சனி, 29 அக்டோபர், 2022

ரகசிய தீவு அத்தியாயம்45

ரகசிய தீவு

முடிவல்ல தொடக்கம்

மதிமாறன் விரித்து வைத்திருந்த வஞ்சக வலையில் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையில் வீழ்ந்து விட்டான் கரிகாலன்.மதிமாறன் தங்களின் நாடகத்தை எளிதாக கண்டுபிடித்து விடுவான் என்பதை கரிகாலன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவன் தன் கைகட்டை அவிழ்த்து தன்னை விடுவித்து கொள்ளும் முன்பாகவே மதிமாறன் அவனுடைய மார்பில் வாளைபாய்ச்சி விட்டான்.

தங்கள் கொள்ளை முயற்சி இனி நடந்தேறாது என்பதை புரிந்து கொண்ட அவனது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றனர்.கரிகாலனின் நண்பர்களில் ஒருவன் மதி மாறனின் வாளை மார்பில் வாங்கி கொண்டதுடன் அவனை இறுகப் பிடித்துக் கொண்டு தன்னுடைய நண்பர்கள் தப்பி செல்வதற்கு வேண்டிய கால நேரத்தை உருவாக்கி கொடுத்தான். வாசலில் புரவிகளுடன் நின்ற பார்த்திபனுக்கு என்ன நடக்கிறதென்று எதுவும் புரியவில்லை.கரிகாலனை இருவர் கைதாங்க லாக இருவர் தாங்கி வருவதை பார்த்து விபரீதமாக என்னவோ நடந்து விட்டது என்று யூகித்து கொண்டான்.

அவனது கேள்விக்கு வில்லவன் கத்திகுத்து காயம் என்று பதிலளித்ததில் அவனது யூகம் உறுதியானது. சற்று நேரத்தில் நான்கு பேரும் ஆளுக்கு ஒரு குதிரையில் ஏறிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.மதிமாறனின் அலறலில் காவல் கோட்டம் தன் அறைகுறை தூக்கத்திலிருந்து முழுதாக விடுபட்டு எழுந்தது. தன்னை நகர விடாது இறுகப் பிடித்திருந்தவன் நெஞ்சில் மீண்டும் ஒருமுறை கத்தியை பாய்ச்சினான்மதிமாறன் அவனது உயிர் பறவை உடலை விட்டுப் பறந்தது. அவனது உடல்வெட்டுண்ட மரமாக கீழே விழுந்தது.

"எங்கே என் குதிரை? அதை உடனே இங்கு கொண்டு வாருங்கள். எல்லோரும் அவர்களை பிடிக்க கிளம்புங்கள். அவர்கள் இங்கிருந்து வெகுதூரம் போயிருக்க முடியாது. அவர்களை விரட்டி பிடியுங்கள்" என்று கர்ஜித்தான்மதிமாறன்.

லாயத்திலிருந்து கொண்டு வரப்பட்ட குதிரையில் தாவி ஏறியவன் "நான்கு திசைகளிலும் அவர்களை பிரிந்து தேடுங்கள். அவர்களுக்கு உதவ வேறு யாராவது வெளியே காத்துக் கொண்டி ருக்கலாம். அப்படி அகப்படுபவர்களை உடனே சிறை செய்யுங்கள். நான் அவர்கள் போகும் திசையில் பயணமாகிறேன். படையின் ஒரு பிரிவு என்னை பின் தொடரட்டும்" என்ற மதிமாறன் குதிரையை பக்கவாட்டில் உதைத்து கிளம்பினான்.

அவனுக்கு முன்பாக சென்று கொண்டிருந்த நான்கு குதிரைகளும் ஒரே திசையில் விரைந்து கொண்டிருந்தன.

கரிகாலனின் காயத்திலிருந்து பெருகிய குருதி அவன் ஆடையை நனைத்து தரையில் சிந்த ஆரம்பித்தது. ஏராளமான ரத்த போக்கால் கரிகாலன் அறைகுறையாக மயக்கத்திற்கு போவதும் வருவதுமாக இருந்தான்.

அவனுக்கு விழிப்பு வந்தபோது அவன் ஈனஸ் வரமான குரலில் "பார்த்தி பா!" என்று தன் தம்பியை அழைத்தான்.
அவனது மெல்லிய குரலை கேட்ட பார்த்திபன்" என்ன அண்ணா ?" என்றான்.

"என் திட்டம் தோற்று விட்டது. அவசரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது மீண்டும் ஒருமுறை நிருபணமாகி விட்டது. என் மரணம் நெருங்குகிறது. இனி நான் உயிர் பிழைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. நான் இறந்தது தெரிந்தால் மக்கள் தங்கள் நம்பிக்கையை இழந்து விடுவார்கள்.மதிமாறனின் அராஜகம் இன்னும் அதிகமாகும். அதை தடுக்க சிகப்பு முகமூடி உயிரோடு இருக்க வேண்டும்"

"அப்படியெல்லாம் பேசாதே அண்ணா. இந்த உலகில் எனக்கு இருக்கும் ஒரே சொந்தம் நீ மட்டும் தான்."

"எனக்கு பிறகு மக்கள் தான் உன் சொந்தம். இதோ என்னுடைய சிகப்பு முகமூடி.இனி இது உனக்கு சொந்தம். என் விதிமுடியப்போகிறது. என்னை அழைத்து சென்றால் உங்கள் விதியும் முடிந்துவிடும்."

" என்ன அண்ணா சொல்கிறாய்?"

"ஆமாம். எனக்கு பின்னாலும் சிகப்பு முகமூடி வாழ வேண்டும். சர்வாதிகாரம் அதை பார்த்து நடுங்க வேண்டும். உன்னிடம் மிகப் பெரிய பொறுப்பை ஒப்படைக்கிறேன். அதை நீ தான் நிறைவேற்ற வேண்டும். இதோ என் உடலிலிருந்து வெளியேறும் உதிரம் என் வழியை காட்டி கொடுத்து விடும். அதனால் நான் உங்களிடபிருந்து விலகி செல்ல போகிறேன். வருகிறேன் நண்பர்களே.புரட்சி வெல்லட்டும்" என்ற கரிகாலன் குதிரையின் வழியை மாற்றினான்.

"கரிகாலா! மீண்டும் தவறான முடிவை எடுக்காதே. நாங்கள் உன்னை தனியாக விடமாட்டோம்" என்றான் வில்லவன்.

"வில்லவா ! என் தம்பிக்கு துணையாக இருந்து அவனை வழிநடத்து.என்னுடைய நேரம் முடிவுக்கு வந்து விட்டது. நான் ஒரு சுமை. என்னை கழற்றி வீசுவதே முறை. போய் வருகிறேன் நண்பா " என்றான் கரிகாலன்.

"வேண்டாம் கரிகாலா!" என்றான் கண்ணீருடன் வில்லவன்.

நண்பர்களை பார்த்து கையை வீசி பிரியாவிடை கொடுத்த கரிகாலன் தன் குதிரையை தட்டி விட்டான்.

அவன் போகும் திசையை பார்த்த பார்த்திபன்" அண்ணன் போவது பிசாசு பள்ளத்தாக்காயிற்றே? அங்கே வழியே இல்லை. இருட்டில் பயணித்தால் அதள பாதாளத்தில் விழுந்து மரணம் நிச்சயம். அங்கே எதற்காக போகிறான்?" என்றான் குழப்பத்துடன் பார்த்திபன்.

" அவன் தன்னை அழித்து கொள்ள முடிவு செய்து விட்டான். தன் உடல் கூட எதிரிகளுக்கு கிடைக்க கூடாது என்று அவன் நினைக்கிறான். அப்போதுதான் சிகப்பு முகமூடி ஓரு மாயாவி . மரணமில்லாதவன் என்று மக்கள் நம்புவார்கள் என்று அவன் நினைக்கிறான்" என்றான் வில்லவன் கண்ணீருடன் .

குருதி பெருக்கை அடையாளமாக வைத்து பின் தொடர்ந்து கொண்டிருந்தான் மதி மாறன் . பயல் பயங்கரமாக காயம் பட்டு விட்டான் - குருதி பெருக் கோடு வெகுதூரம் அவன் பயணித்து ஓடி விட முடியாது என்று மனதிற்குள் ஆனந்த பாட்டு பாடிக் கொண்டிருந்தான் மதி மாறன் .

அவன் பாதி வழியிலேயே பிசாசு பள்ளத்தாக்கை நோக்கி செல்லும் கரிகாலனை பார்த்து விட்டான். வழி இல்லாத இந்த பாதையில் இவன் ஏன் தனியாக பயணிக்கிறான் என்று யோசித்தான்மதிமாறன். அவனது சகாக்கள் யாரும் அவனை பின் தொடர்ந்து வரவில்லை என்பதையும் அவன் கவனித்தான்.

யாரும் பயணிக்காத பாதையில் பயல் பதுங்கி கிடக்க தீர்மானித்து விட்டான் போலிருக்கிறது. கண்டிப்பாக அதள பாதாளத்தில் முடியும் இந்த பாதையை யாரும் சந்தேகிக்கவே மாட்டார்கள். பயல் மிகுந்த திறமைசாலி தான் .அதனால் தான் நம்மிடம் அகப்பட மறுக்கிறான் என்று நினைத்த மதிமாறன் அவனை பின் தொடர ஆரம்பித்தான்..

அறைகுறை மயக்கத்தில் இருந்த கரிகாலனுக்கு பின் தொடரும் குதிரையின் குளம் பொலி கேட்க ஆரம்பித்தது. யாரோ நம்மை பின்தொடர்கிறார்கள் என்பதை உணர்ந்த கரிகாலன் குதிரையை வேகமாக செலுத்தினான்.

காலை சூரிய உதயம் ஆரம்பமாக தொடங்கியது.

பாதையில் வழி இல்லை. பாதாளம் தான் என்பதை உணர்ந்த குதிரை நகர மறுத்தது.

குதிரை நின்று விட்டதால் வேறு வழியின்றி அதிலிருந்து குதித்து இறங்கினான் கரிகாலன்.

"கடைசியாக என்னிடம் அகப்பட்டு விட்டாய்" என்றான் மதி மாறன் தன் குதிரையை நிறுத்தியபடி.

கரிகாலன் தன்னிடமிருந்த குறு வாளை அவனை நோக்கி எறிந்தான். அது குறிதவறியது. "உன்னைப்போல்என் குறி தப்பாது. பார்க்கிறாயா?" என்ற மதிமாறன் அடுத்தடுத்து இரண்டு குறுவாள் களை கரிகாலனை குறிவைத்து வீசினான்.

தன் மார்பில் பாய்ந்த குறுவாள்களை தாங்கி கொண்ட கரிகாலன்" என்னை கொன்று விட்டதாக மனப்பால் குடிக்காதே மதி மாறா ! சிகப்பு முகமூடிக்கு சாவே கிடையாது. நான் திரும்பவும் வருவேன். என்னை எதிர்கொள்ள காத்திரு" என்றபடி பாதாளத்தை நோக்கி பாய்ந்தான். சூரியன் வானில் உதிப்பதற்கும் அவன் குதிப்பதற்கும் நேரம் சரியாக இருந்தது.

மதிமாறன் சூரியனையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். ஒரு பிரச்சனை முடிவுக்கு வந்தது என்று நினைத்தான் அவன். அது முடிவல்ல தொடக்கம் என்று அவனுக்கு தெmயவில்லை.

தப்பி சென்ற பார்த்திபன் தன் அண்ணனின் சிகப்பு முகமூடி வேடத்தை அணிய ஆரம்பித்தான்.கரிகாலனின் மரணத்தால் வேதனையடைந்த யோகி அவன் இடத்தில் பார்த்திபனை வைத்து கொண்டார்.

இறந்தவன் எப்படி திரும்பவும் உயிர் பிழைத்து வந்தான் என்று மதிமாறன் குழம்ப ஆரம்பித்தான்.

இரட்டையரில் ஓருவன் இறந்தால் இன்னொருவனுக்கு அவனுடைய பலம் வந்துவிடும் என்ற அறிவியல் விதிக்கு ஏற்ப கரிகாலனும் பார்த்திபனும் இணைந்த கலவையாக மாறிக்கொண்டிருந்தான் பார்த்திபன்.

கரிகாலனின் வீரமும், பார்த்திபனின் யாரையும் நம்பாத பகுத்தறிவும் ஒரே உடலில் செயல்பட ஆரம்பித்தன.

வில்லவன் பார்த்திபனுக்கு துணையாக செயல்பட ஆரம்பித்தான். இன்று வரை மக்கள் சிகப்பு முகமூடிக்கு மரணமே கிடையாது என்று நினைத்து கொண்டிருக்க இதுதான் காரணம்.

கரிகாலனின் கதையை சொல்லி முடித்தாள் வில்லவனின் மனைவி பார்வதி.சந்திரவதனாவிற்கு பார்த்திபனின் மீதான அன்பு பெருக ஆரம்பித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக