வியாழன், 9 பிப்ரவரி, 2023

அஷ்டவக்கிரன்8

ஆப்ரேசன்அஷ்டவக்கிரன்

அத்தியாயம் 8

"வந்தவர் மகா ஞானி என ஜனகரும் அறிந்தார்.
மகா பணிவுடன் அவர் காலடியில் அமர்ந்து தன்
சந்தேகத்துக்கு விடை கேட்டுத் தெரிந்து கொண்டார்.

ஜனகருக்கு அஷ்டாவக்கிரர் சொன்ன அந்த உபதேசம்
அஷ்டாவக்கிர கீதை என்ற பெயருடன் விளங்குகிறது.

அந்த உபதேசத்தை பெற்ற ஜனகர் அன்று முதல்
மகா ஞானியாகி விட்டார். ஜனகரின் சந்தேகம் தீர்த்த
மகரிஷியின் அந்த விளக்கம் என்ன?

தூங்கினப்போ கண்டதும் கனவு தான்.
இப்போ நீ வாழும் வாழ்வும் கனவுதான்.

உன்னோட ராஜ வாழ்வும்,
பிச்சைக்கார வாழ்வும் ரெண்டும் உண்மையில்லை.

ராஜாவா இருக்கறப்ப சந்தோஷப்படாதே.
தூங்கறப்ப அந்த சந்தோஷம் போயிடும்.

பிச்சைக்காரனா இருக்கறப்ப வருத்தப்படாதே.
முழிச்சா அந்த வருத்தம் மறைஞ்சுடும்.

எந்த நிலையிலும் ஒரே மாதிரி இருக்கக் கத்துக்க
இந்த வாழ்க்கை நிலையில்லாதது என்றார்."

துரைபாண்டியன் கைதிகளை உயரத்தில் இருந்து கண்காணிக்கும் வாட்சர் டவரில் இருந்து விழுவதை முதலில் பார்த்தது வாசு தான் . அதற்கு முந்தைய தினம் இரவு தான் தன்னுடையஅண்ணன் அருணாசலத்தை பற்றி கனவு கண்டு விழித்து கொண்டு விட்டிருந்தான் அவன்.

அப்போது இருவரிடையே நடந்த உரையாடலின்போது தான் தம்பியிடமிருந்து தப்பிக்க நான்காவதாக ஒருவழியை கூறியிருந்தான் அவன். தம்பியிடமிருந்து தப்பிக்க ஒரே வழி பழைய நினைவுகளை இழந்ததுபோல் நடிப்பது இல்லை சித்த சுவாதீனமானவனைப்போல் நடிப்பது. இந்த இரண்டில் ஏதாவது ஒன்று நடந்தாலும் துரைபாண்டியன் மீதான தம்பியின் பிடி தளர்ந்துவிடும். துரையின் மகளை பிடித்து வைத்து மிரட்ட வேண்டிய தேவையும் அவனுக்கு இல்லை. இப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கும் திட்டத்தை வாசு அவனிடம் கூறியிருந்தான்.

தன்னுடைய திட்டத்தைத்தான் துரை இப்போது நிறைவேற்றிவிட்டான் போலிருக்கிறது என்று வாசு நினைத்தான். ஆனால் அவனது தலையிலிருந்து உண்மையாகவே ரத்தம் வெளியேறியதை பார்த்தபோது அவனது நினைப்பு தவறு என்று புரிந்தது.தம்பியின் எதிரிகள் இருந்த சிறை அறையில் சந்தோஷ கொண்டாட்டங்கள் தொடங்கிய போது தான் தன்னை மீறி எதிரிகள் துரையை தொட்டுவிட்டார்கள் என்பது அவனுக்கு புரிந்தது. அதில் ஒருவன்" நீ இருக்கும்போதே சம்பவம் பண்ணிட்டோம். பாத்தியா? "என்று அடிக்குரலில் அவனை கேலி செய்தபோது வாசுவிடம் கையலாகாத கோபம் ஒன்று பிறந்தது. நாளை காலை அவனுக்கு விடுதலை. இப்போது அடி தடியில் ஈடுபட்டு அதை கெடுத்து கொள்ள அவன் விரும்பவில்லை. எனவே மவுனமாக இருந்தான்.

படுகாயமடைந்த துரை ஜெயில் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.அவனுக்கு என்ன ஆயிற்று என்று யாருக்கும் தெரியவில்லை. ஜெயிலர் இந்த சம்பவத்தை தம்பியிடம் தெரிவித்த போது அவன் குமுறி கொந்தளித்துவிட்டான்

"என்னதான் பண்றீங்க எல்லாரும்? இவ்வளவு பணம் வாங்கிட்டு அவனை சம்பவம் செய்யவிட்ருக்கீங்க? அவன் எனக்கு பொன்முட்டையிடும் வாத்து. அவனை எப்படியாவது காப்பாத்துங்க"

"உயிருக்கு ஒன்னும் ஆபத்து இல்லை. ஆனா தலையில் பலமா அடிபட்டதுல?"

"பழச மறந்துட்டானா?"

"இல்லைங்க. பைத்தியமாயிட்டான்"

"என்னய்யா சொல்ற?' என்கிட்ட துப்பாக்கி இருந்தா முதல்ல உன்னைத்தான் சுடுவேன்"

"சுடுங்க. உங்ககிட்ட வாங்குன பணத்துக்கு நாலுதடவை சாகலாம்"

"சுட மாட்டேன்னு நினைச்சு பேசுற போல. அடுத்த மாசம் 5 ம் தேதிக்குள்ள ஆஸ்திரேலியாவுக்கு சரக்கு அனுப்பியாகனும். இவன் வேற இப்படி பண்ணிட்டான். இவனை மறுபடியும் ஜெயிலுக்குத்தானே கொண்டு போவீங்க?"

"இல்லைங்க. அது சரிவராது. அவனோட டிரீட்மெண்ட் முடிஞ்சதும் மனநல விடுதிக்குத்தான் அனுப்பனும். நார்மலான ஆட்களோட அவனை வச்சிருக் கமுடியாது. அது தான் புரொசிஜர்.,"

"ஓ! இது வேறயா? அவனுக்கு அசிஸ்டெண்டா ஒருத்தன் இருந்தானே? அவன் பேரு கூட?"

"வாசு"

"ஆங். அவன் தான்.அவனால இதை செய்ய முடியுமான்னு கேட்டு பாரு."

"அவன் வெறும் எடுபிடிங்க. அந்த துரை தன்னோட தொழில் ரகசியங்களை சொல்ல சான் சே இல்லை."

' கல்லை வீசு.மாங்காயா கல்லான்னு பார்ப்போம். உட்கார்நத இடத்துலேயே எல்லா கேள்விக்கும் பதில் சொல்லாதே"

"சரிங்க. நாளைக்கு அவனுக்கு விடுதலை. வெளியே போகும்போது இதைப்பற்றி கேட்கிறேன்"

"கேட்டுட்டு கூப்பிடு" என்ற தம்பி போனை அணைத்தான்.

மறுநாள் ஜெயிலர் அறையில் கையெழுத்து போட்டுவிட்டு கைதிகள் உடையை துறந்து தன்னுடைய ஆடைகளை அணிந்து கொண்டிருந்தான் வாசு.

துணி மாற்றிகொண்டவன் மீண்டும் ஜெயிலர் அறைக்குள் நுழைந்தான்.

"இனிமேலாவது ஒழுங்கா இரு" என்றார் ஜெயிலர் மனதிற்குள் எதையோ யோசித்தபடி.

"சார். ஒரு விண்ணப்பம். நான் துரைபாண்டியனை ஒரு தடவை பாக்கனும். அதுக்கு நீங்க அனுமதி தரனும்

"அவன் சுயநினைவில் இல்லையேப்பா. அவனை பாத்து என்ன பண்ண போற?"

"தொழில் கத்து கொடுத்த குரு சார். கடைசியா ஒரு தடவை பாத்துட்டு போயிர்றேனே?"

"அப்ப முழுசா தொழில் கத்துகிட்டியா?"

"இல்லை.சார். எடுபிடிதான் சார் நானு. கோடிகளில் கொட்டும் விசயத்தை யாராவது சொல்லிதருவாங்களா சார்"

"அப்ப உனக்கு ஒன்னும் தெரியாது"

"சத்தியமா தெரியாது சார். எனக்கு வித்தை தெரிஞ்சா நேரா தம்பி கிட்ட போயிடமாட்டேன்?"

"அதுவும் சரிதான்."

"நானும் ஒழுங்கா படிச்சிருந்தா என்னோட மாமா மாதிரி போலீசாகி இருப்பேன்"

"உங்க மாமா போலீசா?"

"இல்லை சார். அவரும் போலீசாகனும்னு ஆசைப்பட்டாரு"

" பட வா' ஓடிரு. யோவ் செண்ட்ரி இவனை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் அந்தலூசைகாட்டுய்யா"

"ரொம்ப தேங்க்ஸ் சார்."

வாசு செண்ட்ரியோடு ஜெயில் ஹாஸ்பிடல் நோக்கி நடந்தான்.

வார்டுக்கு வெளியே நின்றுகொண்ட செண்ட்ரி" நீயே உள்ளே போய் அவனை பாரு" என்றார்.

"நீங்க கூட வரலை?"என்றான் வாசு.

"நான் உள்ளே வந்தா துப்பாக்கிய பிடுங்கிக்குவான் யா. அவனிடம் திரும்ப வாங்க முடியாது. ரெண்டுபேரும் ராணுவ ரகசியமா பேசபோறீங்க? நீ ஒரு மொள்ளமாரி. அவனோரு முடிச்ச விக்கி பாத்துட்டு சீக்கிரம் வந்துசேரு" என்றான் செண்ட்ரி.

வாசு உள்ளே நுழைந்தபோது துரைபாண்டியன் ஆடிகொண்டிருந்தான்.அவனது கால்கள் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டு படுக்கை காலோடு இணைக்கப்பட்டிருந்தது.

வாசுவுக்கு அவனது நிலைமையை பார்த்து பரிதாபமாக இருந்தது.

"வாத்யாரே" என்றான் மெல்லிய குரலில்.

பாபாமுத்திரையோடு ஆடிக்கொண்டிருந்ததுரை ஆட்டத்தை நிறுத்தினான்.

"இதெல்லாமஉண்மைன்னு நினைச்சியா?" என்றான் கண்ணடித்தபடி.

"நல்லாவேசம் கட்ற வாத்தியாரே!" என்றான் வியப்புடன் வாசு.

"அவர்கள் என்னை கொல்ல வந்தது உண்மை. மேலிருந்து தள்ளிவிட்டதும் உண்மை. காயமானதும் உண்மை. இந்த நடிப்பு மட்டும் பொய். நீ சொன்னதை நான் சரியான இடத்துல யூஸ் பண்ணிட்டேன். டாக்டர்தான் குழப்பத்துல இருக்கான். எப்படியோ என்னை இங்கிருந்து வெளியே அனுப்பிவிடுவார்கள்.என் உயிரை நான் காப்பாற்றிகொண்டுவிட்டேன். தாங்க்ஸ் வாசு"

"கடைசியா உன்னை ஒரு தடவை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன். உன்னை இப்படி ஒரு நிலமைல பாக்க சந்தோஷமா இருக்கு"

"என் மகளை எப்படியாவது காப்பாத்து வாசு. உன்னை நம்பித்தான் நான் இருக்கேன்"

"கவலைப்படாதே வாத்யாரே. சொன்ன சொல்லை காப்பாத்துவான் இந்த வாசு. உன் பொண்ணோட உன்னை வந்து பாக்குறேன். ஆனா உன் பொண்ணு யாருன்னு எனக்கு தெரியாதே? நீயும் போட்டோ காட்டலை.நானும் பாக்கலை. பின்ன எப்படி அடையாளம் கண்டுபிடிக்குறது?"

"சிம்பிள். தம்பியை பிடி. அவனிடம் இருப்பதுதான் என் மகள். அவனை நெருங்க ஒரே வழி நான் கற்றுகொடுத்த வித்தையை நீ அவனிடம் காட்டுவதுதான்"

"எனக்கு முழுசா தெரியாதே?"

"இப்போதைக்கு அவன் 80 பர்செண்ட்டே போதும்னுதான் நினைப்பான்.இந்தா இதை வெளியே போய் படி" என்ற துரை ஒரு உருட்டப்பட்ட சீட்டை அவன் கைகளில் திணித்தான்.

அதை வாங்கிகொண்டு"டிரை பண்றேன் வாத்யாரே" என்ற வாசு அங்கிருந்து செண்ட்ரியோடு வெளியேறினான்.

சன்னல் வழியாக அவன் போவதை பார்த்து கொண்டிருந்த துரைபாண்டியன தனக்குள் சிரித்துகொண்டான். "டெல்லி அப்பளம்" என்று முணுமுணுத்தான் துரை.

உண்மையில் தனக்கு தெரிந்த நூறு சதவீத தொழில் நுணுக்கத்தை அவன் வாசுவிற்கு கற்றுகொடுத்துவிட்டான். ஆனால் வேண்டுமென்றே எண்பது சதவீதம் மட்டுமே கற்றுகொடுத்ததாக வாசுவிடம் பொய் சொல்லிகொண்டிருந்தான். அதற்கு அவன் டெல்லி அப்பள டெக்னிக் என்று பெயர் வைத்திருந்தான்.

டெல்லியில் நடந்த ஒரு பொருட்காட்சியில்தான் அந்த அப்பளம் முதலில் அறிமுகமாகி சக்கைபோடு போட்டது. அதை எப்படி தயாரிப்பது என்று யாருக்கும் தெரியவில்லை. அதை தெரிந்துகொள்ள விரும்பிய ஒருவன் அப்பளமாஸ்டரிடம் அசிஸ்டெண்டாக வேலைக்கு சேர்ந்தான்

அப்பளமாஸ்டர் ஐந்து டப்பாக்களில் ஐந்துமாவுகளை கொட்டிவைத்து குறிப்பிட்ட விகிதங்களில் அந்த மாவை கலந்து அப்பளத்தை உருவாக்குவதை அவன் பார்த்தான். அந்த ஐந்துவகை மாவுகள் என்னவென்று அவனுக்கு தெரியவில்லை. கலக்கும் விகிதமும் தெரியவில்லை. முதலில் மாவை கண்டுபிடிப்போம் என்று நினைத்தவன் மாஸ்டர் வாங்கும் மளிகை கடையில் விசாரித்தபோதுதான் தெரிந்தது மாஸ்டர் ஒரே மாவை வாங்கித்தான் ஐந்து டப்பாக்களில் கொட்டி தன்னை திணற அடித்திருக்கிறார் என்று. புத்திசாலிகள் ரகசியத்தை வெளியே சொல்வதில்லை. காரணம் கற்றுகொண்டு தனக்கு எதிராக கடைபோட்டுவிடுவானோ என்ற பயம். அதே பயம்துரைக்கும் இருந்தது. அதனால்தான் அவன் நீ இன்னும் முக்கியமான விசயத்தை கற்றுகொள்ளவேயில்லை என்று பயமுறுத்தி கொண்டிருந்தான்.

தான் ஒரு டிரக் டேஸ்டராக மாறியதே தெரியாமல் சிறையிலிருந்து வெளியேறி கொண்டிருந்தான் வாசு. அவனுக்காக வெளியே குற்றாலம் காத்துகொண்டிருந்தான். அந்த சிறையில் இரண்டாவது டிரக் டேஸ்டர் உருவாகிவிட்டிருந்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக