செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

அஷ்டவக்கிரன் 5

ஆப்ரேசன் அஷ்டவக்கிரன்!

அத்தியாயம் 5

""ஜனக மகராஜா ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது
அவருக்கு ஒரு கனவு வந்தது.

அதில் அவர் ஒரு பிச்சைகாரனாக மிகவும் சிரமப்படுவது போல்
கனவு. கனவில் அவர் படாத பாடு பட்டு துன்பப்பட்டார்.

அப்போது அது கனவு போலவே அவருக்குத் தெரியவில்லை.
நிஜம் போலவே இருந்தது.

திடுக்கிட்டு “நாராயணா” என்று அலறினார். கண் விழித்தார்.

கண்விழித்துப் பார்த்தால் எல்லாம் மாறியிருந்தது.
சில வினாடி முன்பு பிச்சைக்காரராக இருந்தவர்
இப்போது மன்னராக இருந்தார்.

இது தொடர்ந்து பல நாட்களாக நடந்து கொண்டே இருந்தது.

அவர் தினசரி இரவு தூங்கும் போது கனவில்
பிச்சைக்காரனாகி படாத பாடுபடுவார்.

பகலில் எழுந்தால் மன்னனாக சகல சுகபோகங்களுடன்
இருப்பார்.

ஜனகருக்கு ஒரு பெரும் சந்தேகம் உதித்தது.

“நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது
போல் கனவு கண்டேனா?

அல்லது பிச்சைகாரனாக இருந்து இப்போது மன்னராக இருப்பது
போல் கனவு காண்கிறேனா?” என சந்தேகம் வந்து விட்டது.

மந்திரி,ராஜகுரு எனப் பலரிடம் கேட்டுப் பார்த்தார். யாருக்கும்
பதில் தெரியவில்லை.அந்த சந்தேகம் அவர் மனதை அரித்துக்
கொண்டே இருந்தது.

“நான் பிச்சைக்காரனாஅல்லது மன்னனா” என்று
அவர் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்.

பிறகு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.தமது சந்தேகத்தைத் தீர்த்து
வைப்பவர்களுக்கு பெரும் பரிசை அளிப்பதாகச் சொன்னார்.

நாட்டிலிருந்த வித்வான்கள் எல்லாரும் வந்தனர். தூர தேசத்திலிருந்து
பண்டிதர்கள், முனிவர்கள்,வேத விற்பன்னர்கள் எல்லாரும் வந்தனர்.
யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.!"

அவதார் பாபாவிடம் தன்னுடைய சிறிய வயது நினைவாக எஞ்சி இருந்தது அந்த ஆலமரமும் சுமைதாங்கி கல்லும்தான்.அதை இந்த டாக்குமெண்டரியில் பார்த்தபோது அவனது தேடல்முடிவுக்கு வந்ததுபோல் உணர்ந்தான்.

அதேநேரம் அவன் மனதிற்குள் இந்த ஆலமரம் இத்தனை வருடங்களாக எந்த சேதமும் இல்லாமல் அதே இடத்தில் எப்படி இருக்கிறது? சாலை விரிவாக்கம் என்ற பெயரிலோ வேறு ஏதாவது காரணத்திற்காகவோ இன்னமும் அந்த மரம் வெட்டப்படாமல் இருப்பது தன்னுடைய அதிர்ஷ்டம்தான் என்று நினைத்தான்.அவன் கேள்விக்கு பதில் சொல்வதுபோல் தொகுப்பாளன் அந்த ஆலமரத்திற்கு முன்பாக நின்று "நீங்க பாக்கும் இந்த ஆலமரத்தின் வயது நூறுக்கு மேல். இந்த ஆலமரம்தான் கிருஷ்ணாபுரத்தின் தொன்மையான பழைய அடையாளம். இதை இப்போது தோட்டகலை துறை பாதுகாத்து வருகிறது. ஸ்டெர்லைட்டை சுற்றி பதினேட்டு கிராமங்கள் இருக்கின்றன. " என்றான்

பாபாவிற்கு அந்த ஆலமரம் எப்படி தப்பிபிழைத்து நிற்கிறது என்று இப்போது தெளிவாக புரிந்தது.அவன் தன் உதவியாளனை அழைத்து" அந்த விஜய் மல்ஹோத்ராவை உள்ளே வரச்சொல்" என்றான். நாடறிந்த முக்கிய விஜபிக்கள் தன்னை பார்க்க வருவது அவர்கள் அப்பாயிண்டமெண்ட் வாங்கும்போதே அவனுக்கு தெரியவந்துவிடும். அவர்களை பற்றிய முழு விவரங்களையும் அவன் கூகுளில் சர்ச் பண்ணி படித்துவிடுவான் இந்த விசயத்தில் படைத்த ஆண்டவன் கைவிட்டாலும் கூகுளாண்டவர் அவனை கைவிட்டதில்லை.அவன் தேடிப் படிக்கும் விசயங்களிலேயே ஒருவாறு அவர்களின் பிரச்சனைகளை இனம்கண்டுவிடுவான்.

சாதாரண பொது ஜனங்களிடம் அவன் வேறு உபாயம் வைத்திருந்தான்.அவனது ஆட்கள் பாபாவை பார்க்க காத்திருக்கும் ஆட்களுடன் கலந்து உட்கார்ந்திருப்பார்கள். கூட இருக்கும் பக்தகோடிகளிடம் வாயை பிடுங்கி என்ன பிரச்சனை என்று தெரிந்துகொண்டு விசயத்தை துண்டு சீட்டில் பாபாவுக்கு கடத்தி விடுவார்கள். பாபா அவர்கள் உள்ளே நுழைந்ததுமே அவர்களின் பிரச்சனையை சொல்லி வாயை பிளக்க வைத்துவிடுவான்.

நந்தகுமார் குல்கர்ணியும் விஜய் மல்ஹோத்ராவும் அறைக்குள் நுழைந்தனர். அறை முழுக்க மெத்தையால் மூடப்பட்டு நடுநாயகமாக உட்கார்ந்திருந்தான் பாபா. பதவிசாகஉட்கார்ந்தார்கள் இருவரும்.

" என்ன நந்தகுமார் செளக்கியமா?"

"நீங்க இருக்கும்போது என்ன குறைபாபா. இவரு என்னோட நண்பர் இவருக்குத்தான் பிரச்சனை, " என்றான் நந்தகுமார் வாயெல்லாம் பல்லாக.

"நான் விஜய் மல்ஹோத்ரா" என்ற விஜய் தன்னை இப்படிஅறிமுகப்படுத்தி கொள்ளும்போதெல்லாம் எதிராளியின் கையை பற்றி இறுகக் குலுக்கியே பழக்கப்பட்டவன். இப்போது அந்த பழக்கத்தைவிட முடியாமல் சமாளிப்பாக கைகளை குவித்துகொண்டான்.

"சொல்லு விஜய்? என்ன பிரச்சனை ஸ்டெர்லைட்டில்?" என்றான் பாபா.

முதுகில் சவுக்கடிபட்டதுபோல் நிமிர்ந்து உட்கார்ந்தான் விஜய்.

"பாபா. உங்களுக்கு எப்படி?" என்றான் அதிர்ச்சியோடு அவன்.

"அதுதான் பாபா" என்றான் நந்தகுமார்.

"இதுவரை கேன்சர்னு பிரச்சனை பண்ணாங்க. இப்ப அனுமான் மாதிரி குழந்தைகள் பிறக்குதுன்னு ஆரம்பிச்சிருக்காங்க"

"இதை யாரு முதல்ல நியூசுக்கு கொடுத்தது?"

" மணின்னு ஒரு லோக்கல் பெய்டு நிருபர். மீடியாவுலவேலை செஞ்சிருந்தா அவனோட ஓனரை விலைக்கு வாங்கியிருக்கலாம். இவன் ப்ரீலேன்சர், காசு கொடுத்தா வாங்க மாட்டேங்குறான்."

"அப்ப பின்னாடி வேற யாரோ இருக்காங்க. யாருன்னு பாரு"

"பெரியசாமின்னு ஒருத்தன். ஸ்டெர்லைட் லாரி டெண்டர்ல தோத்துபோனவன்.அவனும் மணியும் சொந்தக்காரனுக. அவன் தான் ஏதோ விளையாட்டு காட்டுறான்னு தோணுது."

"பேசாம அவனுக்கு சப் காண்ட்ராக்ட் கொடுப்பது"

"அது ஆவாது சாமி. இடத்தை கொடுத்தால் மடத்தை பிடுங்கும் குணம் அவனுடையது. சரிரெண்டு லாரி ஓட்டுன்னு கம்பெனிக்கு உள்ளே விட்டா ஆளுங்களை பேசி கலைச்சி குருமூர்த்தியோட பிழைப்பை கெடுத்து மொத்த காண்ட்ராக்டும் தனக்கே வர்ர மாதிரி செய்வான். ஹீ இஸ்டேன்ஜரஸ் பெல்லோ"

"அப்ப வேற வழியத்தான் யோசிக்கனும்"

"என்ன பண்ணனும் சாமி. இந்த பிரச்சனையிலிருந்து எப்படியாவது காப்பாத்துங்க"

"சின்னதா ஒரு கலவரம் பண்ணு. அதுல நாலஞ்சு பேரு சாகனும். அதுல இந்த மணியும், பெரியசாமியும் இருக்கனும். கலவரத்துல செத்ததா கணக்கு காட்டனும், ".

"ஸ்டேட் கவர்மெண்ட் நம்மளுதுதான். என்ன வேணா பண்ணலாம். நாலஞ்சு பேரு என்ன பத்து பதிமூணு பேரை கூட கொல்லலாம். ஆனா இந்த குழந்தைங்க மேட்டர்?" என்ற விஜய் தன் செல்போனில் இருந்த இறந்து பிறந்த சிசுக்களின் போட்டோவை காட்டினான். அதை வாங்கி பார்த்து கொண்டிருந்த பாபா" முதல்ல எரியுறதை பிடுங்குவோம். பிறகு கொதிப்பது தன்னால் அடங்கிவிடும்" என்றான்.

போட்டோக்களை உற்று பார்த்தவன்" இதுவரை எத்தனை குழந்தைகள் இது மாதிரி பிறந்திருக்கின்றன?"

" ஏழு பாபா"

" இன்னும் ஒரு குழந்தை பிறந்தால் எட்டு. எட்டுன்னா அஷ்டம்.கிருஷ்ணன் எட்டாவதாக பிறந்தவன். சகுனி, பீஷ்மனும் எட்டாவது பிறந்தவர்கள். இந்த பிரச்சனையை திசை மாற்றி உன்னோட கம்பெனியை காப்பாத்தனும்"

பாபா யோசிக்க ஆரம்பித்தான்.
அவன் மனதில் பளிச்சென்றுவந்து உட்கார்ந்தது அந்த பெயர்.

அஷ்டவக்கிரன்.

"பாரு விஜய் மல்ஹோத்ரா. புராண காலத்துல உடம்புல எட்டு கோணலுடன் அதி புத்திசாலியான ஒரு மகரிசி இருந்தார் .அவரு பேரு அஷ்டவக்கிரன்.அவர் மீண்டும் பிறக்கப்போவதாக ஒரு நியூசை கிளப்பிவிடுவோம்"

"மீடியாவுல வந்தா அந்த நியூஸ் பத்தோட பதினொண்ணா போயிரும்"

"சரி. அதை நானே சொல்றேன் .அந்த அஷ்டவக்ர மகரிசி என்னோட கனவில் வந்து தமிழ்நாட்டின் கிருஷ்ணாபுரத்தில்தான் மறுபடியும் பிறக்கபோவதாக அறிவித்தார் என்று. உலகம்இப்போது நம்புமல்லவா?"

"உலகம் நீங்க சொன்னா நம்பும்"

"நானே ஆன்மீக சுற்றுப்பயணமாக தமிழ்நாட்டிற்கு வரப்போகிறேன். அதற்குள் நீ கலவரத்தை நடத்தி முடித்துவிடு. அதன்பிறகு நான் அங்கே வந்து இந்த அஷ்டவக்கிரர் விவகாரத்தை கிளப்பி மக்களை திசைதிருப்புகிறேன்."

"நல்லது பாபா. இதுக்கு எவ்வளவு பீஸ்னு சொன்னா?" என்று இழுத்தான் விஜய்.

" நான் அடியாள் இல்லை. ஆன்மீகவாதி. இங்கே ஆசிரமத்திற்கு நன்கொடை மட்டுமே வாங்கப்படும். தமிழ்நாட்டிற்கு நான் வந்தபின்பு நீ நிறைய செலவு செய்யவேண்டியதாக இருக்கும்"

"எவ்வளவு செலவானலும் நான் பார்த்து கொள்கிறேன் பாபா"

"சரி. கிளம்புங்கள்.என் உதவியாளனை பாருங்கள். பண விவகாரங்களை அவன் தான் பார்த்து கொள்கிறான்.நான் பணத்தை தீண்டுவதில்லை" என்று சிரித்தான் பாபா.

மறுநாள் பாபா பத்திரிக்கையாளர்கள் நடுவே அஷ்டவக்கிரன் விவகாரத்தையும் தன்னுடைய தமிழக விஜயத்தையும் அறிவித்தான்.அவனது பேட்டி ஒரே நாளில் இந்தியா முழுக்க வைரலானது. தமிழ்நாட்டில் தீப்பிடிக்க ஆரம்பித்தது.

யார் அந்த அஷ்டவக்கிரன்? என்ற கூகுள் சர்ச்சுகளும் கவர் ஸ்டோரிகளும் வெளியாக ஆரம்பித்தன.

ஒரு புலனாய்வு இதழ் இதுவரை உடல் சிதிலமாக பிறந்த ஏழு குழந்தைகளின் ஸ்கேன் ரிப்போர்ட எங்கே? உடல் ஊனமாக இருந்தால் ஸ்கேனில் முதலிலேயே தெரிந்திருக்குமே ? பிறகு கருவை அழிக்காமல் இருந்தது யார் குற்றம்? பிண்ணனியில் மருத்துவ மாபியாக்களா என்று சந்தேகத்தை விதைத்திருந்தது.

அவதார் பாபாவின் பேட்டியை டாக்டர் சம்பத்குமாரும் பார்த்துகொண்டிருந்தார். அவர் உடனே ஜான் கிரேவரை அழைத்தார்.

" என்னாச்சு சம்பத்? ஏதாவது பிரச்சனையா?"

" இல்லை. இங்கே பிரச்சனை வேற மாதிரிபோயிட்டு இருக்கு. யாரோஅவதார் பாபான்னு ஒருத்தன் அஷ்டவக்கிரன் மீண்டும் பிறப்பான்னு சொல்லிட்டு தமிழ் நாட்டுக்கு வரப்போறான்."

" வரட்டும் அதுவும் நல்லதுதான். பாரு சம்பத்.நம்ம மருந்து todox எண்பது சதவீதம் வேலை செய்யுது. என்ன பிரச்சனைன்னா நியாண்டர்தால் மனிதனின் சில அம்சங்கள் மரபணுரீதியாக வந்துசேர்ந்து கடைசியில் குழந்தைகளின் உடலமைப்பை அனுமான் மாதிரி மாற்றிவிடுகிறது. நீ கொடுத்த ரிப்போர்டபடி அதை கண்டுபிடிச்சாச்சு. இனி குறைகள் நீக்கப்பட்todox இன்னும் சில நாட்களில் தயாராகிவிடும். அதை உயிர்காக்கும் முக்கியமான மருந்துன்னு உனக்கு அனுப்பி வைக்கிறேன். லேபிள் வேற.உள்ளே இருக்கும் சரக்கு நம்முடையது"

"ஒரு பத்திரிக்கை ஸ்கேன் ரிப்போர்ட் கேக்குது"

" கொடு. பத்தாவது மாசத்தின் துவக்கத்தில்தானே உருவம் மாறுது. அதனால் பிரச்சனை இல்லை.நம்ம மருந்துக்கு எட்டாவது ஆளை ரெடி பண்ணு."

"ஓகே சார். இப்பவே தேடிபிடிக்கிறேன்" சம்பத் போனை வைத்துவிட்டார்.

டிவி பார்த்து கொண்டிருந்த பெரியசாமி அருகே இருந்த மணிகண்டனிடம் "யார் ராஇந்த அவதார் பாபா?" என்றான்.

"காசிமடாதிபதியாம்" என்றான் மணிகண்டன்.

"இங்கே எப்ப வர்ரானாம்?"

"தெரியலை. சீக்கிரம் வருவான்"

"வரட்டும் கைலாசத்திற்கு அனுப்பி வைப்போம்" என்று விகாரமாகசிரித்தான் பெரியசாமி. இரண்டு பேர் ஒரு வரை ஒருவர் பார்க்காமலேயே கொல்ல திட்டம் தீட்டி கொண்டிருந்தனர். தனக்கான ஆபத்து காத்திருப்பது தெரியாமல் பாபா தமிழக சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய துவங்கினான்.

#தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக