புதன், 1 பிப்ரவரி, 2023

ஆப்ரேசன் அஷ்டவக்கிரன் 3

"தசரத மகாராஜாவின் மந்திரியாக வந்தி என்பவன் இருந்து வந்தான் கல்வி, கேள்விகளில் சிறந்தவனான அவன் ஒரு வாதப் போட்டி ஒன்றை வைத்து பலரை தோற்கடித்து அடிமைகளாக்கி வந்தான். அவனது தற்பெருமையை அடக்க நினைத்த கஜோளsகர் அவனை வாதத்தில் வெல்ல தலைநகரத்திற்கு கிளம்பி சென்றார். அங்கே நடந்த போட்டியில் வந்திவெற்றிபெற்று கஜோளகbshரை  அடிமையாக்கியதாகவும் நீருள் மூழ்கடித்து கொன்றதாகவும் இரண்டு விதமான தகவல்கள் இருக்கின்றன. தந்தையை இழந்த அஷ்டவக்கிரன் வாதப் போட்டியில் கலந்து வந்தியை அடிமையாக்க விரும்பினான். உடலில் எட்டு குறைகளும் அருவருப்பான தோற்றமும் கொண்ட அவனுக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. தன் ஞானத்தை மட்டுமே நம்பிய அஷ்டவக்கிரன் தன் தந்தையின் மீட்க மறைவுக்கு பழிவாங்க தனி ஆளாக அரண்மனை இருக்கும் தலைநகரத்திற்கு கால்நடையாக புறப்பட்டு சென்றான், "




மணிகண்டன் PLS என்ற பெயர் பொறித்த போர்டின் முன்பாக வண்டியை நிறுத்தி இறங்கினான்.இருட்டில் எங்கோ ஒரு நாய் ஊளையிடும் சத்தம் அமானுஷ்யமாக கேட்டது. தெருவோரத்து டியூப்லைட் அணைந்து அணைந்து எரிந்து இன்சால் மெண்டில் வெளிச்சத்தை நின்னு கோரி வரனும் பாடல்ஸ்டைலில் வழங்கி கொண்டிருந்தது.

எங்கிருந்தோ இருட்டில் உற்பத்தியாகி வந்த வாட்ச்மேன்" யார் வேணும் தம்பி?" என்றான். குரலில் அவசரமாக கீழே போட்டு அணைத்த பீடியின் மிச்ச நாற்றம் அடித்தது. "பெரியசாமி அண்ணனை பாக்கனும். போன் பண்ணி பேசிட்டேன். இங்கதான் இருப்பேன்னு சொன்னாரு" என்றான் மணிகண்டன்

"ஆபிஸ் ரூம்லதான் இருக்காரு. போய் பாருங்க"

மணிகண்டன் பெரியசாமி லாரி சர்வீஸ் என்று தமிழில் எழுதப்பட்ட போர்டை கடந்து நடந்தான். பெரியசாமியின் டஸ்டர்கார் வெளியே நின்றிருந்தது. அதன் டிரைவர் இவனை பார்த்து சினேகமாக சிரித்துவிட்டு செல்லில் மீண்டும் மூழ்கினான்.

மணி ஸ்லிப்பரை வெளியே விட்டுவிட்டு ஆபிசிற்குள் நுழைந்தான். கண்ணாடி அறைக்குள் பெரியசாமியாருடனோ போனில் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. மணிகண்ணாடி கதவை தட்டினான். பேசிகொண்டிருந்த பெரியசாமி பேச்சை நிறுத்தாமல் உள்ளே வா என்று கையால் சைகை செய்தான்.

உள்ளே நுழைந்தவனை உட்காரசொல்லி சைகை செய்தவன்" அவ்வளவுதான். இதை மட்டும் செய். காலைல கூப்பிடு" என்றபடி செல்போனை அணைத்தான்.

"சொல்றா. எப்படி இருக்க? ரொம்ப நாள் கழிச்சு இந்த பக்கம் வந்துருக்க? ஏதாவது விசேசமா? எவனாவது ஏமாந்து உனக்கு பொண்ணு தர்ரேன்னு சொல்லிட்டானா?" என்ற படி அகலமாய் சிரித்தான் பெரியசாமி.

"கலாய்க்காதண்ணே. ஒரு முக்கியமான விசயம். அதான் உன்னை பாக்க இந்நேரத்துக்கு வந்தேன்"

"குடிக்க மட்டும் கூப்பிட்டுவிடாதே.அந்த சனியனை விட்டு ரொம்ப நாளாச்சு. பணம் எதுனா வேணும்னா வாங்கிட்டு கிளம்பு. அதுவும் சித்தி பையன்னு தர்றேன்."

" அது இல்லைண்ணே. நானும் நீ பெரியம்மா பையன்னு உனக்கு சாதகமான ஒரு விசயத்தை கொண்டுவந்துருக்கேன். என்ன ஏதுன்னு காதுகொடுத்து கேக்க மாட்டேங்குறியே"

"சரி. சொல்லு. என்ன விசயம்?"

"அந்த பெர்லைட் கம்பெனியோட லாரி காண்ட்ராக்ட் உனக்கு கிடைச்சா எப்படி இருக்கும்?"

"நல்லாத்தான் இருக்கும். ஆனால் குருமூர்த்தி இருக்கும்வரை அதுக்கு வாய்ப்பில்லை. இந்த முறை டெண்டரில் அவன் தானே ஜெயித்தான்?"

தினமும் 80 லாரிகள் பெர்லைட் கம்பெனியின் மூலப்பொருள்களை, கழிவுகளை ஏற்றி செல்லும் இறக்கிவைக்கும் வேலையை செய்து கொண்டிருக்கின்றன. கோடிகளில் காசு புரளும் அந்த காண்ட்ராக்ட் மீது பெரியசாமிக்கு ரொம்ப நாளாக ஒரு கண். அதற்கு தடைகல்லாக இருப்பது குருமூர்த்தி. அதை கெடுக்க லேபர் யூனியன் லீடர் தமிழ்வாணனை கையில் போட்டு கொண்டு பெர்லைட்டால் கேன்சர் வருகிறது என்ற பிரசாரத்தை மக்களிடையே பரப்பி கொண்டிருந்தான் பெரியசாமி.

கோர்ட் வழக்கு, நீதிமன்ற தடை,, மீண்டும் திறப்பு என்று பெர்லைட்டின் செயல்பாடு நித்திய கண்டம் பூரண ஆயுசாக மாறிக்கொண்டிருந்தது. பெரியசாமி பெரிய அளவில் பணம் செலவு செய்தும் ஒன்றும் சாதிக்க முடியவில்லை.

இப்போது அதே பிரச்சனையை தூக்கி கொண்டு மணிகண்டன் வந்திருக்கிறான். இருவரின் அம்மாக்களும் அக்கா தங்கை என்பதால் இருவரும் நெருங்கிய சொந்தம் வேறு.மணிகண்டனை முழுதாக நம்பமுடியாது. பத்திரிக்கைநிருபராக இருந்தபோதே பெரும் புள்ளிகளை பற்றி இல்லாததும் பொல்லாததுமாக எழுதி அவர்களை ப்ளாக்மெயில் செய்து பணம் பறிப்பது அவனது வேலை. அவனது மிரட்டலுக்கு பயப்படாதவர்கள் போலீசில் புகார் செய்து பெரிய பிரச்சனையான போதெல்லாம் பெரியசாமி தான் தலையிட்டு அவனை காப்பாற்றி இருக்கிறான்.அவனது வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிட்டதால் அவனுக்கு மீடியாவில் வேலை தர யாரும் தயாராக இல்லை.

அதற்காக ஓய்ந்து உட்காருகிறவன் இல்லை மணிகண்டன். ப்ரி லேன்ஸ் ரிப்போர்டர் என்ற பெயரில் தன் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டான். சில நேரங்களில் பணத்திற்காக அவன் போலீசிடம் ஆட்காட்டி வேலையும் செய்வதுண்டு.

ஏதோ ஒரு முக்கியமான விசயத்தோடு தான் தம்பி தன்னை தேடி வந்திருககிறான் என்று உணர்ந்து கொண்ட பெரியசாமி நிமிர்ந்து உட்கார்ந்தான்
" என்ன மணி? செத்து புதைச்ச பிணத்தை தோண்டுற?" என்றான்.

"ஆதாயம் இருக்கு.அது தான் தோண்டுறேன்."

"நீ என்ன சொல்ல வர்ர ?"

"பாருண்ணே. கேன்சர்னு சொல்லி பயம் காட்டுனா வேலை நடக்காது. வேற ஐடியா தர்றேன்."

"சொல்லு. கேப்போம்."

"இதை பாத்தியா?" என்ற மணி வாட்ஸ்அப்பில் வந்த போட்டோவை காட்டினான்.

"என்னடா இது? குரங்கிலிருந்து பிறந்த முதல் மனுசன் மாதிரியிருக்கு."

"நேத்து நைட்டு பொறந்த குழந்தை இது.இதுக்கு காரணம் பெர்லைட்டின் கழிவுதான்னு பிரச்சனையை கிளப்பு"

" ஒரு குழந்தைதானே பொறந்திருக்கு. ஜனங்க இதை எப்படி நம்புவாங்க?"

"தப்பு. இது ஏழாவது குழந்தை.இதுக்கு முன்னாடி ஆறு குழந்தை இதேமாதிரி பொறந்துசெத்துருச்சு.நாளைக்கு ஒரு கவர் ஸ்டோரி எழுதப்போறேன். இதுக்கெல்லாம் காரணம் பெர்லைட் தான்னு"

"பண்ணு. இது சரியா வரும். பாடுபட்டு சம்பாதிப்தே குழந்தைகளுக்காகத்தான்.அவர்களுக்கே பாதிப்புன்னா ஜனம் சும்மா இருக்காது. கொந்தளிச் சுரும். எனக்கு கிடைக்காத அந்த லாரி காண்ட்ராக்ட் அந்த குருமூர்த்திக்கும் கிடைக்ககூடாது. அவன் கை நிறைய சம்பாதிப்பதை நான் வாயில் விரலை வைச்சுகிட்டு வேடிக்கை பாக்கவா?"

"நிர்வாகம் கண்டிப்பா நம்மை ஆப் பண்ண பாக்கும். அப்ப லாரி காண்ட்ராக்டை பதிலுக்கு கேப்போம்"

" இதுக்கு எவ்வளவு வேணும்?"

"வேணும்கிற போது நானே கேக்கிறேன். நல்ல பொண்ணா ஒன்னை பாருண்ணே. தனியா படுக்க அலுப்பா இருக்கு"

"உன் கல்யாண செலவு என்னுதுடா. கவலைப்படாதே! ஏதாவது ஒரு பொண்ணை பிடிச்சுருவோம்." என்றான் உற்சாகத்துடன் பெரியசாமி..

மும்பை.

பார் ஒன்றில் ஒலித்த இந்தி குத்து பாடலுக்கு ஆடுபவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான் விஜய் மல்ஹோத்ரா.
அவனது போன் அடித்தது.

"ஹலோ" என்றவனுக்கு எதிர்முனை பேசுவது புரியவில்லை. அருகே இருந்த நந்தகுமார் குல்கர்ணியிடம்" எக்ஸ்கியூஸ்மீ " என்றவன் வெளியே வந்தான்.

"இப்ப சொல்லுங்க"

"சார்.நான் பாஸ்கர் பேசறேன்"

"சொல்லுங்க பாஸ்கர். பெர்லைட் ல எதுனா பிரச்சனையா? இல்லைன்னா கூப்பிட மாட்டிங்களே"

"டிவி பாத்தீங்களா?"

"இல்லையே?"

"பாருங்க சார். பாத்துட்டு கூப்பிடுங்க"

இணைப்பு துண்டிக்கப்பட்டது

" என்னாச்சு?ஏன் டென்சன் ?" என்றார். பின்னாலேயே வந்த நந்தகுமார் குல்கர்ணி

" என்னோட கம்பெனில ஏதோ பிரச்சனை. மேனேஜர் டிவியை பாக்க சொல்றான்"

" என்னோட ரூமுக்குவா. அங்கே டிவி பார்ப்போம்"

அறையில் டிவியை போட்டதும் நியூஸ் ஓடியது.

"தமிழகத்தில் இயங்கிவரும் பெர்லைட் ஆலையால் கேன்சர் வருவதாக கூறப்பட்ட நிலையில் அங்கே இருக்கும் சுற்றுவட்டார கிராமங்களில் அனுமன் வடிவத்தில் வால்முளைத்த குழந்தைகள் தொடர்ந்து பிறந்து வருவது பீதியை கிளப்பி இருக்கிறது. பெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைய தொடங்கிஇருக்கின்றன"

"300 கோடி நந்தகுமார். மொத்தமும் வீணா போயிரும் போலிருக்கு"

"பிரச்சனையை சமாளிச்சுதானே தீரணும்? நீ பிரச்சனை வந்தா ஓவரா குடிக்கிற. குடிச்சா பிரச்சனை தீருமா?"

"வேறு என்ன பண்ண சொல்ற?"

"இதுக்குன்னு சில ஆளுக இருக்காங்க.அவங்ககிட்ட போனா பணம்தான் செலவாகும். பிரச்சனையை அவங்க பாத்துப்பாங்க"

"யாரு அப்படிப்பட்ட ஆள்?"

"அவதார் பாபா. காசிமடத்தின் அதிபதி. டிஜிட்டல் சாமியார். பவர் புரோக்கர். பிரதமரே அவனை பார்த்தா எந்திரிச்சு நின்னு கால்ல விழுவாரு.ஒரு தடவை அவரை பார்ப்போமா?

"ஏற்பாடு பண்ணுங்க" என்றான் விஜய் மல்ஹோத்ரா.

அதே நியூசை பார்த்து கொண்டிருந்த டாக்டர் சம்பத்குமாரின் இதயம் ஒரு முறை நின்று துடித்தது. விசயம் இப்படி திசை திரும்பும் என்பதை அவர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இப்படி ஒரு புது பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது என்று அவருக்கு தெரியவில்லை.

சம்பத்குமார் ஜான் கிரேவருக்கு நடந்துகொண்டிருக்கும் விசயங்களை விளக்கி ஒரு ஈமெயிலை தயார் செய்ய ஆரம்பித்தார்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக