ரகசிய தீவு
அத்தியாயம் 36
கரிகாலனின் கதை
ஆதி துணிச்சலாக மனித மாமிசம் உண்ணும் காட்டிற்குள் நுழைய தயார் என்று எழுந்து நின்றதும் அங்கிருந்த அனைவருக்கும் ஒரு பாலகனுக்கு இருக்கும் தைரியம் நமக்கு இல்லையே என்ற வெட்கம் பிறந்தது. அனைவரும் விடுதலை பெற்ற மக்களாக வாழ வேண்டுமென்றால் ஆயுதங்கள் தேவை. ஆயுதங்கள் தேவை என்றால் அதற்கு ஈடாகப் புதையல் தேவை. அதனால் பார்த்திபனின் திட்டத்திற்கு உடன்படுவதை தவிர அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை.
அனைவரையும் ஏற இறங்க ஒரு முறை பார்த்த பார்த்திபன் "நண்பர்களே! நம் நாடு சுபிட்சம் பெற நமக்கு விடுதலை தேவை. அதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை.இன்று மதியம் நாம் இங்கிருந்து காட்டிற்கு கிளம்புகிறோம். கூட்டமாக சென்று அடுத்தவர்களின் கவனத்தை திசை திருப்பாமல் சிறு சிறு குழவாகப் பிரிந்து நாம் நம்முடைய பயணத்தை தொடங்குவோம். கவனம் . ஆயுதங்களை மற்றவர்கள் பார்வையில் படாமல் மறைத்து எடுத்து செல்ல வேண்டும். காட்டை அடைந்ததும் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டு விடலாம். இப்போது பயணத்திற்கான ஏற்பாடுகளை தயார் செய்வோம். வீட்டில் தகவல் சொல்லிவிட்டு விடைபெற்று வர நினைப்பவர்கள் உடனே கிளம்புங்கள். கவனம் வீட்டில் இருப்பவர்களிடம் மறந்து கூட காட்டிற்கு செல்கிறோம் என்று கூறி தேவையில்லாத பயத்தை உருவாக்கி விடாதீர்கள்." என்றான்.
அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். வில்லவன் பார்த்திபனை தனியாக அழைத்து சென்றான்.
"பார்த்திபா. இந்த நஞ்சுண்டன் இன்னமும் நம்மிடம் ஆயுதங்கள் எதையும் ஒப்படைக்க வில்லை. இவனை நம்பி நாம் எப்படி புதையலை ஒப்படைப்பது?" என்றான்.
"நல்ல கேள்வி தான் நண்பா. நாம் புதையலைக் கண்டு பிடித்த பின்பு அவற்றை நம்முடைய பாதுகாப்பில் வைத்திருக்க போகிறோம். அவன் நம்மிடம் ஆயுதங்களை ஓப்படைத்த பின்புதான் நாம் புதையலை திரும்ப தரப் போகிறோம்" என்றான் பார்த்திபன்.
"அதுதான் சரி. இவன் ஒரு துரோகி. நீலன் என்னும் மாலுமியை ஏமாற்றி அவனுடைய கப்பலை கடத்தி வந்து விட்டான்.இவனை முழுதாக நம்புவது அவ்வளவு சரியல்ல."
"நானும் இவனைப் பற்றி கேள்விப்பட்டேன். கேள்விப்பட்ட எந்த விசயங்களும் நல்லதாக இல்லை. அதனால் நஞ்சுண்டனிடம் நான் எச்சரிக்கையாகத்தான் இருக்கிறேன். சரி.வா. நாம் போய் வீட்டில் இருப்பவர்களிடம் விடை பெற்று வருவோம்"
"நான் என் வீட்டில் என் மனைவியிடம் விடை பெற்று வந்தால் போதும். அதற்கு நான் மட்டும் வீட்டிற்கு சென்றால் போதும். நீ ஏன் அங்கே வருகிறாய்?" என்றான் வில்லவன்.
"ஏன் நான் வரக்கூடாதா?" என்றான் பார்த்திபன் சங்கோஜ த்துடன்.
சந்திரவதனாவை பார்க்க அவனது இதயம் துடித்து கொண்டிருந்தது. அவளை எப்படியாவது சந்தித்து விட வேண்டும் என்று பார்த்திபன் துடியாக துடித்து கொண்டிருந்தான். அவனது நோக்கத்தை புரிந்து கொண்டு விட்ட வில்லவன் அவனிடம் சற்று நேரம் விளையாடி பார்க்க தீர்மானித்தான்.
"வரலாம். ஆனால் நீ விடை பெற்று வருமளவிற்கு அங்கே யாரும் இருப்பதாகத் தெரியவில்லையே?" என்றான் வில்லவன் குறுநகையுடன் .
"ஏன் சந்திரவதனா இல்லையா? அவளை நான் தானே மதிமாறனிடமிருந்து காப்பாற்றி மீட்டு வந்தேன் ? அந்த விதத்தில் நான் அவளுடைய காப்பாளன் அல்லவா? நான் அவளிடம் விடை பெற்றுக் கொள்வதுதானே முறை?" என்றான் சற்றே வெட்கம் கலந்த சிரிப்புடன்.
"அடடே! நேற்று வரை காரியத்தில் தீரராக இருந்த தலைவர் இப்போது பேச்சிலும் வல்லவராகி விட்டார். எல்லாம் காதல் படுத்தும் பாடு" என்று சிரித்தான் வில்லவன்.
" என்ன? இது தான் காதலா?" என்றான் பார்த்திபன் எதுவும் அறியாதவன் போல.
"அடேயப்பா என்ன ஒரு நடிப்பு.? எப்படித் தான் இப்படி அப்பாவி போல் முகத்தை வைத்து கொள்கிறாயோ? இருக்கட்டும். அந்த பெண்ணிடம் உன் காதலை சொல்லிவிட்டாயா?"
"இல்லை.இன்னமும் சொல்லவில்லை."
"அந்த பெண்ணிற்கு உன் மீது ஏதாவது நாட்டம் இருப்பது போல் தோன்றுகிறதா?"
" அவள் வாய் திறந்து சொல்லாவிட்டாலும் கூட அவள் பார்வை என் மீது அவளுக்கு ஈர்ப்பு இருப்பதை சொல்கிறது."
"குறிப்பால் கண்டுபிடித்து விட்டாய் போலிருக்கிறது" என்று சிரித்தான் வில்லவன்.
" விளையாட்டு பேச்சு போதும். நாம் கிளம்பலாம்" என்றபடி குதிரையில் தாவி அமர்ந்தான் பார்த்திபன்.
"இரு .நானும் வருகிறேன்" என்றபடி இன்னொரு குதிரையில் தாவி ஏறினான் வில்லவன்.
சில விநாடிகளுக்குப் பிறகு இரண்டு குதிரைகளும் அங்கிருந்து சிட்டாகப் பறந்தன.
இருவரும் குதிரையில் புறப்படுவதை கவனித்து கொண்டிருந்தான் நஞ்சுண்டன் . தான் திட்டமிட்டபடியே ஒவ்வொரு காரியமும் இம்மி பிசகாமல் நடந்து வருவதை எண்ணி மனதிற்குள் சிரித்து கொண்டான் அவன். ஆயுதங்களை கை மாற்றிவிட்டு புதையலை எடுத்து கொண்டு முத்தழகி கப்பலோடு கண் காணாத இடத்திற்கு முக்கியமாக நீலனின் காலடிபடாத இடத்திற்கு சென்று விட வேண்டும் என்று நினைத்தான் அவன்.
நீலன் தன்னுடைய கப்பலை மீண்டும் அடைந்துவிட்டதை அவன் இன்னமும் அறியவில்லை.
வில்லவனின் வீட்டை அடைந்த இருவரும் குதிரையிலிருந்து இறங்கினர்.
"நான் என் மனைவியை சந்திக்க போகிறேன். நீ ? " என்றான் கேள்விகுறியோடு வில்லவன்.
"நான் சந்திரவதனாவை சந்திக்க செல்கிறேன்" என்ற பார்த்திபன் சந்திரவதனா இருந்த அறையை நோக்கி நடந்தான்.
சந்திரவதனா அவளுடைய அறையில் கலைந்த ஓவியம் போல் படுக்கையில் கிடந்தாள். அரவம் கேட்டு எழுந்து உட்கார்ந்தவள் பார்த்திபனை பார்த்ததும் "உள்ளே வாருங்கள்" என்றாள்.
அவளது அழுது சிவந்த கண்களை பார்த்தபடி தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான் பார்த்திபன்.
"சந்திரவதனா "
"சொல்லுங்கள்"
"உன்னுடைய ஆசையை நான் நிறைவேற்றி வைத்துவிட்டேன். இன்னும் என்ன மனக்குறை?ஏன் இப்படி அழுது கொண்டிருக்கிறாய்?" என்றான் பார்த்திபன் காலியான நாற்காலி ஓன்றில் உட்கார்ந்தபடி.
"எனக்கு துணையாக இதுவரை எனக்கு அண்ணன் தம்பியாக பாதுகாப்பு தந்தவர்கள் என்னுடைய கலை குழுவினர் அவர்கள் நிலை என்னவானது என்று இன்னமும் தெரியவில்லை. அவர்களை நினைத்துத் தான் அழுகிறேன்."
"கவலைப்படாதே சந்திரவதனா! அவர்கள் என் ஆட்களின் கண்களில் படாமல் இந்த தீவிலிருந்து வெளியேறியிருக்க முடியாது. இன்னும் சில நாட்களில் அவர்களை நான் கண்டுபிடிக்கிறேன். இப்போது முக்கியமான வேலை ஒன்று என்னை அழைக்கிறது. உன்னிடம் சொல்லிவிட்டு போகவே நான் இங்கு வந்தேன்" என்ற பார்த்திபன் நடந்த சம்பவங்கள் முழுதையும் அவளிடம் எடுத்து கூறினான்.
"நீங்கள் அந்த வனத்திற்குள் போய்த்தான் தீர வேண்டுமா?" என்றாள் சந்திரவதனா கண்களில் ஏக்கத்துடன் .
"நாடு விடுதலை பெற இதை தவிர வேறு வழியில்லை. நான் சென்று வருகிறேன் சந்திரவதனா "
" எச்சரிக்கையாக போய் வாருங்கள்.உங்கள் வருகைக்காக இங்கே ஒரு பேதை பெண் காத்திருக்கிறாள் என்பதை மறந்து விடாதீர்கள். எனக்கு துணையாக இந்த உலகத்தில் உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை."
"கவலைப்படாதே சந்திரவதனா! ேபான காரியத்தில் வெற்றியுடன் திரும்ப வருகிறேன்.அதுவரை நீ எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியே செல்வதை முடிந்த வரை நீ தவிர்க்க வேண்டும்.மதிமாறன் உன்னையும் என்னையும் பிடிக்க வேட்டை நாய் போல சுற்றி கொண்டிருக்கிறான். அவன் பிடியில் நாம் அகப்பட்டு விடக் கூடாது" என்றான் கவலையுடன் பார்த்திபன்.
"நான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பேன். என்னைப் பற்றி கவலைப்படாமல் நீங்கள் பத்திரமாக போய் வாருங்கள்" என்றாள் சந்திரவதனா.
" போய் வருகிறேன்." என்ற பார்த்திபன் அங்கிருந்து வெளியேறினான்.
அவனுக்காக கூடத்தில் காத்துக் கொண்டிருந்தான் வில்லவன்.
"விடைபெறும் வைபவம் நல்லபடியாக நடந்து முடிந்து விட்டதா?" என்றான் வில்லவன் குறுஞ் சிரிப்புடன்.
"அங்கே எப்படி நடந்ததோ அதே போல் தான் இங்கேயும் நடந்தது. பெண்கள் எல்லா இடங்களிலும் பெண்களாகவே இருக்கிறார்கள்"
"சரி நாம் கிளம்பலாம். இப்போது நாம் காட்டிற்கு செல்ல போவதையும், நஞ்சுண்டனுக்கும் நமக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கையை பற்றி நாம் முக்கியமான ஒருவருக்கு தகவல் சொல்லியாக வேண்டும்"
"யார் அது?"
"மர்மயோகி" வில்லவனின் உச்சரிப்பை பார்த்த பார்த்திபன் சிறிது நேரம் யோசனையில் மூழ்கினான்.
"நாம் அவரிடம் இந்த விசயத்தை சொல்ல போவதில்லை" என்றான் தெளிவான குரலில் பார்த்திபன்.
"பார்த்தி பா! நீ என்ன சொல்கிறாய்?" என்றான் வில்லவன். எது செய்தாலும் துறவியிடம் கேட்டு விட்டே செய்யும் இயல்பு கொண்ட பார்த்திபன் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்டது அவனுக்கு வினோதமாக இருந்தது.
"ஆமாம். நீ நினைப்பது சரிதான். இதுவரை நான் யோகியின் ஆலோசனையை கேட்டே நடந்து வந்தேன். இந்த முறை அதை மீற நினைக்கிறேன். காரணம் நமக்கு இருக்கும் ஒரே வழி இதுதான். இதையும் அவர் தலையிட்டு தடுத்து விட்டால் நமக்கு வேறு வழியே இல்லை. திறந்திருக்கும் ஓரே கதவையும் இழுத்து சாத்த நான் தயாரில்லை"
" உன் அண்ணன் கரிகாலனும் இதே போல் தான் யோகியின் பேச்சை கேட்காமல் காரியம் செய்தான். விளைவு. அவன் உயிர் போனது தான் மிச்சம் "
"நான் கரிகாலன் அல்ல. நான் பார்த்திபன். அவ்வளவு எளிதில் என் உயிரை பறித்து விட முடியாது" என்றான் பார்த்திபன்.
"போகும் காரியம் ஜெயமானால் சரிதான். சரி நாம் கிளம்புவோம்" என்றான் வில்லவன்.
இருவரும் வீட்டிலிருந்து வெளியேறினார்கள்.
அவர்கள் பேசுவதை மறைந்து நின்று கேட்டு கொண்டிருந்த சந்திரவதனா வில்லவனின் மனைவி பார்வதியை நெருங்கினாள்.
"அக்கா! எனக்கு ஒரு சந்தேகம்.திர்த்து வைப்பீர்களா?"
"சொல்சந்திரவதனா ? என்ன சந்தேகம் உனக்கு? என்றாள் பார்வதி.
"யார் இந்த கரிகாலன் ? " என்றாள் சந்திரவதனா.
"கரிகாலன்.பார்த்திபனின் தமையன் .இந்த புரட்சி கும்பலுக்கு விதை போட்டவன். ஆளும் தரப்பிற்கு சிம்ம சொப்பனமாக இருந்தவன். அவனது கதையை முழுதாக சொன்னால் தான் உனக்கு புரியும்" என்ற பார்வதி கரிகாலனின் கதையை சொல்ல துவங்கினாள்.