ரகசிய தீவு
அத்தியாயம் 46
மூன்று சிக்கல்கள்
ரகசிய தீவை நோக்கி முத்தழகி மிதந்து சென்று கொண்டிருந்தது. அதன் மாலுமியாக மீண்டும் பொறுப்பேற்றிருந்த நீலன் சிந்தனை வசப்பட்டிருந்தான்.
கருணாகரன் சிகப்பு முகமூடியிடம் ஒப்படைக்கவிருக்கும் ஆயுதங்களில் ஏதாவது சில்மிசம் செய்து அவனது செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நீலனின் விருப்பம் இயற்கையாகவே நிறைவேறி விட்டதால் அவன் அதைப் பற்றி எந்த கவலையும் கொள்ளவில்லை.
அவனுக்கு இருந்தது மூன்று கவலைகள் தான். ஓன்று பணயக் கைதியாக மகேந்திரனிடம் ஒப்படைத்து விட்டு வந்த பைராகியை எப்பாடுபட்டாவது மீட்டாக வேண்டும். தான் ஒப்படைக்க வேண்டிய உணவு பொருள்களை இப்போது ரகசிய தீவில் கொள்முதல் செய்யலாம் .அதற்கு வேண்டிய பணத்தை கருணாகரனிடமிருந்து பெற்று கொள்ளலாம்.மலை நாட்டிற்கு பொக்கிசத்தை கொண்டு செல்லும் வரை தன்னுடைய தயவு கருணாகரனுக்கு தேவை என்பதை அவன் நன்றாக உணர்ந்திருந்தான்.
தன்னுடைய உதவி அவனுக்கு தேவை என்பதால் தான் என்ன சொன்னாலும் அவன் கேட்டுத்தான் தீர வேண்டும் என்று நீலன் நினைத்தான்.
தன்னுடைய எண்ணத்தை அவன் கருணாகரனிடம் வெளிப் படுத்திய போது அவன் நிர்தாட்சண்யமாக அதை மறுத்து விட்டான். உணவு பொருள்களை கொள்முதல் செய்து முத்தழகியில் ஏற்றினால் புதையலை ஏற்றும் போது அதன் கனம் இடையூராக இருக்கும் என்று காரணம் கூறி அதை ஏற்க மறுத்து விட்டான்.
உணவு பொருட்கள் இல்லாமல் வெறும் கையோடு சென்றால் மகேந்திரன் பைராகியை விடுவிக்க மாட்டான். இப்படி ஒரு வினோதமான சூழலில் சிக்கி தவித்த நீலன் அதிலிருந்து தப்ப இன்னொரு வழியை கண்டுபிடித்தான். அது தனக்கு பங்காக வந்து சேரும் புதையலின் பாகத்தை ம் கேந்திரனுக்கு கொடுத்து விட்டால் அவன் பைராகியை விடுவித்து விடுவான் என்று கணக்கு போட்டான்.
அந்த சொற்ப நகைகளை பார்க்கும் மகேந்திரன் முழு புதையலையும் அடைய ஆசைப்பட்டு விட்டால் என்ன செய்வது என்று அவன் யோசிக்கவேயில்லை. போதும் என்று சொல்லாத மனித மனதின் பேராசையை அவனுக்கு துல்லியமாக எடை போட தெரியவில்லை.
நீலனை ஏமாற்றி முழு பொக்கிசங்களையும் வள நாட்டின் கருவூலத்திற்கு கொண்டு சேர்க்க நினைக்கும் கருணாகரன் பாதி பொக்கிசங்களை தர இசையமாட்டான் என்பதையும் அவன் கணக்கில் கொள்ளவில்லை.
இரண்டாவதாக அவன் ஆதித்தனையும் யவனனையும் கண்டுபிடித்து இங்கிருந்து மீட்டு செல்ல வேண்டும்.
மூன்றாவதாக அவன் பொக்கிசங்களையும், நஞ்சுண்டனையும் கண்டுபிடித்து கப்பலுக்கு கொண்டு வர வேண்டும். ஆயுதங்களில் சேதம் நிகழ்ந்து விட்டதால் அவன் ஆயுத பரிமாற்றத்தை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை.
இந்த மூன்றும் கன கச்சிதமாக நடந்தேறி விட்டால் தன்னுடைய நண்பர்களுடன் மலைநாட்டை நோக்கி பயணமாகி விடலாம். இவையெல்லாம் சரியாக நடக்க கடவுளின் ஆசி வேண்டும் என்று நினைத்தான் அவன்.
" என்ன நண்பா! ஆழ்ந்த யோசனையில் இருக்கிறாய்? உணவு பொருட்களை ஏற்ற மறுத்ததிற்காக என் மீது கோபமா?" என்றான் அவனுக்கு அருகே வந்த கருணாகரன்.
நதியை கடக்கும் வரை முதலையை பகைத்து கொள்ள கூடாது என்பது அவனது அரசியல் சித்தாந்தம். அந்த சித்தாந்தத்தை நீலனிடம் கடைபிடிப்பதை தவிர வேறு வழியேயில்லை என்று அவனுக்கு நன்றாகத் தெரியும்.
"இல்லை. நீ சொல்லும் காரணம் ஏற்புடையது தான்.புதையல்களை ஏற்றிய பின்பு கப்பலின் எடை கூடி விடும். அதிகமான பாரத்தை ஏற்றுவது ஆபத்தை கூட வே அழைத்து செல்வது போல. நான் அதைப் பற்றி எதையும் நினைக்கவில்லை" என்றான் நீலன் சமாதானமான குரலில்.
"வேறு எதைப் பற்றி இவ்வளவு நேரம் யோசித்து கொண்டிருக்கிறாய்?" என்றான் கருணாகரன்.
"முத்தழகியில் பணியாற்றிய இந்த துரோகிகளை நாம் கரைக்கு போனதும் சிறையில் அடைத்து விடுவோம். இனி இந்த கப்பலில் வேலையாட்கள் இல்லாமல் எப்படி கடலில் கலத்தை செலுத்துவது?" என்றான் நீலன் பரிதாபமாக முகத்தை வைத்து கொண்டு.
"அடக்கடவுளே. இப்படி ஒரு பிரச்சனை இருப்பதை நான் மறந்து விட்டேன். நாம் ரகசிய தீவின் துறைமுகத்தில் பு திய ஆட்களை வேலைக்கு தேர்ந்தெடுத்து கொள்ளலாம். கவலைப்படாதே" என்று அவனை தேற்றினான் கருணாகரன்.
"புரியாமல் பேசுகிறாய் நண்பா.வேலை தெரிந்த ஆட்கள் அடுத்த கப்பலில் அல்லவா வேலை செய்வார்கள்? அவர்கள் எப்படி நம்மிடம் பணிக்கு வருவார்கள். ?"
"கூரை மீது சோறை விட்டெறிந்தால் ஆயிரம் காகங்கள் என்ற பழமொழியை நீ கேட்டதில்லையா? அவர்கள் எதிர்பார்க்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு கொடுப்போம். அதை ஈடுகட்ட வேலை தெரியாத புது ஆட்களையும் பணிக்கு எடுத்து கொள்வோம் அவர்கள் தான் வேலையை விரைவில் கற்று கொள்ள ஆர்வமாக செயல்படுவார்கள்" என்றான் கருணாகரன். புதையலை எப்படியாவது வளநாட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்காக எவ்வளவு செலவானாலும் சரி என்ற முடிவிற்கு கருணாகரன் வந்து விட்டிருந்தான்.
நீலன் யோசிப்பது போல் ஆட்கள் தேவை என்பதை பற்றியெல்லாம் அவன் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை..
"ஆட்களை வேலைக்கு சேர்ப்பதை பற்றி நீ கவலைப்பட வேண்டாம். துறைமுகத்தில் எனக்கு ஆப் த நண்பர்கள் சிலர் உண்டு. அவர்களிடம் அந்த வேலையை ஓப்படைத்து விட்டால் அவர்கள் அதை சிறப்பாக செய்து முடிப்பார்கள். நீ சிகப்பு முகமூடியிடம் ஆயுதங்களை தரும் போது நஞ்சுண்டனை உன்னிடம் ஒப்படைக்க சொல். அதை மறந்து விடாதே" என்றான் நீலன்.
"அவனை கொல்ல நினைக்கிறாயா?" என்றான் கருணாகரன் ஆவலுடன் .
"இல்லை. அவனை கொன்று என் கைகளை இரத்த சகதியில் முக்கியெடுக்க நான் விரும்பவில்லை"
"அவனை பிறகு என்ன தான் செய்ய போகிறாய்?"
"தானே சாகும்படி செய்ய போகிறேன்"
" எப்படி?"
"அது ரகசியம். அதை பிறகு சொல்கிறேன். நீ ஆயுதங்களை சிகப்பு முகமூடியிடம் ஒப்படைக்கும் போது ஒரே ஒரு மீரங்கியையும் சில குண்டுகளையும் எனக்காக விட்டு வைக்க வேண்டும்"
"எதற்காக அவை உனக்கு தேவைப்படுகின்றன."
"உன்னுடைய நினைவாக இருக்கட்டுமே என்று தான் கேட்கிறேன். அவற்றை வைத்து நான் என்ன செய்ய போகிறேன்?" என்று சிரித்தான் நீலன்.
"உனக்காக நான் என்னென்ன செய்திருக்கிறேன் நண்பா! முத்தழகியை மீட்டிருக்கிறேன், நஞ்சுண்டனை ஒப்படைக்கிறேன், புதையலில் பாதியை தருகிறேன். இப்போது பிரங்கியை வேறு அன்பு பரிசாக கேட்கிறாய். எல்லாவற்றையும் பெற்று கொண்டு என்னை ஏமாற்றி விட மாட்டாயே?"
"சேச்சே! உன்னை நான் ஏமாற்றுவேனா? நாம் இருவரும் கூட்டாளிகள் அல்லவா? ஆமாம் அந்த புதையல் எங்கு தான் இருக்கிறது? " என்றான் நீலன்.
"அந்த புதையல் இருக்கும் இடம் இருவருக்கு மட்டும் தான் தெரியும். மூன்றாவது ஆள் அதை தெரிந்து கொள்வதில் எனக்கு விருப்பமில்லை" என்றான் கருணாகரன்.
"சரி.விடு. நான் கேட்டவற்றையெல்லாம் நீ நிறைவேற்றி விட்டாய். உன் ஆசைப்படி அந்த புதையலை வளநாட்டிற்கு கொண்டு வருவது என்னுடைய பொறுப்பு" என்றான் நீலன்.
முத்தழகி ரகசிய தீவை நோக்கி பயணமாகி கொண்டிருந்தது.
அதே நேரம் ரகசிய தீவில்
ஆதித்தனின் குழுவினர் ஒரே இடத்தில் குழமி இருந்தனர். அவர்களை சுற்றி இருந்த மரம் செடி கொடி, புதர்களில் அசைவு ஏற்பட்டு சலசலப்பு சத்தம் ஏற்பட ஆரம்பித்தது
"அவர்கள் மறைந்திருந்து நம் மீது தாக்குதல் நடத்த முனைகிறார்கள்" என்றான் யவனன்.
" எதிரிகள் நெருங்கி வரும் போது தான் நாம் நம்முடைய வாளை பயன்படுத்த முடியும். தொலைவில் பதுங்கி முன்னேறி வருபவர்களை வீழ்த்த வில்லும் அம்பும் தான் சரியான ஆயுதங்கள் " என்ற ஆதித்தன் வில்லையும் அம்பையும் எடுத்து கொண்டான்.
"நம்மிடம் அம்புகள் குறைவாகத்தான் இருக்கின்றன" என்றான் கடோத்கஜன்.
" இருப்பதை வைத்து சிறப்புடன் செயல்படுவோம்" என்றான் ஆதித்தன்.
அவர்களை சுற்றி இருந்த புதர்களின் நடுவே இருந்து அவர்கள் வெளியே வந்தார்கள். முகத்தில் மை பூசி விதவிதமான பாசிமணிகள் அணிந்து மலைவாழ் மக்களைப் போல் இருந்தவர்களை பார்த்த யவனன்" அவர்கள் நம்மை சுற்றி வளைத்து விட்டார்கள்" என்றான்.
"கவலையேயில்லை.கண்ணை மூடிக் கொண்டு எந்த திசையில் அம்பை விட்டாலும் எவனாவது ஓருவன் சாவான் " என்ற ஆதித்தன் காட்டுவாசி ஒருவனின் நெஞ்சை குறி பார்த்து அம்பை விட்டான்.
"அய்யோ ! அம்மா" என்ற அலறலுடன் சாய்ந்தான் அவன்.
" இவர்கள் காட்டுவாசிகள் இல்லை" என்றான் ஆதித்தன்.
"அதைத்தானே உணவு கொண்டு வந்தவர்களும் சொன்னார்கள்" என்றான் கடோத்கஜன்..
"அவர்கள் சொன்னது உறுதியாகிவிட்டது" என்றான் ஆதித்தன்.
மூவரும் வில் அம்புகளால் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.
அம்புகளின் எண்ணிக்கை வெகு வேகமாக குறைய ஆரம்பித்தது.