ஞாயிறு, 16 அக்டோபர், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு
அத்தியாயம் 41

புதிதாக ஒரு கூட்டணி

மதிமாறனுக்கு சிகப்பு முகமூடியான கரிகாலன் மிகப் பெரிய தொல்லையாக மாறிக்கொண்டிருந்தான். அவனை பிடிக்க தளபதியான கருணாகரன் மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளும் தோல்வியை தழுவிக் கொண்டிருந்தன.
சிகப்பு முகமூடியை பிடிக்க முடியாமல் தோல்வியோடு திரும்பி வரும் கருணாகரனுக்கும் மதிமாறனுக்கும் இடையே வாய் வார்த்தைகளும், மனஸ்தாபமும் முளை விட ஆரம்பித்தன.

ஓரு முறை தன்னை பிடிக்க துரத்தி வரும் மதிமாறனின் ஆட்களிடமிருந்து தப்ப அருகே இருந்த ஆசிரமத்திற்குள் நுழைந்து விட்டான் கரிகாலன்.அவனுடைய நல்ல நேரம் அப்போது ஆசிரமத்தில் கதா காலட்சேபம் நடந்து கொண்டிருந்தது. தான் அணிந்திருந்த சிகப்பு முகமூடியை கழற்றி விட்டு சாதாரண பொது ஜனங்களில் ஓருவனாக மாறி கூட்டத்தில் கலந்து விட்டான் கரிகாலன்.

அரசாங்க ஆட்களால் சல்லடை போட்டு தேடியும் அவனை அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. வழக்கம் போல் தோல்வியுடன் அவர்கள் திரும்ப சென்று விட்டார்கள்.

கதா காலட்சேபம் முடிந்த பின்னால் கூட்டம் கலைய ஆரம்பித்தது.கரிகாலனும் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானான். அப்போது அங்கே வந்த ஓரு சீடன் யோகி அவனை சந்திக்க விரும்புவதாக கூறினான். அவர் ஏன் தன்னை சந்திக்க விரும்புகிறார் என்று புரியாமலேயே அவரை பார்க்க அவரது அறைக்குள் நுழைந்தான் அவன்.

அவன் உள்ளே நுழைந்ததும் குடிசையின் கதவுகள் உட்புறமாக தாழிடப்பட்டன. எதிரிகள் தன்னை சுற்றி வளைத்து விட்டார்களோ என்று நினைத்த கரிகாலன் தன்னுடைய வாளை உருவினான். அவனது கையை பிடித்து தடுத்து ஒரு வலியகரம்.கரிகாலன் யார் என்று நிமிர்ந்து பார்த்தான். எதிரே புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார் யோகி.

"அஞ்சாதே தம்பி. நான் உன் நண்பன் தான்.எதிரியல்ல. கதவை உட்புறமாக தாழிட்டது நான் தான்." என்று சிரித்தார் யோகி.

வாளை திரும்ப உறையில் போட்ட கரிகாலன்" எதற்காக கதவை தாழிட்டீர்கள்?" என்றான்.

" எல்லாம் காரணமாகத் தான் "

"அந்த காரணம் தான் என்னவென்று கேட்கிறேன்"

கடகடவென்று சிரித்த யோகி சட்டென்று அவன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த சிகப்பு முகமூடியை உருவி எடுத்தார்.

"இந்த காரணம் போதுமா? நீ என் ஆசிரமத்தினுள் நுழையும் போது அவசர அவசரமாக இதை கழற்றி ஓளித்து வைப்பதை பார்த்தேன். மதிமாறனின் தூக்கத்தை கெடுக்கும் அந்த சிகப்பு முகமூடி நீதானா?" என்றார் யோகி சிரித்தபடி.

கரிகாலன் யோகியை பார்த்து அயர்ந்து போய் நின்றான். இப்படி தான்கையும் காலுமாக ஒருவரிடம் மாட்டிக் கொள்வோம் என்பதை அவன் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. யாரும் தன்னை கவனிக்கவில்லை என்று தான் அலட்சியமாக இருந்ததை நினைத்து அவன் தன்னையே நொந்து கொண்டான்.

இனியோகியிடம் எதையும் மறைத்து பயனில்லை என்று நினைத்தவன் "ஆம். அந்த சிகப்பு முகமூடி நான் தான் " என்று உண்மையை ஓப்புக் கொண்டான்.

"பரவாயில்லையே? அது நான் இல்லை என்று வீணாக பிடிவாதம் பிடிக்காமல் உடனடியாக உண்மையை ஒப்புக் கொண்டு விட்ட உன் துணிச்சலை பாராட்டுகிறேன். ஆமாம் ! இந்த சிகப்பு முகமூடி அவதாரத்தில் நீ என்ன சாதிக்க நினைக்கிறாய்?"

"வேறு என்ன ? இந்த நாட்டின் விடுதலை தான்.மதிமாறனிடமிருந்து இந்த தீவு சுதந்திர நாடாக மாற வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை"

"எனக்கும் அதே ஆசைதான். நாம் இருவரும் ஓரேலட்சியத்தை நோக்கித்தான் பயணிக்கிறோம். ஆனால் வெவ்வேறு வழிகளில் முயல்கிறோம். அதனால் தான் நம் முயற்சிபலவீனமாகி நம் லட்சியம் தோற்கிறது"

" என்ன சொல்கிறீர்கள்?மதி மாறனை வீழ்த்த நீங்களும் ஆசைப்படுகிறீர்களா? அதற்கு என்ன காரணம்?" என்றான் வியப்புடன் கரிகாலன்.இந்த மதிமாறன் இன்னும் எத்தனை பேரை பகையாளிகளாக மாற்றி வைத்திருக்கிறானோ என்று யோசித்தது அவன் மனம்.

"மதி மாறனை வீழ்த்த வேண்டும் என்பது என்னுடைய ஆசை.லட்சியம். வெறி. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதை பிறகு கூறுகிறேன்.. நீ ஏன் அவனை வீழ்த்த நினைக்கிறாய்? அவன் மீது உனக்கென்ன கோபம்?"

"அவன் என் தந்தையை உயிரோடு எரித்து கொன்றவன் நான் அதற்கு பழி தீர்க்க நினைக்கிறேன்"

"உன் தந்தை?"

"தீ விபத்தில் இறந்து போனதாக எல்லோரும் நம்பும் மலையமான் தான் என் தந்தை. அவர் விபத்தில் இறக்கவில்லை.மதிமாறனால் தீ வைத்து சொல்லப் பட்டவர். அதற்கு நானே சாட்சி"

"அவருடன் அவரது மகன்கள் இருவரும் மாண்டு போனதாக ஊருக்குள் பேச்சு "

"அதை நம்பாதீர்கள். அவரின் மூத்த மகன் கரிகாலன் நான் தான். என் தம்பியும் நானும் இரவில் முயல் வேட்டைக்கு சென்றதால் அந்த விபத்திலிருந்து தப்பி பிழைத்து விட்டோம். அதன் பிறகு மதி மாறனை அச்சுறுத்த நான் எடுத்த அவதாரம் தான் சிகப்பு முகமூடி அவதாரம்."

"நீ எடுத்த அவதாரம் சரிதான். ஆனால் அவதாரத்தின் நோக்கம் தான் சரியில்லை."

"சுவாமி. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"

"நீ மதிமாறனின் ஆட்கள் மீது குத்துமதிப்பாக தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகி விடுகிறாய். அதனால் மதிமாறனுக்கு எந்த நட்டமும் இல்லை. உனக்கு எந்த லாபமும் இல்லை"

"ஆமாம். உண்மைதான். அவனை தூங்கவிடாமல் நான் தொல்லை கொடுத்து கொண்டிருக்கிறேன். என்னை தலைவனாக ஏற்று ஒரு புரட்சி படை உருவாகி விட்டது.
அவர்களுக்கு வேண்டிய ஆயுதங்கள், உணவு பொருட்கள் என்று எதையும் ஏற்பாடு செய்ய முடியவில்லை. இதே நிலைமை தொடர்ந்து நீடித்தால் இந்த கூட்டம் வறுமையினால் கலைந்து விட மட்டுமல்ல என்னை காட்டி கொடுக்கவும் துணிந்து விடும்"

"உண்மைதான். பசி ருசி அறியாது. நேர்மையையும் அறியாது. இதிலிருந்து தப்ப என்ன செய்ய போகிறாய்?"

"எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பெரியவர் நீங்கள் தான் சரியான ஆலோசனை கூற வேண்டும்"

"என்னை நாடி வந்தவர்களை நான் கைவிடுவதேயில்லை. உனக்கொரு உபாயம் கூறுகிறேன்.மதிமாறனின் ஆட்கள் வரி வசூல் செய்யும் பணத்தை நீ கொள்ளையடித்தால் ? அவனது ஆட்களை தாக்கி அவர்களின் ஆயுதங்களை பறிமுதல் செய்து உன் தாக்கினால்?"

" திட்டம் என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இவையெல்லாம் அரசாங்க ரகசியங்களாயிற்றே?இவை நமக்கு எப்படி தெரிய வரும்?"

" என் செல்வாக்கு அரண்மனை வரை செல்லுபடியாகும். நான் சேகரித்து வைக்கும் தகவல்களை உனக்கு கூறுகிறேன். நீ அந்த இடங்களில் உன்னுடைய கை வரிசையை காட்டு. அந்த முயற்சியில் நீ பிடிபட்டாலும் கவலைப்படாதே! நான் உன்னை மீட்டு வருவேன். தினமும் இரவு முதல் சாமத்தின் தொடக்கத்தில் என் ஆசிரமத்திற்கு நீ வர வேண்டும். உனக்கு வேண்டிய தகவல்களை நான் தருவேன்" என்றார் யோகி.

"மிகவும் நன்றி சுவாமி. உங்களின் உதவியை நான் மறக்கவே மாட்டேன்" என்றான் நெகிழ்ச்சியுடன் கரிகாலன்.

"நான் உன்னை நம்புகிறேன். நீயும் என்னை முழுதாக நம்ப வேண்டும். நீ பிடிபட்டால் என்னை காட்டி கொடுத்து விட கூடாது. நான் பிடிபட்டால் உன்னை பற்றி மூச்சு கூட விடமாட்டேன்"

"நான் உங்களை முழுதாக நம்புகிறேன் யோகியாரே! என்னால் உங்களுக்கு எந்த கெடுதலும் நடக்காது. நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் "

" நல்லது. நாளை இரவு முதல் சாமத்தில் நாம் மீண்டும் சந்திப்போம்"

" வருகிறேன்" என்ற கரிகாலன் அங்கிருந்து கிளம்பினான். அதன் பிறகு அவர்களின் சந்திப்பு அடிக்கடி நடைபெற ஆரம்பித்தது.

கரிகாலனின் தாக்குதல்கள் அதன் பிறகு மிக துல்லியமாக நடந்தேறின.மதிமாறனின் ஆட்கள் கொண்டு வரும் செல்வம், ஆயுதம், வழிகள் தெளிவாக தெரிந்ததால் கரிகாலனால் எங்கே எப்படி அவர்களை மடக்கி தாக்குதல் நடத்துவது என்று தெளிவாக திட்டமிட முடிந்தது.மதிமாறனின் பக்கம் ஆயுத, செல்வ இழப்பு அதிகரிக்க ஆரம்பித்தது.

கரிகாலனின் தொல்லை அதிகரிக்க ஆரம்பித்தது. அவன் மீது முழு கவனத்தை செலுத்த முடியாதபடி தயாநிதியின் கேள்விகள் மதி மாறனை துரத்த ஆரம்பித்தன.

முதலில் தயாநிதியிடமிருந்து தப்ப நினைத்த மதிமாறன் ஒரு புனைகதையை உருவாக்க தொடங்கினான்.

அவன் தயாநிதிக்கு பதில் ஓலை எழுத ஆரம்பித்தான்.

தயாநிதியின் நண்பனான மலையமான் நள்ளிரவில் தீவட்டி கீழே விழுந்து ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி இறந்து விட்டதாகவும் கூடவே அவரது மகன்கள் இருவரும் அதே விபத்தில் மாண்டு போனார்கள். மலையமானின் ஆசை நாயகியின் மகன் ஒருவன் தன்னை மலையமானின் வாரிசு என்று சொல்லி கொண்டு சிகப்பு நிறமுகமூடியை அணிந்து கொண்டு தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்து கொண்டு அரசாங்க பணத்தை கொள்ளையடித்தும் ஆயுதங்களை கைப்பற்றியும் ஆட்சிக்கு குந்தகம் ஏற்படுத்துகிறான். அவனுக்கு வளநாட்டின் உதவி இருக்குமென்று தான் நினைப்பதாகவும் கூறி ஓலையை நிறைவு செய்திருந்தான். அந்த சிகப்பு முகமூடியை அடக்க ஆயுதங்கள் தேவை என்பதையும் அவன் குறிப்பிட தவறவில்லை.

தன்னுடைய குள்ள நரிதந்திரத்தை நினைத்து தன்னையே தட்டி கொடுத்து கொண்டான் மதி மாறன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக