்டிருந்தான்.
"கடவுளே! எனக்கு ஏற்பட்ட இக் கட்டிலிருந்து என்னை எப்படியோ காப்பாற்றி விட்டாய். இனி இந்த பீரங்கிகள் சிகப்பு முகமூடிக்கு கிடைத்தாலும் அவை அவனுக்கு பயன் படப் போவதில்லை. இந்த பிரச்சனைகள் முடிந்து மலைநாட்டிற்கு திரும்பியதும் முதல் வேலையாக ஒரு ரத்தின மாலையை வாங்கி இந்த பீரங்கி குண்டுகளை வைக்கும் பெட்டியை தயாரித்த கொல்லனுக்கு பரிசாகத் தர வேண்டும். அவன் மட்டும் பெட்டிகளை மரத்தில் தயாரித்திருந்தால் என்னுடைய நிலைமை சிக்கலாகியிருக்கும் ., என்று தன் மனதிற்குள் பேசிக் கொண்டிருந்தான் நீலன்.

இனி ஆயுதங்களில் எந்த சில்மிசமும் செய்ய வேண்டியதில்லை கடவுளே செய்ய வேண்டியதை செய்து விட்டார் என்று சந்தோஷமடைந்தது அவனது மனம்.

அதன் பிறகு அவன் ஆயுதங்கள் இருந்த நிலவறை பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை.

நீலனை கண்காணிக்க கருணாகரன் நியமித்த வீரன் நீலனையே கண்காணித்து கொண்டிருந்தான். அவனது நடத்தை மாற்றம் பற்றி வீரன் சொன்னதை கேட்டு ஓன்றும் புரியாமல் உட் கார்ந்திருந்தான் கருணாகரன்.

நீலனின் மகிழ்ச்சிக்கு காரணம் இருந்தது. மலை நாட்டிலிருந்து சில வாரங்கள் பயணம் செய்து தான் முத்தழகி கப்பல் ரகசிய தீவிற்கு வந்து சேர்ந்திருந்தது.

அந்த ஒரு வார காலமாக பெட்டியில் அடைபட்டிருந்த பீரங்கி குண்டுகள் அலைகளில் எழுச்சியாலும் காற்றிலும் பெட்டிக்குள்ளேயே உருண்டு கொண்டிருந்தன. பெட்டிகள் மரத்தில் செய்யப்பட்டிருந்தால் அவை உருண்டதால் தேய்மானம் அடைந்திருக்காது. மலைநாட்டு கொல்லன் பீரங்கி குண்டுகளை இரும்பு பெட்டியில் அடைத்து வைத்திருந்ததால் அவை அங்கும் இங்கும் உருண்டு உராய்வினால் தேய்மானம் அடைந்திருந்தன.

நீலன் பெட்டியை திறந்து குண்டுகளை பார்த்ததுமே நிலைமையை ஊகித்து கொண்டான். கண்டிப்பாக தேய்மானம் அடைந்த இந்த குண்டுகள் பீரங்கி குழாய்களில் இறுக்கமாக பொருந்தாது என்பதால் குண்டுகள் தொலைதூரத்திற்கு பயணிக்காது. டீரங்கிக்கு அருகிலேயே விழுந்து விடும் என்பதால் அவற்றால் பெருத்த சேதத்தை உருவாக்க முடியாது. அதனால் சிகப்பு முகமூடிக்கு இவை கிடைத்தாலும் இவற்றால் அவனுக்கு எந்த பலனுமில்லை என்பதாலேயே நீலன்வாளாவிருந்து விட்டான். எப்படியோ தன்னுடைய எண்ணம் நிறைவேறி விட்டது என்ற சந் துஷ்டியில் அமைதியாகிவிட்டான் அவன்.

தன் கண் முன்பே நடந்த விசயங்களை பார்த்தும் எதையும் யூகிக்க முடியாமல் இருந்தான் கருணாகரன்.கருணாகரன் சொன்னது போலவே ஆளை எதிரே வைத்து கொண்டே அவனை விலை பேசி விற்று விட்டான் நரன்.

கப்பல் ரகசிய தீவை நோக்கி முன்னேறி கொண்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக