வெள்ளி, 21 அக்டோபர், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 43

வஞ்சக வலை

மறுநாள் காலை சூரியன் கிழக்கிலிருந்து எழுந்து தன்னுடைய கடமையை துவக்கினான். யோகியின்ஆசிரமத்திற்கு வெளியே இருந்த மரத்தடியில் பார்த்திபனும் வில்லவனும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். விடிய விடிய இருவரும் பிடிபட்ட கரிகாலனை யோகி எப்படி மீட்க போகிறார் என்பதை பேசி பேசி சலித்து கண் அயர்ந்து அப்போதுதான் தூக்கத்தின் பிடிக்குள் செல்ல ஆரம்பித்தார்.

கிணற்றுக்குள் இருந்து கேட்பது போல் ஒரு குரல் பார்த்திபனின் காதில் ஓலிக்க ஆரம்பித்தது. "பார்த்திபா! வில்லவா ! இருவரும் எழுந்திருங்கள். நான் வந்து விட்டேன்" என்றது ஒரு குரல்.

பார்த்திபனுக்கு அந்தக் குரல் வெகு பரிட்சையமாக தோன்றியது. அது அவனுடைய அண்ணன் கரிகாலனுடையது என்பதை அவன் உடனே கண்டுபிடித்து விட்டான். ஆனால் அந்த குரல் இங்கே கேட்க எந்த வாய்ப்பும் இல்லையே என்று அவன் யோசித்து கொண்டிருக்கும் போதே ஒரு வலியகரம் அவன் உடலை உலுக்க ஆரம்பித்தது.

பார்த்திபன் சட்டென்று கண்களை திறந்தான். சூர்ய மிர்ச்சைகள் அவனது கண்களில் பட்டு அவனது பார்வையை கூச செய்தன. ஆயிரம் கைகள் மறைத்தாலும் மறைக்க முடியாத ஆதவனும் அவனது அண்ணனுமான கரிகாலனும் ஓரே காட்சியில் அவனுக்கு தென்பட்டனர். தன் கண்களையே நம்ப முடியாத பார்த்திபன் கண்களை ஒரு முறை அழுத்த தேய்த்து கொண்டு மீண்டும் பார்த்தான். அது கரிகாலன் தான்.புன்னகை பூத்த முகத்தோடு காணப்பட்டதன்னுடைய சகோதரனை பாய்ந்து கட்டி கொண்டான் பார்த்திபன்

"அண்ணா ! நீயா ? நீ எப்படி சிறையிலிருந்து தப்பினாய்?" என்றான் தாள முடியாத வியப்புடன். சிறையில் தன் கண்களை கட்டி வெவ்வேறு பாதையில் யோகி அழைத்து செல்வதை கரிகாலனால் உணர முடிந்தது. அநேகமாக அந்த பாதை சிறையிலிருந்து வெளியேறும் ரகசிய சுரங்க பாதையாக இருக்க வேண்டும்.

அரசின் உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் இந்த ரகசிய வழி முற்றும் துறந்த ஒரு யோகிக்கு எப்படி தெரிந்தது என்று அவன் ஆச்சரியப்பட்டான்.யோகிக்கு அரசின் உயர் மட்டத்தில் இருக்கும் யாருடைய உதவியாவது கிடைக்காமல் இப்படியான ரகசிய வழிகள் தெரிந்திருக்க நியாயமில்லை என்றது அவனது மனம்.

யோகி அவனுடைய கண்கட்டை அவிழ்த்த போது தான் ஆசிரமத்தின் நந்தவனத்தின் நடுவே நின்று கொண்டி ருப்பதை அவன் தெரிந்து கொண்டான்.

அவனுக்கு எதிரே நின்று கொண்டிருந்த யோகி மந்தகாசப் புன்னகையுடன்" என்ன கரிகாலா? இப்போதாவது என்னை நம்புகிறாயா?" என்றார்.

"நம்புகிறேன் சுவாமி .நாம் வந்தது சுரங்க பாதை என்று மட்டும் தெரிகிறது. ஆனால் அதன் தலைவாசல்?"

"எனக்கு மட்டும் தெரிந்த ரகசியம் அது. அதைப் பற்றி எதுவும் கேட்காதே. உன் சகோதரனும் வில்லவனும் உனக்காக இங்கே காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த விசயம் எதுவுமே தெரியக்கூடாது. நானும் நீயும் அறிந்த ரகசியமாக இந்த சுரங்க வழி இருக்க வேண்டும். மூன்றாம் மனிதர்கள் இதை தெரிந்து கொள்வதை நான் விரும்பவில்லை"

"இந்த ரகசியத்தை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன். கவலைப்படாதீர்கள்" என்று அவர்கை மீது அடித்து சத்தியம் செய்தான் கரிகாலன்.

சற்று முன் நடந்த இந்த நிகழ்வை எண்ணிப் பார்த்த கரிகாலன் தன்னை நோக்கி கேள்வி கேட்ட பார்த்திபனை பார்த்து " இப்போது எதற்காக அதை கேட்கிறாய்? யோகி பல வித்தைகளை மறைத்து வைத்திருக்கிறார். பரகாயப் பிரவேசம் என்ற யோக முறையில் அவர் என்னை மீட்டு வந்தார்" என்றான் சிரிக்காமல்,

பேச்சு சத்தம் கேட்டு விழித்து கொண்ட வில்லவன் கரிகாலனைப் பார்த்து எதுவும் பேச தோன்றாமல் திகைத்து போய் நின்றான்.

"பயப்படாதே! என் சகோதரன் இறந்து ஆவியாக வரவில்லை. உண்மையாகவே சிறையிலிருந்து தப்பி வந்து விட்டான். அந்த யோகி உண்மையிலேயே அசகாய சூரர் தான் " என்றான் பார்த்திபன்

"அவ்வளவு கட்டு காவல் மிகுந்த சிறையிலிருந்து எப்படி தப்பி வந்தாய் கரிகாலா?" என்றான் வில்லவன்.

"யோகி ஆகாய மார்க்கமாக என்னை மீட்டு வந்தார். அப்போது என் கண்கள் கட்டப்பட்டிருந்ததால் என்ன நடந்ததென்று எனக்கு தெரியவில்லை" என்றான் கரிகாலன்.

"நான் இருக்கும் வரை எல்லாம் நல்லதாகவே நடக்கும் " என்றபடி அங்கே வந்தார் யோகி.

வில்லவனும், பார்த்திபனும் அவரை வணங்கினார்கள்.

"கரிகாலனை மீட்க உங்களால் என்ன செய்ய முடியும் என்று அலட்சியமாக நினைத்து விட்டோம். அதற்காக எங்களை மன்னியுங்கள் சுவாமி " என்றான் வில்லவன்.

"அந்த ஆகாய பயணம். அதை மட்டும் தான் என்னால் நம்ப முடியவில்லை" என்றான் பார்த்திபன்.

"யோகிக்கு அது சாதாரண விசயம். அவரை சந்தேகிக்க வேண்டாம்.. நாங்கள் கிளம்புகிறோம் சுவாமி " என்றான் கரிகாலன்.

"போய் வாருங்கள்" என்றார் யோகி.

மூவரும் மரத்தடியில் கட்டியிருந்த குதிரைகளை நோக்கி நடந்தனர்.கரிகாலனுக்கு பின்னால் நடந்து வந்த பார்த்திபன் அவனது மேலாடையில் ஒட்டியிருந்த ஒட்டடையை தற்செயலாக பார்த்தான். ஆகாய மார்க்கமாக யோகிகரிகாலனை மீட்டு வந்தால் பாழடைந்த கட்டிடங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் படியும் ஒட்டடை தன்னுடைய அண்ணனின் ஆடையில் எப்படி வரும்? தன் அண்ணனும், யோகியும் சேர்ந்து கொண்டு தன்னிடமிருந்து எதையோ மறைப்பதை பார்த்திபன் உணர்ந்து கொண்டான்.

போதாததற்கு கரிகாலனின் காலணியில் படிந்திருந்த சேறு ஆகாய பயணம் பொய் என்று சொல்லாமல் சொல்லி விட்டது. இரண்டும் சேர்ந்து ஏதோ ஒரு சுரங்க வழியின் வழியாக தன் அண்ணனை யோகி மீட்டு வந்திருக்கிறார் என்ற உண்மையை பார்த்திபன் தெரிந்து கொண்டான்.

தான் கண்டுபிடித்த உண்மையை அவன் கரிகாலனிடம் கேட்கவில்லை. சரியான காரணம் எதுவும் இல்லாமல் தன்னுடைய சகோதரன் தன்னிடம் இந்த உண்மையை மறைத்திருக்க மாட்டான் என்று மட்டும் அவனுக்கு தோன்றியது.

தன்னுடைய சந்தேகத்தை அவன் கரிகாலனிடம் கேட்காவிட்டாலும் தான் கண்டுபிடித்த உண்மையை தன் நண்பனான வில்லவனிடம் அவன் பகிர்ந்து கொள்ள தவறவில்லை. வில்லவனும் பார்த்திபனின் கருத்தை ஆமோதித்தான். இருவரும் தங்கள் சந்தேகத்தை தாங்கள் கண்டுபிடித்தவற்றை கரிகாலனிடம் வாய் திறந்து கேட்கவில்லை. கரிகாலன் சரியான காரணம் இல்லாமல் எந்த விசயத்தையும் மறைக்க மாட்டான் என்பதால் இருவரும் இந்த விசயத்தை கண்டும் காணாமலும் இருந்து விட்டனர்.

விடியற்காலையில் கரிகாலன் சிறையிலிருந்து தப்பிய தகவல் ரகசிய தீவு முழுக்க பரவ ஆரம்பித்தது.கரிகாலனின் மாயாவி பிம்பம் மீண்டும் ஒருமுறை உறுதியானது. அவனுக்கு மரணமே இல்லை. எங்கே அடைத்து வைத்தாலும் அங்கேயிருந்து தப்பித்து விடுவான் போன்ற வதந்திகள் இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தன.

சிறைசாலையிலிருந்து கரிகாலன் தப்பிய செய்தியை யறிந்த மதிமாறனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. விடித்ததும் கரிகாலனை தூக்கில் போட்டு தன்னுடைய நீண்ட நாள் எதிரியை குழி தோண்டி புதைத்து விடலாம் என்று திட்டமிட்டிருந்த மதி மாறனுக்கு கரிகாலன் தப்பி சென்றது தலையில் இடி விழுந்தது போலிருந்தது.

கருணாகரனிடம் தனது சினத்தை காட்டி சீறியவன் இனி இவனை நம்பி பயனில்லை. நாமே களம் இறங்கிவிட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்து விட்டான்.

சில நாட்கள் அமைதியாக இருந்த மதிமாறன் திடிரென்று கருணாகரனுக்கு ஒரு ஓலையை கொடுத்தனுப்பினான்.

தனக்கு அம்மை நோய் தாக்கியிருப்பதால் பத்து நாட்கள் ஓய்வெடுக்க போவதாகவும் தன்னை நேரில் சந்திப்பதை தவிர்க்கும்படியும் அதில் கூறியிருந்தான்.

மதிமாறன் தனக்கு தெரியாமல் எதையோ ரகசியமாக திட்டமிடுவதாக கருணாகரனுக்கு தோன்றியது. அவன் அரண்மனை வைத்தியரை விசாரித்த போது அவர் எந்த கவலையும் இல்லாமல் " நீ கேள்விப்பட்டது உண்மை தான் " என்று சொல்லியதை வைத்தே அவர் சொல்வது பொய் என்று அவன் தெரிந்து கொண்டு விட்டான்.

மதிமாறன் என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறான் என்பதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

சிறையிலிருந்து தப்பிய கரிகாலன் அதற்கடுத்த இரண்டு வாரங்களுக்கு யோகி எந்த வேலையும் தராததால் அவரை நச்சரிக்க ஆரம்பித்தான்.

தீவின் கிழக்கு பகுதியில் இருக்கும் காவல் கோட்டத்தில் ஏராளமான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்படுவதை சொன்ன யோகி" ஆனால் இப்போது நாம் அங்கே தாக்குதல் நடத்துவது உசிதமல்ல. சோழி உருட்டி பார்த்தேன், தீய சகுனத்தை காட்டுகிறது. அதனால் இதை தவிர்த்து விடுவோம்" என்றார்.

சரி என்று தலையாட்டிய கரிகாலன் பாரிய ஆயுதங்களுக்காக அங்கே தாக்குதல் நடத்த தீர்மானித்தான். தாக்குதலில் வெற்றி பெற்ற பின் தகவலை யோகியிடம் சொல்லி கொள்ளலாம் என்று தீர்மானித்தான். அவன் இரவு நேரத்தில் அந்த காவல் கோட்டத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட ஆரம்பித்தான்.

அது மதிமாறன் தனக்கு விரித்து வைத்த வஞ்சக வலை என்பதை அவன் உணரவேயில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக