செவ்வாய், 28 ஜூன், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 9

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் வித்தை

தான் கல்லறைதீவிலிருந்து தப்பி வந்து மகேந்திரனிடம் அகப்பட்ட கதையை கூறி முடித்துவிட்டு பெருமூச்சு விட்டான் நீலன்.

" ஓஹோ.!இதுதான் உன்னுடைய முன்கதை சுருக்கமா?" என்றான் ஆதித்தன் சிரித்தபடி.

"ஆமாம்.மகேந்திரனின் ஆணைக்கு இணங்க இந்த யவனன் என்னை பிடிக்க முயற்சி செய்த போது தான் என்னை காப்பாற்ற கடவுள் உன்னை அனுப்பி வைத்தார்." என்றான் நீலன்.

"கடவுளுக்கு வேறு வேலையே கிடையாது பார். உன்னை காப்பாற்ற ஆளை அனுப்பி வைப்பது தான் அவரது தலையாய வேலை. ஆமாம் அந்த தீவிலிருந்து நீ எடுத்து வந்த அந்த இரண்டு தங்க பற்கள் எங்கே? என் எஜமானனிடம் நீ வாங்கி ஏமாற்றிய ஐயாயிரம் பொய் காசுகளுக்கான முதல் தவணை தொகையாக நான் அதை உன்னிடமிருந்து பறிமுதல் செய்ய விரும்புகிறேன்" என்றான் யவனன்.

"அது என்னிடம் இருந்தால் தானே நீ பறிமுதல் செய்ய முடியும்? அதைத்தான் என்னை மறைத்து வைத்த மதுபான விடுதி உரிமையாளனிடம் லஞ்சமாக கொடுத்து விட்டேனே? அந்த தங்கத்திற்காகத் தானே அவன் என்னை காப்பாற்ற முயன்றான். அந்த பற்கள் இல்லாவிட்டால் அவனே என்னை மகேந்திரனிடம் கொண்டு போய் நிறுத்தியிருப்பான் " என்றான் நீலன்.

" கடவுள் மகேந்திரன் போன்ற நல்லவர்களை கைவிட்டு விடுகிறான். உன் போன்ற எத்தர்களுக்கு அவன் உதவி செய்கிறான். தனிமையில் கிடந்து சாக வேண்டிய தீவில் உனக்கு தங்கப்புதையலை வைத்து வழியனுப்பி வைக்கிறான் அந்த மடையன்" என்று கொதித்தான் யவனன்.

ஓற்றை பைசாவை கூட கிழவனிடமிருந்து கைப்பற்ற முடியவில்லையே என்ற ஆதங்கம் அவனது குரலில் நிரம்பியிருந்தது.

"உயிர் தப்பும் ஆசையில் உன்னுடைய தலைப்பாகை துணியை மறந்து விட்டாய் போலிருக்கிறதே? அதில் ஏதோ முக்கியமான ரகசியம் ஒளிந்திருப்பதாக நஞ்சுண்டன் நினைத்து கொண்டிருக்கிறான். அதில் உண்மையாகவே ஏதேனும் ரகசியம் ஓளிந்திருக்கிறதா?" என்றான் ஆதித்தன்.

"நான்,மலை நாட்டு மன்னன் அபராஜிதன், அமைச்சர் தயாநிதி மூவருக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம் இருக்கிறது. ஆனால் அது நஞ்சுண்டனும் நீயும் நினைப்பதுபோல் அந்த தலைப்பாகை துணியில் இல்லை. அது கவனத்தை திசை திருப்ப செய்த ஒரு நாடகம் "

"அப்படி என்னப்பா ரகசியம்?" என்றான் ஆதித்தன்.

" என் மண்டைக்குள் இருக்கும் அந்த ரகசியத்தை நேரம் வரும் போது நானே சொல்கிறேன்" என்ற நீலன் கண்களால் யவனன் இருப்பதை சுட்டிக் காட்டினான். யவனனுக்கு இந்த ரகசியம் தெரியக்கூடாது என்று நீலன் நினைப்பதை ஆதித்தன் புரிந்து கொண்டான்.

இருவரும் பேசுவதை சுவராஸ்யம் இன்றி கவனித்து கொண்டிருந்த யவனன் திடிரென்று நினைவு வந்தவனாக "ஆமாம். நீங்கள் இருவரும் நெடுநாள் நண்பர்களா? உங்கள் நடத்தையை பார்த்தால் உங்கள் இருவருக்கும் ஏற்கனவே அறிமுகம் இருப்பது போல் தெரிகிறதே?" என்றான்.

"உன்னுடைய கணிப்பு சரிதான். நாங்கள் இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் தான். இந்த ஆதித்தன் இரண்டாவது முறையாக காப்பாற்றி இருக்கிறான். முதல் முறை காப்பாற்றிய போது இவனது அண்ணன் அ அருகில் இருந்தான்"

"அ ஒரு எழுத்தில் ஒரு ஆசாமிக்கு பெயரா? வித்தியாசமாக இருக்கிறது" என்றான் யவனன்.

"இல்லை. நீதவறாகப் புரிந்து கொண்டு விட்டாய். இவனுடைய சகோதரனின் பெயர் அரிஞ்சயன் .இவனுடைய பெயர் ஆதித்தன். இவர்கள் பெயரின் முதல் எழுத்தை சுருக்கி அ ஆ என்று அழைப்பது நெருங்கிய நண்பர்களின் வழக்கம் " என்றான் நீலன்.

"அந்த ஆசாமியும் ஆதித்தனைப் போல் கள்வன் தானா?" என்றான் யவனன் இகழ்ச்சியுடன் .

"ஆமாம். கள்வன்தான். இருப்பவர்களிடமிருந்து பிடுங்கி இல்லாதவர்களுக்கு கொடுக்கும் சமதர்மவாதிகளுக்கு உலகமும் சமூகமும் வைத்த பெயர் கள்வர்கள். இவர்கள் மனித மனதை கொள்ளையடிக்கும் கள்வர்கள்!" என்றான் நீலன் பெருமிதத்துடன்.

நீலனின் பெருமித உணர்வை பார்த்த யவனன் எதுவும் பேசாமல் அமைதியானான்.

"சரி. இரவு நெடுநேரமாகிவிட்டது. நாம் தூங்க  போகலாம். அதற்கு முன்னால் பைராகி கொடுத்த கண் மருந்தை கொடுத்தால் பரவாயில்லை.இன்று இரவு அதை பயன்படுத்தி பார்க்கலாம் என்று நினைக்கிறேன்" என்றான் நீலன்.

"அதற்கென்ன? உடனே எடுத்து வருகிறேன். தூங்கும் முன்பாக உன் கண்ணில் அந்த மருந்தை மூன்று சொட்டுகள் விட்டு பார்" என்ற ஆதித்தன் கப்பலின் கிழ் தளத்திற்கு சென்று அங்கிருந்த மருந்து புட்டிகளில் ஓன்றை எடுத்து வந்து கொடுத்தான்.

சற்று நேரத்தில் மூவரும் படுக்கையில் விழுந்து உறங்க தொடங்கினர்.

இரண்டாம் சாமம் தொடங்கிய போது நீலனின் ஆழ்ந்த உறக்கத்தில் எழுந்த குறட்டை ஒலி யவ னனை தட்டி எழுப்பியது.

வினோதமாக எழுந்த நீலனின் குறட்டை ஓ லியால் யவனன் தூங்க முடியாமல் தவித்தான். அந்த குறட்டை சத்தத்தை கேட்காதிருக்க அவனும் என்னென்னவோ செய்து பார்த்தான்.

அருகே படுத்திருந்த ஆதித்தன் எந்த சலனமும் இன்றி நிம்மதியாக தூங்குவதை பார்த்த யவனன் இவனுக்கு தூங்கும் போது காது செவிடாகி விடுமோ என்ற சந்தேகத்தில் தவித்தான். அவனது முதுகை ஒரு கை தட்டியது. திடுக்கிட்டு திரும்பினான் யவனன். அவனுக்கு பின்புறமாக எழுந்து உட்கார்ந்திருந்த ஆதித்தன் அவன் கையில் கொஞ்சம் பஞ்சை திணித் தான். ஆதித்தனின் காதுகளில் பஞ்சு இருப்பதை பார்த்த யவனனுக்கு அவன் எப்படி நிம்மதியாக தூங்கினான் என்ற ரகசியம் இப்போது விளங்கியது.

ஆதித்தனின் செயல் முறையை பின்பற்றிய யவனன் சத்தம் இல்லாத உலகத்தில் நிம்மதியாக உறங்க தொடங்கினான்.

விடியற்காலை .

சூரியன் பூமி காதலியை காண வானத்தின் வழியாக காத்திருந்தான். துயில் எழுந்த மூவரும் காலை கடன்களை முடித்துவிட்டு தங்களின் சிறிய படகான கழுகை எடுக்க ஆயத்தமானார்கள்.

ஏதோ யோசனையில் இருந்த ஆதித்தன் கப்பலின் மேல் தளத்தில் இருந்த பைராகியின் தாவர சேமிப்புகளை பார்த்தான். "இப்பாலஸ்! இவை எல்லாம் என் நண்பன் பைராகியின் அபூர்வமான சேமிப்புகள் . இவற்றின் மீது பைராகி உயிரையே வைத்திருக்கிறான். இவற்றின் முழுமையானம் பயன்பாட்டை அறிந்த வன் அவன் ஓருவன்தான். நாம் ரகசிய தீவை சென்றடையும் போது இவற்றை கவனிக்க நமக்கு நேரம் இருக்காது. காடு மலை என்று அலைந்து திரிந்து இவற்றை சேகரித்த என் நண்பனின் பல கால உழைப்பு வீணாகி விடக் கூடாது. அதனால் நாம் இவற்றை கப்பலிலிருந்து இறக்கி வைத்து விடலாம்.என் நண்பனின் மனம் புண்படுவதை நான் விரும்பவில்லை" என்றான்.

"ஆதித்தன் சொல்வது சரிதான்.பைராகியின் பல நாள் உழைப்பு வீணாகி விட நாம் காரணமாக இருந்து விடக் கூடாது " என்றான் நீலன்

இப்பாலஸ் இருவர் சொல்வதையும் கேட்டான். பிறகு கரையில் இருந்த தன்னுடைய ஆட்களை கைகளை தட்டி அழைத்தான்.பைராகியின் சேமிப்பு முழுவதும் கரையில் இறக்கப்பட்டது.

பைராகியின் சேமிப்பு கரையில் இறக்கி வைக்கப்பட்ட தகவலை பைராகியிடம் தெரிவிக்குமாறு ஒரு ஆளை ஏவி விட்டயவனன்" இப்போது உங்களுக்கு மகிழ்ச்சியா? நாம் பயணமாக லாமா?" என்றான்.

"தாராளமாக .ஆனால் ஒரே ஒரு நிபந்தனை கப்பலின் சுக்கானை நான் தான் பிடிப்பேன். கப்பலின் மீகாமன் நான் என்பதால் நான் சொல்வதைத்தான் நீங்கள் இருவரும் கேட்டு நடக்க வேண்டும். கடல் என்னுடைய ராஜ்ஜியம்" என்ற நீலனின் முகத்தில் மகிழ்ச்சி கொப்பளித்தது.

"எங்கள் இருவருக்கும் கப்பலை இயக்க தெரியாது என்பதை பயன்படுத்தி கொண்டு பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி குதிப்பதை போல் நடந்து கொள்ளாதே கிழவா " என்றான் நீலன் எரிச்சலுடன் .நீலன் கப்பலை திசை மாற்றி செலுத்தி ஏதாவது தந்திரம் செய்து விடுவானோ என்ற பயம் அவனது குரலில் எதிரொளித்தது.

"கவலைப்படாதே இப்பாலஸ்! நம்மை மீறி நீல னால் எதுவும் செய்து விட முடியாது. அவனுக்கு அவனது முத்தழகி தேவை. அதை மீட்க அவன் ரகசிய தீவிற்கு போய்த்தான் தீர வேண்டும்" என்று அவனை தைரியப்படுத்தினான் ஆதித்தன்.

மோகினி தீவின் துறைமுகத்தில் இருந்து மூவரையும் சுமந்து கொண்டுகழுகு கிளம்பியது.

" உன் நண்பன் அந்த ஆயுதங்களை இந்நேரம் சிகப்பு முகமூடியிடம் விற்றிருப்பானா?" என்றான் ஆதித்தன்.

" என்னுடைய நண்பனா? யார் அந்த நஞ்சுண்டனா? அவன் துரோகி ஆதித்தா. ஏமாந்த நேரத்தில் ஈரத் துணியை கழுத்தில் போட்டு கழுத்தை அறுத்து விடுவதில் மன்னன் .அந்த சிகப்பு முகமூடி நஞ்சுண்டனை சந்தேகிக்காமல் நம்ப வேண்டும். இரண்டாவது அவனிடம் ஆயுதங்களை வாங்குமளவிற்கு பணம் இருக்க வேண்டும்"

"போதுமான பணம் இல்லாமலா அவன் மதி மாறனை எதிர்த்து புரட்சி செய்து கொண்டிருக்கிறான்?"

"அவனை பற்றி முழுதாக நமக்கு தெரியாது. ஏன் மதி மாறனுக்கே தெரியாது. அவனிடம் ஆயுதம் வாங்குமளவிற்கு பணம் இல்லாதிருந்தால் நல்லது. அதற்காக நான் ஆண்டவனை பிராத்திக்கிறேன்"

"விடிய விடிய ஆண்டவரிடம் நீ முறையிட்டதை நான் கேட்கவேயில்லை" என்றான் யவனன் நீலனின் குறட்டையை ஞாபகப்படுத்தியபடி.

"நானும் தான். கடவுளும் நீயும் பேசிக் கொள்வதை கேட்க நான் விரும்பவில்லை" என்றான் ஆதித்தன் சிரித்தபடி.

"ரகசிய தீவு! பெயரே வித்தியாசமாக இருக்கிறதே? அப்படி என்ன ரகசியம் புதைந்து கிடக்கிறது அந்த தீவில் ? " என்றான் ஆதித்தன்.

"அந்த தீவிற்கு இப்போது வந்த பெயர் தான் ரகசிய தீவு. முன்பு அந்த தீவின் பெயர் கபாலத்தீவு. நீ நினைப்பது சரிதான். அந்த தீவில் ஒரு ரகசியம் புதைந்துதான் கிடக்கிறது. அதை தேடி சென்றவர்கள் உயிரோடு திரும்பியதில்லை."

"கல்லறைதீவிற்கு சொல்லப்படும் அதே வாக்கியம்" என்றான் ஆதித்தன்.

"கல்லறைதீவின் கதை வேறு. ரகசிய தீவின் கதை வேறு. ரகசிய தீவின் ஏதோ ஒரு மூலையில் ஒரு தங்கப்புதையல் ஓளித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை ஓளித்து வைத்தவன் ஒரு கடல் கொள்ளையன் .அவன் இப்போது உயிரோடு இல்லை. அவன் பெயர் மார்க்கதரிசி "

"மார்க்கதரிசியின் தங்க பு தையலைப் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த புதையல் தீ வில் எங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறாய்.?" என்றான் யவனன்.

"அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் ஒன்று. அந்த புதையலை சிகப்பு முகமூடியும் தேடி கொண்டிருக்கிறான். அது மட்டும் அவனுக்கு கிடைத்து விட்டால்?"

"நஞ்சுண்டனிடம் இருக்கும் ஆயுதம் சிகப்பு முகமூடியிடம் கைமாறிவிடும்.புரட்சி வெற்றி பெற்று மதிமாறன் கொல்லப்படுவான். மலை நாட்டின் ஆதிக்கத்திலிருந்து வளநாடு விடுதலை பெற்று விடும். அது வளநாட்டின் ஆதிக்கத்திற்கு செல்லவும் வாய்ப்பு இருக்கிறது"

எங்கோ மண்ணில் புதைந்து கிடக்கும் செல்வம் இரு நாட்டின் தலை எழுத்தையே மாற்ற போவதை எண்ணி ஆதித்தனும் யவனனும் திகைத்து நின்றனர்.

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 8

வீழ்ச்சியும் மீட்சியும் ஒருவனால்

நீலன் தனக்கெதிராக மணலில் புதைந்தபடி நின்று கொண்டிருந்த மதுபுட்டியை பார்த்தான். அவனது வீழ்ச்சிக்கும் இன்றைய தாழ்வான நிலைக்கும் காரணமான அந்த பொன் நிற திரவம் அதில் ததும்பி கொண்டிருந்தது. அதை மீண்டும் தீண்டவே கூடாது என்று தான் நீலன் நினைத்து கொண்டிருந்தான். ஆனால் நஞ்சுண்டனின் ஆட்கள் அடித்த அடியில் அவனது உடல் வலியால் கதறிக் கொண்டிருந்தது. அதை எடுத்து குடித்தால் மட்டுமே அவனது வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும் என்று நீலனுக்கு தெரியும்.

இதற்கு முன்பாக தனி தீவில் மாட்டிய நரன் எப்படியோ இன்னொருவனை கொன்று தின்று உயிரோடு தப்பி வந்து விட்டான். அதிர்ஷ்டம் ஒருமுறை தான் ஒரு மனிதனை காப்பாற்றும். அடிக்கடி காப்பாற்றாது என்று அவனது மூத்த கடலோடிகள் சொல்வது அவனது நினைவுக் கு வந்தது. நீலன் இந்த தீவில் இருந்து தப்பி செல்ல வேறு ஏதாவது வழிகள் இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தான்.

இதற்கு முன் இந்த தீவில் இறக்கி விடப்பட்டு பசியால் இறந்து போனவர்களின் சிதிலமடைந்த எலும்புக்கூடுகளை தவிர அந்த தீவில் வேறு எதுவுமில்லை. தென்னை மரங்களிலிருந்து உதிர்ந்து கிடந்த சில இளநீர்களை உடைத்து தின்றால் இரவு நேர பசியைப் பொறுத்துக் கொள்ளலாம். அதற்கு பிறகு மரத்தில் ஏறித் தான் இளநீர்களை பறித்தாக வேண்டும். இந்த தீவில் ஒன்று இரண்டு நாட்கள் மட்டுமே உயிர் வாழ முடியும். அதற்கு பிறகு பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான் என்ற நிதர்சனமான உண்மை நீலனின் முகத்தில் அறைந்தது .

எப்படியாவது இங்கிருந்து தப்பி விட வேண்டும் என்று யோசித்த நீலனின் மனம் தப்பித்த பின் எங்கே செல்வது என்று எதிர் கேள்வி கேட்டது. அவனால் கப்பலைத் தொலைத்த மோகினித் தீவிற்கு திரும்ப செல்ல முடியாது. உணவுப் பொருட்களை இறக்காமல் ப்ணத்தை வாங்கி கொண்டு கப்பலோடு தான் தப்பி சென்று விட்டதாகத் தான் மகேந்திரன் நினைப்பான் என்று அவனுக்கு தெரியும். அவன் இங்கிருந்து தப்பித்து மோகினி தீவிற்கு சென்றால் மகேந்திரனிடம் விரைவிலேயே அகப்பட்டு விடுவான். பிறகுயவனனிடம் விதவிதமான வைத்திய முறைகளுக்கு நீலன் ஆளாக வேண்டியதிருக்கும். அதை விட்டு விட்டு ரகசிய தீவிற்கு செல்லலாம் என்றால் அது இரண்டு நாள் பயண தொலைவில் இருந்தது.

நீலன் அங்கே போய் சேரும் முன்பாக நஞ்சுண்டன் தன்னுடைய ஆயுத குவியலை சிகப்பு முகமூடியிடம் விற்று விட்டு பெரும் பணத்தோடு அங்கிருந்து கிளம்பியிருப்பான். ஆயுதம் இல்லாமல் கப்பலையும் பறிகொடுத்து விட்டு வெறும் கையோடு மதி மாறனை சந்தித்தால் அவன் தன்னை கொன்றே விடுவான் என்று நினைத்த நீலன் யோசிக்க ஆரம்பித்தான்.

அவனது மூளை வேறு விதமாக யோசிக்க ஆரம்பித்தது. முதலில் இங்கிருந்து எப்படியாவது தப்பித்து மோகினி தீவிற்கு செல்வோம். அங்கிருந்து யாராவது ஒரு மீகாமன் துணையோடு ரகசிய தீவிற்கு பயணமாவோம். பிறகு நடப்பது இறைவன் விட்ட வழி என்று நினைத்தவன் கீழே கிடந்த இளநீர்களை உடைத்து பசியாறினான். கீழ் வானத்தில் சூரியன் மறைவதை ஏகாந்தமாக பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் நீலன். உலகமும் வாழ்க்கையும் எவ்வளவு அமைதியாக இருக்கின்றன. இந்த மனித வாழ்வு மட்டும் ஏன் தான் இவ்வளவு சிக்கலாக இருக்கிறதோ என்று தத்துவ விசாரணையில் ஈடுபட்டவன் இரவு தூங்குவதற்காக ஒரு பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து தன்னுடைய படுக்கையை தயார் செய்தான்.

தலைக்கு வைக்க தலையணை போன்ற பொருளை தேடியவன் கண்களில் அந்த மண்டையோடு பட்டது. மறையும் சூரியனின் கதிர் ஒளி பட்டு அதன் வாய் பிரகாசிக்க துவங்கியது. இது என்ன ஆச்சரியம் என்று நினைத்த நீலன் அந்த மண்டையோட்டை எடுத்து பார்த்தான். அந்த மண்டையோட்டில் இரண்டு தங்க பற்கள் இருப்பதையும் அவை தான் சூரிய வெளிச்சத்தில் பிரகாசித்தன என்பதையும் அவன் கண்டுகொண்டான். " பயல்! சாகும் போதும் பணக்காரனாகத்தான் செத்திருக்கிறான்" என்று முணுமுணுத்த நீலன் கடும் முயற்சிக்கு பின்னால் அந்த பற்களை பிடுங்கி எடுத்து கொண்டான்.

கடலோடிகளை தாக்கும் வியாதி ஸ்கர் வி .இந்த நோயால் பாதிக்கப்பட்ட மாலுமிகளும் மற்றவர்களும் எலும்பு பலவீனமாகிதங்கள் பற்களை விரைவிலேயே இழந்து விடுவார்கள். கடல் கொள்ளையர்களை அடையாளம் காண்பதே அவர்களின் மொக்கை வாயை வைத்து தான். பற்களை இழந்தவர்கள் செயற்கை பற்களை கட்டி கொள்வதும், வசதி படைத்தவர்கள் தங்கத்தால் பற்களை கட்டி கொள்வதும் வாடிக்கை. அப்படி பாதிக்கப்பட்டு தங்கப் பல் கட்டிய ஒருவனின் மண்டையோட்டைத்தான் நீலன் கையில் வைத்திருந்தான். எலும்பை பலவீனப்படுத்தும் ஸ்கர்வியிலிருந்து தப்ப கடலோடிகள் ஏராளமான ஆரஞ்சு, எலும் மிச்சை பழங்களை பழரசமாக அருந்துவது வழக்கம். அந்த பழங்களில் இருக்கும் சிட்ரிக் ஆசிட் ஸ்கர்விநோயை குணப்படுத்தும் சக்தி கொண்டது.நீலனும் தன்னுடைய பற்களில் நான்கை இழந்து விட்டு தங்க பற்கள் கட்டியிருந்தான்.

"இந்த தங்க பற்கள் என்னுடைய செலவுக்கு உதவும்.பார் நீலா. கடவுள் உனக்கு உதவ தீர்மானித்து விட்டார். இல்லையென்றால் இந்த தீவில் உனக்கு தங்கத்தை அள்ளி கொடுத்திருப்பாரா?" எதிர்பாராத இந்த அதிர்ஷ்டத்தால் நீலனின் உற்சாகம் அதிகரித்தது.

தீவு இருளில் மூழ்கியது. அலைகளின் ஓசை மட்டுமே கேட்டு கொண்டிருந்தது. வானத்தில் நிலவும் , நட்சத்திரங்களும் ஒளி வீசி கொண்டிருந்தன. இதமான காற்று வீசியதால் நீலன் விரைவிலேயே ஆழ்ந்த தூக்கத்திற்கு போனான். அவனது கனவில் ஏராளமான எலும்பு கூடுகள் நடனமாட துவங்கின. "வா. வந்துவிடு!" என்ற ஓலம் அவன் காதுகளை பிளந்தது. ஆடிக்கொண்டிருந்த ஒரு எலும்பு கூட்டின் வாயில் இரண்டு பற்கள் இல்லை." என் பற்களை திருடியவனே! அதை திரும்ப கொடு" என்றபடி அந்த எலும்பு கூடுநீலனின் கழுத்தை நெறிக்க தொடங்கிய போது நீலன் பயத்தோடு எழுந்து விட்டான். அவனது ஆடைகள் வேர்வையில் நனைந்திருந்தன. தீச்சொப்பனங்களால் நீலன்கதிகலங்கி போயிருந்தான். அவன் கை தன்னிச்சையாக இடுப்பிலிருந்த மதுபுட்டிக்கு போனது.

அதை கையில் எடுத்தவன்" என்னுடைய வைராக்கியமே! என்னை மன்னித்து விடு. இப்போதைக்கு என்னுடைய பயத்தை போக்கும் ஒரே மருந்து இது தான் " என்றபடி மதுவை குடிக்க தொடங்கினான்.அமிர்தம் என்பதை நீலன் மதுவாக அன்று இரவு உணர்ந்தான். புட்டியில் கால் வாசியை குடித்தவன் அதை இறுக மூடிவிட்டு அப்படியே போதையில் சரிந்தான். இப்போது வந்த கனவில் நீலன் எலும்பு கூடுகளோடு ஆடிப்பாடி அவற்றோடு சண்டை போட துவங்கியிருந்தான்.

சுள்ளென்று வெய்யில் முகத்திலடிப்பதை உணர்ந்த நீலன் கண் விழித்தான். சூரியன் சுத்த சுயம்பிரகாசமாக வானில் ஒளி வீசி கொண்டிருப்பதை பார்த்த நீலன் தான் ரொம்ப நேரமாக தூங்கி கொண்டிருப்பதை உணர்ந்தான்.

நீலன் சுற்றும் முற்றும் பார்த்தான். நின்று கொண்டிருந்த தென்னை மரங்களை பார்த்தவன் இவற்றை கீழே வீழ்த்தி விட்டால் அதை வைத்து கட்டுமரம் ஓன்றை தயார் செய்து விடலாம். ஆனால் அவற்றை எப்படி வீழ்த்துவது? அவனிடம் வாளும் இல்லை. நஞ்சுண்டன் அதைப-றித்து சென்று விட்டான்.

நீலன் யோசித்தபடி மதுபுட்டியை எடுத்தான். அதை கையில் வைத்தபடி யோசித்து கொண்டிருந்தவன் மூளையில் பளிச்சிட்டது ஒரு யோசனை. ஆங்காங்கே கிடைத்த குப்பை கூளங்களை சேகரித்து கீழே வைத்தவன் அவற்றின் மேல் இரண்டு கற்களை வைத்தான். அந்த கற்களுக்கு இடையே மது புட்டியை கிடைமட்டமாக வைத்தான். அவன் ஏற்கனவே கால்வாசி புட்டியை காலி செய்து விட்டதால் அதில் ஒரு காற்று குமிழ் உருவாகியிருந்தது. சூரிய வெளிச்சம் அந்த இடைவெளிகளில் ஊடுருவும் போது அந்த இடைவெளி ஒரு குவி ஆடியை போல செயல்பட்டு சூரிய வெளிச்சத்தை ஒருமுகமாக்க தொடங்கியிருந்தது. சூரிய ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாறத் தொடங்கியிருந்தது.

நீலன் மிச்சம் மீதி இருந்த தேங்காய்களை தின்று முடித்த போது மதுபுட்டிக்கு கீழே நெருப்பு உருவாகியிருந்தது. ஒடிப்போய் மதுபுட்டியை எடுத்து கொண்ட நீலன்" என் வீழ்ச்சிக்கு காரணமான நீயே என் மீட்சிக்குக்கும் காரணமாக போகிறாய். என் வாழ்க்கையில் உன்னை மறக்கவே மாட்டேன்" என்று ஆனந்த கூத்தாடினான் நீலன்.

உருவாகியிருந்த நெருப்பை பெரும் நெருப்பாக உருமாற்றிய நீலன் அவற்றை தென்னை மரங்களின் அடிப்பாகத்தில் கொட்டி அவற்றிலும் தீயை வைத்தான். நான்கு மரங்களின் அடிப்பாக மும் தீப்பிடித்து எரிந்து பெரும் புகையை வெளியே விட்டன. அந்த புகையை பார்த்து ஏதாவது கப்பல்கள் தீவு பக்கம் வரலாம் என்று அவன் எதிர்பார்த்தான். அப்படி வெளியிலிருந்து உதவி வராவிட்டாலும் அவன் தன்னுடைய முயற்சியை கைவிடவில்லை.

விரைவிலேயே மரங்கள் பெரும் சத்தத்தோடு தரையில் விழுந்தன. அவற்றில் எரிந்த நெருப்பை அணைத்த நீலன் மது பானத்தை முழுமையாக குடித்து அதை காலி செய்தான். குடித்து முடித்தவுடன் நீலன் மதம் கொண்ட யானையாக மாறினான். உச்சசகட்ட போதையும், உயிர் தப்பும் வெறியும் அவனை பேய் போல் செயல்பட வைத்தது.ஓற்றை ஆளாக மரங்களை தீவின் கரைக்கு உருட்டி கொண்டு வந்து சேர்த்தவன் காட்டு கொடிகளையும், தேங்காய் நார்களையும் வைத்து வலுவான கயிறுகளை தயார் செய்தான். விரைவிலேயே அவனால் தென்னை மரத்தண்டுகளை கொண்டு ஒரு கட்டு மரத்தை உருவாக்கி விட முடிந்தது.

மாலை கவிழ்ந்து கொண்டிருந்தது. பகலில் பயணம் செய்தால் யார் கண்ணிலாவது பட்டு விடுவோம் என்பதால் இரவில் பயணத்தை மேற்கொள்ள நீலன் தீர்மானித்திருந்தான். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. இரவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களை வைத்து எளிதாக திசையை அனுமானிக்க முடியும். நீலன் கட்டுமரத்தை கடலில் இறக்கி அதன் மீது தாவி ஏறினான். அவன் கையில் நீளமான காட்டு கொம்பு துடுப்பாக உருமாறி இருந்தது. "போய் வருகிறேன் கல்லறை தீவே ! விரைவிலேயே என் நண்பனை நான் இங்கே கொண்டு வந்து சேர்ப்பேன்"

நீலன் கல்லறைதீவிலிருந்து கிளம்பினான்.

தன்னிடமிருந்து முதலும், கடைசியுமாக ஒருவன் தப்பி செல்வதை கல்லறைதீவு மவுனமாக பார்த்து கொண்டிருந்தது.

அலைகடல் நடுவே தன்னுடைய கலத்தை பெரும் பிரயாசையோடு மோகினி தீ வை நோக்கி நகர்த்தி சென்றான் நீலன்.

அங்கே கரையிலேயே தன்னை ஒற்றன் ஒருவன் பார்ப்பான் என்பதையோ தன்னை பிடிக்க மகேந்திரன் இப்பால சை அனுப்பி வைப்பான் என்பதையோ அப்போது அவன் அறிந்திருக்கவில்லை.

வெள்ளி, 24 ஜூன், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 7

தனித் தீவில் நரன்

தனக்கு துரோகம் செய்து தன்னுடைய கப்பலான முத்தழகியையும் பறித்து கொண்ட நஞ்சுண்டன் இப்போது ஆள் இல்லாத தனி தீவில் தன்னை தனியனாக தவிக்க வைத்து சாகடிக்க நினைப்பதை எண்ணி குமுறிய நீல னால் தன்னிடம் இன்னொரு ரகசியம் இருப்பதாக நஞ்சுண்டன் கூறியதை கேட்டு ஒன்றும் புரியாமல் விழித்தான்.

"ஏற்கனவே நீ போட்டு வைத்திருக்கும் திட்டத்தால் மலைநாடும், வள நாடும் கடலில் மோதிக் கொள்ள போகின்றன.ரத்தம் குடிக்கும் ஓநாயே.! உனக்கு இது போதவில்லையா?" என்றான் நீலன்.

"பார் நீலா.! ரகசிய தீவு மலை நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டது. அதை நிர்வகிக்க தயாநிதி என்ற ஒரு அமைச்சரையே மலைநாட்டு வேந்தன் நியமித்திருக்கிறான். மலை நாட்டின் சார்பாக அந்த தீவை ஆளுமை செய்ய ஆளுநர்களை நியமிக்கும் உரிமை தயாநிதிக்கு மட்டுமே உண்டு. அதில் மன்னர் கூட தலையிடுவதில்லை. அப்படி தயாநிதியால் ரகசிய தீவிற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டவன் தான் மதி மாறன் . அவனது ஆட்சியை எதிர்த்து மக்களை திரட்டி புரட்சி செய்து கொண்டிருப்பவன் சிகப்பு முகமுடி .அவன் சிகப்பு நிறமுகமூடியை அணிந்திருப்பதால் அந்த பெயர் அவனுக்கும் பெயராக மாறிவிட்டது. அவனது உண்மையான பெயர், இருப்பிடம் யாருக்கும் தெரியாது. மாயாவியை போல் திடிர் திடிரென்று தாக்குதல் நடத்தி விட்டு மாயமாக மறைந்து விடுகிறான். அவன் மதி மாறனுக்கு பெரும் சவாலாக இருந்து கொண்டிருக்கிறான். அவனது ஒரேபலவீனம் அவனிடம் போதுமான ஆயுதங்கள் இல்லை. அவனை அடக்குவதற்காக மலைநாட்டு அரசனும் தயாநிதியும் அனுப்பி வைத்த ஆயுத குவியலைத்தான் நீ கப்பலில் தானியமூட்டைகளின் நடுவே ஓளித்து வைத்திருந் தாய் "

நீலனின் முகம் வெளுத்தது. தனக்கும் மலைநாட்டு அரசனுக்கும், தயாநிதிக்கும் மட்டுமே தெரிந்த ஒரு அரசியல் ரகசியம் இவனுக்கு எப்படி தெரிந்தது என்று அவனுக்கு வியப்பாக இருந்தது.

"இந்த உண்மை உனக்கு எப்படி தெரிந்தது?" என்றான் நீலன் உலர்ந்து போன உதடுகளுடன் .

அவனது அதிர்ச்சியை ரசித்து கொண்டிருந்த நஞ்சுண்டன் "மலை நாட்டு துறைமுகத்தில் கப்பலை நிறுத்திவிட்டு நீ மன்னரையும், தயாநிதியையும் சந்திக்க சென்று விட்டாய். அன்று இரவு நம்முடைய கப்பலில் அரசாங்க வீரர்கள் தனியாக வந்து சில மூட்டைகளை ஏற்றினார்கள். சாதாரண கூலி ஆட்களை வைத்து மூட்டைகளை ஏற்றினால் ஆயுத ரகசியம் வெளியேறி விடும் என்று நினைத்த நீ அரசாங்க ஆட்களை வைத்து மூட்டைகளை ஏற்றினாய்.சுமைதூக்கும் தொழிலாளர்களில் சிலர் துரோகிகளாக மாறி விலை உயர்ந்த பொருட்கள் கப்பலில் ஏற்றப்பட்டால் அதைப் பற்றிய தகவல்களை கடல் கொள்ளையர்களுக்கு தெரிவித்து சன்மானம் பெறும் வழக்கம் இருப்பதை நீ அறிவாய் .அதனால் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்தாய். ஆனால் இந்த ஏற்பாட்டை நான் சந்தேகித்து கப்பலில் தேடி ஆயுதமூட்டைகளை கண்டுபிடிப்பேன் என்பதை நீ எதிர்பார்க்கவில்லை" என்றான்.

அவனது கூர்ந்து கவனிக்கும் திறமையை மனதிற்குள் பாராட்டிய நீலன்

"நீ நினைத்தது சரிதான். இந்த ஆயுதங்கள் மதிமாறனின் உதவிக்குத் தான் செல்கின்றன. இதை வைத்து நீ என்ன செய்ய போகிறாய்?"

"இந்த ஆயுதங்களை மதி மாறனிடம் ஒப்படைப்பதால் எனக்கு தம்பிடி பிரயோஜனம் இல்லை. இதே ஆயுதங்களை நான் சிகப்பு முகமூடியிடம் விற்றால் எனக்கு நிறைய பொன் கிடைக்கும். சிகப்பு முகமூடி மதி மாறனை வென்று ரகசிய தீவின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விடுவான். அவனுக்கு உதவி செய்ய வளநாடு வந்து விடும். வள நாட்டிற்கு ரகசிய தீவின் மீது ஏற்கனவே ஒரு கண் இருப்பதை நீ அறிவாய் சிகப்பு முகமூடிக்கு உதவுவதன் மூலம் தங்கள் வணிக தொடர்புகளை பலப்படுத்தி கொள்ள வளநாடு முயற்சி செய்யும். ரகசிய தீவில் ஏற்படும் புதிய ஆட்சியில் எனக்கு ஏகப்பட்ட மரியாதை கிடைக்கும். அதனால் நான் இந்த ஆயுதங்களை சிகப்பு முகமூடியிடம் விற்க போகிறேன்" என்றான் நஞ்சுண்டன் கண்களில் கனவுடன்

"சரியான முட்டாள் நீ! ரகசிய தீவின் துறைமுகத்தில் என்னுடைய கப்பல் நுழைந்த வுடனேயே மதிமாறனின் ஆட்கள் ஆயுதங்களை எடுத்து செல்ல வந்து விடுவார்கள். தீவில் கால் வைக்காமல் நீஎப்படி சிகப்பு முகமூடியிடம் ஆயுதங்களை விற்க முடியும். ?உன்னுடைய கனவு நிறைவேறாது."

"அதையெல்லாம் நான் யோசிக்காமலா இருந்திருப்பேன்?. இங்கிருந்து கிளம்பிய சற்று நேரத்தில் உன் கப்பலின் பெயரை மாற்றி விடுவேன். கப்பலின் வடிவமைப்பையும் சற்று மாற்றி விட்டால் உன் கப்பலை உனக்கே அடையாளம் தெரியாது"

"நஞ்சுண்டா! நான் உன்னை சாதாரணமாக எடை போட்டு விட்டு விட்டேன். நீ படு மோசமான ஆளாக இருக்கிறாய்"

"உன்னை விட மோசமான ஆள் யாராவது இருக்க முடியுமா?" என்று சிரித்தான் நஞ்சுண்டன் .

" என்ன சொல்கிறாய் நீ? "நீலனின் முகம் மாறியது.

" உன் தலையில் இருக்கும் ஒரு ரகசியத்தை என்னிடமிருந்து நீ மறைத்து விட்டாய்?"

நீலன் அதிர்ச்சியில் சிலையாக நின்று விட்டான். மூவருக்கு மட்டுமே தெரிந்த இன்னொரு ரகசியம் இவனுக்கு எப்படி தெரிந்தது என்ற திகைப்பில் திகைத்து நின்றான் நீலன்.

" என்ன? என்ன சொல்கிறாய் நீ?" என்றான் நீலன் அதிர்ச்சியுடன் .

"மலை நாட்டு மன்னனையும் தயாநிதியையும் சந்தித்து விட்டு வந்த நீ அதன் பிறகு தான் தலைபாகையை அணிய துவங்கினாய். அந்த தலைப்பாகையில் ஏதோ ஒரு மிகப் பெரிய ரகசியம் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது."

"அப்படி எதுவும் இல்லை. நீதவறாக நினைத்து கொண்டிருக்கிறாய். என் நரைமுடியை காட்டி ஒரு பெண் கிழவன் என்று கிண்டல் செய்ததால்தான் நான் தலைபாகையை அணிய ஆரம்பித்தேன். மற்ற காரணம் எதுவுமில்லை." என்று மழுப்பினான் நீலன்.

"நான் இதை நம்ப வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை" என்ற நஞ்சுண்டன் தன் ஆட்களுக்கு கண்ணை காட்டினான்..

நஞ்சுண்டன் தன்னிடம் கொடுத்த வாளை எடுத்து கொண்ட நீலன்" யாரும் என்னிடம் நெருங்காதீர்கள்" என்றான்.

கண் பார்வை குறைபாடு இருந்ததால் குருட்டாம் போக்கில் வாளை சுழற்ற தொடங்கினான் நீலன்.

iஅவனை நெருங்குவது கடினம். நம்மில் யாரையாவது அவன் காயப்படுத்திவிட கூடும்" என்றான் ஆட்களில் ஓருவன்.

"பொறு! அவன் களைப்படையும் வரை காத்திருப்போம்" என்ற நஞ்சுண்டன் கீழே உட்கார்ந்து கொண்டான்.

எதிர்தாக்குதல் எதுவும் வராததால் குழப்பமடைந்த நீலன் வாள் சுழற்றுவதை நிறுத்தினான்.

தரையில் இருந்த மணலை இரண்டு கைகளிலும் அள்ளிய நஞ்சுண்டன் அதை நீலனின் கண்களை நோக்கி வீசினான்.

கண்களில் திடிரென விழுந்த மண் துகள்களால் தடுமாற துவங்கினான் நீலன்.

"இப்போது அவனை பிடியுங்கள்" என்றான் நஞ்சுண்டன் .

விரைவிலேயே நஞ்சுண்டனின் ஆட்களால் மணலில் வீழ்த்தப்பட்டான் நீலன்.

அவனிடமிருந்தவாளும், தலைபாகையும் கைப்பற்றப்பட்டன.

தன்னிடம் கொடுக்கப்பட்ட தலைப்பாகை துணியை பிரித்து பார்த்தான் நஞ்சுண்டன் .

"வேண்டாம் நஞ்சுண்டா! அதை என்னிடம் கொடுத்துவிடு. வீணாக ஆபத்தை விலைக்கு வாங்காதே" என்று அலறினான் நீலன்.

தலைப்பாகை துணியில் இருந்த விசித்திர குறியீடுகளை புரியாமல் பார்த்து கொண்டிருந்த நஞ்சுண்டன் "இவன் அலறுவதை பார்த்தால் இதில் முக்கியமான ஏதோ ஒரு விசயம் இருப்பதை போல் தோன்றுகிறது. அதை அவன் வாயாலேயே சொல்ல வையுங்கள்" என்றவன் துணியை தன்னுடைய இடுப்பில் சொருகி பத்திரப்படுத்தினான்.

நஞ்சுண்டனின் ஆட்கள் நீலனின் மீது தாக்குதலை தொடங்கினர். இரண்டு பேர் அவனை பின்புறமாக பிடித்து கொள்ள ஒருவன் அவனது வயிற்றில் குத்துகளை விடத் தொடங்கினான்.

"இரவு நான் என்ன சாப்பிட்டேன் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறாயா நண்பா ? என்னை கேட்டால் சொல்கிறேன். எதற்காக என் வயிற்றுடன் பலப்பரிட்சை நடத்துகிறாய்?" என்றான் நீலன் குத்துகளின் வலியை தாங்க முடியாமல்.

"கிழவன் கிண்டல் செய்யுமளவிற்குத் தான் உங்கள் சிகிச்சை இருக்கிறது" என்றான் சினத்துடன் நஞ்சுண்டன் .

அதன் பிறகு நீலனின் மீதான அவர்களின் தாக்குதல் உக்கிரமமானது.

விரைவிலேயே அடி தாங்காமல் வயோதிகனான நீலன் அலற ஆரம்பித்தான்.

"நிறுத்துங்கள்" என்று உத்தரவிட்ட நஞ்சுண்டன் ரத்த களறியாக நின்ற நீலனின் தோளில் கையை வைத்தான்.

"ஏன் இப்படி அடி வாங்கி சாகிறாய்? பேசாமல் தலை பாகை துணியில் இருக்கும் ரகசியத்தை சொல்லி விடு. நீ சொல்லாவிட்டால் என் ஆட்கள் உன்னை அடித்தே கொன்று விடுவார்கள்."

" என் உயிரே போனாலும் அந்த ரகசியத்தை நான் சொல்ல மாட்டேன். உன்னால் முடிந்ததை செய்" என்றான் நீலன்நிற்க கூட சக்தியின்றி .

" பூஜையை மறுபடியும் ஆரம்பியுங்கள்" என்றான் நஞ்சுண்டன்

"எனக்கென்னவோ இன்று முழுவதும் பூஜை போட்டாலும் இவன் வாயை திறப்பது போலத் தெரியவில்லை." என்றான் அவன் சகாக்களில் ஓருவன்.

"நாம் வந்து நெடுநேரமாகிவிட்டது.இன்றைய பொழுது இங்கேயே கழிந்து விடும் போல் தெரிகிறது" என்றான் மற்றோருவன்

நீலனை அடித்து அடித்து தன்னுடைய ஆட்கள் களைத்துவிட்டதை உணர்ந்து கொண்டான். இனியும் இவர்களை வைத்து வேலை வாங்குவது உசிதமல்ல என்று நினைத்தவன் "சரி போதும். நாம் கிளம்பலாம்.இந்த தலைபாகை ரகசியத்தை நானே தெரிந்து கொள்கிறேன்" என்றான்.

நீலன் ஏதோ முனகுவதை பார்த்த ஒருவன் " அவன் ஏதோ சொல்ல வருகிறான்" என்றான்.

குனிந்து அவன் வாய் அருகே காதை வைத்து கேட்ட நஞ்சுண்டன் வாய் விட்டு சிரித்தான்.

"சாகும் தருவாயிலும் மது புட்டி வேண்டுமென்று கேட்கிறான் கிழவன் இவனது மது பழக்கத்தை வைத்து தான் இவனை நான் வீழ்த்தினேன். ஆனாலும் இவன் பாடம் கற்று கொள்ள மறுக்கிறான். மது பழக்கம் இருக்கும் வரை இவன் வாழ்வில் முன்னேற போவதில்லை"

நீலனின் காதுகளில் நஞ்சுண்டனின் வார்த்தைகள் தெளிவாக விழுந்தன.

நஞ்சுண்டன் தன் ஆட்களுடன் அங்கிருந்து கிளம்பினான். சிறு படகில் ஏறும் முன்பாக நஞ்சுண்டன் "நாம் எண்ணிக்கையில் சரியாக இருக்கிறோமா என்று மீண்டும் ஒருமுறை எண்ணி கொள்ளுங்கள் நண்பர்களே! யாராவது படகில் ஏறாமல் விட்டு போயிருந்தால் நரன் அவர்களை கொன்று உணவாக்கி கொண்டு தன் வாழ்நாளை நீட்டித்து கொண்டு விடுவான்"

அவர்கள் வாய் விட்டு சிரித்தார்கள்.

நஞ்சுண்டன் ஒரு மது பாட்டிலை நீலன் கிடந்த மணல் பரப்பில் வீசினான்.

"குடித்துவிட்டு போதையிலேயே செத்து விடுகிழவா " என்றான் நஞ்சுண்டன் .

அவர்கள் போய் சிறிது நேரத்திற்கு பிறகு எழுந்து உட்கார்ந்தான் நீலன்.

அவன் கண் எதிரே மணலில் புதைந்து கிடந்த மதுபுட்டி என்னை எடு என்றது.

நீலன் மதுபுட்டியை கையில் எடுத்தான்.

"மது பழக்கம் இருக்கும் வரை இவன் வாழ்வில் முன்னேற போவதில்லை" என்ற நஞ்சுண்டனின் குரல் அவன் காதில் ஓவித்தது.

நீலன் மதுபுட்டியை வெறித்து பார்த்தான்.

புதன், 22 ஜூன், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 6

வஞ்சகர் உலகம்

மலைநாடு கடல் வணிகத்தில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்தது. உலகத்தின் அத்தனை நாடுகளிலும் மலைநாட்டு மாலுமிகள் கால் பதித்திருந்தார்கள். பல்வேறு நாடுகளிலிருந்து மிக குறைவான விலைக்கு பொருட்களை வாங்கி மற்ற நாடுகளில் அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதித்து வந்தார்கள். அதனால் மலைநாடு கடல் பலத்திலும் செல்வ வளத்திலும் மிகச் சிறப்பான இடத்தை பெற்றிருந்தது.மலை நாட்டிற்கு போட்டியாக கடல் வணிகத்தில் கடும் போட்டியை கொடுத்து வந்தது வளநாடு. தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த இரண்டு நாடுகளும் போட்டி போட்டு கொண்டு தங்களுக்குள் திரைமறைவு யுத்தத்தை நடத்தி வந்தன.

மலை நாட்டின் மிகச் சிறந்த மாலுமிகளை விரல் விட்டு எண்ணினால் அதில் முதல் மூன்று இடங்களில் நீலனின் பெயர் இடம் பெற்று விடும். நீலனின் காலடிபடாத தீவுகளோநாடுகளோ உலகத்தில் இல்லை. அவனது படகான முத்தழகி மிதந்து செல்லாத கடல் பரப்பே இல்லை என்று கூட சொல்லி விடலாம். மலைநாட்டு மன்னன் கடல் வணிகம் சம்மந்தமான எந்த முடிவை எடுத்தாலும் நீலனை கலந்து பேசாமல் முடிவுகளை எடுக்க மாட்டான். மலைநாட்டு மன்னனை எந்த நேரத்திலும் சந்தித்து பேசும் உரிமையையும் நீலன் பெற்றிருந்தான்.

இவ்வளவு செல்வாக்கு பெற்றிருந்த நீலனின் ஓரே பலவீனம் குடி. கண் மண் தெரியாமல் குடித்துவிட்டு இடம் தெரியாமல் விழுந்து கிடப்பது அவனது பழக்கம். அவனது கடலோடும் திறமைக்காக அவனது குடிப்பழக்கத்தை அனைவரும் சகித்து கொண்டிருந்தனர். உலகில் தயாரிக்கப்படும் அத்தனை விதமான மதுபானங்களையும் குடித்து பார்ப்பதற்கென்றே பிறவி எடுத்தது போலத்தான் நீலன் நடந்து கொண்டிருந்தான்.

அவன் தன்னுடைய கடல் பயணம் ஒன்றில் தான் நடுக்கடலில் ஓரு கட்டையை பிடித்தபடி மிதந்து கொண்டிருந்த ஒரு மனிதனை காப்பாற்றினான். அவன் தான் நஞ்சுண்டன் .தன்னை மீட்ட நீலனிடம் தானும் ஒரு கடலோடி என்றும் தான் பணிபுரிந்த கப்பல் புயல் காற்றில் கடலில் மூழ்கி விட்டதாகவும் தான் மட்டும் தப்பித்து ஒரு கட்டையை பிடித்து கொண்டு இரண்டு நாட்களாக சோறு தண்ணியில்லாமல் மிதந்து கொண்டிருப்பதாகவும் கூறினான்.

அவனை காப்பாற்றிய நீலன் அவனுக்கு வேறு போக்கிடம் இல்லாததால் தன்னுடைய முத்தழகியிலேயே வேலை செய்யும்படி கூறி விட்டான். இதேபோல் கப்பல் உடைந்து கடலில் மிதந்த அனுபவம் நீலனுக்கும் உண்டு. அவனும் இன்னும் இருவரும் எப்படியோ உயிர் தப்பி ஒரு தீவில் கரையேறி விட்டனர். அங்கேயிருந்து தப்பி செல்லவும் வழியில்லாமல் உணவு பொருட்களும் கிடைக்காமல் மூவரும் கொலை பசியோடு அலைந்து திரிந்தனர். பதினைந்து நாட்களுக்கு பிறகு தற்செயலாக அந்த பக்கம் வந்த ஒரு கப்பல்தீவில் இருந்த இருவரை மீட்டது. மூன்றாவது ஆசாமியை பசி பொறுக்க முடியாமல் நீலனும் அவனது நண்பனும் கொன்று தின்று விட்டனர். தான் உயிரோடு இருக்க நீலன் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருந்தான். அவனை பற்றி நன்றாக தெரிந்தவர்கள் அவனை நரன் என்ற பெயரில் அழைத்தனர்.

முத்தழகியில் வேலை செய்த நஞ்சுண்டன் எல்லோரிடமும் சினேகமாக பழகி சுறுசுறுப்பாக செயல்பட்டு எல்லோருக்கும் பிடித்தமானவனாக மாறி விட்டான். அவன் சாதாரண பணியாள் வேலை செய்ய பிறந்தவன் இல்லை என்று கண்டு கொண்ட நீலன் அவனை கப்பலின் துணை தலைவனாக மீகாமனாக நியமித்தான். புதிதாக பணிக்கு வந்து சேர்ந்த ஒருவன் சீக்கிரமாகவே தங்களுக்கு தலைவனாக மாறியதை பழைய ஆட்கள் யாருமே எதிர்க்கவில்லை என்னும் அளவிற்கு நஞ்சுண்டன் மாயம் செய்து ஆட்களை தன் வசம் கொண்டு வந்திருந்தான். ஒவ்வொரு நாட்டிலும் கிடைக்கும் சிறந்த மது வகைகளை நீலனுக்கு கொடுத்து எந்த நேரத்திலும் போதையிலேயே நீலன் இருக்கும் படி பார்த்து கொண்டான் நஞ்சுண்டன் .

சிறிது நாட்களிலேயே கப்பலின் எல்லா பொறுப்புகளும், அதிகாரங்களும் நஞ்சுண்டணிடம் வந்து சேர்ந்தன. ஆட்கள் அடுத்தது என்ன செய்ய வேண்டுமென்று அவனை கேட்டே காரியம் செய்தனர். நீலனுக்கு பெயரளவிற்கு மரியாதை இருந்ததே தவிர மற்ற முக்கிய முடிவுகள் அனைத்தையும் நஞ்சுண்டனே எடுத்தான். நஞ்சுண்டனின் அதிகாரம் விரிவடைந்து கொண்டே போவது நீலனுக்கு தெரிந்தாலும் அவன் அதை கண்டு கொள்ளவில்லை.

கடைசியாக அவன் மலைநாட்டு மன்னனை அவரது அழைப்பின் பேரில் சந்திக்க சென்றான். அங்கே நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பி வந்தவன் என்றும் இல்லாத வழக்கமாக தலைப்பாகை அணிந்து கொண்டிருந்தான். அதை தூங்கும் போது கூட அவன் கழற்றுவதில்லை. மலைநாட்டு மன்னர் தன்னுடைய கடல் சேவையை பாராட்டி தனக்களித்த பரிசு அந்த தலைப்பாகை என்று நீலன் சொன்னதை கப்பலில் இருந்த அனைவரும் நம்பினார்கள். ஆனால் நஞ்சுண்டன் நம்பவில்லை. ஏதோ ஒரு விபரீதமான அரசியல் சதி ஒன்றில் நீலன் ஈடுபட்டிருப்பதாக அவன் நம்பினான். அது என்னவென்று தெரிய அவனும் பல வழிகளில் முயன்று பார்த்து விட்டான். ஆனால் பலனில்லை. ஊற்றி கொடுத்து உண்மையை வெளியே கொண்டு வர முயற்சிக்கும் போதெல்லாம் நீலன்" இது நல்ல திட்டம்!இதை செயல்படுத்தினால் வள நாட்டை ஒழித்து விடலாம்." என்று உளறி விட்டு படுத்து குறட்டை விட ஆரம்பித்து விடுவான். சரியான நெஞ்சழுத்தக்காரன். கடும் போதையிலும் உண்மையை சொல்ல மறுக்கிறான் என்று மனதிற்குள் குமுறிக் கொண்டிருந்தான் நஞ்சுண்டன் .

இதற்கு நடுவே தான் மோகினி தீவின் மகேந்திரன் உணவு பொருள் கொண்டு வரும் வேலையை நீலனிடம் ஒப்படைத்தான். நீலன் எப்போதும் போதையில் இருந்ததால் பொருட்கள் ஏற்றுவது இறக்குவது என்று எல்லா வேலைகளையும் நஞ்சுண்டனே செய்ததால் யவன னான இப்பாலசுடன் அவனுக்கு நட்பு ஏற்பட்டது. சீக்கிரத்திலேயே யவனனுக்கு தமிழ் பேச மட்டுமே தெரியும். எழுத படிக்க தெரியாது என்பதை நஞ்சுண்டன் தெரிந்து கொண்டான்.

மகேந்திரனின் கிட்டங்கியில் பொருளை இறக்கிவிட்டு அதற்காக தரப்படும் ஒப்புகை சீட்டை பலமுறை பார்த்திருந்த நஞ்சுண்டன் அதில் ஒரு அனுமதி சீட்டை யாருக்கும் தெரியாமல் எடுத்து வைத்திருந்தான். தன் திட்டத்தை நிறைவேற்றும் முன்பாக கப்பலில் உள்ளவர்களின் மனதை மாற்றி தன் கூட்டாளிகளாக்கி கொண்டான். அன்று இரவு பழைய அனுமதி சீட்டை நீலனிடம் கொடுத்தான் நஞ்சுண்டன். அதற்கு முன்பாகவே யவனனை தனியாக சந்தித்த நஞ்சுண்டன் தன்னுடைய அன்பு பரிசு என்று வெளிநாட்டு மதுபுட்டி ஓன்றை அவனுக்கு பரிசாக கொடுத்ததுடன் தன்னுடன் குடிக்க வேண்டும் என்று வற்புறுத்தி அவனை குடிக்க வைத்திருந்தான்.

இரவு நேரத்தில் முழு போதையில் இருந்த நீலனும், அரைகுறை போதையில் இருந்த இப்பாலசும் பழைய கதைகளை பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இரவின் மங்கிய வெளிச்சத்தில் நீலன் காட்டிய அனுமதி சீட்டை பார்த்த யவனன்கிட்டங்கிக் கு பொருட்கள் வந்து சேர்ந்து விட்டதாக நினைத்து கப்பல் கிளம்ப அனுமதித்து விட்டான். அவன் மட்டும் தான் ஆட்களில் ஒருவனை அனுப்பி கிட்டங்கி பொறுப்பாளனை விசாரித்திருந்தால் கதை வேறு மாதிரியாக போயிருக்கும். நீலனின் நீண்ட நாள் பழக்கமும், குடிபோதையும் யவனின் மூளையை மழுங்க செய்திருந்தன.

இது தான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்த நஞ்சுண்டன் நீலனை ஏற்றி கொண்டு கப்பலை கிளப்பி விட்டான். அவன் மனதில் வேறொரு திட்டம் உருவாகியிருந்தது.

காலையில் நீலன் கண் விழித்தபோது தான் கப்பலில் இல்லை என்பதையும் ஒரு தீவில் இருப்பதையும் உணர்ந்தான்.

சற்று தூரத்தில் தன் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த நஞ்சுண்டன் "தலைவர் எழுந்து விட்டார்" என்றான்.

"நஞ்சுண்டா.! எங்கே என் முத்தழகி? இது என்ன இடம்? நாம் ஏன் இங்கே இருக்கிறோம்?" என்றான் நீலன் கோபத்துடன் . 

"கத்தாதே நீலா! இப்போது முத்தழகி என்னுடையவள். நான் தான் இனிமேல் அதன் தலைவன்." என்று சிரித்தான் நஞ்சுண்டன் .கரையோரத்தில் சிறு படகு ஓன்று நின்றிருந்தது. அதில் தான் அவர்கள் நீலனை இந்த தீவிற்கு கொண்டு வந்திருக்க வேண்டும் என்று அவனுக்கு புரிந்தது.

"துரோகிகளே! நான் உன்னை முழுதாக நம்பினேன். நீ எனக்கு துரோகம் செய்து விட்டாய்" என்று குமுறினான் நீலன்.

"துரோகம் செய்த தால் தான் எனக்கு இவ்வளவு பெரிய கப்பல் கிடைத்தது "

"இது என்ன இடம்? என்னை எதற்காக இங்கே கொண்டு வந்திருக்கிறாய்?" என்றான் நீலன்.

"இது கல்லறைதீவு. இங்கே வந்தவர்கள் தப்பி பிழைத்ததாக சரித்திரம் கிடையாது"

நீலன் சுற்றும் முற்றும் பார்த்தான். நான்கைந்து தென்னை மரங்களை தவிர தீவில் வேறு எதுவுமில்லை. ஆங்காங்கே சில எலும்பு கூடுகள் மண்ணில் மக்கி கொண்டிருந்தன.

"உன்னை கொல்லத்தான் நினைத்தேன். ஏனோ மனம் கேட்கவில்லை. உன்னை கொன்ற பாவம் எனக்கு வேண்டாம் என்று தான் இங்கே விட்டு போகிறேன். தனிமையில் கிடந்து பசியோடு மரணத்தை எதிர்கொள். இல்லையென்றால் தென்னை மரத்தின் இளநீர்கள் தீரும் வரை அவற்றை பறித்து தின்று விட்டு உயிர் வாழ முயற்சி செய்" என்றான் நஞ்சுண்டன் .

கல்லறைதீவில் கப்பல்கள் ஒதுங்காத காரணத்தால் கப்பற் கொள்ளையர்களும் கடல் மாலுமிகளும் தங்களின் தனிப்பட்ட விரோதத்தை தீர்த்து கொள்ளும் இடமாக அதை பயன்படுத்தி வந்தனர். தனியாக அந்த தீவில் இறக்கி விடப்படுகிறவர்கள் வாழ முயற்சி செய்து விட்டு சொற்ப நாட்களிலேயே பசியால் மரணமடைவதே வாடிக்கை.

நீலன் அமைதியாக யோசித்தான்.

"நஞ்சுண்டா! இத்தனை நாட்களாக நன்றாகத்தானே இருந்தாய். இப்போது திடிரென்று துரோகம் செய்கிறாயே? ஏன்? எதற்காக இப்படி நிறம் மாறி நடந்து கொள்கிறாய்?" என்றான் பரிதவிப்புடன் நீலன்.

"நல்ல கேள்வி. திடிரென்று நான் துரோகியாக மாற காரணம் இந்த வாள். உணவு பொருள் பொதிக்குள் ஒளித்து வைக்கப்பட்ட இந்த வாள் தான் உன்னுடைய இந்த நிலைமைக்கு காரணம் " என்ற நஞ்சுண்டன் தன் இடுப்பில் இருந்த வாளை நீலனிடம் தூக்கி எறிந்தான்.

அதை பார்த்ததும் நீலனின் முகம் மாறியது. அவனது உடல் நடுங்க ஆரம்பித்தது.

" இதை கண்டுபிடித்து விட்டாயா?இவை மலை நாட்டின் ஆயுதங்கள் . ரகசிய தீவில் ராஜ பிரதிநிதியிடம் ஒப்படைக்கப்பட வேண்டியவை. இதை வைத்து என்ன செய்ய போகிறாய்?"பதட்டத்துடன் ஓலித்தது நீலனின் குரல்.

"நீ கப்பலில் பதுக்கி வைத்திருக்கும் ஆயுதங்களை ரகசிய தீவில் ராஜ பிரதிநிதியை எதிர்த்து புரட்சி செய்யும் சிகப்பு முகமூடியிடம் விற்க போகிறேன்."

"அடப்பாவி.அப்படி செய்து விடாதே! அங்கே சிகப்பு முகமூடி வென்று ஆட்சியை பிடித்து விட்டால் அதை பார்த்து கொண்டு மலைநாடு சும்மா இருக்காது.மலைநாடும், வள நாடும் போரில் குதித்து இந்த பிராந்தியம் சுடுகாடாகி விடும்" என்று அலறினான் நீலன்.

" உன்னிடம் இன்னொரு ரகசியம் ஓளிந்திருப்பதையும் நான் அறிவேன்" என்றான் நஞ்சுண்டன் .

நீலனின் முகம் இருண்டது.

திங்கள், 20 ஜூன், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 5

# விசித்திர வழிகாட்டி.

மகேந்திரன் பைராகியை பணயக் கைதியாக பிடித்து வைத்ததே நண்பர்களுக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது. அந்த அதிர்ச்சி விலகும் முன்பாகவே இப்பாலஸ்வழித்துணையாக வருவான் என்று கூறி அடுத்த இடியை இறக்கினான் மகேந்திரன்.

" இப்பாலஸ்! இவர்களுக்கு வழித்துணையாக செல்வதில் உனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லையே?" என்று யவனின் கருத்தையும் கேட்க முற்பட்டான் மகேந்திரன்.

"இல்லை. கப்பலை துறைமுகத்தை விட்டு வெளியே அனுப்பியது என்னுடைய தவறுதான்.அதற்கு பரிகாரமாக நான் இதை செய்து தான் தீர வேண்டும்" என்றான் யவனன் தன் இடையில் இருந்த சவுக்கை தடவியபடி.

" நல்லது. அப்படியானால் இன்று இரவிலிருந்து அவர்கள் உன் பொறுப்பு. அவர்களை உன் கண் பார்வையிலேயே வைத்திருக்க வேண்டும்" என்றான் மகேந்திரன்.

"இப்போதாவது நாங்கள் புறப்படலாமா?" என்றான் ஆதித்தன்.

"கிளம்பும் முன்பாக நான் பைராகியிடம் தனியாக பேச வேண்டும்" என்றான் நீலன்.

" எதுவாக இருந்தாலும் இங்கே என் முன்பாகவே பேசு" என்று உடனடியாக வாய் வார்த்தைகளிலேயே முட்டு கட்டை போட்டான் இப்பாலஸ்.

"சாமிவரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மறுப்பது போல் இருக்கிறது என்னுடைய நிலைமை" என்று முனகினான் நீலன்.

"அவர்கள் சந்தேகிக்கும்படி நீ ஏன் நடந்து கொள்ள வேண்டும்.? பைராகியிடம் கேட்க விரும்புவதை நீ இங்கேயே அனைவரின் முன்பாக கேட்கலாம்" என்றான் ஆதித்தன்.

"அது வேறு ஒன்றுமில்லை. என் கண் பார்வை மங்கலாகி கொண்டே போகிறது. அதை குணப்படுத்த மருந்து ஏதாவது பைராகியிடம் இருக்கிறதா என்று கேட்க விரும்பினேன். மற்றபடி ரகசியம் எதையும் நான் தனியாக பேச விரும்பியதில்லை"

" இவ்வளவுதானா விசயம்? வைத்திய விசயத்தில் பைராகியின் உதவியாளாக செயல்படுகிறவன் நான். உன் கண் கோளாறை குணப்படுத்த நான் மருந்து தருகிறேன்" என்றான் ஆதித்தன்.

"சபாஷ். உன்னுடைய வைத்திய அறிவை சோதிக்க வகையாக ஒரு ஆசாமி அகப்பட்டு கொண்டான். ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று நம் முன்னோர்கள் அறியாமல் சொல்லவில்லை." என்று சிரித்தான் பைராகி .

"ஆயிரம் பேரை அல்ல நண்பா. ஆயிரம் வேரை . நீ பழமொழிக்கு தவறாக அர்த்தம் கண்டு கொண்டு விட்டாய்" என்றான் ஆதித்தன்.

" இருக்கட்டும். ஆயிரத்து ஓன்றாவது ஆசாமி உன்னிடம் அகப்பட்டு விட்டான். அவனை வைத்து கண் சம்மந்தமான வியாதிகளுக்கான அத்தனை மருந்துகளையும் பிரயோகித்து மருத்துவ தொழிலை கற்று கொள்" என்றான் பைராகி,

இக்கட்டான சூழ்நிலை நிலவும் போதும் அதைப் பற்றி கவலைப்படாமல் வாயாடி கொண்டிருக்கும் நண்பர்கள் மூவரையும் வினோதமாக பார்த்து கொண்டிருந்தனர் மகேந்திரனும் யவனனும்.

"சரியான நெஞ்சழுத்தக்காரர்கள் " என்று முணுமுணுத்தான் மகேந்திரன்.

அவர்களின் உரையாடலை துண்டிக்கும் விதமாக ஓலித்தது யவனனின் குரல்

"போதும் வீண் அரட்டை .நாம் கிளம்பலாம்"

பைராகியை கட்டியணைத்து பிரியாவிடை பெற்று கிளம்பினர் நண்பர்கள் இருவரும் .

வெளியே வந்த யவனன் தன் ஆட்களை பார்த்து சைகை செய்தான். அடுத்த நிமிடம் குதிரைகள் பூட்டிய வண்டி ஓன்று மாளிகையின் எதிரே புழுதிபறக்க வந்து நின்றது.

" ஏறுங்கள் இருவரும் " என்ற யவனன் இருவரும் வாகனத்தில் ஏற வழிவிட்டு நின்றான். கடைசியாக வாகனத்தில் ஏற முயன்றவன் சீழ்க்கை ஓலியை எழுப்பினான். ஆட்களில் ஒருவன் ஹேர்குலஸ் என்ற ராட்சச கழுகு அடைபட்டிருந்த கூண்டின் கதவை திறந்து விட்டான். இருளை கிழித்தபடி பறந்த அந்த பறவை வண்டியின் முகப்பில் உட்கார்ந்து கொண்டது.

"இப்பாலஸ்! அது உன்னுடைய பறவையா?" என்றான் ஆதித்தன்.

"ஆமாம். என்னுடைய வளர்ப்பு பறவை. அதை கண் திறக்காத குஞ்சிலிருந்து எடுத்து வளர்க்கிறேன். அதன் பெயர் ஹேர்குலஸ்.கண் இமைக்கும் நேரத்தில் ஓரு ஆட்டு குட்டியை தூக்கி வந்து விடும் அளவிற்கு வலுவுள்ளது"

" அதன் கூரான நகங்கள் கைகளை காயப்படுத்தி விடுமே?" என்றான் ஆதித்தன்.

பறவைகளை பற்றிய பரிச்சயம் ஆதித்தனுக்கு இருப்பதை அவனது கேள்வியின் மூலம் புரிந்து கொண்டான்யவனன்.

யவனன் தன் வலது கையின் மணிக்கட்டில் இருந்த தழும்புகளை ஒரு முறை தடவி பார்த்து கொண்டான்.

"ஆமாம். காயப்படுத்தி விடும். என்னையும் பல முறை காயப்படுத்தி இருக்கிறது.அதற்கென நான் பிரத்யேக தோலால் செய்யப்பட்ட கையுறையை வைத்திருக்கிறேன். அந்த கையுறையை நான் அணியாதிருந்தால் அது எனக்கு அருகாமையில் இருக்கும் மரத்தின் மீதோ வீட்டின் மீதோ அமர்ந்து என்னையே கவனித்து கொண்டிருக்கும் . என்னுடைய சீழ்க்கை ஒலி கேட்டால் எங்கிருந்தாலும் என்னிடம் வந்து சேர்ந்து விடும்" என்றான் யவனன் பெருமையுடன் .

வண்டி துறைமுகத்தை அடைந்ததும் மூவரும் கீழே இறங்கி கொண்டு வண்டியை திருப்பி அனுப்பினர்.

கழுகை கண்டுபிடித்து அதில் ஏறிய யவனன் திகைத்து போனான். கப்பலின் மேல் தளம் முழுவதும் விதவிதமான செடிகளும், மரங்களும் சிறு சிறு தொட்டிகளில் வளர்க்கப்பட்டு தளம் முழுவதும் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது.

"இவையெல்லாம் என்ன?" என்றான் யவனன் வியப்புடன்.

"நீ ஹேர்குல ஸைவார்ப்பது போல் என் நண்பன் பைராகி இவற்றை வளர்த்து கொண்டிருக்கிறான்." என்றான் ஆதித்தன்.

அதே நேரம் பைராகி வளர்த்து வைத்திருந்த மரம் ஒன்றிலிருந்து விசித்திர சப்தம் எழுந்தது. இப்பாலசின் வளர்ப்பு பறவையான ஹேர்குலஸ் மரத்தில் ஊர்ந்து கொண்டிருந்த ஏதோ ஒரு விலங்கை தன் கால்களால் பிடித்திருந்தது.

அதை பார்த்ததும் நீலன் பதறினான்.

"கெட்டது காரியம். இப்பாலஸ் உன் கழுகை விலக சொல். உன் பறவை அந்த விலங்கை கொன்று விடப்போகிறது " என்று அலறினான் நீலன்.

இப்பாலஸ்தன்னுடைய கழுகிற்கு அந்த விலங்கை விட்டுவிடுமாறு அவனது மொழியில் கட்டளையிட்டான்.

ஹேர்குலஸ் அவனது கட்டளைக்கு பணிந்து பிடித்த விலங்கை கீழே போட்டுவிட்டு வேறு மரத்தில் அமர்ந்தது.

ஹேர்குல சின் கால்களிலிருந்து தப்பி கீழே விழுந்து நடு நடுங்கி கொண்டிருந்தது ஒரு தேவாங்கு .

ஆதித்தன் அதை தன் கையில் எடுத்தான். "கூண்டிலிருந்து எப்படியோ தப்பி வந்துவிட்டது போலிருக்கிறது" என்றவன் அருகிலிருந்த கூண்டில் அதை அடைத்தான்.

அதன் அவலட்சணமான முகத்தை பார்த்த யவனனின் முகம் அருவறுப்பால் சுருங்கியது.

"இது என்ன விலங்கு?" அவன் இந்த மாதிரியான ஒரு விலங்கை இதற்கு முன் பார்த்ததில்லை.

" இதன் பெயர் தேவாங்கு " என்றான் ஆதித்தன்.

" இதை எதற்காக கப்பலில் வைத்து வளர்க்கிறீர்கள்?" என்றான் யவனன் குழப்பத்தோடு.

"இது கடலின் பதகன். (வழிகாட்டி) இதை வெளியே விட்டால் எப்போதும் வட திசை நோக்கியே அமரும்.அதை வைத்து மாலுமிகள் திசையை கண்டுபிடித்து கொள்வார்கள்."

"அதற்குத்தான் சீனர்களின் காந்த ஊசி இருக்கிறதே?"

" இருக்கிறதுதான். ஆனால் இந்த விலங்கை கடலில் திசையறிய பயன்படுத்துவது பண்டைய தமிழர் வழக்கம். நாங்கள் காந்த ஊசியை விட இந்த உயிருள்ள விலங்கையே அதிகம் நம்புகிறோம்" என்றான் ஆதித்தன்.

" இப்படி ஒரு திசையறியும் முறையை உலகத்தில் எங்குமே கண்டதில்லை" என்றான் யவனன் வியப்புடன்.

"இன்னமும் நிறைய புதுமையான விசயங்கள் இருப்பதை நீ பார்க்கத்தானே போகிறாய்? ஆமாம். இதற்கு முன் நீ கடல் பயணம் செய்திருக்கிறாயா?" என்றான் நீலன்.

"நான் இந்த தீவிற்கு வந்ததே கப்பலில் தானே ? அதற்கு பிறகு இது இரண்டாவது பயணம்" என்றான் யவனன்.

"சரிவா! நாம் கீழே போகலாம்" என்று அவனை கப்பலின் கீழ் தளத்திற்கு அழைத்து சென்றான் ஆதித்தன். அங்கே இருந்த கட்டில், நாற்காலி போன்றவற்றை தனித்தனியாக பிரித்து மடக்கி பயன்படுத்தும்படி பைராகி வடிவமைத்திருப்பதை பார்த்த யவனன் வாயடைத்து போனான்.

" இப்படியான விந்தை பொருட்களை நான் எங்குமே பார்த்ததில்லை. உன்னுடைய நண்பன் மிகுந்த புத்திசாலி போல் தெரிகிறது. இதற்கு கூடுதலான மூளை உழைப்பு தேவை "

"ஆமாம்.என் நண்பன் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில் புத்திசாலி தான் " என்றான் ஆதித்தன்.

" ஆனால் உதவாக்கரைகளுடன் நட்பு வைத்திருக்கிறான். அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது" என்றான் யவனன் நீலனை கண்களால் சுட்டி காட்டியபடி.

நீலன் வேறு ஏதோ யோசனையில் இருந்ததால் யவனனின் பகடியை கவனிக்கவில்லை.

நீலனின் அருமையையவனன் தானாகவே தெரிந்து கொள்ளட்டும் என்று அமைதியாகிவிட்டான் ஆதித்தன்.

அன்று இரவு உணவு முடிந்த பின்பு மீண்டும் சம்பாசணையை துவக்கினான்ய வனன்.

"ஆதித்தா! நான் உன்னை கூடநம்புவேன். ஆனால் இந்த கிழவனை நம்ப மாட்டேன்" என்றான் இப்பாலஸ் வம்பிழுக்கும் நோக்கில் .

"ஏன் அப்படி சொல்கிறாய்?" என்றான் ஆதித்தன்.

"இவன் ஒரு பொய்யன். சரியான எத்தன். கடைசி வரை இவனது கப்பலை யார் கடத்தியது என்பதை இவன் சொல்லவேயில்லை. அந்த கப்பல் இப்போது எங்கிருக்கிறது என்று இவனுக்கு தெரியும். அங்கே தான் இவன் நம்மை ஏமாற்றி அழைத்து செல்கிறான் என்று நினைக்கிறேன்"

யவனனின் பேச்சை கேட்ட நீலனின் முகம் மாறியது. சண்டாளன். உண்மையை சரியாக யூகித்து விட்டானே ? ஒரு வேளை இவனது யவன சோதிடம் உண்மையாக இருக்குமோ என்று நினைக்க தொடங்கினான் நீலன்

" தான் ஏமாந்த கதையை எல்லோர் நடுவிலும் சொல்ல நீலன் விரும்பாமல் இருந்திருக்கலாம். உனக்கு எழுந்த அதே சந்தேகம் எனக்கும் இருக்கின்றது. என்னுடைய சந்தேகமும் உன்னுடைய சந்தேகமும் களைய நீலன்வாய் திறக்க வேண்டும்" என்றான் ஆதித்தன்.

"அதில் உண்மை வருமா என்பது தான் கேள்வி " என்றான் இப்பாலஸ்.

நீலன் தன் இருக்கையிலிருந்து எழுந்து குறுக்கும் நெடுக்குமாக நடக்க தொடங்கினான்.

"நான் உண்மையை பேச வேண்டிய நேரம் வந்து விட்டது.இனியும் தாமதம் செய்தால் உங்கள் நம்பிக்கையை நான் இழந்து விடுவேன்" என்ற நீலன் தன் நடையை நிறுத்தினான். வானத்தில் தெரிந்த நிலவை பார்த்து பெருமூச்சு விட்டவன்" என்னுடைய கப்பலை கடத்தி சென்றவன் என்னுடைய துணை மீகாமன் நஞ்சுண்டன் . கல்லறை தீவில் என்னை கொல்ல முயன்றவனும் அவன் தான் " என்றான்.

யவனன் திகைத்து போனான். அவன் இரண்டொரு முறை நஞ்சுண்டனை சந்தித்திருக்கிறான். பணிவான நடத்தையும் இனிக்க இனிக்க பேசும் இயல்பும் கொண்ட அவனா நீலனின் கப்பலை கடத்தியது.?

"என்னால் இதை நம்ப முடியவில்லை" என்றான் யவனன்.

"நடந்தவற்றை அப்படியே சொல்கிறேன் பிறகு அதை நம்புவதும் நம்பாததும் உன் இஷ்டம்" என்ற நீலன் தன் கதையை கூற தொடங்கினான்.

ஞாயிறு, 19 ஜூன், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 4

பணயத்தில் ஒரு பங்காளி

கொலை வெறியோடு நீலனை அணுகி அவனை தாக்க முயன்ற மகேந்திரனை நண்பர்கள் இருவரும் தடுத்து நிறுத்தினார்கள். புதியவர்கள் இருவர் தன்னை தடுத்து நிறுத்தியதால் மகேந்திரன் கடும் சீற்றத்துடன் இருவரையும் நிமிர்ந்து பார்த்தான்.

"யார் இந்த அந்நியர்கள்? இப்பாலஸ் இவர்களை ஏன் இங்கே அழைத்து வந்தாய்?"மகேந்திரனின் கோபம் இப்போது யவனனின் மீது பாய்ந்தது.

" இவர்கள் இருவரும் அந்த எத்தனின் நண்பர்களாம். அவனை காப்பாற்ற இங்கே வந்திருக்கிறார்கள்"

"இவனுடைய நண்பர்களா? அவர்களும் இவனைப் போலத்தான் இருப்பார்கள். இவர்களை உடனே கைது செய்" என்றான் மகேந்திரன்.

யவனன் இருவரை நோக்கி நகர்ந்தான்.மகேந்திரன் கடும் கோபத்தில் இருப்பதால் கண் மண் தெரியாமல் கோபத்தில் முடிவெடுக்கிறான் என்பதை உணர்ந்து கொண்ட ஆதித்தன் அவனை நிதானத்திற்கு கொண்டு வர ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை நடத்துவது தான் சரி என்ற முடிவுக்கு வந்து விட்டான்.பைராகியை நெருங்கிய யவனனின் இடுப்பில் சொருகியிருந்த குறு வாளை மின்னல் வேகத்தில் எடுத்த ஆதித்தன் அதை கண் இமைக்கும் நேரத்தில் மகேந்திரனின் கழுத்தில் வைத்தான்.

"இப்பாலஸ்! இருந்த இடத்தை விட்டு அசையாதே! வில்லங்கமாக எதையாவது செய்ய நீயும் உன் ஆட்களும் முயற்சி செய்தால் உன் எஜமானனின் தலை தப்பாது" என்று கர்ஜித்தான் ஆதித்தன்.
எதிர்பாராமல் அங்கே நடந்த நிகழ்வால் காட்சி தலை கீழானது.

மகேந்திரன் நடந்த நிகழ்வால் திக் பிரமை பிடித்து நின்றான்.

"இந்த தீவு என்னுடைய ஆளுகைக்கு உட்பட்டது. இங்கிருந்து உங்களால் அவ்வளவு எளிதாக தப்பி செல்ல முடியாது"

" நிலவரம் புரியாமல் பேசுகிறாய். என் நண்பன் உன் கண்களில் மண்ணை தூவிவிட்டு முத்தழகி என்ற மிகப் பெரிய கப்பலையே கடத்தி சென்ற போது நீ என்ன தான் செய்து கொண்டிருந்தாய்? உன் வீண் பூச்சாண்டியை என்னிடம் காட்டாதே! நான் நினைத்தால் கத்திமுனையிலேயே உன்னை கடல் வரை கூட்டி சென்று என்னுடைய கலத்தில் தப்பிச் செல்ல முடியும். ஆனால் அப்படி செய்தால் அது என் நண்பன் செய்த குற்றத்தை ஓப்பு கொண்டது போலாகி விடும். அதை நான் விரும்பவில்லை" என்றான் ஆதித்தன்.

"ஆதித்தா ! நமக்கு பிரச்சனை என்னவென்றே இன்னும் புரியவில்லையே?" என்றான் பைராகி குழப்பத்துடன் .

"அய்யய்யோ! நீங்கள் நினைப்பதுபோல் கப்பலை நான் கடத்தி செல்லவில்லை" என்று பதறினான் நீலன்.

"நீ இல்லாவிட்டால் வேறு யார் ? கப்பலை இயக்கும் ,வழியை தீர்மானிக்கும் அதிகாரம் மீகாமகனாகிய உனக்குத் தானே இருக்கிறது'' என்றான் மகேந்திரன் அவனது கழுத்தில் இருந்த குறுவாள் அவனிடம் நிதானத்தை வரவழைத்திருந்தது.

"அது உண்மைதான்.என் கப்பலை நானே கடத்தி சென்று விட்டு எதற்காக இங்கே திரும்ப வர வேண்டும்? சரக்கை இறக்காமல் ஏமாற்றி சென்ற என்னை நீ சும்மா விட மாட்டாயல்லவா? பிறகு நான் ஏன் இங்கே வந்தேன்?"

"ஒருவேளை சரக்கின் விலையான 5000 பொற்காசுகளை திரும்ப தர வந்திருக்கிறாயோ?" என்றான் மகேந்திரன்.

"உன்னிடம் பெற்ற அந்த பணமும் இப்போது என்னிடமில்லை" என்றான் நீலன் தலையை தொங்கப் போட்டபடி.

"பார்த்தீர்களா உங்கள் நண்பனின் லட்சணத்தை .இவனை எனக்கு பல வருடங்களாக வணிக ரீதியாக தெரியும். இந்த தீவிற்கு தேவையான உணவுப் பொருட்களை வியாபாரிகள் இவனது கப்பலில் அனுப்பி வைப்பார்கள். அவற்றிற்கான விலையை நான் இவனிடம் கொடுத்து விடுவேன். எல்லாமே இதுவரை நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது. இவனது கடைசி வருகையின் போது என்னிடம் முன்கூட்டியே பொருட் களுக்கான பணத்தை பெற்று கொண்டான். அதுதான் அந்த 5000 பொற்காசுகள். அன்று இரவு என்கிட்டங்கியில் சரக்கை இறக்காமல் காசுகளை எடுத்து கொண்டு கப்பலோடு மாயமாகி விட்டான். துறைமுகத்தின் பொறுப்பதிகாரியான இந்த யவனனை எப்படியோ ஏமாற்றி கப்பலை எப்படியோ வெளியே கொண்டு சென்று விட்டான். இப்போது வேறு ஏதோ காரணத்திற்காக இங்கே வந்து விட்டு கப்பலை காணோம். காசையும் காணோம் என்று கதைவிடுகிறான்.இவனுக்கு உதவ நீங்கள் இருவரும் வந்து சேர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் மூவரும் சேர்ந்து என்னை ஏமாற்ற நினைக்கிறீர்களோ என்னவோ?" என்றான் மகேந்திரன் கசப்பான குரலில்.

மகேந்திரனின் தரப்பில் நியாயம் இருப்பதை உணர்ந்த ஆதித்தனின் குறுவாள் தாழ்ந்தது.

"என்னை மன்னித்துவிடுங்கள்! தவறு என் நண்பனுடையது. இப்போது நாங்கள் என்ன செய்தால் என் நண்பனை அழைத்து செல்ல அனுமதிப்பீர்கள்?" என்றான் மென்மையான குரலில் ஆதித்தன்.

"ஆதித்தா !தீவில் உணவு பொருட்கள் கையிருப்பு குறைந்து கொண்டே இருக்கிறது. இங்கே விளையும் சொற்ப உணவு பொருட்கள் இங்கிருக்கும் மக்களுக்கே போதாது. அதனால் வெளியிலிருந்து தான் உணவு பொருட்களை வரவழைக்கிறோம். உன் நண்பன் செய்த குளறுபடியால் உணவும் வரவில்லை. பணமும் போய் விட்டது. இப்போது பணம் வேண்டும். பழைய பாக்கியை கொடுத்தால் தான் வியாபாரிகள் உணவு பொருட்களை அனுப்புவார்கள். அதற்கு புதிய கப்பலை ஏற்பாடு செய்ய வேண்டும்."

"எங்களிடம் அவ்வளவு பொருள் இல்லைதீவின் தலைவரே! இருந்தால் கொடுத்து விட்டு சென்று விடுவோம்" என்றான் ஆதித்தன்.

"எங்கள் படகில் மூலிகைகளும் செடிகளும் தான் இருக்கின்றன. " என்றான் பைராகி .

" எல்லோரும் அவரவர் பிரச்சனையை பற்றி கவலைப்படுகிறீர்கள். என்னைப் பற்றியோ என் கப்பலை பற்றி யோ யாரும் கவலைப்பட மறுக்கிறீர்கள்" என்றான் நீலன்.

"நீலா! நிலைமை புரியாமல் பேசுகிறாய். நீ செய்த தவறால் தான் நாங்கள் அபாயத்தில் மாட்டியிருக்கிறோம்" என்றான் பைராகி கோபத்துடன் .

" பிரச்சனைகளை உருவாக்கிய நீலனிடமே தீர்வும் கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்றான் ஆதித்தன் ஏதோ யோசனையில் .

"என்னால் இந்த பிரச்சனைக்கு எளிதாக தீர்வு காண முடியும். இங்கே சரக்குகளை இறக்கிய பிறகு நான் ரகசிய தீவிற்கு பயணமாகி அங்கேயும் சரக்குகளை இறக்குவேன். அங்கே எனக்கு நிறைய செல்வாக்கு உண்டு. நான் சொல்வதை கேட்டு உதவும் வணிக நண்பர்களும் நிறையவே இருக்கிறார்கள். என்னை அங்கே அனுப்பினால் என்னால் உணவு பொருட்களை இங்கே அனுப்பி விட முடியும் "

"அங்கேயும் யவனனை போல் உன்னை யாராவது தேடிக் கொண்டிருக்கலாம்" என்றான் பைராகி .
"சேச்சே! அங்கே உங்களை போலவே எனக்காக எதையும் செய்யும் நண்பர்கள் ஏராளம் உண்டு" என்றான் நீலன்.

"அப்படியானால் நாம் உடனே கழுகில் ஏறி ரகசிய தீவிற்கு செல்வோம்" என்றான் ஆதித்தன் உற்சாகத்தோடு.

" ஆனால் இந்த ஏற்பாட்டிற்கு நான் ஒப்புகொள்ள வேண்டுமே?" என்றான் மகேந்திரன்.

" இதில் என்ன குறை கண்டாய் மகேந்திரா ? " என்றான் நீலன்.

"என்னைப் பார்த்தால் முட்டாளைப் போல் தெரிகிறதா உங்களுக்கு? பணத்தை இழந்து விட்டு பொருளையும் இழந்து விட்டு உங்களை நான் எந்த நம்பிக்கையில் விடுவிப்பது.ஏற்கனவே நீங்கள் மூன்று பேரும் கூட்டு களவாணிகளோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. அதற்கு தோதாக மூவரும் ரகசிய தீவிற்கு பயணம் செய்வதாக கூறுவதை நான் எப்படி நம்புவது?"

மகேந்திரனின் சந்தேகம் நியாயமானது என்று மூன்று பேருக்குமே புரிந்தது.ஆதித்தனும் பைராகியும் ஓருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

நண்பர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் ஆதித்தன் அவர்களை மீட்க கடைசி வரை போராடுவான் என்று பைராகிக்கு தெரியும்.

"ஆதித்தா ! இதற்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது. நம்மில் யாராவது ஒருவர் பணயமாக மகேந்திரனிடம் இருக்க வேண்டும். நீலனை பணயமாக இங்கே வைக்க முடியாது. ஏனென்றால் அவனால் தான் ரகசிய தீவிலிருந்து உணவு பொருட்களை இங்கே கொண்டு வர முடியும். அவனுக்கு உன்னுடைய ஓத்தாசை தேவை. இங்கே நான் உணவு பொருட்களின் தட்டுப்பாட்டை போக்க ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கிறேன். அப்படியே அந்த அபூர்வ மூலிகை யையும் கண்டுபிடிக்க முயல்கிறேன்"

"இந்த தீவில் அபூர்வ மூலிகையா? அது என்னவென்று கூறு பைராகி" என்றான் மகேந்திரன். அவனுக்கு அது புதிய செய்தியாக இருந்தது.

"அந்த மூலிகையின் பெயர் என்னவென்று தெரியவில்லை. இந்த தீவை சேர்ந்த ஒரு நபர் தான் அந்த மூலிகையை பற்றிய கதையை சொன்னார். ஆடு ஓன்றை அடித்து அதன் கறியை பங்கு பிரித்தபோது அந்த நபர் தன் பங்கு கறியை அருகேயிருந்த செடியின் இலையில் பொதி செய்து கட்டி வந்தாராம். வீட்டிற்கு வந்து பொதியை பிரித்து பார்த்த போது தனி தனி கறி துண்டுகள் ஓன்று சேர்ந்து ஓரே கறி உருண்டையாக மாறி இருந்ததாம். பிறகு அந்த செடியை அதன் இலையை எவ்வளவு தேடியும் கிடைக்க வில்லையாம். அந்த செடியை கண்டுபிடித்து விட்டால் துண்டாகும் அவயங்களை திரும்ப இணைத்து விடலாம் என்று நினைக்கிறேன்." என்றான் பைராகி .

"இந்த கதையை நானும் பலர் பேச கேட்டிருக்கிறேன். அப்படி ஒரு அதிசய செடி இங்கே இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதை தேடி இங்கே வந்த முதல் ஆசாமி நீ தான் " என்றான் மகேந்திரன்.

" என் நண்பனை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்.இந்த உலகத்தின் விலை மதிப்பு மிக்க பொக்கிசத்தையும் என் நண்பனையும் இணைவைத்தால் நான் என் நண்பனைத் தான் தேர்ந்தெடுப்பேன். நாங்கள் திரும்ப வரும் வரை என் நண்பனை கவனமாக பார்த்து கொள்ளுங்கள். அவனது உடலுக்கும் உயிருக்கும் ஏதாவது ஊறு நேர்ந்தால் விளைவு விபரீதமாக இருக்கும்."

"அவ்வளவு வல்லவனா உன் நண்பன் ? " என்றான் மகேந்திரன் இகழ்ச்சியாக .

" விரைவில் அவனைப் பற்றி நீயே தெரிந்து கொள்வாய் .அவனை பணயமாக விட்டு செல்வதில் எனக்கு துளியும் விருப்பமில்லை"

"என்னைப் பற்றி கவலைப்படாதே ஆதித்தா!வெற்றியுடன் திருப்ப வா!" என்றான் பைராகி .

"உணவு பொருட்கள் இந்த திவிற்கு வந்து சேர்ந்த அடுத்தகணம் என் நண்பன் விடுவிக்கப்பட வேண்டும்" என்றான் ஆதித்தன்.

" உன் நிபந்தனைக்கு ஒப்பு கொள்கிறேன். நண்பனுக்காக நீ அபாயமான ஒரு பயணத்தை மேற்கொள்ள போகிறாய். உன் நண்பர்கள் கொடுத்து வைத்தவர்கள் " என்றான் மகேந்திரன்.

"அப்படியானால் நாங்கள் கிளம்பலாமா? நாளை காலை பயணமாக போகிறோம். அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்" என்றான் நீலன்.

"நீங்கள் கிளம்பலாம். உங்களுடன் இந்த யவனனும் வருவான்" என்றான் மகேந்திரன்.

நீலனின் முகம் இருண்டது.

" அவன் எதற்கு?" என்று முனகினான் நீலன்.யவனன் தன்னுடன் பயணித்தால் தன்னுடைய திட்டம் வீணாகிவிடும் என்ற பயம் அவனது குரலில் தெரிந்தது.

" காரணமாகத் தான். இருவரும் ரகசிய தீவிற்கு செல்வதாக கூறி விட்டு என் பாதுகாப்பில் இருக்கும் உங்கள் நண்பனை மீட்டு சென்று விட்டால் என்ன செய்வது? இப்பாலஸ் இவர்கள் உன் கண் பார்வையிலேயே இருக்கும் படி பார்த்து கொள். ஏதாவது இசகுபிசகாக நடந்தால் இருவரின் உயிர் பறவையை உடலிலிருந்து விடுதலை செய்துவிடு" என்றான் மகேந்திரன்.

இப்பாலசின் உதடுகளில் ஓரு கொடூர புன்னகை மலர்ந்தது.

நீலனின் முகத்தில் இருள் படர்ந்தது.

ரகசிய தீவு

ரகசிய தீவு

முக்கூடலின் சங்கமம்.

தன்னுடைய ஆளுகை நிரம்பிய தீவில் தன்னை யாரும் எதிர்த்து பேசவோ தட்டி கேட்கவோ இயலாத சூழலை மட்டுமே இதுவரை கண்டிருந்த யவன னான இப்பாலசிற்கு புதிதாக ஒரு மனிதன் தன்னுடைய வைத்திய முறைகளில் தலையிடுவது சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதை விட அவன் அந்நியன் என்று தன்னை குறிப்பிட்டதில் அவனது கோபம் அதிகரித்தது.

அதே நேரம் நீலன் வியப்பின் உச்சியில் இருந்தான். உலகின் வேறு ஒரு மூலையில் முன் பின் தெரியாத ஆட்கள் நிறைந்த ஒரு தீவில் ஆதித்தன் எப்படி வந்து சேர்ந்தான் என்ற கேள்வி அவன் உள்ளத்தில் எழுந்தது.

" கள்வர்புரத்துகள்வனை நான் இங்கே சந்திப்பேன் என்று கனவுகூட காணவில்லை!" என்றான் நீலன் குரலில் ஆச்சரியம் வெளிப்பட.

"எனக்கும் அதே ஆச்சரியம் தான் முதிய நண்பா! கடலோடியான உன்னை இப்படி ஒரு தீவில் சந்திப்பேன் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை"

"ஆமாம். ஆ மட்டும் தனியே வந்திருப்பது போல் தெரிகிறதே? எங்கே உன் சகோதரன் அரிஞ்சயன்?" என்றான் நீலன்.

" அண்ணன் கள்வர்புரத்தில் இருக்கிறார். ஒரு அபூர்வ மூலிகை ஓன்றை தேடி நானும் பைராகியும் இந்த தீவிற்கு வந்தோம். வந்த இடத்தில் எதிர்பாராத விதமாக நடந்து விட்டது நம் சந்திப்பு"

"ஆதித்தா! என் அருமை நண்பா! நான் இப்போது ஒரு இக்கட்டில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். என்னை நீ தான் காப்பாற்ற வேண்டும்"

"நானிருக்க பயமேன்!" என்று சிரித்தான் ஆதித்தன்.

இருவரது சம்பாசணையை கேட்டு கொண்டிருந்த யவனன் இருவருக்கும் ஏற்கனவே அறிமுகம் இருப்பதை அந்த உரையாடலின் வழியே தெரிந்து கொண்டான்.

ஆதித்தனை பற்றி யவனன் இதுவரை கேள்விப்பட்டதில்லை. அதனால் அவன் தன் முரட்டு தனத்தை கைவிட தயாராகவில்லை.

"போதும்! உரையாடலை நிறுத்துங்கள். ஏய் கிழவா ! துணைக்கு ஆள் வந்து விட்ட தைரியத்தில் எதையாவது செய்ய நினைத்தால் உன் வாலை ஒட்ட நறுக்கி விடுவேன்" என்றான் யவனன்.

"வாலை நறுக்க நான் என்ன உன் வீட்டு வளர்ப்பு நாயா ? மகேந்திரன் எய்த அம்பு நீ. என்னை மரியாதையாக அவனிடம் அழைத்து செல். நான் அவனிடம் பேசிக் கொள்கிறேன்."

" உன் பழைய நண்பனை கண்டதும் உன் பேச்சு தோரணை மாறிவிட்டது"

நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஆதித்தன்" யவனனே..! உன் பெயர் என்னவென்று நான் தெரிந்து கொள்ளலாமா?"

"அதற்கு முன்னால் உன் பெயரை சொல் "

"அவனைத் தான் நான் ஆதித்தன் என்று நான் பெயர் சொல்லி அழைத்தேனே? அது உன் காதில் விழவில்லையா?" என்றான் எரிச்சலுடன் நீலன்.

"அது என் காதில் நன்றாகவே விழுந்தது. அதை விடவும் கள்வர் புரத்து கள்வன் என்ற வார்த்தை நன்றாகவே விழுந்தது. எங்கள் நாட்டில் கள்வர்கள் தங்களை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருக்க ஊருக்கு ஒரு பெயர் வைத்து கொள்வது வாடிக்கை. நீ கூறிய ஆதித்தன் என்ற பெயர் ஏன் இவனது புனைபெயராக இருக்க கூடாது?"
என்று கூறி தன் மேதாவிலாசத்தை வெளிக்காட்டினான் யவனன்.

"நீ நினைப்பது தவறு.ஆதித்தன் என்பது தான் என்னுடைய சொந்த பெயர் .காரணமின்றி நான் புனைபெயர்களை சூட்டிக் கொள்வதில்லை. உன்னிடம் பெயரை மறைப்பதால் எனக்கு கிடைக்க கூடிய ஆதாயம் எதுவுமில்லை. என் நண்பனை இக்கட்டிலிருந்து காப்பாற்ற நான் எதையும் செய்ய தயாராக இருக்கிறேன்"

"பரவாயில்லை. ஒருவன் முதுகைத்தான் என் சவுக்கு சுவை பார்க்கும் என்று நினைத்தேன். இப்போது துணைக்கு நீயும் வந்து சேர்ந்திருக்கிறாய். என் சவுக்குக்கு நல்ல வேட்டைதான். உன்னை பிடித்து வரச் சொல்லித்தான் எனக்கு உத்தரவு .அதை நான் செய்கிறேன். இனி உன்னை என்ன செய்ய வேண்டுமென்பதை மகேந்திரன் தான் முடிவு செய்ய வேண்டும். நடங்கள் முன்னே" என்றான் இப்பாலஸ்.

" இறுதி வரை உன் பெயரை சொல்ல மறுத்து விட்டாயே? ஒரு வேளை உன் பெற்றோர் உனக்கு பெயர் வைக்காமலேயே வளர்த்து விட்டார்கள் போலிருக்கிறது. பரவாயில்லை. நான் உன்னை யவனன் என்றே அழைக்கிறேன்."

"போதும் பகடி . என் பெயர் இப்பாலஸ். நீ என்னை எப்படி அழைத்தாலும் அதைப் பற்றி எனக்கு கவலையில்லை" என்றான் எரிச்சலுடன் இப்பாலஸ்.

"கவலை இல்லாத மனிதரே! உம்மிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். துறைமுகத்தில் என்னுடைய நண்பன் ஒருவன் நாவாய் ஓன்றில் காத்திருக்கிறான். அவனும் இங்கே வந்து மகேந்திரனுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். உன் ஆட்களில் ஓருவனை துறைமுகத்திற்கு அனுப்பி அவரை அழைத்து வர சொல்ல முடியுமா?"

அந்த நபரின் பெயரையும் நாவாயின் பெயரையும் கூறு அவனை அழைத்து வர ஆளை அனுப்புகிறேன்" என்றான் யவனன் வேண்டா வெறுப்பாக .

" என் நண்பனின் பெயர் பைராகி .அவனது நாவாயின் பெயர் கழுகு " என்றான் ஆதித்தன்

யவனன் சைகை செய்ததும் அங்கிருந்த வீரர்களில் ஒருவன் துறைமுகத்தை நோக்கி கிளம்பினான்.

யவனனுக்கு ஆயாசமாக இருந்தது. முதலில் நீலன். அவனை தொடர்ந்து ஆதித்தன். இப்போது பைராகி என்ற புது ஆசாமி. ஒருவனை கூட்டி வரச் சொன்னால் மூன்று பேரை கூட்டி வரும் தன்னை பற்றி மகேந்திரன் என்ன நினைப்பான் என்று அவனது மனம் கவலையில் ஆழ்ந்தது.

அந்த சிறு குழு அங்கிருந்து கிளம்பியது. வெளியே இருள் கவியத் துவங்கியிருந்தது. வானில் நிலவும் நட்சத்திரங்களும் உலாவரத் தொடங்கி இருந்தன. ஆங்காங்கே இருந்த விளக்கு தூண்களில் ஆட்கள் தீப்பந்தங்களை பொருத்தி இருளை விரட்டி வெளிச்சத்தை கொண்டு வர ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.

அந்த சிறு குழுமகேந்திரனின் மாளிகைக்குள் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டது.

இவர்களுக்கு முன்பாகவே அங்கே அழைத்து வரப்பட்டிருந்தான் பைராகி .

ஆதித்தனை பார்த்ததும்" என்ன நண்பா! ஏதாவது பிரச்சனையா? ஊரை சுற்றி பார்த்து விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றாயே? இப்போது பலத்த காவலோடு அழைத்து வரப்படுகிறாயே? ஏதேனும் விபரீதமா?" என்றான் பைராகி பரபரப்புடன்.

" பிரச்சனை என்னால் வரவில்லை நண்பா.! இதோ இந்த கிழட்டு நண்பனால் வந்தது. பிரச்சனையின் முழு பரிமாணமும் அவனுக்கு மட்டும் தான் தெரியும். நானே தலையும் புரியாமல் காலும் புரியாமலும் தான் இங்கே வந்திருக்கிறேன்" என்ற ஆதித்தன் நீலனை நோக்கி கையை காட்டினான்.

நீலனை பார்த்த பைராகி"நண்பா! கடலோடியான உன்னை ஆதித்தன் எங்கே பிடித்தான்?" என்றான் ஆச்சரியத்துடன் .

" அவன் எங்கே பிடித்தான்? நானல்லவா அவனைப் பிடித்தேன்" என்றான் இப்பாலஸ்..

"இவன் வேறு நேரம் காலம் தெரியாமல் தற்பெருமை பேசிக் கொண்டிருக்கிறான். உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி பைராகி . சூழ்நிலையை பார்த்தாயா? பழைய நண்பர்கள் நீண்ட காலத்திற்கு பிறகு சந்திக்கும் போது மகிழ்ச்சியான சூழல் நிலவவில்லையே?" என்றான் நீலன் வருத்தத்துடன் .

" ஆபத்தில் உதவி செய்பவன் தானே நண்பன். நாம் இப்படி ஒரு இக்கட்டான சூழலில் சந்திப்பதே பொருத்தமானது " என்றான் ஆதித்தன்.

" இவ்வளவு தூரம் நடத்தி வந்து விட்டு குடிக்க தண்ணீர் கூட தராமல் வேடிக்கை பார்க்கிறார்கள் பண்பாடு தெரியாதவர்கள் "

"ஒருவேளை இது யவன நாட்டு வழக்கமாக இருக்கலாம்"

"நீ குடிக்க வேறு தண்ணியை அல்லவா கேட்பாய்" என்றான் இப்பாலஸ்சினத்தை அடக்கி கொண்டு. இக்கட்டான நேரத்திலும் அதை பற்றி கவலையில்லாமல் நண்பர்கள் மூவரும் பகடி செய்தபடி பேசிக் கொண்டிருப்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

""நான் மது பழக்கத்தை முற்றிலுமாக விட்டு விட்டேன்" என்றான் நீலன் ரோசத்துடன் .

"இன்று பலத்த மழை பெய்யும் என்று நான் நினைக்கிறேன்" என்றான் பைராகி சிரித்தபடி.

"ஆமாம் அரிஞ்சயனை விட்டு விட்டு நீங்கள் இருவரும் படகில்என்ன செய்கிறீர்கள்?" என்றான் நீலன்.

"சில அபூர்வ மூலிகைகளை தேடி பைராகிமேற்கொண்ட கடல் பயணத்தில் வழித்துணைவனாக நான் வந்தேன். இந்த மோகினி தீவில் ஒரு அபூர்வ மூலிகை ஓன்று இருப்பதாக கேள்விப்பட்டோம். அதை தேடித் தான் இங்கே வந்தோம். வந்த இடத்தில் இக்கட்டில் சிக்கிய உன்னை பார்த்தோம். பிறகு நடந்தவை உனக்கே தெரியும்."

"நாம் இங்கு வந்த விவரத்தை கூறி விட்டோம். ஆனால் நம் நண்பன்தன் சிக்கலை பற்றி வாய் திறக்க மறுக்கிறான்." என்றான் பைராகி .

"இங்கே நடக்கும் விசயங்களை முழுமையாக அறிந்தவர்கள் இருவர் தான். ஒருவன் நீலன். இன்னொருவன் இந்த யவனன்" என்றான் ஆதித்தன்.

"எனக்கு பிரச்சனை மேலோட்டமாகத்தான் தெரியும். என் எஜமானருக்குத்தான் பிரச்சனையின் முழு கன பரிமாணமும் தெரியும் " என்றான் இப்பாலஸ்.

" உன் எஜமானர் வரும் வரை நாம் நீலனின் பார்வையில் பிரச்சனையை கேட்போம்" என்ற ஆதித்தன் " என்ன பிரச்சனையென்று முழுதாக கூறுநீ லா!" என்றான்.

கிழவன்தட்டு தடுமாற ஆரம்பித்தான். இரண்டு நாட்களுக்கு முன் இரவில் நடந்தவை அவனுக்கு அரை குறையாக நினைவுக் கு வந்தது.

"நான் கல்லறைதீவில் இறக்கி விடப்பட்டது தான் எனக்கு நினைவில் இருக்கிறது" என்றான் நீலன்.

"கல்லறைதீவா ? அங்கிருந்து யாரும் உயிரோடு தப்பித்ததாக சரித்திரமே இல்லையே?" என்றான் யவனன் வியப்புடன்.
"அங்கிருந்து தப்பி வந்த முதலும் கடைசியுமான ஆள் நானாகத்தான் இருப்பேன்" என்றான் நீலன்.

அதே நேரம் கூடத்திற்குள் நுழைந்தான் மகேந்திரன். நீலனை பார்த்ததும் அவனது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

"உன்னை நல்லவன் என்று நினைத்தேனே நயவஞ்சகா! என்னை ஏமாற்றி ஐயாயிரம் பொன்னை பறித்தாய். கிட்டங்கியில்இறக்க வேண்டிய என் தானியமூட்டைகளை இறக்காமல் அவற்றை கப்பலோடு கொண்டு போய் விட்டாய். எவ்வளவு துணிவிருந்தால் மீண்டும் இங்கே வர துணிந்திருப்பாய் துரோகி" என்ற மகேந்திரன் ஓடி வந்து நீலனின் கழுத்தை பிடித்தான்.

கழுத்தின் பிடி இறுக ஆரம்பித்ததும் நீலனின் விழி பிதுங்க ஆரம்பித்தது.நண்பர்கள் இருவரும் யவனனின் உதவியோடு மகேந்திரனை நீலனிடமிருந்து பிரித்தனர்.

சீராக மூச்சு விட்டு தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்ட நீலன் "நீங்கள் நினைப்பது தவறு. நீங்கள்தானிய மூட்டைகளையும், பொன்னையும் இழந்தீர்கள். நானோ மனைவிக்கு இணையான என் கப்பலை இழந்து விட்டேன். நம் இருவரையும் முட்டாளாக்கியவன் வேறோருவன்" என்றான்.

"இவன் பொய் சொல்கிறான். அன்று இரவு கப்பல் கிளம்ப அனுமதி கேட்டு என்னிடம் வந்தது இவன் தான் " என்றான் ஆணித்தரமாக யவனன்.

நண்பர்கள் இருவரும் எதுவும் புரியாமல் நின்றனர்.

வியாழன், 16 ஜூன், 2022

ரகசிய தீவு

# ரகசிய தீவு

அத்தியாயம் 2.

ஓடுபவனுக்கு பல வழி!

நீலன் தங்கியிருந்த மேல் மாடிக்கான படிகளில் ஏறத் துவங்கிய இப்பாலஸ்திடிரென்று ஏதோ நினைவு வந்தவனாக திரும்பி மதுக்கடை உரிமையாளனை பார்த்து "தன் நீண்ட நாள் வாடிக்கையாளரை காப்பாற்ற நம்முடைய நண்பர் ஏதாவது முயற்சி செய்ய நினைக்கலாம். அப்படி அவர் ஏதாவது முயற்சி செய்தால்?" என்ற யவனன் தன் வலது கையை கிடைமட்டமாக திரும்பி கழுத்தில் குறுக்காக வைத்து காட்டினான்.

அவனது சமிக்ஞையை புரிந்து கொண்ட அவனது சகாக்களில் ஒருவன் உருவியவாளுடன் மதுக்கடை உரிமையாளனை நெருங்கி அவனது கழுத்தில் வாளை வைத்தான்.

" நல்லது." என்று புன்னகைத்த யவனன் மாடிப்படிகளில் மீதமுள்ள ஆட்களுடன் ஏற துவங்கினான்.

" உன் வாடிக்கையாளனை காப்பாற்ற ஏதாவது செய்வாயா என்ன?" என்றான் கழுத்தில் கத்தியை வைத்தவன்.

"நான் சொல்வதை யாருமே நம்ப மாட்டார்கள். இந்த விடுதிக்குள் காலடி வைத்ததிலிருந்து இதுவரை நீலன் ஒரு மிடறு மதுவை கூட விழுங்கவில்லை. இது இறந்து போன என் மாமியார் மீது சத்தியம் "

"உலகத்தின் ஒன்பதாவது அதிசயம் நீ சொல்வது தான். பொய் சொல்லாதே.! வாயை மூடு" என்றான் கத்தி காரன்.

அதே நேரம் படிகளில் ஏறிக் கொண்டிருந்த யவனனிடம்

"அந்த பயலைப் பிடிக்க நாம் ஆயுதங்களை தயாராக வைத்து கொள்ளலாமா?" என்றான் சகாக்களில் ஒருவன்.

"அந்த கிழவனை பிடிக்க ஆயுதமா? அவன் எப்போதும் முமு போதையில் எங்காவது விழுந்து கிடப்பான். அவனை தூக்கி நிறுத்த ஆட்கள் தான் தேவை. ஆயுதம் தேவையில்லை" என்று புன்னகைத்தான் யவனன்.

சற்று நேரத்திற்கு முன்பு கீழே நடந்த உரையாடலை கேட்டிருந்தால் இப்பாலஸ் இவ்வளவு அலட்சியமாக இருந்திருக்க மாட்டான்.எதிரியை எப்போதும் குறைவாக மதிப்பிடுபவன் தோல்வியை தழுவுவது தான் உலக நியதி.

மாடிப்படிகள் முடிந்து இரண்டு அறைகள் திறந்து காணப்பட்டன. ஓரு அறையில் மதுபான கூடத்தில் ஏற்படும் அடிதடிகளால் உடைந்து போகும் நாற்காலி மேசைகள் கன்னாபின்னாவென்று குவிந்து கிடந்தன.

"அடுத்த அறையில் தான் அவன் இருக்க வேண்டும் " என்று கண்களால் தன் சகாக்களுக்கு கட்டளையிட்ட யவனன் சத்தம் எழுப்பாமல் நடந்து அந்த அறைக்குள் நுழைந்தான். அவனை பின் தொடர்ந்து உள்ளே நுழைந்த அவனது சகாக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அறையின் சுவரை ஒட்டி ஒரு மரகட்டில் இருந்தது. அதன் விரிப்பு தரை வரை தொங்கி கொண்டிருந்தது. மற்றொரு மூலையில் ஒரு மேசையும் தண்ணீர் குடம் ஓன்றும் இருந்தது.

"அங்கே பார்" என்றான் ஆட்களில் ஒருவன்.

அறையின் மூலையில் இருந்த சன்னலின்கம்பி ஓன்று வளைக்கப்பட்டிருந்தது. போர்வை ஓன்று கயிறாக திரிக்கப்பட்டு சன்னலிலிருந்து கட்டப்பட்டு தரையை நோக்கி தொங்கி கொண்டிருந்தது.

இப்பாலஸின் மூளை சிந்திக்க மறந்தது. "அவன் நாம் வருவதை இந்த சன்னல் வழியாக பார்த்து விட்டு தப்பித்து சென்று விட்டான். அவன் வெகுதூரம் தப்பித்து சென்றிருக்க முடியாது. உடனடியாக அவனை தேடிப் பிடியுங்கள்"

அவனது உத்தரவை கேட்ட வர்கள் தடதடவென்று படிகளில் இறங்கி விடுதியை விட்டு வெளியேறி நாற்புறமும் நீலனை தேட ஆரம்பித்தனர்.

அறையை விட்டு வெளியே வந்த இப் பாலஸ்ஏதோ ஓரு விசயம் தவறாக இருப்பதை உணர்ந்தான். ஆனால் அது என்னவென்று அவனால் உணர முடியவில்லை. வெளியேயிருந்து சன்னல் கம்பியை பார்த்தவனின் மூளை சட்டென்று விழித்து கொண்டது.

சன்னலின் ஓரே ஓரு கம்பியை வளைத்து வைத்து விட்டு அந்த இடைவெளியில் தன் பருத்த உடலை வைத்து கொண்டு நீலன் எப்படி வெளியேறியிருக்க முடியும்? இந்த கேள்வி அவனது மனதில் எழுந்தது மே யவனன் உஷாரானான். அப்படியானால் நீலன் தப்பி சென்றதாக தன்னை நம்ப வைத்து விட்டு அறைக்குள் தான் பதுங்கியிருக்க வேண்டும் என்று நினைத்தவன் தன் இடையிலிருந்த வாளை உருவிக்கொண்டு மீண்டும் அறைக்குள் பிரவேசித்தான்.

அவன் கட்டிலுக்கு கீழே தொங்கிய படுக்கை விரிப்பை வாளால் அகற்றிய போது கட்டிலுக்கு கீழே பதுங்கி இருந்த நீலன் துரிதமாக செயல்பட்டான். கட்டிலை ஒரு முனையை பிடித்து அலேக்காக தூக்கியவன் அதை இப்பாலசின் மீது அப்படியே கவிழ்த்தினான். எதிர்பாராத இந்த தாக்குதலால் யவனன் நிலை குலைந்தான். கட்டிலின் மீது ஏறி மிதித்த நீலன் அறையை விட்டு வெளியேறி படிகளில் இறங்கி ஓடினான்.

அவன் மதுபான கூடத்திற்குள் நுழைந்த போது தான் கடை உரிமையாளனின் கழுத்தில் கத்தியை வைத்தபடி ஒருவன் நிற்பதை பார்த்தான்.

இப்பாலசின் அலறலை கேட்ட கத்தி ஆசாமி உரிமையாளனை விட்டு விட்டு நீலனை தடுத்து நிறுத்த ஓடி வந்தான். வெளியேறும் வெறியில் ஓடி வந்து கொண்டிருந்த நீலன் மேசை மீதிருந்த ஒரு மதுபான புட்டியை கையில் எடுத்து கொண்டான்.

அதை குறி பார்த்து அவன் மீது எறியலாம் என்று நினைத்த போது தான் அவனுக்கு தன்னுடைய பலவீனம் நினைவுக் கு வந்தது.

அதிகமான வாழ்நாளை கடலிலேயே கழித்து கொண்டிருந்ததால் நீலனின் கண் பார்வை பாதிக்கப்பட்டிருந்தது. கண்ணாடி பாளமாக தகதகக்கும் கடலின் மேற்பாகம் சூரிய வெளிச்சத்தை அதிகமாக எதிரொளிப்பு செய்யும். அந்த வெளிச்சத்தை அதிகமாக பார்த்து பார்த்து நீலனுக்கு தூரப் பார்வை வந்து விட்டிருந்தது. அவனுக்கு தூரத்தில் இருக்கும் பொருட்கள் நிழலாக தெரியுமே தவிர தெளிவாக தெரியாது. ஆனால் இந்த குறைபாட்டை அவன் யாரிடமும் சொன்னதில்லை.

இப்போது கையிலிருக்கும் ஒரே ஒரு மது புட்டியை அவனை நோக்கி எறிந்து அது அவன் மீது படாமல் விலகி சென்று விட்டால் தன் கதி அதோ கதிதான் என்று நினைத்தவன் ஓடி கொண்டே அடுத்தடுத்த மேசைகளில் இருந்த மதுப் புட்டிகளையும் தன் இரு கைகளால் சேகரித்து கொண்டான்.

இப்போது அவன் கையில் ஐந்து மதுப் புட்டிகள் இருந்தன. தன்னை நோக்கி மங்கலாக ஓடிவருபவனை பார்த்து குத்துமதிப்பாக ஐந்து புட்டிகளையும் ஒரே நேரத்தில் வீசினான் நீலன்.

ஐந்து புட்டிகளில் இரண்டாவது அவனை தாக்கி வீழ்த்தி விடும் என்பது நீலனின் கணக்கு . அவனது யுக்தி பலித்து விட்டது. இரண்டு புட்டிகள் ஓரே நேரத்தில் உடலின்வெவ்வேறு இடங்களில் தாக்கியதில் அலறிக் கொண்டு வீழ்ந்தான் அவன்.

இனி தடுக்க யாரும் இல்லை என்ற நிலையில் தன் பருத்த வயிறை தூக்கி கொண்டு ஓடினான் நீலன்.

நடுத்தெருவில் தலை தெறிக்க ஓடும் தன்னை மற்றவர்கள் சந்தேகிக்க கூடும் என்பதால் சிறிது நேரத்திலேயே மென் நடைக்கு மாறினான் நீலன்.

யவனன் படிகளில் இறங்கி கூடத்தில் வீழ்ந்து கிடந்தவனை எழுப்பிக் கொண்டு நீலனை தேட ஆரம்பித்தான்.

நீலன் மேற்கே மறைய துவங்கியிருந்த சூரியனை பார்த்தான். இன்னும் கொஞ்ச நேரம் இவர்களுக்கு போக்கு காட்டி தப்பித்து விட்டால் பிறகு இருள்தான். எப்படியாவது தப்பித்து விடலாம். அவன் உடனடியாக துறைமுகத்திற்கு போக விரும்பினான். ஓடுபவனுக்கு பல வழி! துரத்துபவனுக்கு பல வழி என்ற தமிழ் பழமொழிக்கு அர்த்தம் தெரிந்து கொண்டான்ய வனன் அன்று.

ஒன்றிரண்டு முறை அவன் யவனனின் ஆட்களின் கண்களில் பட்டு துரத்தப்பட்டு கொண்டிருந்தான். ஆள் அரவமற்ற ஒரு நாற்சந்தி க்கு வந்து சேர்ந்த நீலன் அங்கே பராக் கு பார்த்தபடி நின்று கொண்டிருந்தவனின் முதுகில் தட்டி "ஐயா! எனக்கு ஒரு உதவி செய்யுங்கள். துறைமுகத்திற்கு போகும் வழி எதுவென்று கூற முடியுமா?" என்றான்.

"நானே அங்கு அழைத்து போகிறேன்" என்றபடி திரும்பினான் இப்பாலஸ்.

அவன் முகத்தை அருகில் பார்த்த நீலன் அதிர்ந்து போனான்.

"நீயா ?உன்னிடமா நான் வழிகேட்டேன்"

"ஆமாம். விரியனே! நீயாக வந்து என்னிடம் அகப்பட்டு கொண்டு விட்டாய். உன் தோலை உரிக்கிறேன் பார்" என்றான் இப்பாலஸ்கோபத்துடன் .அதற்குள் யவனனின் ஆட்கள் அங்கே வந்து சேர்ந்து விட்டார்கள். இனி தப்பிச் செல்ல எந்த வழியுமில்லை என்று நீலனுக்கு தெளிவாக புரிந்து விட்டது.

"உனக்கும்  எனக்கும் தாக்கல் எதுவுமில்லையே? எனக்கும் மகேந்திரனுக்கும் தான் பிரச்சனை. என்னை உன் எஜமானனிடம் அழைத்து செல்" என்றான் நீலன் அதிகாரமிடுக்கை செயற்கையாக வரவழைத்தபடி.

"அது பிறகு. முதலில் என்னையும் என் ஆட்களையும் தாக்கியதற்கு நீ பதில் சொல்ல வேண்டாமா?" என்றான் இப்பாலஸ்வி சம சிரிப்புடன்.

"நீங்கள் மட்டும் அருசுவை உணவு படைக்கவா என்னை தேடி கொண்டிருந்தீர்கள்? நீ என்னை என்ன செய்ய நினைத்தாயோ அதை நான் முந்தி கொண்டு உனக்கு செய்து விட்டேன். அவ்வளவுதான் விசயம் "

"வாய்ஜாலக்காரனாயிற்றே நீ? பேச சொல்லியா கொடுக்க வேண்டும். இதேபோல் இடக்காகத் தான் என் எஜமானனிடமும் நீ பேச போகிறாய். நீ ஒழுங்காக பேச என்னிடம் ஓரு வைத்தியம் இருக்கிறது. அந்த வைத்தியத்தை செயல்படுத்தினால் உன் வாய் துடுக்கு அடங்குவதுடன் உண்மையை மட்டுமே பேசவும் கற்று கொள்வாய் "

நீலனின் முகம் பீதியில் வெளுத்தது. யவனின் விதவிதமான வித்தியாச வைத்திய முறைகளை அவன் பலமுறை நேரிலேயே கண்டிருக்கிறான். அது இப்போது தனக்கே நேரும் என்று அவன் கனவுகூட காணவில்லை.

"அவனை பிடித்து அருகில் இருக்கும் மரத்தில் கட்டுங்கள்.வைத்தியத்தை ஆரம்பிக்கலாம்!" என்றான் யவனன் தன் இடையிலிருந்த சவுக்கை எடுத்த படி.

நீலன் இப்பாலசின் ஆட்களால் அருகிலிருந்த மரத்தில் கட்டப்பட்டான்.

"வேண்டாம். என்னை விட்டு விடு" என்றான் நீலன்.

"என்னை மன்னித்து விடு நண்பா! ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். உன்னை சிறு வயதிலேயே இப்படியான வைத்திய முறைகளுக்கு பழக்கப்படுத்தியிருந்தால் நீ திருந்தியிருப்பாய். உன் பெற்றோர் செய்ய வேண்டியதை இப்போது நான் செய்கிறேன். இனியாவது உன்னுடைய வாய் உண்மையை பேச கற்க வேண்டும்" என்ற யவனன் தன் சவுக்கை உதறி ஒரு முறை சொடுக்கெடுத்தான்.

நீலன் தன் கண்களை இறுக மூடிக்கொண்டான்.

இப்பாலஸ்தன் சவுக்கை வேகமாக சுழற்றினான். அது அவன் பேச்சை கேட்க மறுத்தது. சவுக்கின் நுனி வேறு எதிலாவது மாட்டி கொண்டு விட்டதோ என்று நினைத்த யவனன் திரும்பி பார்த்தான். சவுக்கின் நுனியை இறுகப் பிடித்தபடி ஓருவாலிப வீரன் நின்று கொண்டிருந்தான்.

"நடை பயிற்சி செய்யும் ஒரு வயதான முதியவரை இப்படி கட்டி வைத்து துன்புறுத்துவது நியாயமா நண்பா ? " என்றான் கணீர் குரலில் அந்த வாலிபன்.

"யார் நீ?" என்றான் யவனன் எதிர்பாராத இடைஞ்சலால் சினத்தின் உச்சிக்கு சென்றவனாக!

"உன்னைப்போல் நானும் ஒரு அந்நியன் தான் " என்ற அந்த வீரன் சவுக்கின் நுனியை கீழே விட்டான்.

கண்களை மூடிக் கொண்டு கசையடியை எதிர்பார்த்து காத்திருந்த நீலனின் காதில் அந்த புதிய குரல் கணீரென்று விழுந்தது. அது புதிய குரல் அல்ல. பல்லாண்டுகளுக்கு முன்பாக அவனிடம் பேசி பழகிய பழைய குரல். ஆனால் அந்த குரல் இங்கே இவ்வளவு தொலைவில் கேட்க சாத்தியமேயில்லை. ஆனாலும் கேட்கிறது.நீலன் தன் கண்களை திறந்தான்.மங்கலாக தெரிந்த புதிய உருவத்தின் உடல் மொழியை கவனித்தவன் தன் கணிப்பை உறுதி செய்து கொண்டான்.

"யாரது? கள்வர் புரத்து கள்வன் ஆதித்தனா அது?" என்றான் நீலன்.

புதிய தீவில் தன்னையும் ஓருவன் அடையாளம் கண்டுபிடித்து விட்டானேயென்ற ஆச்சரியத்தில் "ஆமாம். நான் ஆதித்தன் தான் " என்றான் ஆதித்தன்.

செவ்வாய், 14 ஜூன், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம்1

தாயம். ஆட்டம் ஆரம்பம்

" என்ன இப்பாலஸ்! இன்னமும் தாயம் போடாமல் தவித்து கொண்டிருக்கிறாயே? ஆட்டத்தை துவங்க ஆசை இல்லையா?" என்றவனை நிமிர்ந்து பார்த்தான் யவன னான இப்பாலஸ்.தாயம் விழா த ஏமாற்றம் அவனது நீல நிற விழிகளில் எதிரொளித்தது. அவனுக்கு எதிரே விரிக்கப்பட்டிருந்த தோலில் வரையப்பட்ட தாய கட்டங்களில் மற்றவர்கள் ஆட்டத்தை துவங்கி விட்டதற்கு அடையாளமாக காய்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறி கிடந்தன.

இரண்டு ஆட்டங்களில் தொடர்ந்து வென்று விட்ட இப்பாலஸ் மூன்றாவது முறையாகவும் ஆட்டத்தை வென்று விட நினைத்திருந்தான். ஆனால் அவனது இஷ்ட தெய்வமான அப்போல்லோவின் அருள் கிடைக்காதததால் அவனுக்கு ஆட்டத்தை துவக்கும் ஆரம்ப புள்ளியானதாயம் இன்னும் விழுந்தபாடில்லை.

"ஏனோ என்னுடைய கடவுள் என் மீது கருணை காட்ட மறுக்கிறார். நான் தாயம் போட்டு ஆட்டத்தை துவக்கும் முன்பாக நீங்கள் மூவரும் ஓருவரை ஒருவர் வெட்டி கொண்டு ஆட்டத்தை முடித்து விடுவீர்கள் போலிருக்கிறதே?" என்றான் இப்பாலஸ்.

விருத்தங்களை எண்ணி காய்களை நகர்த்தியவன் "மனதை தளரவிடாதே இப்பாலஸ்!இ தோ இப்போது காய்களை உருட்ட வேண்டியது உன்னுடைய முறை. உன் இஷ்ட தெய்வத்தை வணங்கி கொண்டு காயை உருட்டு " என்றான் மற்றோருவன்.

இப்பாலஸ்அப் போல் லோவை மனதில் நினைத்து கொண்டு காய்களை உருட்டினான். கடகடவென்று உருண்டகாய்கள் நிலை பெற்ற போது அவனது கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை. அவன் வேண்டியது வீண் போகவில்லை. அவனது வேண்டுதலுக்கு கடவுள் செவிசாய்த் திருந்தார். அவன் இவ்வளவு நேரம் எதை வேண்டி மன்றாடிக் கொண்டிருந்தானோ அந்த காயம் என்ற ஒற்றை படை எண் விழுந்திருந்தது.

"சபாஷ். இனி ஆட்டம் சூடு பிடிக்கப் போகிறது. இப்பாலஸ்களத்தில் இறங்கி விட்டான்" என்றான் மற்றொருவன்.

இப்பாலஸ்தாயத்திற்கு பிறகு விழுந்த விருத்தத்திற்கு காயை நகர்த்தியபோது தான் அந்த குதிரை வெகு வேகமாக வந்து நின்றது. அதன் வாயில் தள்ளி கொண்டிருந்த நுரையும் குளம்பில் ஒட்டியிருந்த செம்மணலும் அதன் வேகத்தை சொல்லாமல் சொல்லின!

அந்த குதிரையிலிருந்து குதித்து இறங்கியவன்" இப்பாலஸ்! உன்னை எங்கேயெல்லாம் தேடுவது ? ஏஜமானர் உடனே உன்னை பார்க்க வேண்டுமென்கிறார். உடனே கிளம்பி வா" என்றான்.

"நீ முன்னால் போ. நான் பின்னால் வருகிறேன்." என்ற இப் பாலஸ் தாயக் கட்டம் வரையப்பட்ட தோல் சுருளை சுற்றி எடுத்து குதிரை சேணத்தில் வைத்தான். காய்களை சிறு துணியில் முடிந்து இடுப்பில் சொருகியவன்"ஓய்வு நேரம் முடிந்துவிட்டது நண்பர்களே! நமக்காக புது வேலை எதையாவது எஜமானர் வைத்திருப்பார் என்று நினைக்கிறேன். வாருங்கள் போகலாம்" என்றான்.

"ஆட்டம் பாதியில் நின்று விட்டதை நினைத்து வருத்தமாக இருக்கிறது."

"அதற்காக சந்தோஷப்படு. ஆட்டத்தை இப்பாலஸ்துவங்கியிருந்தால் அவன் தான் ஜெயித்திருப்பான்.வழக்கம் போல் நாம் தான் தோற்றிருப்போம்."

அவர்கள் அங்கிருந்து குதிரையில் கிளம்பினார்கள். அவர்கள் கிளம்புவதை இரண்டு கண்கள் கவனித்து கொண்டிருந்தன.

"இப்பாலஸ்! எங்கே உன் ப்ரியநண்பனை காணவில்லை?" என்றான் சகாக்களில் ஒருவன்.

"நான் அழைக்கும் வரை அவன் வர மாட்டான் " என்ற இப்பாலஸ் விசித்திரமான சீழ்க்கை ஒலி ஓன்றை எழுப்பினான்.

அதுவரை மரம் ஓன்றில் உட்கார்ந்து கொண்டிருந்த அந்த ராட்சஸ கழுகு சீழ்க்கை ஒலி கேட்ட மறுகணம் தன் பெரிய இறக்கைகளை விரித்து கொண்டு விண்ணில் ஏற துவங்கியது.

இப்பாலஸ் தனக்குள் புன்னகைத்து கொண்டான்.

கிரேக்க நாட்டை சேர்ந்தஇப்பாலஸ் மோகினி தீவிற்கு வந்து சேர்ந்து ஐந்து வருடங்களாகி விட்டன. வாள் வீச்சிலும் சவுக்கை வீசுவதிலும் தீவில் அவனுக்கு நிகராக யாருமில்லை. செடிக்கு வலிக்காமல் அதன் பூவை தன் சவுக்கால் பறிப்பது அவனது பொழுதுபோக்கு. அந்த தீவின் தலைவன் மகேந்திரன் இவனை தன்னுடைய தலைமை பாதுகாப்புஅதிகாரியாக நியமித்த பின்பு தீவில் குற்றங்கள் குறைய தொடங்கி விட்டன. சிவந்த தலை முடியும், நீல நிற கண்களையும் கொண்ட அழகான தோற்றமுடைய அந்த யவனன் அங்கிருந்த தீயவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தான். தமிழ் பேச தெரிந்த அந்த யவனனுக்கு தமிழை எழுதவோ படிக்கவோ தெரியாது. அந்த பலவீனம் தான் ஒரு விபரீதத்திற்கு அடி போட்டு வைத்திருந்தது.

அவனது கண் பார்வையில் படாமல் மோகினி தீவில் இருந்து எந்த கப்பலும் வெளியேறி விட முடியாது என்ற இறுமாப்பில் இருந்த இப் பாலஸ்சின் ஆணவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் அடி விழுந்திருந்தது. காரியம் கை மிஞ்சி போய் விட்டதால் அவனால் எதையும் செய்ய முடியவில்லை. அந்த சம்பவத்தால் மகேந்திரனுக்கு இப்பாலஸ் மீது சற்று மன வருத்தம் தான்.

மகேந்திரனின் மாளிகைக்கு முன்னால் குதிரையை நிறுத்தி இறங்கிய இப்பாலஸ்தன் சகாக்களை அங்கேயே காத்திருக்கும் படி சைகை செய்து விட்டு மாளிகையினுள் நுழைந்தான்.

அவனது வரவுக்காக காத்திருந்த மகேந்திரன்" இப்பாலஸ்.! உள்ளே வா ! உனக்காகத் தான் காத்திருக்கிறேன்"

எப்போதும் அமைதியாக இருக்கும் மகேந்திரன் அன்று ஏனோ பரபரப்பாக இருந்தது யவனனுக்கு வியப்பை தந்தது.மகேந்திரனின் முகத்தை பார்க்கவே சங்கடப்பட்டு கொண்டிருந்த யவனன் அதை இப்போது கைவிட்டான்.

மகேந்திரன் இருந்த அறைக்குள் யவனன் நுழைந்ததும் கதவை தாழிட்டவன் "அவன் திரும்ப வந்து விட்டான்" என்றான் பரபரப்புடன்.

யவனனுக்கு அவன் யாரைப் பற்றி சொல்கிறான் என்று சற்றும் புரியவில்லை. தன் தடுமாற்றத்தை வெளியே காட்டி கொள்ளாதவன்" யார்?" என்றான் ஓற்றை சொல்லாய்.

"உன்னை ஏமாற்றி நம் சரக்குகளை தீவில் இறக்காமல் தன் கப்பலோடு தலைமறைவாகி போன நீலன் இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் தீவிற்கு வந்து விட்டான்"

யவனனின் முகம் கன்றி சிவந்தது. தன் எஜமானனிடம் தனக்கு கெட்ட பெயரை வாங்கி கொடுத்த அந்த குடிகார எத்தன் திரும்பவும் தீவிற்குள் தலை காட்டி விட்டதை தன் ஆளுகைக்கு விடப்பட்ட சவாலாக நினைத்தான்.

"இந்த விசயம் உங்களுக்கு எப்படி தெரியும்?"

"நேற்று நள்ளிரவு நம் ஒற்று ஆட்களில் ஒருவன் அவனை துறைமுகத்தில் அடையாளம் கண்டிருக்கிறான். அவன் நம் ஆளின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு எங்கோ தலைமறைவாகி விட்டான். அவன் இந்த தீவை தவிர வேறு எங்கும் போயிருக்க முடியாது"

" அவனது முத்தழகி கப்பல் ?"

"அதை காணவில்லை. பயல் கட்டுமரம் ஓன்றில் பயணமாகி இங்கே வந்திருக்கிறான்."

" அவன் இந்த தீவில் எங்கே பதுங்கி கிடந்தாலும் அவனை கண்டுபிடித்து உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்துகிறேன்"

" அவன் தன் கப்பலை ஒரு நிமிடம் கூட பிரியமாட்டான். தன்னுடைய முதல் மனைவி என்றே அதை வர்ணிப்பான். இப்போது மனைவியில்லாமல் தனியாக வந்திருக்கிறான். அதுதான் எனக்கு குழப்பமாக இருக்கிறது"

"ஆசாமியை நேரில் கொண்டு வருகிறேன். உங்கள் குழப்பத்தை விசாரித்து தீர்த்து கொள்ளலாம். அவன் முதலில் எங்கே இருப்பான் என்று எனக்கு நன்றாகத் தெரியும்."

"கவனம் .உன் முரட்டுத்தனத்தை அளவோடு பிரயோகப்படுத்து. நீலன் எனக்கு உயிரோடு வேண்டும்"

யவனன் தலையசைத்து விட்டு தன் ஆட்களோடு கிளம்பினான். குதிரையின் சேணத்தின் மீது அமர்ந்திருந்த கழுகை பிடித்து கூண்டில் அடைத்தவன் " காத்திரு ஹேர்குலஸ் ! சீக்கிரமாக திரும்பி வருகிறேன்" என்றான்.

நீலன் தன் கப்பல் முத்தழகியை பிரிந்து இருப்பதில்லை. அதே போல் மதுவைப் பிரிந்தும் அவனால் இருக்க முடியாது என்று யவனனுக்கு தெரியும். அவன் அடிக்கடி தென்படும் மதுபான விடுதியை நோக்கி குதிரைகள் விரைந்தன.இடைப்பட்ட நேரத்தில் யவனன் தனக் கிடப்பட்ட பணியை தன் சகாக்களிடம் எடுத்து கூறினான். அவர்கள் நீலனை பிடிக்க தயாரானார்கள்.

குதிரைகளை மதுபான விடுதிக்கு வெளியே நிறுத்திய இப்பாலஸ்தன் சகாக்களை வெளியே நிறுத்திவிட்டு அவன் மட்டும் உள்ளே நுழைந்தான்.

மதுபான விடுதி உரிமையாளனின் முகம் இவனை பார்த்ததும் மாறியது.

" வாருங்கள் இப்பாலஸ்! சுவையான யவன தேசத்து மது நேற்று தான் கப்பலில் வந்தது. குடித்து பாருங்கள். சுவையில் சொக்கிப் போவீர்கள்"

"நான் மதுவருந்த வரவில்லை நண்பா. உன் வாடிக்கையாளர் ஒருவரின் வருகையை பற்றி அறிந்து கொள்ள வந்திருக்கிறேன்"

"இங்கே நிறைய பேர் என் வாடிக்கையாளர் தான். நீங்கள் உட்பட . நீங்கள் யாரை கேட்கிறீர்கள்?"

"நீலன்.முத்தழகியின் தாலிகட்டாத கணவன்"

"ஓ! அந்த குடிகார கிழவனா? அவன் இந்த தீவை விட்டு போய் இரண்டு நாட்களாகி விட்டனவே? திரும்ப வந்து விட்டானா என்ன?"

யவனன் அவனை ஒரு முறை உற்று பார்த்தான்.

"ஏன் என்னை அப்படி பார்க்கிறீர்கள்?"

"நீ உண்மையை சொல்கிறாயா? இல்லை பொய் சொல்கிறாயா என்று யோசிக்கிறேன்"

"நான் உண்மையைத்தான் சொல்கிறேன்"

"அதையும் சோதித்து பார்த்து விடுவோம். எங்கள் நாட்டில் கத்தி சோதிடம் என்ற ஒரு சோதிடம் இருக்கிறது. அதை பரீட்சித்து பார்த்தால் நீ சொல்வது உண்மையா இல்லை பொய்யா என்று தெரிந்துவிடும்" என்றான் இப்பாலஸ் விசமபுன்னகையுடன் .

"நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"

"முதலில் கையை நீட்டு அப்பனே! அப்போது தானே சோதிடம் பார்க்க முடியும்" என்ற யவனன் மெல்லிய குரலில் சீழ்க்கையடித்தான். உள்ளே நுழைந்த அவனது ஆட்களில் இருவர் மதுபான விடுதி உரிமையாளனை பின்புறமாக வளைத்து பிடித்தனர். இன்னொருவன் அவனது வலது கையை மேஜையில் வைத்து மணிக்கட்டோடு அழுத்தி பிடித்து கொண்டான்

யவனன் தன் இடையிலிருந்த குறு வாளை எடுத்தான் .விரிக்கப்பட்ட விரல்களின் இடைவெளிகளில் மெதுவாக கத்தியால் வரிசையாக குத்த தொடங்கினான். படிப்படியாக வேகத்தை அதிகரிக்க தொடங்கியவன் ஒரு கட்டத்தில் இடைவெளிகளில் கத்தியை பாய்ச்சுவதை நிறுத்தினான்.

"இனி தான் உண்மையான சோதிட பலன் பார்க்கும் முறை, நான் கண்களை திறந்து கொண்டு செய்ததை இப்போது கண்களை மூடிக் கொண்டு செய்ய போகிறேன். அதுவும் கூடுதல் வேகத்துடன் .உன் கையில் காயம் ஏற்பட்டாலோ, விரல் துண்டானாலோ நீ பொய் சொல்கிறாய் என்று அர்த்தம். உன் கைக்கு எந்த சேதாரமும் ஏற்படா விட்டால் நீ உண்மை பேசுவதாக அர்த்தம். ஆரம்பிக்கலாமா?" என்றான் இப்பாலஸ் விகாரசிரிப்புடன்.

"இல்லை. வேண்டாம். நான் உண்மையை சொல்லிவிடுகிறேன். அவன் மேல் மாடியில் தான் இருக்கிறான்"

"யவன சோதிடம் உடனடியாக வேலை செய்கிறது. சக்தி மிக்க சோதிடம் தான். " என்ற இப் பாலஸ் மாடிப்படிகளை நோக்கி நடந்தான்..