வெள்ளி, 14 அக்டோபர், 2022

ரகசியதீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 39

ரகசிய உளவாளி

தனக்கு வர இருந்த மாபெரும் அபாயத்தை எப்படியோ தவிர்த்து கொண்ட மகிழ்ச்சியில் அமைதியாக இருந்து கொண்டான் நீலன்.அவன் மனம் கருணாகரன் அந்த மார்க்கதரிசியின் புதையலை எங்கு தான் ஓளித்து வைத்திருப்பான் என்று யோசிக்க ஆரம்பித்தான்.

ரகசிய தீவில் வில்லவனின் மாளிகையில் உறக்கம் வராமல் உட்கார்ந்திருந்தாள் சந்திரவதனா. அவளுக்கு எதிரே அமர்ந்திருந்த வில்லவனின் மனைவி பார்வதி அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

அவளையே பார்த்து கொண்டிருந்த சந்திரவதனா "அக்கா! கரிகாலனின் கதையை சொல்வதாக நீங்கள் கூறினீர்கள். பிறகு அதை சொல்லாமல் அப்படியே அமைதியாகி விட்டீர்கள். ஏன் இந்த அமைதி ? " என்றாள் சந்திரவதனா .

"சந்திரவதனா .! நாங்கள் ஆளும் அரசின் அராஜங்களை எதிர்த்து போராடும் புரட்சி குழுவினர். எப்போது வேண்டுமானாலும் அரசால் எங்களுக்கு ஆபத்து நேரும். நீயோ இவற்றில் சம்மந்தப்படாத அந்நிய பெண். உன்னை நம்பி எப்படி கரிகாலனின் வரலாறை கூறுவது?"

"அப்படியானால் நீங்கள் என்னை இன்னமும் நம்பவில்லையா?"

"அப்படி அல்ல பெண்ணே.கரிகாலனும் பார்த்திபனும் ஓட்டி பிறந்த இரட்டை பிறவிகள்.கரிகாலன் இறந்து போன பின் பார்த்திபன் அவனைப் போல் நடித்து கொண்டிருக்கிறான். இந்த உண்மை அவனது நெருங்கிய சகாக்களுக்கு மட்டுமே தெரியும். சாதாரண பொது ஜனங்களுக்கு இந்த உண்மை தெரியாது. இந்த விசயம் ரொம்பவும் ரகசியமானது"

"அந்த ரகசியத்தைத் தான் இப்போது என்னிடம் சொல்லி விட்டீர்களே?"

"எனக்கு ஓட்டை வாய் சந்திரா. என்னை போல் நீயும் வேறு யாரிடமாவது இந்த ரகசியத்தை உளறிவிடக் கூடாது என்பதால் தான் நான் உன்னிடம் உண்மையை கூற தயங்குகிறேன்."

"நீங்கள் என்னிடம் தயங்க வேண்டிய தேயில்லை அக்கா. நானும் உங்களில் ஓருத்திதான் "
" எதை வைத்து நீ அப்படி சொல்கிறாய்?"

"உங்கள் தலைவரின் இதயத்தில் இடம் பிடித்திருக்கும் இளம் பெண் நானல்லவா?"
என்றாள் வெட்கத்துடன் சந்திரவதனா.

"அடி கள்ளி. இது எப்போது நடந்தது? பார்த்திபன் சரியான நெஞ்சழுத்த காரன். தன் காதலை அப்படியே மூடிமறைத்து விட்டானே ?"

"அவரை கோபிக்காதீர்கள் அக்கா. அவர் என் மீதான காதலை இன்னமும் வாய் திறந்து சொல்லவில்லை. நானும் அது போலவே தான் "

"இருவரும் வாய் திறந்து பேசாமல் இந்த சங்கதி எப்படியம்மா நடந்தது?"

"காதல் மொழி பேச கண்கள் போதாதா? இதழ் மொழியும் வேண்டுமா?"

"ஓஹோ.கதை அப்படி போகிறதா? அப்படியானால் பார்த்திபன் மீது உனக்கு இஷ்டம் தான் ? "

"ஆமாம். அவருக்கும் என் மீது ப்ரியம் தான்."

"அப்படியானால் உன்னிடம் இந்த கதையை சொல்லித்தான் தீர வேண்டும்." என்ற பார்வதி கரிகாலனின் கதையை கூற தொடங்கினாள்.

ரகசிய தீவின் முக்கியமான அரசியல் பிரமுகர்களில் மலையமானும் ஒருவர். அவருக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் தான் கரிகாலனும், பார்த்திபனும். ரகசிய தீவின் ஆளுகையை கையில் வைத்திருந்த தயாநிதியும் மலையமானும் பால்ய காலத்து நண்பர்கள். அவ்வப்போது ரகசிய தீவிற்கு வரும் தயாநிதி மலையமானின் மாளிகையில் தங்கி பொழுதை போக்குவது வழக்கம்.

ரகசிய தீவின் ஆளுநராக மலையமானை நியமிக்க விரும்பினான் தயாநிதி . நண்பர்களுக்குள் அது சரி வராது என்று அந்த பதவியை ஏற்க மறுத்து விட்டான் மலையமான். அவனது இந்த செயலால் மலையமான் மீதிருந்த மதிப்பு பல மடங்கு அதிகமானது தயாநிதிக்கு .

பதவியை விரும்பாத மலையமானின் நட்பை விரும்பி போற்றிய தயாநிதி வேறு ஒரு நபரை ரகசிய தீவின் ஆளுநராக நியமித்தான். அந்த ஆளுநர் தவறாக எதையாவது செய்ய முற்பட்டால் மலையமான் தன்னுடைய நண்பனுக்கு அதை தெரிவித்து ஓலை அனுப்பி விடுவான்.

அதை படிக்கும் தயாநிதி அந்த தவறான முடிவில் தலையிட்டு மலையமான் எழுதிய தீர்வையும் அமல்படுத்துவான். இப்படியாக மலையமான் யாருக்கும் தெரியாமல் தயாநிதியின் ரகசிய உளவாளியாகவும் செயல்பட்டு வந்தான்.

தயாநிதிக்கு பெண் குழந்தை பிறந்ததும் நண்பர்களுக்கு இடையே இன்னொரு ஓப்பந்தம் உருவானது. பதவியை மறுத்த மலையமான் வீட்டில் தன்னுடைய பெண் மருமகளாக வாழ்க்கை பட வேண்டும் என்று விரும்பினான்மலையமான்.கரிகாலன், பார்த்திபன் இருவரில் யார் அவளை மணந்தாலும் சரி மலையமான் வீட்டு மருமகள் தன்னுடைய மகள் தான் என்பதில் அவன் உறுதியாக இருந்தான்.

ரகசிய தீவிற்கு தான் வர முடியாத சூழலில் தன்னுடைய மனைவியையும், மகளையும் கப்பலில் அனுப்பி வைத்தான் தயாநிதி . அந்த கப்பல் வரும் வழியில் கடல் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு நிர்மூலமானது. அப்போது நடந்த சண்டையில் தயாநிதியின் மனைவி இறந்து போனாள். அந்த பெண் குழந்தை தயாநிதியின் ஒரே வாரிசுகாணாமல் போய்விட்டது.

அன்று சோகத்தில் வீழ்ந்த தயாநிதியால் மீண்டும் மீளவே முடியவில்லை. நண்பனின் பெண் குழந்தையை கண்டுபிடிக்க மலையமானும் தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்தார். ஆனாலும் பலனில்லை. அந்த குழந்தை காணாமல் போனது போனது தான்.

அப்போதுதான் மதி மாறன் இந்த தீவின் ஆளுநராக பொறுப்பேற்று ரகசிய தீவிற்கு வந்து சேர்ந்தான். அவனது இலக்கு தயாநிதியின் மகளை கண்டுபிடிப்பதல்ல. மார்க்கதரிசியின் தங்கத்தை கண்டுபிடிப்பது. அதற்கான முயற்சிகளில் அவன் ஈடுபட ஆரம்பித்தான்.

அப்படி ஒரு நாள் நகர் வலம் வந்தவன் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டது. அப்படி கொல்ல முயன்றவர்களை கொன்று மதிமாறனின் உயிரை காப்பாற்றினான் ஒருவன். அவன் தான் கருணாகரன்,

கருணாகரனின் வீரத்தை பார்த்து மகிழ்ந்த மதிமாறன் இப்படி ஒரு ஆள் தனக்கு தேவை என்று நினைத்து கருணாகரனுக்கு தளபதி பதவி கொடுத்து தன்னுடன் வைத்து கொண்டான்.

கருணாகரன் மதி மாறனுக்கு விசுவாசமாக நடந்து வந்தான்.மதிமாறனின் எதிரிகளை கொடூரமாக தண்டித்து தன்னுடைய நன்றியை அவனுக்கு பறைசாற்றினான். அவனது நடத்தையிலும் விசுவாசத்திலும் மகிழ்ந்த மதிமாறன் அவனுக்கு மார்க்கதரிசியின் தங்கத்தை தேடும் வேலையை கொடுத்தான்.

அதன் பிறகு அவனது கவனம் வரி வருவாய் மீது திரும்பியது. மலை நாட்டில் இருக்கும் தயாநிதிக்கு வருடா வருடம் வரி வசூலை அனுப்புவது தான் ரகசிய தீவின் ஆளுநராக வருபவரின் வேலை. அதிகமான வருவாயை வசூலித்து தயாநிதியின் காலடியில் கொட்டினால் அவன் தன்னுடைய விசயங்களில் தலையிட மாட்டான் என்றும் நல்ல விசுவாசி, சிறந்த நிர்வாகி என்று தன்னை நினைப்பான் என்று நினைத்த மதிமாறன் அதிகமான வரிகளை போட்டு மக்களை துன்புறுத்த ஆரம்பித்தான்.

வழக்கமாக வரும் வரி வருவாய் இப்போது கூடுதலாக வருவதைப் பார்த்து தயாநிதி முதலில் வியப்படைந்தான். பின்னாலேயே வந்து சேர்ந்த மலையமானின் ஓலை மதிமாறனின் கொடுமைகளை எடுத்து சொல்லியது.

அதை படித்து பார்த்த தயாநிதி மதிமாறனின் மீது மிகுந்த கோபம் கொண்டான். புதிய வரிகளை நீக்கும்படியும் பழைய வரிகளே நீடிக்கட்டும் என்றும் அவன் மதி மாறனுக்கு பதில் கடிதம் அனுப்பினான்.

தயாநிதியின் கண்டிப்பான ஓலையை படித்து பார்த்ததுமே மதிமாறனுக்கு ஒரு உண்மை புரிந்து விட்டது. இங்கே ரகசிய தீவில் நடப்பவற்றை தயாநிதியிடம் சொல்ல யாரோ ஒரு ரகசிய உளவாளி இருக்கிறான். அவனை முதலில் தொலைத்தாக வேண்டும். நாளை மார்க்கதரிசியின் தங்கப்புதையல் கையில் கிடைத்து விட்டால் அதை எடுத்து கொண்டு ஓடி விடவோ பதுக்கி வைக்கவோ முடியாது. அந்த ரகசிய ஓற்றன் அதை மோப்பம் பிடித்து தயாநிதிக்கு ஓலை அனுப்பி விடுவான்.

அந்த ரகசிய ஒற்றன் இருக்கும் வரை தான் சுயமாக இயங்க முடியாது என்று உணர்ந்து கொண்ட மதிமாறன் தன்னுடைய தந்தைக்கு ஓலை அனுப்பி அந்த ரகசிய ஒற் றன் யார் என்று கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டு கொண்டான்.

மதிமாறனின் தகப்பன் பொன்னாசை காட்டி தயாநிதியின் வீட்டில் வேலை செய்யும் வேலைகாரர்களில் ஒருவனை விலைக்கு வாங்கினான். அவன் திருடி வந்து கொடுத்த ஓலையை படித்ததுமே ரகசிய தீவின் ரகசிய ஒற்றன்மலையமான் தான் என்பது வெட்ட வெளிச்சமானது.

தன் தந்தை அனுப்பிய ஓலையின் மூலமாக மலையமான் தான் அந்த ரகசிய உளவாளி என்பதை தெரிந்து கொண்ட மதிமாறன் அவனது கதையை முடிக்கும் வேலையை கருணாகரனிடம் ஓப்படைத்தான். தன் விசுவாசத்தை காட்ட வேட்டை நாயாக சிறு படையுடன் கிளம்பினான் கருணாகரன்.

ரகசிய தீவில் மலையமானிடம் ஆசி பெற்று கொண்டு நள்ளிரவு முயல் வேட்டைக்கு கிளம்பினார்கள் பார்த்திபனும், கரிகாலனும் அவர்களின் உற்ற தோழனான வில்லவனும்..

அவர்கள் கையில் தீவட்டிகளுடன் கானகம் நோக்கி செல்வதை வாசலில் நின்றபடி பார்த்து கொண்டிருந்தான் மலையமான். "விளையாட்டு சிறுவர்கள் " என்று முணுமுணுத்தன அவனது உதடுகள் -

நடந்து கொண்டிருந்த மூவரும் திரும்பி பார்த்து மலையமானை பார்த்து கையசைத்தனர். அவர்கள் மீண்டும் பார்த்து கொள்ளவே போவதில்லை என்பதை அப்போது அவர்கள் அறியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக