புதன், 8 பிப்ரவரி, 2023

ஆப்ரேசன் அஷ்டவக்கிரன்7

ஆப்ரேசன் அஷ்டவக்கிரன் !

அத்தியாயம்7

உரத்த குரலில் அஷ்டாவக்கிரர் பதில் சொன்னார்.

“ஓ மன்னா! உன் கேள்விக்கு பதில் நான் சொல்கிறேன் என்று
சொன்னேன். சபை முழுக்க என்னைப் பார்த்துச் சிரித்தது.

ஏன் சிரித்தார்கள் ? என் குறைவான ஞானத்தைக் கண்டு
சிரித்தார்களா? நான் தவறாகச் சொன்ன விளக்கத்தைக் கண்டு
சிரித்தார்களா? இல்லை.

இது எதைக் கண்டும் அவர்கள் சிரிக்கவில்லை. என் உருவத்தைப்
பார்த்து சிரித்தார்கள். என் தோலின் நிறத்தை வைத்து,
என் உடலின் உருவத்தை வைத்து இவர்கள் என்னை,
என் அறிவை மதிப்பிட்டார்கள்.

என் தோலை வைத்து என் மதிப்பை நிர்ணயிக்கும் இவர்கள்
தோல் வியாபாரிகள் தானே?

தோல் வியாபாரி தான் தோலின் நிறத்தை வைத்து ஆட்டுத்
தோலுக்கு விலை போடுவான். கசாப்புக் கடைக்காரன் தான்
ஆட்டின் உருவத்தை வைத்து ஆட்டுக்கு மதிப்பு போடுவான்.

இவர்களும் என்னை அப்படித் தான் மதிப்பிட்டார்கள்.
அதனால் தான் இவர்களை தோல் வியாபாரி என்றேன்.

பண்டிதர்கள் இருக்க வேண்டிய சபையில்
தோல் வியாபாரிகளுக்கு என்ன வேலை ?அதனால் தான்
இவர்களை வெளியே போகச் சொன்னேன்” என்றார்
அஷ்டவக்கிரர்.

அவமானமடைந்த பண்டிதர்கள் தலை குனிந்து
சபையை விட்டு வெளியேறினார்கள்.

முதல்முறையாக தன் உயிரை காப்பாற்றிய வாசுவை நன்றியுடன் பார்த்தான் துரைபாண்டியன்.

"நீ எவ்ளோ பெரிய ஆள். இப்படி நடுரோட்ல உன்னை போட பாக்குற அளவுக்கு என்ன செஞ்ச?" என்றான் வாசு.

"எத்தினி தபா உன்கிட்ட பவுடர் கேட்டு நடந்துருப்போம் .ஒரு தடவையாவது கொடுத்திருப்பியா? இன்னைக்கு பாரு. நாங்கதான் உன்னை காப்பாத்தி இருக்கோம். இந்த நன்றிக்காகவாவது கொஞ்சம் பவுடர் தரலாமே? நீ ஒன்னும் கடனுக்கு தர வேணாம். டேபிள் கேஷ்.என்ன சொல்ற?" என்றான் குற்றாலம்.

வாசுவையே பார்த்து கொண்டிருந்ததுரை பாண்டியன்" நீ யாருகிட்ட வேலை செய்யற?" என்றான்.

"நான் யாருகிட்டயும் வேலை செய்யலை. எங்க பசங்களோட தனியா வேலை செய்யறேன் இவனும் என்னோட பார்ட்னர்தான்" என்றான் வாசு.

"சரி. என்ன படிச்சிருக்க?"

"பி எஸ்சி கெமிஸ்ட்ரி. எதுக்கு கேக்குற? ஏதாவது வேலை தரப்போறீயா?" என்றான் வாசு.

"நாம ஒரு டீ சாப்பிட்டுகிட்டே பேசலாமா?"

"சரி. ஆனா பில் நீ தான் தரணும்." என்றான் குற்றாலம்.

"ஏன் காசு இல்லையா?"

"என்னை கேவலப்படுத்தாதே. ஜீ பேல பணம் அனுப்புற லிமிட்தாண்டியாச்சு. இனி பணம் அனுப்பனும்னா நாளைக்குத்தான். அதனால சொன்னேன்"

"அவன் அப்படித்தான். வா போலாம்"

அருகே இருந்த பேக்கரியில் நுழைந்த வாசு "மூணு டீ.சுகர் கம்மி. அதிகம்னு ஏதாவது சொல்லனுமா?" என்றான் துரையை பார்த்து.

"வேணாம். இன்னும் அந்த நிலைமைக்கு இன்னும் உடல் வரவில்லை"

காலி சேரில் மூவரும் அமர்ந்தனர். வந்துசேர்ந்த டீயை உறிஞ்சிய துரை" எங்கிட்ட வேலை செய்யறியா?" என்றான்.

"எதுக்கு? தம்பி எங்களை தூக்கி போட்டு மிதிக்கவா? நீயே அவங்கிட்ட தானே வேலை செய்யற?"

"இல்லை. இப்ப வேலையைவிட்டுட்டேன்"

"அப்ப நீயும் எங்கள மாதிரி அன்னக்காவடின்னு சொல்லு. இப்பகுடிக்கிற டீக்காவது காசு வைச்சிருக்கியா?" என்றான் குற்றாலம்.

துரைசெல்போனை நோண்டிபேங்க் பேலன்ஸை காட்டினான். பேலன்ஸ் 5 கோடி என்றது.

"ஓ! பணக்கார அன்ன காவடியா? எப்ப வேலைக்கு சேரப்போறேன்னு கேக்காத அல்ரெடி நாங்க வேலைக்கு சேர்ந்தாச்சு. என்ன செய்யனும்னு சொல்லுங்க முதலாளி. அந்த பேங்க் பேலன்ஸ் குறையுற வரை இப்படித்தான் கூப்பிட போறேன்." என்றான குற்றாலம்.

"ஷ்" என்று அவனை அடக்கிய வாசு"தம்பிக்கு எதிரா தனியா கடை போடப்போறியா?" என்றான்.

" இல்லை. அப்படி செஞ்சிருவனோங்கிற பயத்துலதான் என் மகளை கடத்தி வைச்சிருக்கான்.அவன் சொல்றதை செய்யலைன்னா என் மகளை கொன்றுவான்"

"இதுல நான் என்ன செய்யனும்?"

" என் மகளை அவங்கிட்டருந்து காப்பாத்தனும்?"

"இந்தாளு நம்ம கதையை முடிக்க பார்க்கிறான். ஒரு டீ வாங்கி கொடுத்ததுக்காகவெல்லாம் உயிரைவிட முடியாது. உன்னோட பேலன்ஸை அப்படியே வைச்சுக்க" என்றான் குற்றாலம்.

" நான் இந்த டீலுக்கு ஓத்துக்கிறேன்.எனக்கு உன்னோட பணம் வேணாம்"

"வேறு என்ன வேணும்?" என்றான் துரை குழப்பத்துடன்.

"நானும் உன்னை மாதிரி ஆகனும்.ஐ மீன் டிரக் டேஸ்டர்"

துரை சிரித்தான்.

"நீ புத்திசாலி. மீன் வேண்டாம். மீன்பிடிக்க கற்றுகொடுன்னு கேக்குற. உன்னோட காக்கி பேண்டை வைச்சு போலீஸ்னு நீ அவர்களை நம்ப வைச்ச போதே நீ சாதாரண ஆள் இல்லை. சூழ்நிலையை சரியாக பயன்படுத்தி கொள்கிறவன் என்று யூகித்தேன். அதை நிருபித்துவிட்டாய்..நீ கெமிஸ்ட்ரி படிச்சிருக்க. என்னோட தொழிலை ஈசியாகத்துக்குவ. எனக்கு தகுந்த சிஷ்யன் தான் நீ. நான் உனக்கு 80 பர்செண்ட்தான கத்து கொடுப்பேன்."

"மீதி?"

"என்னோட மகள் என்னிடம் வந்தபிறகு "

"சரிப்பா. இவன் வேலை கத்துகிட்டு உம்பொண்ணை மீட்கலைன்னா?" என்றான் குத்தாலம்.

" நான் எதுவும் பண்ணமாட்டேன். ஆனா தம்பி இவனை கொல்லுவான்"

"என்னப்பா குழப்புற? உனக்கு பதிலா இவன் கிடைச்சிட்டான்னு உன்னைவிட்டுவிடுவான் இல்லையா?"

"அதனால்தான் இவனுக்குநூறு பர்செண்ட் சொல்லி தராமல் 80 பர்செண்ட் சொல்லிதருகிறேன்னு சொன்னேன்"

"நீ பெரிய விடாக்கொண்டன்யா"

"எனக்கு எங்க வைச்சு சொல்லி தரப்போற?"

"ஜெயில்ல "

"என்னப்பா சொல்ற?"

"உண்மையத்தான் சொல்றேன்"

" பாட்சா ரஜினி மாதிரியே பேசுற. எங்களுக்குத்தான் புரியமாட்டேங்குது"

"பாரு வாசு. ஆஸ்திரேலியாவுல என்னோட சரக்குக்கு செம டிமாண்ட். அமவுண்டும் அதிகம். மாசம் நூறு கிலோ அங்கே தரமா அனுப்புறான் தம்பி. நான் அவனைவிட்டு போனா அந்த வியாபாரமும் அவனைவிட்டு போயிரும். எனக்கு அவனிடமிருந்து தப்பிக்க இரண்டு முணுவழி தான் இருக்கு.அதுல ஒன்னு செத்து போறது.இன்னொன்னு எங்கியாவது ஓடிப்போய் தலைமறைவாவது.இன்னொன்னு என்னை போல் இன்னொருவனை தயார் செய்து இறக்குவது. நான் மூணாவதை தேர்ந்தெடுத்தேன் அது தான் நீ"

" இன்னொரு வழி இருக்கு.அதை நீ மறந்துட்ட வாத்யாரே" என்றான் வாசு.

" என்ன அது?"

"தொழில் கத்துகிட்ட பின்னாடி சொல்றேன்" என்றான் வாசு.

"அடுத்ததா நீங்க ரெண்டுபேரும் என்ன பண்ண போறீங்க?" என்றான் குற்றாலம்.

"சண்டை போடப்போறோம்" என்றான் துரை.

"எதுக்கு சண்டை?" என்றான் குற்றாலம்.

"டீ குடிச்சதுக்கு யார் காசு தருவதுன்னு எங்களுக்குள் இப்ப சண்டை வரப்போகுது. அப்பத்தான் போலீஸ் வரும். எங்களை கைது பண்ணும். என் வீட்டில் போதை பொருள் இருந்ததால் எனக்கு சீக்கிரம் ஜாமீன் கிடைக்காது. ஆனா அடிதடி சண்டையில் வாசுவுக்கு இரண்டு அல்லது மூன்று மாத தண்டனை கிடைக்கும். ரெண்டுபேரும் ஒரே ஜெயில்ல தான் இருப்போம். அங்கே கண்டிப்பாக தம்பி சரக்குக்காக வருவான். ஜெயில்ல எல்லோரையும் விலைக்கு வாங்க அவனால் முடியும். என்னோட அசிஸ்டெண்டாக உன்னை வைத்து கொண்டு எல்லாவற்றையும் சொல்லிகொடுத்துவிடுவேன். இதுல குற்றாலத்துக்குரோலே இல்லை"

"அப்ப நான் கிளம்புறேன். டீக்கு காசு இல்லைன்னு ஜெயிலுக்கு போனென்னு தெரிஞ்சா எங்கம்மாவிளக்கு மாத்துலயே அடிக்கும். ரொம்ப கேவலமா இருக்கு.நான் போனவாட்டி அடிச்சுக்குங்க" என்ற குற்றாலம் எழுந்து நடந்தான்.

கல்லாவில் இருந்தவன்" சார். டீக்கு காசு" என்றான்.

"இதென்ன நெய் பிஸ்கட்டா? இதுல ஒன்னை எடுத்துக்கிறேன். பில்லுல சேர்த்துக்கோ. மொத்த பில்லும் அவங்க தருவாங்க.தருவீங்கதானேப்பா"

துரை தலையாட்டினான்.

"மொத்தமா செட்டிலாயிரும் சந்தோசமா? யாராவது கேட்டா எனக்கும் அவனுகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு சொல்லிரு. வரட்டுமா" என்ற குற்றாலம் வேகமாக வெளியேறினான்.

அடுத்த அரை மணி நேரத்தில் துரையும், வாசுவும் டீ காசு கொடுக்க போட்ட சண்டையில் கடை இரண்டானது. "யாராவது ஒருத்தராவது பில் கொடுங்க" என்று கதறிய கடைகாரனின் அலறல் காற்றில் கரைந்தது.

கடைசியாக வழக்கம்போல் வந்துசேர்ந்த போலீஸ் ஜீப் இருவரையும் அள்ளி சென்றது. கோர்ட்டில் 6 ஆண்டு தண்டனை துரைக்கு. மூன்று மாத சிறை வாசுவுக்கு.

துரை எதிர்பார்த்ததுபோலவே தம்பிதுரையை பார்க்க சிறைக்கு வந்துவிட்டான்.

"என்னைவிட்டு போக நினைச்சா இதுதான் கதி. இங்க எல்லாரையும் விலைக்கு வாங்கிட்டேன்.அந்த ஆஸ்திரேலியா சரக்குமட்டும் ரெடி பண்ணி குடு.இல்லைன்னா உன்னோட பொண்ணு கதை முடிஞ்சிரும்."

" எனக்கு ஒரு லேப் வேணும்"

" ஏற்பாடு பண்றேன். என்ன வேணுமோ கேளு. தருவாங்க. இங்கே வருகிற சரக்கைதரமுயர்த்தி கொடு. இனி நீ ராஜா மாதிரி இருக்கலாம்."

"நான் என் பொண்ணை பார்க்கனும்"

"அது முடியாது. போன்ல பேசு.மூணு மாசம் ஆகட்டும் கூட்டிட்டு வர்றேன்"

துரைக்கு உள்ளே கேட்டதெல்லாம் கிடைத்தது. வாசு அவனது அசிஸ்டெண்டானான். துரையிடமிருந்து எல்லா வித்தைகளையும் கற்றுகொள்ள ஆரம்பித்தான் வாசு.

அவ்வப்போது இரவில் காணாமல்போனதன் அண்ணன் அருணாசலத்தை எண்ணி பாதி தூக்கத்தில் எழுந்து கொள்வது அவனது வாடிக்கையாக இருந்தது. மூன்று மாதம் விரைவாக ஓடி மறைந்தது

"நான் நாளைக்கு ரிலீசாயிருவேன்" என்றான் வாசு.

"நீ போயிட்டா என்னை தம்பியின் எதிரிகள் கொன்றுவிடுவார்கள். அவர்களிடமிருந்து ஏற்கனவே ஒரு முறை நீ என்னை காப்பாற்றி இருக்கிறாய். இனி காப்பாற்ற யாருமில்லை என்பதால் என் கதையை முடித்துவிடுவார்கள்.நான் சாவை பற்றி கவலைப்படவில்லை. என் மகளை தனியாக விட்டுட்டு சாகிறேனே என்று தான் கவலைப்படுகிறேன்"

"உன் உயிரை யாரும் எடுக்க முடியாது வாத்யாரே.  நான் சொல்ற மாதிரி செய். நான் உன்னை காப்பாத்துறேன்.அன்னைக்கு டீ கடைல நான் சொன்ன நாலாவது விசயம் இது தான்" என்ற வாசு அவன் காதில் கிசுகிசுத்தான்.

இப்படி ஒருவழி இருப்பதைதான் ஏன் யோசிக்கவில்லை என்று திகைத்தான் துரைபாண்டியன்.

வாசு ரிலீசான மறுநாள் வாட்சர் டவரிலிருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு கிடந்தான் துரைபாண்டியன்!பகலில் எங்கே வேண்டுமானாலும் நடமாடலாம் என்று அவனுக்கு தரப்பட்ட சலுகையை அவன் பயன்படுத்தி கொண்டு விட்டிருந்தான்.

#தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக