செவ்வாய், 18 அக்டோபர், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 42

பரகாயப் பிரவேசம்

மதிமாறன் அனுப்பி வைத்த ஓலையை படித்த தயாநிதி மனம் குழம்பி போனான். தன்னுடைய ஆருயீர் நண்பனான மலையமானின் மரணத்தையும் அவன் குடும்பம் நிர்மூலமானதையும் அவனால் ஏற்றுக்கொள்ள வே முடியவில்லை.

நேர்மையும் கண்ணியமும் கொண்ட மலையமான் பெண்கள் விசயத்தில் நெருப்பு போன்றவன். தன் மனைவியை தவிர மற்ற பெண்களைசகோதரிகளாக நினைப்பவன். அப்படி கண்ணியமான நடத்தை கொண்ட மலையமானுக்கு எப்படி ஆசை நாயகியும் அவள் மூலமாக ஒரு மகனும் இருக்க முடியும்? யாரோ ஒரு எத்தன் மலையமானின் மரணத்தை பயன்படுத்தி கொண்டு தன்னை அவனுடைய மகன் என்று அறிவித்து கொண்டு சிகப்பு முகமூடியை அணிந்து கொண்டு மதிமாறனின் ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்கிறானோ என்ற சந்தேகமும் தயாநிதிக்கு எழுந்தது.

தன் அன்பு நண்பனின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து கொண்டிருக்கும் அந்த புல்லுருவியை அவன் மன்னிக்க விரும்பவில்லை. அந்த சிகப்பு முகமூடியை எப்படியாவது கண்டுபிடித்து அவன் கதையை முடித்துவிடவே அவன் விரும்பினான்.

அதற்கு ஒரே வழிமதிமாறனுக்கு ஆயுதங்களை கொடுத்து உதவுவது தான். அதற்கு தகுதியான ஆள் நீலன் தான் என்று அவன் நினைத்தான். இப்படி ஒரு காரியத்திற்கு அவன் நீலனை தேர்ந்தெடுக்க ஒரு பிரத்யேகமான காரணம் இருந்தது.

அவனுக்கும் நீலனுக்கும் இடையே ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் இருந்தது. அந்த ஒப்பந்தத்தின் படி இருவருமே பலனடைந்து வந்தார்கள். ஆகவே தான் அவன் நீலனை இந்த காரியத்திற்கு தேர்ந்தெடுத்தான்.

ஆயுத உதவி கேட்டு கடிதம் எழுதிய மதிமாறன் நாட்டின் நிர்வாகம் பற்றி மாதா மாதம் எழுதி அனுப்பும் கடிதங்களில் சிகப்பு முகமூடியை பற்றி கண், காது, மூக்கு வைத்து தவறான செய்திகளை சித்தரிக்கவும் தவறவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவன் சிகப்பு முகமூடி எழுதுவது போன்ற பொய்யான கடிதங்களை தயார் செய்து அவற்றின் மூலம் தயாநிதிக்கு மிரட்டல் விடுக்கவும் ஆரம்பித்தான்.

அவனது குள்ள நரி தந்திரம் பலிக்க ஆரம்பித்தது. சிகப்பு முகமூடியின் திமிரான கடிதங்களை படித்து முதலில் கடும் கோபம் கொண்ட தயாநிதி தன் உடல்நிலையையும், மன நிலையையும் கருத்தில் கொண்டு அவற்றை படிக்காமல் தவிர்த்துவிட்டான். சிகப்பு முகமூடியிடம் இருந்து வரும் கடிதங்களை அவன் படிக்காமலேயே குப்பையில் வீசுவதை வாடிக்கையாக்கி கொண்டான்.

மதிமாறனின் சதி திட்டம் பற்றி எதுவும் தெரியாத கரிகாலன் தயாநிதிக்கு தான் எழுதும் கடிதங்களை மலைநாட்டுக்கு செல்லும் கப்பல் மாலுமிகள் மூலம் கொடுத்து விட ஆரம்பித்தான்.

உண்மை நிலைமையை விளக்கிகரிகாலன் எழுதிய கடிதங்களும் மிரட்டல் கடிதங்களாக நினைத்து வழக்கம் போல் குப்பை கூடையில் எறியப்பட்டன.

தயாநிதியிடமிருந்து எந்த பதில்ஓலையும் வராததால் மனச்சோர்வடைந்த கரிகாலன் சிறிது நாட்களுக்கு பிறகு தயாநிதிக்கு கடிதம் எழுதுவதையே விட்டு விட்டான்.

தனது நயவஞ்சக திட்டம் நிறைவேறிய ம கிழ்ச்சியில் திளைத்தான்மதிமாறன்.

தயாநிதியிடமிருந்து பதில் ஓலைவராததால் சிறிது நாள் அமைதியாக இருந்த கரிகாலன் அதன் பிறகு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டான். வழக்கம் போல் மதிமாறனின் ஆட்களின் மேல் தாக்குதல் நடத்த தொடங்கி விட்டான்.

அவனை பிடிக்க முயன்று தோற்றுகொண்டிருக்கும் கருணாகரனின் மீது மதிமாறனின் பார்வை திரும்பியது. சிகப்பு முகமூடியை ஏன் பிடிக்க முடியவில்லை என்று கேள்வி கேட்டு அவனை குடைந்தான் மதிமாறன்.

அவனது கேள்விகளுக்கு வெவ்வேறு பதில் களை கூறி வந்தான் கருணாகரன் .அவனது பதில்களை கேட்டு அலுத்து போனான்மதிமாறன்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல் யோகியின் அறிவுரைப்படி மதிமாறனின் ஆட்கள் மீது தாக்குதல் நடத்த சென்ற கரிகாலன் துரதிர்ஷ்டவசமாக அவர்களின் பிடியில் அகப்பட்டு கொண்டான். அவனது தோழர்கள் அவனை கைவிட்டு விட்டு தப்பி சென்று விட்டனர்.

கருணாகரன் அவனை பலத்த காவலோடு மதிமாறனின் முன்னால் கொண்டு போய் நிறுத்தினான். கருணாகரனை சிகப்பு முகமூடியோடு பார்த்த மதிமாறனின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவன் கருணாகரனை கட்டி பிடித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிகாட்டினான்.

சிகப்பு முகமூடி சிறையில் அடைக்கப்பட்டான். அதற்கு முன்பாக அவனது முகமூடியை அகற்றி தன்னுடைய எதிரியை இனம் கண்டு கொண்டு விட்டான்மதிமாறன். மலையமானின் மூத்த மகன் தீ விபத்தில் சாகாமல் உயிரோடு இருப்பது அவனுக்கு அதிர்ச்சியை தந்தது.

கரிகாலன் தன்னிடம் சிக்கி விட்டதால் அவனது புரட்சி கூட்டம் செய்வதறியாது கலைந்து விடும். இனி தன் ஆட்சி அதிகாரத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று நினைத்த மதிமாறன் தயாநிதிக்கு தான் சிகப்பு முகமூடியை போல் மிரட்டல்  கடிதம் எழுதி குழப்பம் ஏற்படுத்திய உண்மையை கூறி விட்டான். நாளை காலை சாகப்போகிறவன் தானே என்று அலட்சியமாக நினைத்து தன்னுடைய புத்திசாலிதனத்தை எதிரியும் தெரிந்து கொள்ளட்டும் என்ற தற்பெருமை நினைப்பில் உண்மையை உளறி விட்டான் மதி மாறன் ..

தயாநிதிக்கு தான் அனுப்பிய கடிதங்களுக்கு ஏன் ஒருபதில் கடிதம் கூட வரவில்லை என்று இப்போது கரிகாலனுக்கு தெளிவாக தெரிந்தது. தனிமை சிறையில் அடைக்கப்பட்டு கிடந்தான் கரிகாலன்.

அதே இரவு நேரத்தில் பார்த்திபனும், வில்லவனும் யோகியின் ஆசிரமத்தில் அவர் முன்னால் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

நாளை காலை கொல்லப்படபோகிற கரிகாலனை நாம் இன்று இரவுக்குள் எப்படியாவது மீட்டாக வேண்டும் என்று இருவரும் யோகியிடம் விவாதித்து கொண்டிருந்தனர்.

அவர்களை போல் கோபம், கொந்தளிப்பு, எதுவும் இல்லாமல் அமைதியே வடிவாக இருந்த யோகி இருவரும் வீணாக பதட்டப்பட வேண்டாம். நாளை காலை கரிகாலன் இதே இடத்தில் இருப்பான். அவனை மீட்டு கொண்டு வருவது என்னுடைய பொறுப்பு. இடையில் விபரீதமாக எதையாவது செய்து காரியத்தை குலைத்து விடாதீர்கள் என்றார்.

" என் அண்ணனை மீட்க நீங்கள் என்ன ஏற்பாடு செய்து வைத்துள்ளீர்கள்?" என்றான் பார்த்திபன்.

"அதை நான் இப்போது சொல்ல முடியாது. ஆனால் என்னால் ஓன்றை நிச்சயமாக சொல்ல முடியும். நாளை சூரிய உதயத்தின் போது உன் அண்ணன் கரிகாலன் இங்கே இருப்பான். அதற்குள் உன் அண்ணனை மீட்கிறேன் என்று ஏடாகூடமாக எதையும் செய்து விடாதீர்கள்" என்ற யோகி பூஜை அறைக்குள் சென்று கதவை உட்புறமாக தாழிட்டு கொண்டார்.

யோகியை நம்புவதா? வேண்டாமா என்ற குழப்பத்தில் நின்று கொண்டிருந்தனர் பார்த்திபனும், வில்லவனும்.

அன்று நள்ளிரவு நிலவு உச்சிக்கு வந்திருந்தது. சிறைக்கு வெளியே இருந்த காட்டு பகுதியில் இருந்து நரிகளின் சீரான ஊளை சத்தம் கேட்க ஆரம்பித்தது. அரவம் கேட்கும் போதெல்லாம் தங்களின் ஒலியை நிறுத்திவிட்டு அமைதியை சத்தம் போட்டு குலைத்து கொண்டிருந்தன சில்வண்டுகள்.

என்ன சிக்கல் வந்தாலும் தன்னை மீட்பதாக உறுதிமொழி கூறிய யோகி இப்படியான சந்தர்ப்பத்தில் தனக்கு உதவி செய்ய வந்து சேருவாரா என்ற எதிர்பார்ப்பில் உறக்கம் தொலைத்து கண் விழித்துக் கிடந்தான் கரிகாலன். வெவ்வேறு யோசனைகளில் மூழ்கி போன அவன் அப்படியே கண் அயர்ந்து விட்டான்.

அவன் உறக்கத்தின் பிடியில் தன்னை முழுதாக ஒப்புக் கொடுத்த போது யாரோ அவனை உலுக்கி எழுப்பினார்கள்.

"கரிகாலா! விழித்து கொள்" என்ற து ஒரு பரிட்சையமான குரல்.

கரிகாலன் தன் கண்களை திறந்தான்.அதுவரை இருளை பார்த்து கொண்டிருந்த அவனது கண்கள் திடீர் வெளிச்சத்தை எதிர்கொள்ள முடியாமல் கூசின .
அவனது அவஸ்தையை புரிந்து கொண்ட குரலுக்கு சொந்தக்காரன் தன் கையில் இருந்த தீ வட்டியை கீழே தாழ்த்தி பிடித்தான். அரைகுறை வெளிச்சத்தில் தெரிந்த உருவத்தை கண்களை கசக்கி கொண்டு தெளிவாகப் பார்த்தான் கரிகாலன்.

அவனது எதிரில் கையில் தீப்பந்தத்துடன் நின்று கொண்டிருந்தது யோகி.

"சுவாமி நீங்களா?" என்றான் நம்ப முடியாத அதிர்ச்சியுடன் கரிகாலன்.

"ஆம். நானே தான் " என்ற யோகி தன் இடுப்பில் இருந்த துணியை எடுத்து அவன் கண்களை கட்டினான்.

"ஏன் என் கண்களை கட்டுகிறீர்கள்?" என்றான் குழப்பத்துடன் கரிகாலன்.

"சில ரகசியங்களை நீ பார்க்காதிருக்க " என்ற யோகி" என் கையை பிடித்து கொண்டு என் பின்னால்வா! நாம் இப்போது இங்கிருந்து தப்பிக்க போகிறோம்" என்றார்.

" அப்படியே செய்கிறேன். நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்?" என்றான் கரிகாலன் யோகியின் கையை பிடித்தபடி.

"பரகாயப் பிரவேசம் " என்று புன்னகைத்தார் யோகி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக