வியாழன், 25 ஆகஸ்ட், 2022

ரகசியதீவு 26

ரகசிய தீவு

அத்தியாயம் 26

காட்டிற்குள் கல்யாண விருந்து

சந்திரவதனா தன் தந்தையின் உடலுக்கு இறுதி சடங்கு செய்ய முடியாவிட்டால் தன்னுடைய உயிரை தானே மாய்த்து கொள்வதாக கூறிகுறு வாளை காட்டியதும் பார்த்திபன் அதிர்ந்து போனான்.

"இப்போது நிலமை சரியில்லை. இருந்த போதும் உன்னுடைய வேண்டுகோளை நிறைவேற்ற நான் முயற்சி செய்கிறேன்.அதுவரை பொறுமையாக இரு சந்திரவதனா.தவறான முடிவு எதையும் எடுத்து விடாதே" என்று அவளை சமாதானம் செய்தான் பார்த்திபன்.

சற்று முன் தான் வில்லவன் பெண் மோகத்திற்கு அடிமைப்பட்டு விடாதே என்று தனக்கு அறிவுரை கூறினான். இப்போது அதே பெண்ணிற்காக தான் இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசுவதை பார்த்தால் வில்லவன் தன்னை கண்டிப்பாக தவறாக நினைப்பான் என்று அவனுக்கு தோன்றியது. சந்திரவதனாவிற்கு காதலின் காரணமாக தான் உதவுவது அவனுக்கு தெரியக்கூடாது என்று பார்த்திபன் நினைத்தான். ஓரு வழியாக சந்திரவதனாவை சமாதானம் செய்து விட்டு வெளியே வந்தவன் தனக்காக காத்திருந்த வில்லவனை சந்தித்தான்.

"அந்த பெண் எதற்காக இப்படி அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறாள்? அவளுக்கு இங்கே இருக்கும் யாராவது தொந்தரவோ இடையூறோ தருகிறார்களா?" என்றான் வில்லவன் ஆர்வத்துடன் .

"அவள் அழுவதற்கான காரணம் வேறு. அவளுடைய தந்தையை மதிமாறன் கொன்று விட்டான். இன்று மதியம் அவனது இறுதி சடங்கு நடக்க இருக்கிறது. தன் தந்தையின் உடலுக்கு தானே கொள்ளி வைக்க வேண்டும் என்று விரும்புகிறாள். சாஸ்திரம் அதை அனுமதிக்காது என்றாலும் அதை கேட்க மறுக்கிறாள்.அவள் வேண்டுகோளை நாம் நிறைவேற்றாவிட்டால் தன் உயிரை மாய்த்து கொள்வதாக என்னையே மிரட்டுகிறாள் "

"பேதை பெண். எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்வதென்று தெரியாமல் உளறுகிறாள். அவள் தான் புரியாமல் பேசுகிறாள். நீ சகலமும் அறிந்தவன்.நீ அவளுக்கு என்ன பதில் கூறினாய்?"

"என்னை மன்னித்து விடுவில்லவா! அவள் உயிரை காப்பாற்ற எனக்கு வேறு வழி தெரியவில்லை. அவளது வேண்டுகோளை நிறைவேற்றுவதாக நான் வாக்கு கொடுத்து விட்டேன்"

"முட்டாள்தனமான முடிவு .ஒரு பெண்ணிற்காக ஆபத்தான வேலையில் ஈடுபடுகிறாய். இதில் உன்னை நம்பி இருப்பவர்களுக்கும் ஆபத்து காத்திருக்கிறது"

"அதை நான் யோசித்து பார்க்கவில்லை என்றா நினைக்கிறாய்? இதே மதி மாறனால் என் தந்தை உயிரோடு எரித்து கொல்லப்பட்ட போது அவரது உடல் கிடைக்காமல் நான் பட்ட வேதனையை நான் இன்னும் மறக்க முடியாமல் தவிக்கிறேன். அப்படி ஒரு நிலமையை இன்னொரு பெண்ணுக்கு ஏற்படுத்த சொல்கிறாயா? அவளது வேதனையை நினைத்து பார்.சிறு வயதிலிருந்து அவளை மார்மேலும் தோள்மேலும் தூக்கி வளர்த்த தன் தந்தையின் உடலுக்கு தீ மூட்ட நினைக்கிறாள். அவளது ஆசையை நிறைவேற்ற நான் வாக்குறுதி கொடுத்தது தவறா?" என்றான் பார்த்திபன் உணர்ச்சி மேலிட்ட நிலையில்.

அவனது மனநிலையை அறிந்து கொண்ட வில்லவன் "தவறில்லைதான். ஆனால் இக்கட்டான இந்த சூழலில் அவளது ஆசையை நீஎப்படி நிறைவேற்ற முடியும்?"

"உன்னுடைய உதவி இருந்தால் அவளுடைய ஆசையை என்னால் நிறைவேற்றி விட முடியும் " என்று வில்லவனின் கையை பிடித்தான் பார்த்திபன்.

அதே நேரம் இடுகாட்டில் கருணாகரன் தன்னுடைய வீரர்களுடன் நின்று கொண்டிருந்தான்.

" பாதுகாப்பை பலப்படுத்துங்கள். இன்னும் சற்று நேரத்தில் செங்கோடனின் பிரேதம் இங்கே வரப்போகிறது. அந்த கூத்தாடி குழு எப்படியும் தங்கள் தலைவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த இங்கே மாறுவேடத்தில் வந்ததாக வேண்டும். அவர்களை நாம் கையும் களவுமாக பிடித்தாக வேண்டும்." என்று தன்னுடைய வீரர்களுக்கு உத்தரவிட்டவன் சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த சுடுகாட்டு வெட்டியானான வீரபாகுவை பார்த்து சிரித்தான்.

"இந்த முறை புதைக்க எதுவுமில்லையா?" என்றான் வீரபாகு .

" வழக்கத்திற்கு மாறாக இந்த முறை எரியூட்டப் போகிறாய்."

"குழி தோண்டும் வேலை இல்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சி."

"இறந்தவர்கள் பத்திரமாகத் தானே இருக்கிறார்கள்?" என்றான் கருணாகரன்.

"இங்கே இருப்பவர்கள் வெளியே போக முடிவதில்லை. வெளியே இருப்பவர்கள் உள்ளே வர நினைப்பதில்லை"

" விதிவிலக்குகளும் உண்டுதானே?"

"அதற்கு காவலாகத்தானே நான் இருக்கிறேன்" என்று சிரித்தான் வீரபாகு .

"கவனம் . எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றான் கருணாகரன்.

அதே நேரம்.

ரகசிய தீவின் தெற்கு பகுதியில் .

நர மாமிசபட்சிணிகள் வாழும் காட்டில் ஆதித்தனின் குழுவினர் மரத்தடியில் ஓய்வெடுத்து கொண்டி ருந்தனர்.

"நம்மிடம் ஆயுதங்கள் சொற்பமாகத்தான் இருக்கின்றன. இந்த கலை கூத்தாடிகளும் போர் பயிற்சியற்றவர்கள். அந்த காட்டுமிராண்டி கும்பல் நம் மீது தாக்குதல் நடத்தினால் நம் நிலை என்னாவது?" என்றான் யவனன்.

அவனது கேள்வியை கேட்டு விட்டு சிறிது நேரம் யோசித்த ஆதித்தன் " ஓரு சிறுத்தை ஓரு மனிதனை துரத்தினால் யார் அதிக வேகமாக ஓடுவார்கள்?" என்று பதில் கேள்வி கேட்டான்.

"வேகமாக ஓடக்கூடிய விலங்கு சிறுத்தை தான். ஆனால் உயிருக்கு பயந்து ஓடும் மனிதன் சிறுத்தையை விட வேகமாக ஓட வே முயற்சி செய்வான். பசிக்கு உணவு தேடி துரத்தும் சிறுத்தையை விட உயிரை காப்பாற்றி கொள்ள ஒடும் மனிதனின் வேகம் அதிகமாகத் தான் இருக்கும்.அதுதான் இயல்பும் கூட "

"அந்த மனிதனின் நிலையில் தான் கலை கூத்தாடிகள் இருக்கிறார்கள். தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்"

"உண்மை தான் " என்று அவன் சொன்னதை ஆமோதித்தான் கடோத்கஜன்.

"எந்த ஆயுதமும் இல்லாமல் என்னால் நான்கு பேரை வெறும் கையால் தாக்குதல் நடத்தி சாய்க்க முடியும். என் உயிர் ஆபத்திற்கு உள்ளாகி விட்டால் மண்ணில் புரளும் எதிரிகளின் எண்ணிக்கை கூடுதலாகலாம்" என்றான் கடோத்கஜன்.

"உன்னுடைய ஹேர்குலஸ் எங்கே போய்விட்டது?" என்றான் ஆதித்தன்.

"அது வானத்திலிருந்து காட்டை கண்காணித்து கொண்டிருக்கிறது. நம்மை சுற்றி நாலாபுறத்திலும் அதன் பார்வை படர்ந்திருக்கிறது. சிறு சலனம் ஏற்பட்டாலும் அது நம்மை எச்சரிக்கை செய்து விடும். அதனால் அந்த காட்டுவாசிகள் திடிரென நம் மீது தாக்குதல் நடத்திவிட முடியாது. என் பறவை முன்கூட்டியே எச்சரிக்கை செய்து விடும்" என்று சிரித்தான் யவனன்.

"இப்போதைக்கு நம்மிடமுள்ள விலை மதிப்பு மிகுந்த பொருள் உன் பறவை தான் " என்றான் ஆதித்தன்.

"இனி நம் முன் இருக்கும் பெரும் பிரச்சனை உணவு தான். அவசரமாக தப்பி வந்ததில் நாம் போதுமான உணவு பொருள்களை எடுத்து வரவில்லை" என்றான் யவனன்.

" என் கப்பலில் சில நாட்களுக்கு தேவையான உணவு பொருட்கள் இருக்கின்றன. அதை வைத்து கொண்டு சில நாட்கள் சமாளிக்கலாம். ஆனால் இத்தனை பேருக்கு அந்த உணவு எத்தனை நாட்களுக்கு வரும் என்று தெரியவில்லை." என்றான் ஆதித்தன்.

"உணவு இருப்பது சரிதான். ஆனால் அதை சமைக்கும் போது ஒரு பிரச்சனை இருக்கிறது. சமைக்கும் போது வரும் புகை நமக்கு பகையாகி விடும். காட்டுவாசிகளின் கண்ணில் அந்த புகைப்ட்டாலும் சரி, நம்மை தேடி அலையும் மதிமாறனின் ஆட்களின் கண்ணில் புகை பட்டாலும் சரி. நம்முடைய கதை முடிந்தது." என்று வரக்கூடிய ஆபத்தை எடுத்து கூறி எச்சரித்தான் யவனன்.

"கவலைப்படாதீர்கள். அதற்கு ஒரு வழி இருக்கிறது. பைராகி இப்படியான நிலமையை சமாளிக்க ஒரு மண்ணாலான அடுப்பை செய்திருக்கிறான். அதில் புகை மட்டும் தனியாக ஒரு வழியில் வெளியேறும். அந்த புகையை மூங்கில் குழாய் வழியாக கடத்தி தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் வைத்து விட்டால் புகை தண்ணீரில் குமிழிகளாக வெளியேறி விடும்"

"ஆஹா.அருமையான யோசனை. இவையெல்லாம் அவனுக்கு எப்படி தோன்றுகின்றன?

"அவனது பல்துறை அறிவு அலாதியானது. என்னுடைய அண்ணன் அரிஞ்சயன் அடிக்கடி சொல்வார். பைராகி காலத்தில் முந்தி பிறந்தவன் என்று. அவனுடைய திறமையை முற்றாக பயன்படுத்தி கொள்ள உலகம் தவறிவிட்டது. இப்போதைக்கு அவனது திறமை தெரிந்தவர்கள் நாங்கள் இருவர் தான் " என்றான் ஆதித்தன்.

"சரி. நான் போய் அந்த அடுப்பை தேடி எடுத்து வருகிறேன்" என்றான் யவனன்.

அதே நேரம் பறந்து வந்து அவன் தோளில் உட்கார்ந்தது ஹேர்குலஸ்.

" உன் பறவை எதையோ கண்டு வந்திருக்கும் போலிருக்கிறதே?" என்றான் ஆதித்தன்.

"ஆமாம். அப்படித்தான் தெரிகிறது. நாம் மூவரும் பறவை செல்லும் திசையில் சென்று உளவு பார்த்து வருவோம். நம் நண்பர்கள் இங்கேயே மறைவாக பத்திரமாக இருக்கட்டும்" என்றான் கடோத்கஜன்.

அனைவரையும் பத்திரமாக மறைந்து கொள்ள சொல்லிவிட்டு மூவரும் ஆயுததாரிகளாக கிளம்பினார்கள். ஓவ்வொரு அடியையும் வெகு கவனமாகவே எடுத்து வைத்து நடந்தனர் மூவரும். ஹேர்குலஸ் ஒரு மேட்டு பகுதியில் அமர்ந்து சமவெளியை நோட்டமிட்டது.

மூவரும் அது பார்த்த திசையில் பார்த்தனர்.

அங்கே சில வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. அவற்றில் பெரிய பெரிய சமையல் பாத்திரங்கள் மூடப்பட்டிருந்தன.

"அவர்கள் காட்டை நோக்கி வருவது போல் தோன்றுகிறது. காட்டிற்குள் கல்யாணமா நடக்க போகிறது? " என்றான் யவனன்.

"பாத்திரங்களின் உள்ளேயிருக்கும் உணவுகளின் மணம் சாப் பாட்டு ப்ரியனான என்னுடைய மூக்கை துளைக்கிறது. என் வாயில் எச்சில் ஊறுகிறது" என்றான் கடோத்கஜன்.

" காட்டுவாசிகளுக்கு கல்யாண விருந்தா?" என்றான் ஆதித்தன்.

அவனது வார்த்தையை கேட்ட இருவரும் திகைத்து நின்றனர்.

ரகசிய தீவு 25

ரகசிய தீவு

அத்தியாயம் 25

மிரட்டல் மொழியாள்.

கருணாகரன் தீவிரமான யோசனையில் இருந்தான். தனக்கு தெரியாத ஏதோ ஒரு ரகசியம்மதிமாறனுக்கு தெரிந்திருக்கிறது. அன்று ஒரு நாள் இரவில் ஏதோ ஒரு ரகசியம் ஓளிந்திருக்கிறது. அன்று இரவு செங்கோடன்மதி மாறனை தேடி வந்திருக்கிறான் என்பது காவலர்கள் மூலம் அவனுக்கு தெரிய வந்தது. அதன் பிறகு நடந்த வாக்குவாதத்தில் செங்கோடனை சிறையில் அடைக்க மதிமாறன் உத்தரவிட்டது வரை எல்லாமே சரியாக இருப்பது போல் அவனுக்கு தோன்றியது. ஆனால் சிறையில் அடைக்கப்பட்டவனின் நாக்கை எதற்காக மதிமாறன் துண்டிக்க செய்தான் என்ற விடை தெரியாத கேள்வி அவனது மனதை குடைந்தது.

செங்கோடன் சிறையில் யாரிடமும் பேசி விடக் கூடாது என்ற காரணத்தால் தான் மதி மாறன் அவன் நாக்கை துண்டிக்க உத் தரவிட்டிருக்க வேண்டும். அவன் பேசக்கூடாது என்று மதிமாறன் விரும்புகிறான் என்றால் அவனிடம் ஏதோ ஒரு ரகசியம் ஓளிந்திருக்க வேண்டும். கலை கூத்தாடிகள் அனைவரும் சிறையிலிருந்து தப்பி சென்ற விசயம் தெரிந்த பிறகு அவன் தன்னிடம் சினத்தில் சீறுவான் என்று நினைத்திருந்தான் கருணாகரன் ஆனால் அவன் நினைத்ததற்கு மாறாக மதிமாறன் கோபத்தில் கொந்தளிக்கவில்லை. ஆனால் தப்பி சென்ற அத்தனை பேரையும் திரும்ப பிடிக்கவும் அவன் முனைப்பு காட்டவில்லை. ஆனால் அத்துனைபேரில் அவன் சந்திர வதனா மட்டும் கிடைத்தால் போதும் என்று சொன்னது அவன் மனதை உறுத்தியது. மதிமாறன் பெண் பித்தன்தான். ஆனால் சந்திரவதனா விசயத்தில் அந்த பெண் பித்தை தாண்டி வேறு ஏதோ விசயம் மறைந்திருப்பதாக அவனது உள் உணர்வு கூறியது.

காவலர்களை அழைத்து செங்கோடனின் மரணத்தை பற்றி தீவு முழுவதும் அறிவிப்பு கொடுக்க சொன்னவன் அடுத்ததாக என்ன செய்யலாம் என்று யோசித்தான். அவனுக்கு மார்க்கதரிசியின் தங்கம் இருக்கும் இடம் தெரியும். அதை கலத்தில் கொண்டு செல்ல நீலன் என்ற திறமையான கப்பல் மாலுமியும் கைவசத்தில் இருக்கிறான். இனி அவனுக்கு தேவைப்படுவதெல்லாம் புதையலை கொண்டு செல்லும் அதன் எடையை தாங்ககூடிய கப்பல் மட்டும் தான். அது நீலனிடம் இல்லை என்று அவனுக்கு தெரியும். ரகசிய தீவிற்கு வர வேண்டிய முத்தழகி கப்பல் இன்னமும் வந்து சேரவில்லை. ஆனால் அதிலிருந்து வரவேண்டிய சரக்குகள் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்து விட்டன. அப்படியென்றால் துறைமுகத்திற்கு சற்று தொலைவில் எங்காவது அந்த கப்பல் நின்று கொண்டிருக்க வேண்டும். முதலில் அதை கண்டுபிடிக்க வேண்டும். அதை கண்டுபிடித்தவுடன் முதல் வேலையாக அதில் இருக்கும் ஆயுதங்களை அழிக்க வேண்டும். அப்போதுதான் புதையலை ஏற்றுவதற்கு போதுமான இடம் கிடைக்கும்.

அந்த ஆயுதங்கள் மதிமாறனின் கைக்கு கிடைத்து விட்டால் அவன் சிகப்பு முகமூடியையும் அவனது புரட்சி கூட்டத்தையும் அழித்து ஒழித்து விடுவான். இவர்கள் இருவரும் மல்லுகட்டி கொண்டிருக்கும் இடைவெளியில் புதையலை கிளப்பி சென்று விட வேண்டும் என்பது தான் அவனது திட்டம்.
அவன் தன்னுடைய ஆட்களில் சிலரை அழைத்தான்.

"இந்த கணத்திலிருந்து உங்களுக்கு கடலில் தான் வேலை. எப்பாடுபட்டாவது அந்த முத்தழகி கப்பலை கண்டுபிடியுங்கள். உங்களில் ஓரு பிரிவினர் அந்த கப்பலை கண் பார்வையிலேயே வைத்திருங்கள். இன்னொரு பிரிவினர் என்னிடம் வந்து தகவல் சொல்லுங்கள். அதன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை நான் கூறுகிறேன்" என்றான் கருணாகரன்.

அவர்கள் அவனிடமிருந்து விடைபெற்று கிளம்பினார்கள். கருணாகரன் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

அதே நேரம் ரகசிய இடம் ஓன்றில்

நஞ்சுண்டன் கை கால்கள் கட்டப்படாமல் சுதந்திரமாக நடமாட விடப்பட்டிருந்தான்.

அவனை சுற்றி பார்த்திபனின் ஆட்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

வெளியே வில்லவனும் பார்த்திபன் பேசிக் கொண்டி ருந்தார்கள்.

" இவனை நம்பலாம் என்று சொல்கிறாயா?" என்றான் வில்லவன்.

"ஆசாமி சூது நிறைந்தவன் என்பதை மறுப்பதிற்கில்லை. பூரணமான நம்பிக்கையை இவன் மீது வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் இப்போதைக்கு இவனது சகாயம் நமக்கு தேவை. நமக்கு தேவை ஆயுதங்கள் .அவை இவனிடம் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் அவற்றை விலை கொடுத்து வாங்க நம்மிடம் பொருள் இல்லை. அந்த புதையல்! அது இப்போது கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும். நம்முடைய துரதிர்ஷ்டம் அது எங்கே இருக்கிறது என்று நமக்கு தெரியாது. அவனுடைய அதிர்ஷ்டம் அது இருக்கும் இடம் அவனுக்கு தெரிந்திருக்கிறது. அதை அடைய நாம் உதவி செய்தால் அந்த ஆயுதங்கள் நம் வசமாகும்"

"நல்ல பேரம் தான். இதற்கு நாம் ஒப்புகொள்ளலாம் தான். இதனால் நாம் இழக்கப் போவது ஓன்று மில்லை,,

"புரியாமல் பேசாதே வில்லவா! அந்த காட்டில் இருக்கும் நர மாமிசபட்சிகள் நம்மை எளிதாக புதையலை எடுக்கவிட்டு விடுவார்களா? அவர்களிடம் பலியாகாமல் நாம் புதையலை எடுத்தாக வேண்டும். இந்த முயற்சியில் நாம் எத்தனை உயிர்களை இழக்க போகிறோம் என்று நமக்கு தெரியாது"

"ஆமாம். அதை நான் யோசிக்க மறந்து விட்டேன்"

" அவன் அந்த நஞ்சுண்டன் யூகமாக குத்துமதிப்பாகத் தான் எல்லாவற்றையும் சொல்லி கொண்டிருக்கிறான். அவன் சொல்வதை நம்பி இதில் இறங்குவது பைத்தியக்காரத்தனம் போல தோன்றுகிறது."

"ஆமாம். நாம் இந்த விசயத்தை சற்று ஆறப்போடுவதே நல்லது " என்றான் வில்லவன்.

அதே நேரம் விரைந்து வந்து நின்றது ஒரு புரவி .பார்த்திபனுக்கு வணக்கம் செலுத்திய புரவி வீரன்"தலைவரே! அந்த பெண் உங்களை பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறாள்" என்றான்.

" யார்? சந்திரவதனாவா?" என்றான் பார்த்திபன்.

"ஆம். அந்த பெண் தான் " என்றான் குதிரை வீரன்.

"நீ முன்னால் போ! நான் பின்னால் வருகிறேன்" என்றான் பார்த்திபன்.

அவனையே பார்த்து கொண்டிருந்த வில்லவன்" பார்த்திபா! அந்த பெண்ணிற்கு ஏதாவது ஒன்று என்றால் நீ பதறி துடிக்கிறாய்." என்று தனது மனதில் இருப்பதை முழுதாக சொல்லாமல் பாதியில் நிறுத்தினான்.

"பெண் மோகத்தால் லட்சியத்தை கைவிட்டு விடுவான் பார்த்திபன் என்று நினைக்கிறாயா நண்பா ? தவறான எண்ணம்.பார்த்திபன் யாருமற்ற அபலை பெண் என்பதால் மட்டுமே அவள் மீது அக்கரை காட்டுகிறான். நீநினைப்பதுபோல் ஓன்றும் இல்லை. தவறான எண்ணங்களுக்கு என் மனதில் இடமே இல்லை" என்றான் பார்த்திபன்.

"உன்னை பற்றி எனக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் உணர்வுகளுக்கு ஆட்படும் சாதாரண மனித பிறவிகள் தானே நாம் அனைவரும் " என்றான் வில்லவன்.

"எந்த காரணத்தாலும் நான் என் லட்சியத்தை கைவிட்டு விட மாட்டேன். என்னை வீணாக சந்தேகிக்காதே நண்பா" என்றான் பார்த்திபன்.

"இல்லை. நான் அப்படி கூறவில்லை. நாம் ஒரு லட்சியத்தை நோக்கி பயணமாகி கொண்டிருக்கும் போது அதற்கு தடையாக பல விசயங்கள் வரக்கூடும். பெண்களும் காதலும் அவற்றில் பிரதானமானவை. நாம் அவற்றை தவிர்த்து கொண்டு நம்முடைய மனதை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள வேண்டும். நண்பன் கடமை தவறும் போது அவனுடைய தவறை சுட்டி காட்டி திருத்துவது உண்மையான நண்பனின் கடமை. அதைத்தான் நானும் செய்தேன். என்னை தவறாக நினைக்காதே" என்றான் வில்லவன் சங்கடத்துடன்

"உனக்கு அப்படி ஒரு நினைப்பு வருமளவிற்கு நடந்து கொண்டது என்னுடைய பிழைதான். இனி எந்த தவறும் நடக்காமல் பார்த்து கொள்கிறேன்" என்றான் பார்த்திபன்.

இருவரும் அமைதியாக ஓருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். பார்த்திபன் சிரித்து கொண்டான்.
"சரி வா!கிளம்பலாம்.அந்த பெண் புதிதாக என்ன பிரச்சனையை கிளப்பி வைத்திருக்கிறாள் என்று பார்ப்போம்"

இருவரும் தங்களின் குதிரையை விரட்டினர். வில்லவனின் மாளிகைக்கு இருவரும் வந்து சேர்ந்த போது வில்லவனின் மனைவி இருவரையும் வரவேற்றாள்.

"அந்தப் பெண் திடிரென அழ ஆரம்பித்து விட்டாள். "

" என்ன காரணம்? யாராவது அவளை திட்டினார்களா?"

"இல்லை"

"பிறகெதற்கு அவள் திடிரென்று அழ ஆரம்பித்திருக்கிறாள்?"

"அதற்கான காரணம் எனக்கு தெரியவில்லையே?"

"நானே விசாரித்து தெரிந்து கொள்கிறேன்" என்ற பார்த்திபன் சந்திரவதனா இருக்கும் திசையை நோக்கி நடந்தான்.

"இந்த பெண்ணால் புதிதாக ஏதோவொரு பிரச்சனை வந்து சேருமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது." என்றாள் பார்வதி.

"கவலைப்படாதே! இதே கவலை எனக்கும் இருக்கிறது. இதைப் பற்றி நான் பார்த்திபனிடம் பேசி எச்சரிக்கை செய்திருக்கிறேன். நாம் பயப்படும்படி எதுவும் நடக்காது" என்ற வில்லவன் ஆதுரமாக அவளை அணைத்து கொண்டான்.

தனிமையில் இருந்த சந்திரவதனாவை அணுகிய பார்த்திபன் அவளது கண்ணீரை பார்த்து துணுக்குற்றான். ஓரு பெண்ணின் கண்ணீரை பார்த்ததும் அவன் தன்னிலை மறந்தான். வில்லவனின் எச்சரிக்கையும் மறந்தான்.

"சந்திரவதனா எதற்காக கண்ணீர் ?நீ கண்ணீர் விடுமளவிற்கு அப்படி என்ன நடந்தது?"

"என் தந்தை இறந்து விட்டார்."

"உன் தந்தை இன்று காலையில் தீ விற்கு வருவதாக கூறி இருந்தாயே? பிறகு எப்படி?"

"ஆமாம். அப்படித்தான் கூறினேன். ஆனால் என் எதிர்பார்ப்புக்கு மாறாக அவர் நேற்று இரவே தீவிற்கு வந்து விட்டார். அந்த கொடியவன் மதிமாறன் அவரை சிறையில் அடைத்து விட்டான். அங்கே அவர் இறந்து விட்டார்."

"இது உனக்கு எப்படி தெரியும்?"
.
" அரசாங்க ஆட்கள் இந்த விசயத்தை காலையில் வீடு வீடாக அறிவித்து சென்றார்கள். அதை நான் கேட்டேன்"

"நிலைமையை புரிந்து கொள் சந்திரவதனா. நாம் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மை பிடிக்க அந்த மதிமாறன் குழ்ச்சி வலை பின்னியிருக்கிறான். இதில் உன் தந்தை அகப்பட்டு விட்டிருக்கிறார். "

"எனக்கு அதுவெல்லாம் தெரியாது. நான் என் தந்தையின் முகத்தை பார்க்க வேண்டும். அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி அவரது உடலுக்கு கொள்ளி வைக்க வேண்டும்"

"இது என்ன பைத்தியக்காரத்தனம். இவையெல்லாம் நடக்கக்கூடிய விசயங்களே அல்ல. நம் நிலமை பு ரியாமல் நீ பேசுகிறாய். பெண்கள் கொள்ளி வைப்பதெல்லாம் சாஸ்திரமே இல்லை"

அவையெல்லாம் மனிதர்கள் உருவாக்கியது.காலம் மாறும் போது சாஸ்திரங்களும் மாறித் தானாகவேண்டும்"

"இது சாத்தியமற்றது "

"இது நடக்காவிட்டால் நான் உயிரோடு இருக்க மாட்டேன்" சந்திரவதனா தன் இடுப்பில் சொருகியிருந்த குறுவாளை எடுத்து காட்டினாள்.

"என்னை நானே மாய்த்து கொள்வேன்"

அவள் விழிகளில் இருந்த தீவிரத்தை பார்த்த பார்த்திபன் உறைந்து போய் நின்றான்.

புதன், 17 ஆகஸ்ட், 2022

ரகசிய தீவு.அத்தியாயம்24

ரகசிய தீவு

அத்தியாயம் 24

இருவல்லவர்கள்.

எங்கே இருக்கிறது என்றே தெரியாத ஒரு பு தையலை பற்றி இரண்டு வெவ்வேறு நபர்கள் ஓரே மாதிரியாக பேசுவதை வியப்புடன் பார்த்து கொண்டிருந்தான் பார்த்திபன்

"ஏன் என்னை அப்படி பார்க்கிறாய்?" என்றான் நஞ்சுண்டன் .

"அந்த புதையலைப் பற்றிய தகவல் உனக்கு எப்படி தெரியும்?" என்றான் பார்த்திபன்.

"அந்த புதையலை பற்றி எனக்கு யாரும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஓரு யூகமாக அது எங்கே இருக்கிறது என்று நான் கண்டுபிடித்து வைத்திருக்கிறேன் அப்படி கண்டு பிடித்த இடத்தை தான் நான் உன்னிடம் கூறினேன்."

" உன் யூகத்தை சொல் அது சரியா தவறா என்று நான் சொல்கிறேன்." என்றான் பார்த்திபன்.

"அதற்கு நான் மார்க்கதரிசியின் கதையை சொல்லியாக வேண்டும். அவன் இந்த பிராந்தியத்தின் புகழ் பெற்ற கொள்ளைகாரன். கடலில் கப்பலில் சென்று கொள்ளையடிப்பதை தொடங்கி வைத்த முதல் ஆள் அவன்தான். மலைநாடும் வள நாடும் கடல் பிரதேசத்தில் போட்டி போட்டு கொண்டு வியாபார போட்டியை ஆரம்பித்தன. இரண்டு நாடுகளும் கடல் வழியைப் பயன்படுத்தி பல நாடுகளில் வியாபாரத்தை ஆரம்பித்து செல்வ செழிப்பில் வளர ஆரம்பித்தன. இதை சாதாரண வணிக கப்பலின் மாலுமியான மார்க்கதரிசி மவுனமாக கவனித்து கொண்டிருந்தான். அவன் மனதில் குயுக்தியான ஒரு திட்டம் தோன்றியது. இரண்டு நாட்டு கப்பல்களும் பல்வேறு நாடுகளில் ஏராளமான பொருட்களை ஏற்றி செல்வதையும், பொருள் ஈட்டுவதையும் கவனித்த அவன் அந்த கப்பல்களை கொள்ளையடித்தால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தான். தான் இரண்டு நாடுகளுக்கு எதிராக செயல்பட போவதால் அந்த இரண்டு நாடுகளிலும் கால் வைக்க முடியாது என்று அவனுக்கு தெரியும். அதற்கும் துணிந்து தான் அவன் கடல் கொள்ளைகாரனாக மாறினான். முதலில் அவனது ஆட்கள் அவனது பேச்சை யோசனையை கேட்க மறுத்தனர். ஆனால் முதல் கொள்ளையில் கிடைத்த செல்வத்தை பார்த்தவர்கள் வாயடைத்து போனார்கள். அவர்கள் கனவிலும் பார்க்க முடியாத சம்பாதிக்க முடியாத செல்வத்தை அவர்கள் ஓரே திருட்டில் அடைந்து விட்டார்கள்.

பிறகென்ன? அவர்கள் அனைவரும் அவனது பேச்சுக்கு கீழ்படிந்தனர். அவர்கள் தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட ஆரம்பித்தனர். அதில் கிடைத்த பொருட்களை மலிவான விலைக்கு விற்று காசாக்கினார்கள். அந்த திருட்டு பொருட்களை வாங்கவும் வணிகர்களில் ஒரு கூட்டம் தயாரானது. சில கப்பல்களை தாக்கி கைப்பற்றிய போது அதில் எந்த பொருட்களும் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தனர். இப்படி ஓன்று மில்லாத கப்பல்களை தாக்கி சக்தியை வீணாக்க விரும்பாத மார்க்கதரிசி தனக்கென துறைமுகங்களில் ஒரு ஒற்றர் படையை உருவாக்கி கொண்டான். அந்த ஓற்றர் படையில் சுமைதூக்குபவர்கள், மூட்டைதைப்பவர்கள் என்று சாமான்ய ஆட்கள் மார்க்கதரிசி தரும் பணத்திற்காக விலை மதிப்பு மிகுந்த பொருட்கள் செல்லும் கப்பலை காட்டி கொடுக்க துவங்கினர். பொறாமை பிடித்த வியாபாரிகளே தங்களின் சக வியாபாரியை காட்டி கொடுத்து கவிழ்த்தனர். மொத்தத்தில் மார்க்கதரிசியின் புதிய உத்தி அவனை பண மழையில் நனைய வைத்தது.

மார்க்கதரிசியின் அட்டகாசத்தால் வள நாடும், மலைநாடும் ஏராளமான இழப்பை சந்தித்தன. இரண்டு நாடுகளும் தனித்தனியாக அவனை பிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தன. இருவரில் எவரிடம் சிக்கினாலும் தனது தலை தப்பாது என்று தெரிந்து வைத்திருந்த மார்க்கதரிசி தன்னுடைய செல்வத்தை தங்கபாளங்களாக மாற்றி வைத்திருந்தான்.பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டுவான் என்பது போல மார்க்கதரிசியும் ஓரு நாள் கடலில் இரு நாட்டு கப்பல்களிடமும் அகப்பட்டு விட்டான். இரு நாட்டு கப்பல்களிடமிருந்து தப்பிக்கவும் தன்னுடைய புதையலை மறைத்து வைக்கவும் அவன் தேர்ந்தெடுத்த இடம் தான் இந்த ரகசிய தீவு. அவனது துரதிர்ஷ்டம் அவன் ரகசிய தீவிற்கு வரும் வழியிலேயே கடும் புயல் அவனது கப்பலை சின்னாபின்னமாக்கி விட்டது. சிதைந்து போன அவனது கப்பலின் சில பாகங்கள் தான் கடலில் மிதந்து அவனது கப்பலை அடையாளம் காட்டின. மார்க்கதரிசியும் அவனது ஆட்களும் கடலில் முழ்கி இறந்து போனதாக அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். மார்க்கதரிசியின் புதையல் கடலில் கப்பலோடு மூழ்கி விட்டதாகவும் அதை அவன் கரையில் எங்கேயோ புதைத்து விட்டதாகவும் இரண்டு வெவ்வேறு கருத்துகள் நிலவுகின்றன." என்று சொல்லி கதையை நிறுத்தினான் நஞ்சுண்டன் .

"நீ சொன்ன இந்த கதையை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் தீவின் தெற்கு பகுதியில் அந்த புதையல் இருப்பதாக நீ எப்படி கூறினாய்?" என்றான் பார்த்திபன்.

"மார்க்கதரிசி திறமையான கடலோடி .வானிலையை வைத்தே புயல் வரப்போவதை அவன் முன்கூட்டியே கணித்திருப்பான்.இரண்டு நாட்டு கப்பல்களும் தன்னை துரத்தி வரும் போது கப்பலில் இருக்கும் புதையலின் கனம் கப்பலின் வேகத்தை குறைத்திருப்பதை அவன் உணர்ந்திருப்பான். புயலிலிருந்து தப்ப அவனுக்கு பாதுகாப்பான இடம் தேவை. அந்த இடம் மலை நாட்டின் ஆளுகைக்குட்பட்ட ரகசிய தீவின் துறைமுகம் இல்லை. அங்கே கால் வைத்தால் தான் கைது செய்யப்படுவோம் என்று அவனுக்கு தெரியும். அதனால் அவன் ஆள் நடமாட்டம் இல்லாத தெற்கு பகுதியைத் தான் தேர்ந்தெடுத்திருப்பான். தன்னுடைய புதையலை அங்கே புதைத்து விட்டு புயல் நின்றதும் எடை குறைந்த தன்னுடைய கப்பலில் தப்பி ஓடிவிட்டு மீண்டும் ஒரு நாள் திரும்ப வந்து தன்னுடைய புதையலை எடுத்து செல்லலாம் என்று அவன் திட்டமிட்டிருக்கலாம். என் கணிப்பு சரியாக இருந்தால் அந்த புதையல் தெற்கில் இருக்கும் வனப்பகுதிக்குள் தான் எங்கோ புதைக்கப்பட்டிருக்க வேண்டும். தெற்கு பகுதியை நான் உறுதியாக சொல்ல இன்னொரு காரணம் இருக்கிறது" என்றான் நஞ்சுண்டன் .

"என்ன அது?"

"அந்த பகுதியில் மட்டும் தான் கடலின் ஆழம் அதிகம். மார்க்கதரிசியின் எடை மிகுந்த கப்பல் அந்த பகுதியில் மட்டும் தான் கரைவரைக்கும் செல்ல முடியும். துறைமுகத்தில் மணல் அதிகம் இருப்பதால் கரையிலிருந்து சற்று தொலைவிலேயே கப்பல்கள் நின்று விடுவதை நீ பார்த்திருப்பாய்"

பார்த்திபன் நஞ்சுண்டனின் பேச்சை வியப்புடன் கேட்டு கொண்டிருந்தான்.

"தெற்கு பகுதிக்கு யாரும் போவதில்லை. அங்கே கடல் ஆழம் என்று உனக்கு எப்படி தெரியும்? நீ கூறுவதை பார்த்தால் நீ அங்கே போயிருப்பாய் போலிருக்கிறதே?" என்றான் பார்த்திபன்.

"நீலனுடைய கப்பலில் நான் இங்கு வரும் ஒவ்வொரு முறையும் அந்த புதையல் எங்கிருக்கும் என்று தேடுவது என் வாடிக்கை. அப்படி ஒரு நாள் நான் சிறு படகு ஒன்றை எடுத்து கொண்டு தெற்கு பகுதிக்கு பயணமானேன். அங்கு சூழல் வினோதமாக இருந்தது. கடலில் அலைகளே இல்லை. ஒரு நதி படுக்கை போல கடல் அமைதியாக இருந்தது. நான்கையோடு கொண்டு போயிருந்த சிறு கற்களை வைத்து பரிசோதனையில் ஈடுபட்டேன்.. தண்ணீரின் நடுவே கற்களை போட்டால் வட்டவட்டமாக அலைகள் எழுவது வாடிக்கை. இங்கே நான் கற்களை வீசிய போது வட்டமாக அலைகள் எழும்பவில்லை. ஆனால் கரையோரமாக கற்களை வீசிய போது அரைவட்டமாக நீர் எழுந்து வந்தது. அதை வைத்து நான்கரைப் பகுதி ஆழமாக இருப்பதை தெரிந்து கொண்டேன்"

" புத்திசாலி தான் நீ!"

" இதையெல்லாம் எனக்கு கற்று கொடுத்ததேநீலன் தான். அவனுக்குத் தான் நீ நன்றி சொல்ல வேண்டும்"

"அது யார்?"

" என்னுடைய குரு"

"உன்னை விடவும்உன் குரு புத்திசாலியாக இருக்க வேண்டும்"

"ஆமாம். புத்திசாலி தான் .என்னால் அந்த புதையலை தனியாக எடுக்க முடியாது. உன் ஆட்கள் உதவி செய்தால் அந்த புதையல் எனக்கு கிடைக்கும். உனக்கும் ஆயுதங்கள் கிடைக்கும்."

"அங்கே செல்வது அவ்வளவு எளிதல்ல. நம்மை அங்கே அழைத்து செல்ல ஓரேஒருவன் தான் இருக்கிறான்."

நஞ்சுண்டன் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

"யார் அவன்?"

" அவன் ஒரு ஊமை .அவன் பெயர் ஆதி. அவன் இதற்கு சம்மதிக்க வேண்டும். நம் இருவரின் தலையெழுத்தும் இப்போது அவன் கையில் இருக்கிறது" என்றான் பார்த்திபன்.

இருவரும் மவுனமாக ஒருவரை ஓருவர் பார்த்து கொண்டனர்.

அதே நேரம் மதிமாறன் தன் எதிரே நின்றிருந்த கருணாகரனை பார்த்து "கருணாகரா! என்ன சொல்கிறாய் நீ?" என்றான்.

"நேற்று இரவு நாம் சிறையில் அடைத்த நீலனை காணவில்லை. அவன் இருந்த அறையில் வேறோருவன் இறந்து கிடக்கிறான்" என்றான் கருணாகரன்.

"இறந்தவன் பெயர் செங்கோடன். அந்த கோமாளி கூட்டத்தின் தலைவன் அவன். அவனை சிறையில் அடைத்தது நான் தான் "

"அவனது நாக்கு துண்டிக்கப்பட்டிருக்கிறது"

"நான் தான் அதற்கு உத்தரவிட்டேன்."

"நள்ளிரவில் நீங்கள் தனியாக சிறைக்கு வந்ததாக காவலர்கள் கூறினார்கள்"

"ஆமாம். நான் தான் அவன் உயிர் பறவையை உடலை விட்டு பறக்க வைத்தேன். அந்த நீலன்? அவன் எப்படி தப்பி சென்றான்?"

" அவன் மட்டுமல்ல. அந்த கூட்டமே சிறையை விட்டு தப்பி சென்று விட்டது" என்ற கருணாகரன் சிறைசாலையிலிருக்கும் ரகசிய வழியில் தான் நீலனை கூட்டி சென்றதை மறைத்து விட்டான். இந்த தகவலை கேட்டு மதிமாறன் கோபத்தில் குமுறுவான் என்று கருணாகரன் எதிர்பார்த்தான். ஆனால் அவன் எதிர்பார்த்ததற்கு மாறாக மதிமாறன் கோபத்தில் குதிக்காமல் அமைதியாக இருந்தது அவனை குழப்பியது.

"அவர்களை எளிதாக பிடித்து விடலாம். இறந்தவனின் இறுதி சடங்கு இன்று மாலை நடப்பதாக தீவு முழுவதும் தண்டோரா போட்டு அறிவிக்க சொல். "

"கடைசி மரியாதை செலுத்த அவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா?"

"அவர்கள் அத்துணை பேரும் எனக்கு தேவையில்லை. ஓரே ஒரு ஆள் என்னிடம் அகப்பட்டால் போதும் "

"யார் அது?"

"சந்திரவதனா .அந்த பெண் எனக்கு உயிரோடு வேண்டும்" என்றான் மதி மாறன் விசம சிரிப்புடன்.

நீலன் எங்கே போய் தொலைந்திருப்பான் என்று யோசிக்க ஆரம்பித்தான்மதிமாறன்.

செங்கோடன் யாரிடமும் பேசி விடக் கூடாது என்ற எண்ணத்தில் தான் மதிமாறன் அவன் நாக்கை அறுத்திருக்க வேண்டும். பின்பு ஏதோ காரணத்தால் அவனை கொன்று விட்டான். இப்போது அவன் மகள் வேண்டும் என்கிறான்.இவனது செயல்கள் ஓன்றுக் கொன்று முரணாக புதிராக இருக்கிறது.மதிமாறன் தன்னிடமிருந்து எதையோ மறைக்கிறான் என்று நினைத்தவனாக அங்கிருந்து கிளம்பினான் கருணாகரன்.செங்கோடனிடம் ஏதோ ஒரு ரகசியம் மறைந்திருக்கிறது என்றது அவன் மனம். அந்த ரகசியமும் தனக்கு மட்டுமே தெரியும் என்ற இறுமாப்பில் இருந்தான்மதிமாறன் I

ரகசிய தீவு.அத்தியாயம்23

ரகசிய தீவு

அத்தியாயம் 23

மாண்டவர் பூமி

அரசாங்க காவலர்களின் உடைகளை அணிந்த பின் அந்த மூவர் அணி வெகு வேகமாக எந்த தடையும் இல்லாமல் துறைமுகத்தை சென்றடைந்தது. அமைதியான உறக்கத்தில் இருக்கும் இந்த தீவு விடிந்தவுடன் அல்லோகலப்படுவதை நினைத்து பார்த்தான் ஆதித்தன். கைதிகள் தப்பி சென்ற தகவல் கிடைத்ததும் தீவு முழுவதும் உசார் நிலைக்கு சென்று விடும்.தீவின் மூலை முடுக்கெல்லாம் தேடுதல் வேட்டை நடத்தப்படும். துறைமுகத்தில் காவல்பலப்படுத்தப்படும். இங்கிருந்து கிளம்பி செல்லும் கப்பல்கள் கடும் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படலாம். ஆனால் யாருமே தப்பி சென்றவர்கள் தீவின் தெற்கு பகுதியில் மறைந்திருப்பதை யூகிக்க கூட முடியாது.இவ்வாறு பலவிதமான சிந்தனைகளில் ஆழ்ந்தான் ஆதித்தன்.

"நல்ல வேளை. நம்முடைய கப்பல் எந்த பாதுகாப்பும் இல்லாமல் தனித்து நிற்கிறது." என்றான் யவனன்.

"வெகு விரைவில் அதை இங்கிருந்து கிளம்பி செல்ல வேண்டும்" என்றான் கடோத்கஜன்.

" வாருங்கள். கப்பலில் ஏறி அதை கிளப்பும் வழியை பார்ப்போம்" என்றான் ஆதித்தன். 

"இங்கிருந்து கப்பலுக்கு எப்படி போவது?நம் கப்பல் ஒரு கல் தொலைவில் அல்லவா இருக்கிறது? " என்றான் யவனன்.

"நமக்கு வேறு வழியில்லை. நாம் அந்த தூரத்தை நீந்தித்தான் கடக்க வேண்டும். சிறிய படகு ஓன்று இருந்தால் நாம் நம்முடைய கப்பலுக்கு போய் விடலாம். இந்த பகுதி மணல் நிரம்பியதாக இருப்பதால் கப்பல் கரைக்கு வந்தால் தரை தட்டி விடும். அதனால் துறைமுகத்திலிருந்து சற்று தொலைவிலேயே கப்பல்கள் நிற்பது தான் வழக்கம். நம்மிடம் படகுகள் இல்லாததால் நாம் அந்த தூரத்தை நீந்தித்தான் கடக்க வேண்டும்" என்றான் ஆதித்தன்.

"நள்ளிரவில் ஜலக் கிரிடையா?" என்றான் கடோத்கஜன். வேறு வழி இல்லாத நிலையில் மூவரும் கடலில் குதித்து நீந்த ஆரம்பித்தனர். கப்பலில் ஏறியதும் கடோத்கஜன் முதல் வேலையாக கடலில் ஆழப் பாய்ச்சியிருந்த நங்கூரத்தை வெளியே எடுத்து கப்பலின் மேல் தளத்தில் வீசினான்.

"நல்ல காரியம் செய்தாய். இனி நம்மை தடுக்க யாரும் இல்லை. நாம் கிளம்பலாம்" என்றபடி ஆதித்தன் கப்பலின் சுக்கானை பிடித்து இயக்க தொடங்கினான். சற்று நேரத்தில் காற்றின் துணையோடு சத்தமின்றி மூவரையும் சுமந்து கொண்டு துறைமுகத்திலிருந்து கிளம்பியது கழுகு.

"நாம் எப்படியோ கப்பலை தூக்கி வந்து விட்டோம். நம் நண்பர்களை நாம் எப்படி கண்டுபிடிப்பது?" என்றான் கடோத்கஜன்.

"கவலைப் படாதே! இது தீவு. இதன் கரையோரமாகவே நாம் கப்பலை செலுத்தி செல்வோம். இதன் புவியியல் அமைப்பு நமக்கு சாதகமாக இருக்கிறது. வட்ட வடிவமாகத்தான் தீவின் கடற்கரை இருக்கும்.சிறையிலிருந்து தப்பிச் சென்ற நம் நண்பர்கள் கடலின் ஏதாவது ஒரு கரையில் நமக்காக காத்து கொண்டிருப்பார்கள். அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஓரு முறை எரி அம்புகளை விண்ணில் ஏவி தங்களின் இருப்பிடத்தை நமக்கு தெரிவிப்பார்கள். எரி அம்புகள் எந்த திசையில் வருகிறதோ அந்த திசையை நோக்கி நம்முடைய கப்பலை செலுத்தினால் போதும். நம்முடைய நண்பர்களை சென்றடைந்து விடலாம்" என்றான் ஆதித்தன்.

"சரியான ஆலோசனையைத் தான் கூறியிருக்கிறாய். நான் வானத்தை கவனிக்கிறேன் எரி அம்புகள் ஏதாவது தென்படுகிறதா என்று " என்ற யவனன் வானத்தை வெறிக்க ஆரம்பித்தான்.

சற்று நேரத்திலேயே அவனுக்கு எரிஅம்பு ஓன்று தென்பட்டது.

"அதோ. அந்த திசையில் தான் எரி அம்பு ஓன்று தென்பட்டது" என்றான் யவனன்.

" நல்லது. நான்சுக்கானை திருப்பி அந்த திசையில் கப்பலை செலுத்துகிறேன்" என்றான் ஆதித்தன்.

கடலில் கலம் விரைந்து சென்றது. வெகு விரைவிலேயே அவர்கள் கரையில் காத்து கொண்டிருந்த நண்பர்களை பார்த்து விட்டார்கள். கப்பலை பார்த்ததும் உற்சாக குரல் எழுப்பிய நண்பர்கள் வெகு வேகமாக நீந்தி வந்து கப்பலில் ஏறிக் கொண்டனர். அனைவரும் ஆசுவாசமடைந்த பின் கடோத்கஜன் பேச ஆரம்பித்தான்.

"நான்பர்களே! நான் இப்போது ஒரு சோகமான செய்தியை சொல்ல போகிறேன். மனதை திடப்படுத்தி கொள்ளுங்கள். நம்முடைய தலைவர் செங்கோடன் இன்று இரவு எப்படியோ ரகசிய தீவிற்கு வந்து விட்டிருக்கிறார். அவரை சிறையில் அடைத்து விட்டான் அந்த மதிமாறன். நாங்கள் தப்பி வரும்போது நீலனையும் மீட்டு செல்ல நினைத்தோம். அவனை தப்புவிக்க அவன் இருந்த சிறை அறைக்கு செல்லும் போது அதே அறையில் நம்முைடைய தலைவர் இறந்து கிடப்பதை பார்த்தோம். அந்த அறையில் அடைபட்டு கிடந்த நீலனை வேறு காணவில்லை" என்று நடந்தவற்றை விவரித்து கூறினான்கடோத்கஜன்.

" என்ன? நம்முடைய தலைவர் இறந்து விட்டாரா?" என்று அதிர்ச்சியடைந்தனர் அனைவரும் .

"இது வரை செங்கோடன் வந்து நம்முடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் என்று நினைத்தோம். ஆனால் இன்று அவர் உயிருடன் இல்லை என்பதை நம்ப முடியவில்லை. அவர் உயிரோடு இருந்திருந்தால் சந்திரவதனாவை நான் எப்படியாவது மீட்டு கொள்கிறேன். நீங்கள் அனைவரும் பத்திரமாக ஊருக்கு போய் சேருங்கள் என்றல்லவா சொல்லியிருப்பார்?"

"ஆமாம். நீ சொல்வது போல் தான் அவர் நடந்து கொண்டிருப்பார். அவர் மகளுக்காக நம் உயிரை பணயமாக வைத்து விளையாட அவர் விரும்பியிருக்க மாட்டார் "

"எத்தனையோ முறை நம்மை கடும் வறுமை சூழ்ந்த போதெல்லாம் தன்னுடைய ஆபரணத்தை கழற்றிகொடுத்து அதை வைத்து நம்முடைய பசியை தீர்த்தவர்கள் செங்கோடனும், சந்திரவதனாவும், நம்மை வேற்று மனிதனாக பார்க்காமல் அவர்கள் குடும்பத்தில் ஒருவராக பார்த்து கொண்டவர்கள் இவர்கள் இருவரும் . இவர்களுக்கு நாம் என்ன கைமாறு செய்ய போகிறோம்?"

"சந்திரவதனா நம் அனைவரையும் சகோதரனாகத்தான் நினைத்து பழகி வந்தாள். அவளை அனாதையாக மூன்றாம் மனிதன் ஓருவனிடம் விட்டு விட்டு செல்ல என்னுடைய மனம் விரும்பவில்லை. அந்த பெண்ணை நாம் எப்படியாவது மீட்டாக வேண்டும்"

'அது ஆதித்தனால் மட்டும் தான் முடியும். ஆதித்தா இந்த விசயத்தில் நீதான் எங்களுக்கு உதவ வேண்டும். தயவு செய்து மறுத்து விடாதே." என்றான் கடோத்கஜன்.

"நண்பர்களே! உங்களுடைய நிலமை எனக்கு நன்றாக புரிகிறது. நீங்கள் என் பக்கமாக இருந்து எனக்கு உதவி செய்தால் நான் சந்திர வதனாவை மீட்டு வருவேன்" என்றான் ஆதித்தன்.

"நீ என்ன கேட்டாலும் அதை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்கள் அனைவரும் கோரசாக .

"உங்களுக்கு சந்திர வதனா தேவை. எங்களுக்கு நீலன் தேவை. இந்த புள்ளியில் நாம் ஒன்றிணைகிறோம். இருவரும் கிடைக்க நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வோம்" என்றான் ஆதித்தன்.

கலம் விரைவிலேயே தீவின் தென்பகுதியை அடைந்தது. ஆதித்தன் ஏதேதோ சிந்தனைகளில் மூழ்கி இருந்ததால் கரையோரம் கப்பலை நிறுத்த மறந்து விட்டான். ஆதித்தனின் போக்கு புரியாத கடோத்கஜன் வெகு வேகமாக ஓடிப்போய் நங்கூர சங்கிலியை கடலில் வீசினான். ஆனால் அதற்குள் காலம் கடந்து விட்டது. தீவின் தெற்கு கரையை நோக்கி சென்ற கப்பல் நங்கூரம் கடலின் அடிப்பகுதியில் சிக்கியதால் கரையில் கச்சிதமாக நின்றது.

"இந்த பகுதி ஆழமாக இருக்கிறது. அதனால் தான் கப்பல் கரைதட்டவில்லை. கடலின் அடிப்பகுதி மணல் இன்னும் ஆழத்தில் இருக்கும் போலிருக்கிறது" என்றான் ஆதித்தன்.

"ஆமாம். நீ சொல்வது உண்மைதான். இந்த பகுதியில் கடலில் அலைகள் எழும்ப வேயில்லை. அமைதியாக இருக்கிறது கடல்" என்றான் யவனன்.

அவர்கள் கரையில் இறங்கிய போது கிழக்கில் கதிரவன் உதயமாகத் தொடங்கி விட்டான்.

"கரையில் இருக்கும் செடி கொடிகளை வெட்டி எடுத்து கப்பலை மூடுங்கள். இங்கே ஓரு கப்பல் நிற்பது யார் கண்ணுக்கும் தெரியக் கூடாது" என்று உத்தரவிட்டான் ஆதித்தன்.

அவனது கட்டளை உடனடியாக நண்பர்களால் நிறைவேற்றப்பட்டது.

"நாம் மர நிழலில் சற்று ஓய்வெடுப்போம். பிறகு என்ன செய்யலாம் என்பதை பற்றி யோசிக்கலாம்" என்றான் ஆதித்தன்.

அதே நேரம் தூங்கி கொண்டிருந்த நஞ்சுண்டன் உலுக்கி எழுப்பப்பட்டான்.

அவனை எழுப்பியவன் "உன்னை பார்க்க தலைவர் வந்திருக்கிறார்" என்றான்.

நஞ்சுண்டன் க ண்களை தேய்த்து கொண்டு எழுந்தான்.

இப்போது அவனுக்கு எதிரே சிகப்பு முகமூடி அணிந்த ஒருமனிதன் நின்று கொண்டிருந்தான்.

அவனது உடலமைப்பும் குரலும் அவன் தான் நேற்று சந்தித்த மனிதன் அல்லவென்று நஞ்சுண்டனுக்கு உணர்த்தின.

"நீங்கள்?" என்று இழுத்தான் நஞ்சுண்டன் .

"நீ நேற்று சந்தித்த மனிதன் நானல்ல. என்னுடைய நண்பன்" என்றான் பார்த்திபன்.

"எதற்கு இந்த நாடகம்?"

" எல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான். உன்னிடமிருக்கும் ஆயுதங்களுக்கு பதிலாக உனக்கு என்ன வேண்டும்?"

"வேறு என்ன ?செல்வம் தான் "

"நீ எதிர்பார்க்குமளவிற்கு அது எங்களிடம் இல்லை. சொற்ப அளவிலேயே அது உனக்கு கிடைக்கும் "

"நீங்கள் அரசு படைகளிடம் ஆயுதங்களை கொள்ளையடிக்கும் போதே உங்கள் நிலைமை புரிகிறது"

"நீ எதிர்பார்த்ததை கொடுக்கும் நிலைமையில் நான் இல்லை"

"உன்னால் கொடுக்க முடியும் "

" எப்படி? எதை வைத்து சொல்கிறாய்?"

"மார்க்கதரிசியின் புதையல் "

" இந்த சூழலில் அது கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அது எங்கிருக்கிறது என்று யாருக்கும் தெரியாதே?"

"அது எங்கிருக்கிறது என்று எனக்கு தெரியும். உன் உதவி இருந்தால் அதை நான் மீட்டு விடுவேன். ஆயுதம் உனக்கு. பு தையல் எனக்கு. என்ன சொல்கிறாய்?"

"நல்ல உடன்படிக்கைதான். ஆனால் அது எங்கிருக்கிறது என்று நீ சொல்லவேயில்லையே?"

"அந்த புதையல் நர மாமிசப் பட்சிணிகள் வாழும் தெற்கு திசையில் இருக்கும் காட்டில் இருக்கிறது" என்று சிரித்தான் நஞ்சுண்டன்

மாண்டவர் பூமி என்று யோகி குறிப்பிட்ட இடம் இதுதானா என்று திகைப்புடன் நின்றான் பார்த்திபன்.

சனி, 13 ஆகஸ்ட், 2022

ரகசிய தீவு

ரகசிய தீவு

அத்தியாயம் 22

சிறையில் ஒரு ஒப்பந்தம்

ரகசிய தீவின் ஏதோ ஒரு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மார்க்கதரிசியின் தங்கப்புதையல் எங்கே இருக்கிறதென்று தனக்கு தெரியும் என்று கருணாகரன் சொன்னதை கேட்ட நீலன் அவனை அதிர்ச்சியுடன் பார்த்தான்.கருணாகரனிடம் மதிமாறன் தங்க புதையலை தேடி கண்டு பிடிக்கும் பொறுப்பை ஒப்படைத்திருப்பதை நீலன் ஏற்கனவே நன்றாக தெரிந்து வைத்திருந்தான். ஆனால் அந்த புதையல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த பின்பும் கூட அவன் அதை மதி மாறனிடம் ஏன் சொல்லாமல் மறைத்து வைத்திருக்கிறான் என்று அவனுக்கு புரியவில்லை. தன்னுடைய சந்தேகத்தை அவன் வாய் விட்டு கேட்கவும் செய்தான்.

அவனது கேள்வியை கேட்ட கருணாகரனின் உதட்டில் ஓரு கேலி சிரிப்பு பிறந்தது.

"என்னை பார்த்தால் உனக்கு எப்படி தெரிகிறது ?அரும்பாடுபட்டு கண்டுபிடித்த அந்த புதையலை அப்படியே எடுத்து மதிமாறனிடம் ஓப்படைக்க நான் என்ன மடையனா?" என்று பதிலை கேள்வியாக கேட்டு விட்டு சிரித்தான் அவன்.

"சரியான விரியன் பாம்பு நீ.அந்த புதையலை எப்படியோ கண்டுபிடித்து விட்டாய். பிறகுஉனக்கு இங்கே என்ன வேலை?புதையலை கிளப்பி கொண்டு ஓட்டம் பிடிக்க வேண்டியதுதானே?"

" என்னுடைய நோக்கமும் அது தான். அப்படி புதையலை கிளப்பி செல்ல உன்னுடைய சகாயம் எனக்கு தேவை "

"உனக்கு நான் எப்படி உதவி செய்ய முடியும்?"

"உன்னால் மட்டும் தான் எனக்கு உதவி செய்ய முடியும். கனம் நிறைந்த அந்த புதையலை எடை குறைவான கப்பல்களில் இங்கிருந்து எடுத்து செல்ல முடியாது. புதையல்களின் எடையை தாங்க இயலாமல் அந்த கப்பல்கள் கடலில் மூழ்கவே வாய்ப்புகள் அதிகம். மிகப் பெரிய கப்பலான முத்தழகியில் மட்டுமே அந்த புதையல்களை இங்கிருந்து எடுத்து செல்ல முயலும். துரதிர்ஷ்டவசமாக ரகசிய தீவிற்கு வந்து செல்லும் ஓரே ஒரு பெரிய கப்பல் உன்னுடையது தான். அதனால் தான் அந்த புதையலை எடுத்து செல்ல உன்னுடைய உதவியை கேட்கிறேன்."

"நல்ல ஆளைப் பார்த்து உதவி கேட்டாய் போ! நானே என்னுடைய கப்பலை நஞ்சுண்டனிடம் இழந்து விட்டு அதை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். நான் எப்படி உனக்கு உதவி செய்ய முடியும்?" என்றான் நீலன்.

" உன் கப்பலை .நான் எப்பாடுபட்டாவது மீட்டு தருகிறேன். என்னுடைய திட்டத்திற்கு நீ ஓத்துழைக்க வேண்டும்"

"உனக்கு ஒத்துழைப்பதால் எனக்கு என்ன பயன்?"

"உன்னுடைய கப்பல் உனக்கு திரும்ப கிடைக்கிறதே?"

"உனக்கு அது தேவைப்படுகிறதே? அதில் மட்டும் தானே உன்னுடைய புதையலை கொண்டு செல்ல முடியும்? உன்னுடைய தேவைக்காகத் தான் நீ என்னுடைய கப்பலை தேடி கண்டுபிடித்து மீட்க போகிறாய். அதனால் எனக்கு என் கப்பல் திரும்ப கிடைக்கும். வேறு பலன் எதுவும் கிடையாது. உன்னுடைய உதவி இல்லாவிட்டாலும் நான் என்னுடைய கப்பலை மீட்டு விடுவேன் என்பது தான் நிஜமான உண்மை./

" புத்திசாலி கிழவன் நீ. இலவசமாகவே உன்னுடைய கப்பலை அடைவதுடன் புதையலிலும் பங்கு கேட்கிறாய். அப்படித்தானே?" என்றான் கருணாகரன்.

"என்னை விட புத்திசாலி நீதான். என்னுடைய எண்ணத்தை நான் சொல்லாமலேயே புரிந்து கொண்டு விட்டாய். இளைஞனான உனக்கே அவ்வளவு புதையல்களும் தேவைப்படும் போது மரணத்திற்காக காத்து கொண்டிருக்கும் இந்த கிழவனின் கடைசி காலம் நிம்மதியாக கழியவும் கொஞ்சம் செல்வம் தேவைதானே?" என்றான் நீலன் நைச்சியமாக.

"நீ கேட்பதும் நியாயம் தான். எவ்வளவு தான் எதிர்பார்க்கிறாய்?" என்றான் கருணாகரன் கடுப்புடன் .நீலன் இப்படி புதையலில் பங்கு கேட்பான் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய கப்பல் திரும்ப கிடைத்தாலே நீலன் திருப்தியடைந்து தன்னுடைய திட்டத்திற்கு உடன்பட்டு விடுவான் என்று அவன் நினைத்திருந்தான்.

" பாதிக்கு பாதி " என்றான் நீலன் கண்களில் பேராசை மின்ன.

"மிகவும் பேராசை படுகிறாய். எழுபது சதவீதம் எனக்கு. முப்பது சதவீதம் உனக்கு. பாதிக்கு பாதி வாங்கி அதை அனுபவிப்பதற்குள் உன்னுடைய ஆயுள் முடிந்துவிடும். உன் சொற்ப ஆயுளை கழிக்கமுப்பது சதவீத செல்வமே உனக்கு போதுமானதாக இருக்கும் "

"நீ சொல்வதும் சரிதான். அவ்வளவு செல்வத்தை வைத்து நான் என்ன செய்ய போகிறேன்? இளைஞன் நீ. உனக்கு அதிகமாக இருப்பதுதான் முறை. உன்னுடைய திட்டத்திற்கு நான் உடன்படுகிறேன்."

" நல்லது. இந்த உடன்படிக்கையால் நாம் இருவருமே பயனடைய போகிறோம்."

" எல்லாம் சரிதான்.மதிமாறனின் கண்களுக்கு தப்பி எப்படி புதையலை கடத்த போகிறாய்?"

"உன்னை எப்படி சிறையிலிருந்து மீட்டு வந்தேனோ அப்படித்தான்." என்று சிரித்தான் கருணாகரன்.

"என்னை எப்போதுதான் விடுவிக்க போகிறாய்?"
"உன் கப்பலை மீட்ட பின்பு .அதுவரை நீ இங்கு தான் இருக்க வேண்டும்" என்ற கருணாகரன் இருட்டில் வெளியேறினான். நீலன் சோர்ந்து போய் சுவற்றில் சாய்ந்தான்.

அதே நேரம் ஆதித்தனும் யவனனும் கடோத்கஜனுடன் சிறையிலிருந்து தப்பி இருட்டின் துணையோடு வெளியேறி கொண்டிருந்தனர்.

"நாம் இப்போது துறைமுகத்திற்கு தானே போகிறோம்?" என்றான் யவனன்.

"ஆமாம். அங்கே தான் நம்முடைய கப்பல் கழுகு நின்று கொண்டிருக்கிறது. அதை எப்படியாவது மீட்க வேண்டும். பிறகு கடல் வழியாக தீவின் கரையோரமாக பயணம் செய்து நம் கலை கூத்தாடி நண்பர்களை காப்பாற்ற வேண்டும். அதன் பிறகு அனைவரும் தென்ப குதியில் இருக்கும் நர மாமிசம் பு சிக்கும் காட்டுவாசிகள் வசிக்கும் காட்டிற்குள் சென்று பதுங்க வேண்டும். மற்றதை பிறகு பேசிக் கொள்ளலாம்." என்றான் ஆதித்தன்.

"அது சரி. இப்போது நாம் நகரத்தை தாண்டி துறைமுகத்தை நோக்கி போயாக வேண்டும். அரசாங்க ஆட்கள் நம்மை பிடித்து விட்டால் நம்முடைய அத்துணை திட்டங்களும் பாழாகி விடும்" என்றான் கடோத்கஜன்.

" உன்னுடைய ஆட்கள் தான் பாவம்.செங்கோடன் இறந்து போனதை அறிந்து அதிர்ந்து போய் விடுவார்கள்"

"ஆமாம். அவர் ஒரு பொறுப்பான தகப்பனை போல எங்களை ஏழ்மையிலும் பாதுகாத்தார். அவருடைய இழப்பு எங்களுக்கு பேரிடி தான் "

"நாம் இங்கிருந்து நகரத்தை கடந்து துறைமுகத்தை அடைய ஒரே வழிதான் இருக்கிறது" என்றான் ஆதித்தன்.

" என்ன அது?" என்றான் யவனன்.

"உன்னை கைதியாக்குவது" என்று சிரித்தான் ஆதித்தன்.

"என்னையா?" என்றான் யவனன் எதுவும் புரியாமல் .

"ஆம். உன்னைத்தான் " என்றான் ஆதித்தன்.

அடுத்த வீதியில் ரோந்து பணியில் இருந்த மூன்று காவலர்களில் ஒருவன் கையில் தீப்பந்தம் இருந்தது. இருட்டில் எதுவோ அசைவதை பார்த்தவன்" யாரது?" என்றான்.

இருட்டில் இருந்து மூன்று பேர் வெளியே வந்தனர். நடுவில் இருந்த யவனனின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டிருந்தன.

"யார் நீங்கள்?" என்றான் காவலன்.

"இந்த தெருவில் குடியிருப்பவர்கள்.இவன் ஒரு திருடன். எங்கள் வீடுகளில் நுழைந்து திருட முற்பட்டான். அதை நாங்கள் பார்த்து விட்டோம். இவனை பிடிக்க முயற்சி செய்தோம். இவனோ எங்களை தாக்கிவிட்டு தப்பி ஓட முயற்சி செய்தான். சிறிது நேர கைகலப்பிற்கு பின் எங்களிடம் பிடிபட்டு விட்டான். அவன் கை கால்களை கட்டி இங்கே அழைத்து வந்தோம். நீங்களே இவனுக்கு என்ன தண்டனை தருவது என்று முடிவு செய்யுங்கள்." என்றான் ஆதித்தன்.

"நல்ல காரியம் செய்தீர்கள். எங்கள் வேலையை சுலபமாக்கி விட்டீர்கள்.இவனை பார்த்தால் யவனனைப் போல் தெரிகிறதே? இவனுக்கு என்ன தண்டனை தருவது என்பதைப் பற்றி என்னுடைய உயரதிகாரி தான் முடிவு செய்ய வேண்டும். வாருங்கள். அவரிடம் செல்வோம்" என்றான் அவன்.

"சரி.வாருங்கள். நாங்கள் இவனை அவரிடமே ஓப்படைத்து விடுகிறோம்" என்றான் கடோத்கஜன். நால்வரும் காவல் அதிகாரியை நோக்கி நடந்தனர்.

நால்வரையும் பார்த்த அதிகாரி " யார் இவர்கள்?" என்றான்.

காவலன் ஆதித்தன் கூறியதை அப்படியே திரும்ப கூறினான்.

காவல் அதிகாரி யவனனை மேலும் கீழமாக பார்த்தான்.

"இவனை ... இந்த யவ னனை நான் எங்கோ பார்த்திருக்கிறேன். எங்கே என்று நினைவு வரவில்லை." என்று நெற்றி பொட்டை தட்டியவன் "ம்! இப்போது நினைவு வந்து விட்டது. இவன் காலையில் நாம் கைது செய்து சிறையில் அடைத்த ஆசாமியாயிற்றே?" என்றான்.

"ஓரு வேளை இவன் சிறையிலிருந்து தப்பி வந்திருப்பானோ?" என்றான் மற்றோருகாவலன்.

ஆதித்தனையும் கடோத்கஜனையும் கூர்ந்து பார்த்த காவல் அதிகாரி யவ னனை மீண்டும் ஏற இறங்க பார்த்து விட்டு "கைகலப்பு நடந்ததாக நீ சொல்கிறாய். ஆனால் அதற்கான எந்த தடங்களையும் மூவரின் உடலிலும் காணமுடியவில்லையே? "என்று யோசித்தவன் நிமிர்ந்த போது யவனனின் வாள் அவனது மார்பை தொட்டு நின்றது.

"நீ புத்திசாலி தான் .இதுவொரு நாடகம் என்பதை காலம் தாழ்த்தி நீ புரிந்து கொண்டு விட்டாய்." என்று சிரித்தான் யவனன்.

ஆதித்தனும், கடோத்கஜனும் ஆளுக்கொரு காவலர்களை மடக்கி பிடித்திருந்தனர்.

"உங்களுக்கு என்ன வேண்டும்?" என்றான் காவலர் தலைவன்.

"சிறிது நேரம் நீங்கள் பிறந்த நாள் உடையில் இருக்க வேண்டும். உங்கள் உடைகள் எங்களுக்கு வேண்டும்" என்றான் ஆதித்தன்.

சற்று நேரத்தில் மூவரும் கை கால்கள் கட்டப்பட்டு வாயில் துணி அடைக்கப்படும் இருட்டில் உருட்டி விடப்பட்டனர்.

மூவரும் அரசாங்கசீருடையை அணிந்து கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.

"இந்த உடைக்குள் என் உடல் அடங்க மறுக்கிறது. மிகவும் இறுக்கமாக இருக்கிறது" என்று புலம்பினான்கடோத்கஜன்.

"கொஞ்ச நேரம் பொறுத்து கொள். கப்பலை மீட்ட பின்பு உடையிலிருந்து நீ விடுதலை பெறலாம்" என்றான் ஆதித்தன்.

மூவர் அணி இரவின் இருளில் பதுங்கியபடி துறைமுகத்தை நோக்கி பயணமாகினர்.

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

ரகசிய தீவு


ரகசிய தீவு

அத்தியாயம் 21

புதையல் காத்த பூதம்

அந்த சிறுவனையே பார்த்திபன் கவனிப்பதை பார்த்த வில்லவன்"ஏன் இவனை அப்படி பார்க்கிறாய்?" என்றான்.

"மனிதமாமிசம் சாப்பிடும் ஒருவனை இப்போது தான் நேரில் பார்க்கிறேன்" என்றான் பார்த்திபன்.

" ஆனால் இவனை நீ அப்படி ஒரு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியதில்லை. இவன் அசைவ உணவுகூட உண்பதில்லை. சைவ உணவைத்தான் சாப்பிடுகிறான்"

" வினோதமாக இருக்கிறது நீ கூறுவது.தெற்கு பக்கம் உள்ள அந்த அடர்ந்த காட்டில் இருந்தவன் எப்படி இங்கே வந்தான்?"

"இந்த கேள்விக்கு மட்டும் எனக்கு விடை தெரியவில்லை. பதில் கூறும் நிலையிலும் இவன் இல்லை. ஆனால் இவ்னை ஐந்து வருடங்களுக்கு முன்பு நான் சந்தித்த போது இவன் இவனது தகப்பனுடன் இருந்தான். பொதுமக்கள் இவர்களின் வருகையால் அச்சமுற்று இருவரையும் தாக்க முயன்று கொண்டிருந்தார்கள். இவனது தகப்பன் கண்ணீரோடு எங்களுக்கு புரியாத மொழியில் மன்றாடிக் கொண்டிருந்தான். அப்போதுதான் கருணாகரன் அங்கே வந்து சேர்ந்தான். அவனைப் பார்த்ததும் இவனது தகப்பன் என்ன நினைத்தானோ தெரியவில்லை. தன் கையிலிருந்த கத்தியை எடுத்து தன்னுடைய மார்பில் பாய்ச்சிக் கொண்டான். அவன் துடிதுடித்து சாகும் முன் தன்னுடைய மகனிடம் தங்களின் மொழியில் எதையோ சொல்லிவிட்டு இறந்து விட்டான். தன் கண் முன்பாகவே தன்னுடைய தகப்பன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில் இவனுக்கு பேச்சு பறிபோய்விட்டது. அங்கேயிருந்த நான் தான் இவனை காப்பாற்றி கூட்டி வந்து வளர்த்து வருகிறேன். ஆதி என்று அவனுக்கு பெயர் வைத்ததும் நான் தான் .பயல்படுசுட்டிகை. என் தொழிலுக்கு ஒத்தாசையாக வந்தவன் விரைவிலேயே தேர்ந்த வேலைகாரனாக மாறி விட்டான்."

"இவனிடம் எப்படி பேசுவது?"

"சைகை மொழி தான். முதலில் தடுமாறினாலும் விரைவில் அதை கற்று கொண்டு விட்டான். நம் உதட்டின் அசைவை வைத்தே நாம் என்ன பேசுகிறோம் என்பதை கண்டுபிடித்து விடுவான்"

" புத்திசாலி தான் . இங்கே சந்திரவதனா இருப்பதை இவன் வெளியே யாரிடமும் சொல்ல மாட்டான். நல்ல தேர்வு" என்று வில்லவனை பாராட்டினான் பார்த்திபன்.

இருவரும் வீட்டின் உள்ளே நுழைந்தனர்.ஆதிவாசல் கதவை மூடுவதற்காக கதவை நோக்கி நடந்தான்.

வீட்டின் முற்றத்தில் சந்திரவதனாவும் வில்லவனின் மனைவியும் உட்கார்ந்து எதையோ பேசிக் கொண்டிருந்தனர்.

"நீங்கள் இன்னமும் உறங்கவில்லையா?" என்றான் பார்த்திபன் வியப்புடன்

"இல்லை. உங்கள் வருகைக்காக நாங்கள் இன்னமும் சாப்பிடாமல் காத்து கொண்டிருக்கிறோம்" என்றாள் சந்திரவதனா.

"இரண்டாம் சாமம் தொடங்கி விட்டது.இன்னமும் சாப்பிடாமல் இருந்தால் உடல் ஆரோக்கியம் என்னாவது? வாருங்கள் சாப்பிடலாம்" என்ற பார்த்திபன் வில்லவனுடன் கை கழுவ சென்றான்.

அமைதியாக இரவு உணவை உண்டு முடித்தனர் அனைவரும் .

"அந்த யோசி என்ன தான் சொல்கிறார்?" என்றான் வில்லவன்.

"சந்திரவதனா இங்கே இருப்பது வரை அவருக்கு எல்லா விசயங்களும் தெரிந்திருக்கிறது. இதுவெல்லாம் அவருக்கு எப்படி சாத்தியமாகிறது என்று எனக்கு புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அவருடைய அனுமதி இல்லாமல் நான் எதையும் செய்ய கூடாது என்று அவர் நினைக்கிறார். அப்படி எதையாவது அவருக்கு தெரியாமல் நான் செய்து விட்டால் என் அண்ணனை போல் நானும் மரணமடைவேன் என்று மறைமுகமாக என்னை எச்சரிக்கிறார். இன்னொரு விசயம் மதிமாறனுக்கும் அவருக்கும் ஏதோவொரு தனிப்பட்ட விரோதம் இருக்கும் போல் தெரிகிறது. அவனை ஆட்சியிலிருந்து அகற்ற விரும்பித்தான் அவர் நமக்கு உதவி செய்கிறார். "

"அவரிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குளிர்காலத்தில் தீ மூட்டி குளிர்காய்வதைப் போல் இவரிடம் பட்டும் படாமலும் நாம் நடந்து கொள்ள வேண்டும்"

"ஆமாம். முழுதாக அவர் சொல்வதை நாம் கேட்க கூடாது. அது இருக்கட்டும். அந்த நஞ்சுண்டன். அந்த கடலோடி .அவனை என்ன செய்வது?"

"அதை நாளை காலையில் அவனை நேரில் சந்தித்த பின்பு முடிவு செய்வோம்."

"சரி. இப்போது நாம் படுக்க போகலாம்"

அனைவரும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் நுழைந்து படுக்கையில் சாய்ந்தனர்.

நள்ளிரவு .

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பார்த்திபன் திடிரென்று உறக்கம் கலைந்து எழுந்தான்.

அறைக்கு வெளியே ஒரு மெல்லிய பேச்சுக் குரல் கேட்க ஆரம்பித்தது.

மந்திர உச்சாடனம் போல எழுந்த அந்த குரலை கூர்ந்து கேட்டான் பார்த்திபன். அந்த ஓலியை முழுமையாக அவனால் கிரகித்து புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் அறையிலிருந்து வெளியே வந்து ஓலி வந்த திசையில் நடந்தான். அவனது காலடி ஓசை கேட்டதும் அந்த விசித்திர ஒலி திடிரென்று நின்று ஆழ்ந்த அமைதி நிலவியது. வாசல் கதவின் அருகே படுக்கையில் படுத்திருந்த ஆதி ஆழ்ந்த உறக்கத்தில் குறட்டை விட்டு கொண்டிருந்தான். பார்த்திபன் யார் இப்படி வினோதமாக முணுமுணுத்தது என்று தெரியாமல் மீண்டும் தன் அன்றக்கே திரும்பி வந்தான். யோசித்தபடி படுத்தவன் அப்படியே தூங்கி போனான்.
படுத்திருந்த ஆதி கண்களை சட்டென்று திறந்தான். தனக்குள் சிரித்து கொண்டவன் மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தான்.

அதே நேரம் நகரின் வேறு ஒரு பகுதியில் இருந்த மாளிகையின் பாதாள அறையில் அடைபட்டு கிடந்த நீலன் மெல்ல கண் விழித்தான். அவனது போதையின் கடுமை வெகுவாக குறைந்திருந்தது. தலைவலி அவன் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. தான் எங்கே இருக்கிேறாம் என்று அவனுக்கு முதலில் புரியவில்லை. தான் முதலில் அடைக்கப்பட்ட சிறை இதுவல்லவென்று அவன் சிறையின் அமைப்பை வைத்து ஊகித்து கொண்டான். இது வேறு இடம் என்று புரிந்ததும் அவனுக்குள் எழுந்த முதல் கேள்வி தான் எப்படி இங்கே வந்தோம் என்பது தான்

யாரோ தன்னை இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள். தன்னை இங்கே கொண்டு வந்தது தனி ஆளா இல்லை ஒரு கூட்டமா என்று அவனுக்கு புரியவில்லை.

மெல்ல மெல்ல அவன் கண்கள் இருட்டுக்கு பழக ஆரம்பித்தது. கண்கள் இருளுக்கு நன்றாகப் பழகியதும் அறையின் ஓரு மூலையில் ஒரு பானையும் தம்ளரும் இருப்பதை அவன் கண்கள் பார்த்தன.

மெல்ல எழுந்து சென்று பானை தண்ணீரை பிடித்து குடித்தான் அவன். குளிர் நீர் அவனது வயிற்றில் பாய்ந்ததும் அவனது சிந்தனை தெளிவானது. தன் இடுப்பில் இருந்த காலி மது குப்பியை தேடத் துவங்கினான் நீலன்.தன் உயிரை காப்பாற்றிய அந்த மது குப்பியை மறக்காமல் நினைவு பரிசாக தன்னுடைய இடுப்பிலேயே வைத்திருந்தான் அவன். அந்த மது குப்பி யைத் தான் இப்போது காணவில்லை.

நீலனின் கோபமும் ரத்த அழுத்தமும் அதிகரிக்க துவங்கியது.

"ஏய் யார் அங்கே ?திருட்டு பயல்களா? என்னுடைய மது புட்டியை யார் திருடியது ?யாராக இருந்தாலும் அதை திருப்பி கொடுத்து விடுங்கள். இல்லையென்றால் நடப்பதே வேறு " என்று கர்ஜிக்க துவங்கினான் நீலன்.

அவனது குரல் சுவற்றில் பட்டு எதிரொளித் தது. அவனது பேச்சிற்கு மறுமொழி வராமல் ஆழ்ந்த அமைதி நிலவியது.

"மடையர்களே! ஓழுங்காக என் மதுபுட்டியை திரும்ப கொடுத்து விடுங்கள். இல்லையென்றால் நீங்கள் யாரும் நிம்மதியாக உறங்க முடியாது. கத்தி கூப்பாடு போட்டு உங்கள் உறக்கத்தை கெடுத்து விடுவேன்" என்று மேலும் கத்த ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில் வாசல் கதவு திறக்கும் ஓசை கேட்டது. முக்காடு அணிந்த ஒரு உருவம் கையில் தீப்பந்தத்துடன் நகர ஆரம்பித்தது. தீப்பந்த வெளிச்சம் நகர்வதை வைத்து அந்த உருவம் தன்னை நோக்கித்தான் வருகிறது என்பதை உணர்ந்து கொண்ட நீலன் தன்னுடைய ஆர்ப்பாட்டத்தை நிறுத்தி கொண்டு நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

படிகளில் ஏறி வந்த அந்த கரிய உருவம் நீலன் இருந்த அறைக்கு நேராக வந்து நின்றது.

"யார் நீ? எதற்காக என்னை இங்கே கொண்டு வந்திருக்கிறாய்? என்னுடைய மது குப்பி எங்கே?" என்று உறுமினான் நீலன்.

அந்த உருவம் தன் தலையிலிருந்த முக்காட்டை மெல்ல நீக்கியது. எதிரே நின்றவனின் முகம் தீப்பந்த வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிந்தது.

"அடப்பாவி. நீயா ?" என்றான் நீலன் அதிர்ச்சியுடன் .

"ஆம். நானே தான் " என்று புன்னகைத்தான் எதிரே நின்ற கருணாகரன்.

"என்னை எதற்காக இங்கே கொண்டு வந்தாய்? எப்படி கொண்டு வந்தாய்? எங்கே என் மதுகுப்பி ?"

"பதறாதே .! உன்னுடைய எல்லா கேள்விகளுக்கும் நான் பதில் சொல்கிறேன்"

"சொல்லி தொலை விரியனே" என்றான் நீலன் எரிச்சலுடன் .

"உன்னால் எனக்கு ஓரு காரியம் நடக்க வேண்டியதிருக்கிறது. அதனால் தான் உன்னை இங்கே கொண்டு வந்தேன். சிறைசாலையிலிருந்து வெளியேற ஒரு ரகசிய வழி உண்டு. அது எனக்கு மட்டுமே தெரியும். மதிமாறனுக்கு கூட அந்த ரகசிய வழி தெரியாது. அந்த வழியாகத்தான் நான் உன்னை இங்கே கொண்டு வந்தேன். ஆனாலும் நீ பிணம் போல் கனக்கிறாய். கொஞ்சம் குறைவாக சாப்பிட்டு உன் உடலை குறைக்க முயற்சி செய்"

"உன் அக்கறைக்கு நன்றி. என் மது குப்பி எங்கே?"

"அதை நான் பார்க்கவேயில்லை. உன்னை தூக்கி வரும் போது எங்கேயாவது கீழே விழந்திருக்கலாம்"

"பொய் சொல்கிறாய் நீ?"

"இல்லை உண்மையைத்தான் சொல்கிறேன். காலியான மது குப்பியை வைத்து நான் என்ன செய்ய போகிறேன். உன்னோடு அறையில் இருந்தவன் யார்? அவனை நீ எதற்காக கொன்றாய் ?"

" என்ன உளறுகிறாய்? அந்த அறையில் நான் மட்டும் தானே இருந்தேன்"

" ஓ! நீ வேறு குடிபோதையில் இருந்தாய் அல்லவா? நீ அவனை கொல்லாவிட்டால் வேறு யார் அவனை கொன்றிருப்பார்கள்? அவன் உயிரோடு இருந்திருந்தால் உன்னை நான் தூக்கி வந்ததற்கு சாட்சியாகி இருப்பான். அவனை நானே கொன்றிருப்பேன். முகம் தெரியாத யாரோ அந்த வேலையில் முந்திக் கொண்டு விட்டார்கள். ஆனால் சிறைக்குள் நுழைந்து கொலை செய்யும் அதிகாரம் உள்ள அந்த முகம் தெரியாத மனிதனைப் பற்றி நான் விசாரித்து தெரிந்து கொள்கிறேன். விசாரணையில் உண்மை தெரிந்துவிடும்"

"அது உன்னுடைய பாடு. என்னை வைத்து என்ன செய்ய போகிறாய்?"

"உன்னை வைத்து தான் என்னுடைய லட்சியத்தை நிறைவேற்றிகொள்ள போகிறேன்"

"அயோக்கியனுக்கு லட்சியமா? சொல்! கேட்டோம். அதையும் "

"இந்த தீவில் இருந்து ஓரு பொருளை நான் எடுத்து செல்ல போகிறேன். அதற்கு நீயும் உன் கப்பலும் தேவை "

"நல்ல ஆளை தேடிப் பிடித்தாய் போ! நானோ கப்பலை தொலைத்து விட்டு நாயாக அலைந்து கொண்டிருக்கிறேன்.ஆமாம்! அப்படி எதைத்தான் நீ இங்கிருந்து எடுத்து செல்ல விரும்புகிறாய்?"

"நான் சொல்வதை நீ நம்ப மாட்டாய்?"

"பரவாயில்லை. சொல். நீ பொய் சொன்னால் அதை நான் எளிதாக கண்டுபிடித்து விடுவேன். ஏனென்றால் நானும் ஒரு பொய்யன் தான். பாம்பின் கால் பாம்பறியும்."

" சொல்கிறேன். நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும் எனக்கு கவலையில்லை. மார்க்கதரிசியின் தங்கத்தை நான் இங்கிருந்து எடுத்து செல்ல விரும்புகிறேன்"

"நீ பொய் சொல்கிறாய். அந்த புதையல் எங்கிருக்கிறது என்று யாருக்கும் தெரியாது"

"அந்த புதையல் எங்கிருக்கிறது என்று எனக்கு நன்றாகத் தெரியும். அதை மதிமாறனுக்கு தெரியாமல் இங்கிருந்து எடுத்து செல்ல உன்னுடைய உதவி மட்டும் தான் தேவை " என்ற கருணாகரனை அதிர்ச்சியுடன் பார்த்தான் நீலன்.

வியாழன், 4 ஆகஸ்ட், 2022

ரகசிய தீவு




அத்தியாயம் 20

நர மாமிசபட்சிணி

இரவின் முதல் சாமம் துவங்கி மெல்லிய இருள் பரவத் தொடங்கியிருந்தது. இரை தேடி கூட்டை விட்டுபறந்த பறவைகள் திரும்ப தங்கள் கூடுகளுக்கு திரும்ப துவங்கியிருந்தன. அவற்றின் கீச்சு குரல்களை கேட்டபடி தன்னுடைய குதிரையை செலுத்தி கொண்டிருந்தான் பார்த்திபன். நிலவு மெல்ல வானின் உச்சிக்கு பயணப்பட தொடங்கியிருந்தது. தன்னுடைய குதிரையை மெல்ல நடத்தி சென்று கொண்டிருந்த பார்த்திபனின் மனம் பல்வேறு குழப்பங்களில் சிக்கி தவித்து கொண்டிருந்தது.

அவனது மனம் ஏனோ சந்திரவதனாவின் அழகில் லயித்து கிடந்தது.பார்த்திபன் இதற்கு முன்னால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலபெண்களை காப்பாற்றி இருக்கிறான். அந்த பெண்கள் மீது அவனுக்கு எந்தவொரு எண்ணமும் தோன்றியதில்லை. ஆனால் இந்த பெண்ணை பார்த்ததும் தன்னுடைய மனம் ஏன்கள் குடித்த குரங்கு போல் துள்ளாட்டம் போடுகிறது என்று அவனுக்கு விளங்கவேயில்லை. அவளது குவளை கண்களும், எள்ளுப்பூ மூக்கும், அழகான உதடுகளும் வரிசையான பல் வரிசையும் அவனுக்குள் ஒரு உன்மத்தத்தை உருவாக்கி விட்டிருந்தன. அவளது அருகே அவளை பார்த்து கொண்டே தன் வாழ்நாளை கழித்து விட மாட்டோமா என்று அவனுக்கு தோன்றியது. அவனது எண்ணத்தை நினைத்து அவனுக்கே வெட்கமாக இருந்தது.மதிமாறனின் ஆளுகையிலிருந்து எப்படியாவது ரகசிய தீவை மீட்க நினைக்கும் தன்னுடைய லட்சியத்திற்கு இடையூறாக ஒரு பெண் வந்திருப்பதையும் அவள் மீது தனக்கு கோபம் வராமல் பரிவும் காதலும் வந்திருப்பதை நினைத்து அவன் குழம்பிக் கொண்டிருந்தான்.

அதே நேரம் அவனது இன்னொரு மனம் வில்லவன் சொன்ன அந்த புதிரான மனிதனைப் பற்றி யோசித்து கொண்டிருந்தது. அவன் தன்னை எதற்காக தேடி அலைந்து கொண்டிருக்க கூடும்? ஒரு வேளை அவன் தன்னை பிடிக்க மதிமாறன் அனுப்பி வைத்த ஒற்றனாக இருப்பானோ என்ற சந்தேகம் அவனுக்கு வந்ததால் தான் அவன் வழக்கமான முறைப்படி அவனை விசாரி என்று வில்லவனுக்கு கட்டளையிட்டான். வில்லவன் தன்னுடைய வழக்கமான முறையில் அந்த புதிய மனிதனை விசாரணைக்கு உள்ளாக்கி இருப்பான் என்று அவனுக்கு தெரியும்.

இப்படி பல்வேறு யோசனைகளுடன் பயணித்த பார்த்திபன் ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த அந்த ஆசிரமத்தை வந்தடைந்தான்.சில்வண்டுகள் ரீங்காரமிட அமைதியாக இருந்த ஆசிரமத்தின் உள்ளே இருந்து கதா காலட்சேப ஓசை மட்டும் மெலிதாக கேட்டு கொண்டிருந்தது. ஆசிரமத்தின் முன்பு இருந்த குதிரை லாயத்தில் தன்னுடைய குதிரையை கட்டி விட்டு எதிரே தென்பட்ட ஓற்றையடி பாதையில் கால்களை எட்டி போட்டான் பார்த்திபன்.வரவர பேச்சு குரல் மட்டும் பெரிதாக கேட்க ஆரம்பித்தது. தீப்பந்த வெளிச்சத்தில் ஒரு மரத்தின் கீழ் ஒரு யோகி உட்கார்ந்து ராம கதையை சொல்லி கொண்டிருந்தார்.

நிறைய சிறுவர்களும் பெரியவர்களும் அதை கேட்டு கொண்டிருந்தனர். "அறுபதினாயிரம் மனைவிகளை கொண்ட ராமனின் தகப்பனாகிய தசரதன் ஓரு மனைவியை கூட சந்தேகப்படவில்லை. ஆனால் ஒரே ஒரு மனைவியை பெற்றிருந்த ராமன் தன் மனைவியை சந்தேகப்பட்டது தான் விதியின் விளையாட்டு " என்ற யோகி இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்த பார்த்திபனைப் பார்த்ததும் "இன்று கதை இத்தோடு முடிந்தது. நாளை மகாபாரதம் .அனைவரும் பத்திரமாக வீட்டுக்கு செல்லுங்கள்" என்றார்.

அவ்வளவு பெரிய கூட்டம் சிறிது நேரத்தில் கலைய ஆரம்பித்தது. சிலர் யோகியின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டு அவர் கொடுத்த திருநீறை வாங்கி கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.

பார்த்திபனைப் பார்த்ததும் "சற்று நேரம் காத்திரு" என்று கண்களால் சைகை செய்தார் யோகி.

அவரது சங்கேதத்தை புரிந்து கொண்டு விட்ட பார்த்திபன் கூட்டம் கலையும் வரை ஒரு ஓரமாக ஓதுங்கி நின்றான்.

கூட்டம் முற்றிலுமாக கலைந்து சென்ற பின்பு அவனைப் பார்த்த யோகி" என் பின்னால் வா" என்றபடி நடக்க ஆரம்பித்தார்.

ஓரு ஓலை குடிலுக்குள் நுழைந்தவர் "வா பார்த்திபா.! உன் வரவுக்காகத் தான் நான்காத்திருந்தேன்" என்றார்.

"வணக்கம் சுவாமி.! இன்று நான் ... " என்று காலையில் துறைமுகத்தில் நடந்த விசயத்தை விளக்கி கூற முயன்றான்.

அதை கை நீட்டி தடுத்த யோகி" நீ எதுவும் சொல்ல வேண்டாம். நடந்த அனைத்தையும் நான் நன்கு அறிவேன். அந்த பெண்ணை நீ இப்போது எங்கே வைத்திருக்கிறாய்?" என்றார்.

பார்த்திபனின் புருவங்கள் வியப்பால் முடிச்சிட்டன. தீவின் மூலை முடுக்குகளில் நடக்கும் அத்தனை விசயங்களையும் மனிதர் உட்கார்ந்த இடத்திலேயே தெரிந்து கொள்கிறாரே என்ற வியப்பு அவனை ஆட்கொண்டது.

"இது எப்படி உங்களுக்கு தெரியும்?"

" என் கேள்விக்கு இதுவல்லவே பதில்?" என்று எதிர் கேள்வி வந்தது யோகியிடமிருந்து .

" மன்னித்து விடுங்கள். அந்த பெண் என் நண்பனின் வீட்டில் பத்திரமாக இருக்கிறாள். அவளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு இந்த விசயங்கள் எப்படித் தெரிகிறது?"

" எல்லாம் இறைவன் எமக்களித்த ஞானதிருஷ்டியால் தான். இந்த ஞானதிருஷ்டியால் நான் கண்டு சொன்னதை உன் அண்ணன் கேட்க மறுத்து தன்னிச்சையாக செயல்பட்டான்.விளைவு மரணம் அவனை கட்டியணைத்து கொண்டு விட்டது. எல்லாம் என் பேச்சை கேட்க மறுத்ததன் விளைவு" என்று புன்னகைத்தார் யோகி.

"வருங்காலத்தை முன்பே அறிந்த நீங்கள் ஓன்றை மட்டும் சொல்ல மறுக்கிறீர்கள்"

"நீ எதைப் பற்றி கேட்க விரும்புகிறாயோ கேள் .இறைவன் சம்மதித்தால் என் மூலமாக உன் கேள்விக்கு தகுந்த பதில் கிடைக்கும். இல்லையென்றால் என்னால் எதுவும் சொல்ல முடியாது"

"நான் வேறு எதைப் பற்றி கேட்க போகிறேன் சுவாமி .எல்லாம் அந்த மார்க்கதரிசியின் புதையலைப் பற்றித்தான்."

"அதை தெரிந்து நீ என்ன செய்ய போகிறாய்?"

"அதை நான் என்னுடைய சுயநலத்திற்காக பயன்படுத்தப் போவதில்லை. அந்த புதையலை வைத்து நான் நிறைய ஆயுதங்களை வாங்க வேண்டும். அதை வைத்து புரட்சி செய்து மதி மாறனை இந்த தீவை விட்டே விரட்ட வேண்டும். இப்போது என் புரட்சி இயக்கத்தில் நிறைய ஆட்கள் இருந்தாலும் அத்துனை பேருக்கும் போதுமான ஆயுகங்கள் இல்லை. அரசாங்க ஆட்களிடம் நாங்கள் கொள்ளையடிக்கும் ஆயுதங்களும் போதுமானவையாக இல்லை"

" உன் நிலைமை எனக்கு புரிகிறது. அந்த புதையல் உனக்கு கிடைத்தால் உன லட்சியம் நிறைவேறி விடும்."

"ஆமாம்"

"இதோ இப்போதே அந்த புதையல் எங்கிருக்கிறது என்று இறைவனிடம் கேட்டு ெசால்கிறேன்"

யோகி தன் கண்களை மூடி யோகத்தில் ஆழ்ந்தார். சற்று நேரத்தில் கண்ணை திறந்தவர் | "அந்த புதையல் இருக்கும் இடத்தை கடவுள் காட்டி விட்டான்" என்று புன்னகைத்தார்.

"எங்கே இருக்கிறது சுவாமி அந்த புதையல்?" என்றான் ஆவலுடன் பார்த்திபன்.

"மாண்டவர் பூமியில் "

"எனக்குப் புரியவில்லை சுவாமி "

"எனக்கும் தான் பு ரியவில்லை. அந்த புதையல் இருக்கும் இடத்தை சுற்றி நிறைய எலும்புகளையும், மண்டையோடுகளையும் தான் இறைவன் காட்டுகிறான். மிகவும் ஆபத்தான இடத்தில் அந்த பு தையல் இருப்பது போல் தெரிகிறது. அந்த புதையலை தேடிப் போய் இறந்தவர்களின் எலும்பு கூடுகளாக அவை இருக்கலாம்"

"மிகவும் புதிராக இருக்கிறது நீங்கள் சொல்வது. சரி நான் இதைப் பற்றி யோசித்துப் பார்க்கிறேன்."

"வேறு விசயம் ஏதாவது?"

"நஞ்சுண்டன் என்ற கடலோடி என்னைப் பற்றிகடைவீதியில் விசாரித்து கொண்டிருந்திருக்கிறான். அவனை என் ஆட்கள் பிடித்து வந்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்."

"புது ஆட்களிடம் எச்சரிக்கையாக இருபார்த்திபா.! அவன் அரசின் உளவாளியாக இருக்கக் கூடும்"

"எனக்கும் அதே சந்தேகம் தான். அதனால் வழக்கமான பாணியில் வில்லவனை விசாரிக்க சொல்லியிருக்கிறேன்."

" நல்லது. நாம் எப்படியாவது மதி மாறனை ஓழித்து இந்த தீவை சுதந்திர நாடாக்க வேண்டும்"

"உங்களுக்கு ஏன் இந்த ஆசை சுவாமி?"

"எனக்கும் மதிமாறனுக்கும் தீர்க்கப்பட வேண்டிய கணக்கு ஓன்று இருக்கிறது. அந்த கணக்கின் விடை அவனது உயிர் " என்று இருளை வெறித் தார் யோகி.

தன்னைப் போலவே யோகியும் மதிமாறனால் பாதிக்கப்பட்டிருப்பார் போலும் என்று நினைத்து கொண்டான் பார்த்திபன்.

யோகியிடம் விடை பெற்று கொண்டு கிளம்பினான் பார்த்திபன். பாதி வழியில் அவன் பயணம் செய்த போது எதிர் பட்டான் வில்லவன். தன் குதிரையை திருப்பிக் கொண்டு பார்த்திபனுடன் இணைந்து கொண்டான் வில்லவன்.

"என்னாயிற்று? அந்த நஞ்சுண்டன் யார் என்று விசாரித்து விட்டாயா?" என்றான் பார்த்திபன்.
"அவன் தன்னை கடலோடி என்கிறான். ஆனால் ஆயுதங்களை விற்க கொண்டு வந்திருப்பதாக சொல்கிறான். ஆளைப் பார்த்தால் ஆயுத வியாபாரி போல் தோன்றவில்லை" என்றான் வில்லவன்.

" அவன் சொல்வது உண்மைதான். நாம் அரசை தாக்கி ஆயுதங்களை திருடி சென்று விடுவதால் மலை நாட்டிலிருந்து ஆயுதங்களை தருவித்திருக்கிறான் மதி மாறன் . அந்த ஆயுத கப்பலின் தலைவன் இவனாகத்தான் இருக்க வேண்டும்.இவன் ஒரு தவறான ஆசாமி. அந்த ஆயுதங்களை நம்மிடம் விற்று பணமாக்க முயற்சி செய்கிறான் என்று நினைக்கிறேன்.மதிமாறனிடம் ஆயுதங்களை ஓப்படைப்பதால் அவனுக்கு எந்த பலனுமில்லை."

"மதிமாறனிடம் அவன் ஆயுதங்களை ஒப்படைத்தாலும் கூட அவற்றை நாம் தானே திருட போகிறோம்?"

"ஆமாம். சரியாக சொன்னாய் " என்று சிரித்த பார்த்திபன்" ஆயுதங்களையே பொறியாக பயன்படுத்தி நம் ஆட்களில் நிறைய பேரை அவன் பிடித்து விடவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மறவாதே" என்றான்.

" இப்படி ஒரு கோணம் இருப்பதை நான் மறந்து விட்டேன்"

"அனைத்து திசைகளிலும் யோசித்தாக வேண்டும் நாம் .இல்லையென்றால் மதிமாறனிடம் அகப்பட்டு விடுவோம்" என்றான் பார்த்திபன்.

இருவரும் இரண்டாம் சாமம் நெருங்கும் சமயத்தில் வில்லவனின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

வழக்கமான சங்கேத முறையில் கதவை தட்டினான் வில்லவன்.

சற்று நேரத்தில் கதவு திறந்தது. திறந்தவன் ஒரு பதினாறு வயது சிறுவன்.

"வில்லவா ! யார் இந்த சிறுவன் ? இவனை இதற்கு முன்பு இங்கே நான் பார்த்ததில்லையே?" என்றான் பார்த்திபன்.

"ஆமாம்.இவன் பெயர் ஆதி. அது நான் வைத்த பெயர் .இவனது உண்மையான பெயர் எனக்கு தெரியாது. இவனுக்கு காது கேட்காது. வாய் பேச முடியாது. சந்திரவதனாவுக்கு உதவியாக இவனை இங்கே கூட்டி வந்திருக்கிறேன்.. இவன் ஊமை என்பதால் விசயம் வெளியே போகாது"

"நல்ல காரியம் செய்தாய்" என்று அவனை பாராட்டினான் பார்த்திபன்.

"இவன் எங்கிருந்து வந்தான் என்று தெரிந்தால் நீ ஆச்சரியப்படுவாய்"

"எங்கிருந்து வந்தான்?"

"தெற்கேயிருந்து."

"அந்த நர மாமிசபட்சிணிகள் வாழும் காடு"

"ஆம். அந்த காடு தான் இவனது பிறப்பிடம்.இவன் அந்த நர மாமிசம் உண்ணும் மலைவாழ் இனத்தை சேர்ந்தவன்"

பார்த்திபன் அந்த சிறுவனை பார்த்தான். அவனது இருண்ட கண்களில் வஞ்சகமும், வெறியும் மின்னுவதை பார்த்திபன் கண்டான்.

புதன், 3 ஆகஸ்ட், 2022

ரகசிய தீவு

அத்தியாயம்19

ரகசிய தீவு

அத்தியாயம் 19

காற்றில் கரைந்தவன்.

நண்பர்கள் மூவரும் குழப்பத்தின் உச்சத்தில் இருந்தனர். தனியறையில் அடைக்கப்பட்டிருந்த நீலனை காணவில்லை. தீப்பந்த வெளிச்சத்தில் அறையை ஆராய்ந்த ஆதித்தன் சன்னல் கம்பிகள் சேதமில்லாமல் அப்படியே இருப்பதை பார்த்தான். " நம்மை போல் நீலன் தப்பி செல்ல எந்த முயற்சியும் செய்யவில்லை" என்றான் யவனனிடம் கம்பிகளை சுட்டி காட்டி.

"ஆமாம். தப்பி செல்ல கொஞ்சமாவது சுய சிந்தனை தேவை. இவன் மதுபோதையில் அல்லவா இருந்தான்? இவனால் எப்படி தப்பி சென்றிருக்க முடியும்.?'' என்றான் யவனன்.

"இறந்து கிடக்கும் இந்த மனிதன் கலை குழுவின் தலைவன் செங்கோடன் என்கிறான் கடோத்கஜன்.இவன் நாளை அல்லவா இங்கே வந்து சேர வேண்டும்? இந்த இரவு நேரத்தில் இந்த சிறைக்குள் எப்படி வந்தான்?" என்றான் ஆதித்தன் கேள்விகுறியோடு.

"இறந்து கிடப்பவனின் வாயில் எதற்கு இத்தனை ரத்த போக்கு? ஒரு வேளை கொடும் சித்ரவதைக்கு ஆளாகி இருப்பானோ?" என்ற யவனன் செங்கோடனின் இரத்தம் வழிந்து உறைந்து போயிருந்த வாயை ஆராய்ந்தான்.

"ஆதித்தா! இது என்ன கொடுரம் ? இவனது நாவை யாரோ அறுத்து விட்டிருக்கிறார்கள். மனித தன்மையற்ற இந்த செயலை யார் செய்திருப்பார்கள்?" என்றான் யவனன் அதிர்ச்சியுடன் .

"வேறு யார் இதை செய்ய முடியும்?மதி மாறனாகத்தான் இருக்க முடியும் " என்றான் ஆதித்தன் யோசனையுடன் .

"நீலன் ஏன் இந்த கொலையை செய்திருக்க கூடாது?" என்றான் கடோத்கஜன் சந்தேகம் நிரம்பிய குரலில்.

"நீ என்ன சொல்கிறாய்?" என்றான் யவனன்.

"மதுபோதையில் இருந்த நீலன் செங்கோடனுடன் வம்பு வளர்த்து சண்டை இழுத்திருக்க வேண்டும். அந்த சண்டையில் செங்கோடனின் நாக்கு துண்டிக்கப்பட்டிருக்கலாம். எனக்கென்னவோ செங்கோடனை கொன்றது நீலன் என்று தான் தோன்றுகிறது."

உளறாதே .! அப்படி நீலன் செங்கோடனை கொன்றால் இந்த அறையிலேயே தான் இருந்திருக்க வேண்டும். அவன் எப்படி தப்பி வெளியேறியிருக்க முடியும்?" என்றான் யவனன்.

" அவன் தப்பவில்லை. தப்புவிக்கப்பட்டிருக்கிறான்." என்றான் ஆதித்தன்

"நீ என்ன சொல்கிறாய்?" என்றான் கடோத்கஜன்.

"நீலனை யாரோ காப்பாற்றி வெளியே கொண்டு போயிருக்கிறார்கள். மூன்றாவது நபர் ஒருவன் நீலனுக்கு உதவி செய்திருக்கிறான். அவன் யார் என்று தெரியவில்லை."

"அதைப் பற்றி நாம் பிறகு யோசிப்போம். இப்போது இங்கிருந்து தப்பி செல்லும் வழியைப் பார்ப்போம்." என்றான் யவனன்.

மூவரும் வந்த வழியாக திரும்பி நடந்தனர். அவர்கள் முன்பு அடைபட்டிருந்த சிறைகூடத்திற்கே திரும்ப வந்து சேர்ந்தனர்.

அவர்கள் வந்து சேர்வதற்கும் கலை குழுவின் கடைசி ஆள் கயிற்றின் மீது நடந்து மறு முனையை அடைவதற்கும் நேரம் சரியாக இருந்தது.

ஆதித்தன் கயிற்றை அவிழ்த்து விடும்படி சைகை செய்தான்.

கடைசி ஆசாமி கயிற்றை அவிழ்த்து விட்டதும் சிறையின் சன்னல் வழியாக கயிறு நீண்டு தொங்கியது. மூவரும் அதன் வழியாக கீழே இறங்க தொடங்கினர்.

மூவரும் சிறையின் பின்பக்கமாக இறங்கியதும் அதற்காகவே காத்திருந்தது போல் எங்கிருந்தோ பறந்து வந்தது ஹேர்குலஸ்.

"நல்ல காரியம் செய்தாய் பறவையே .! " என்று அதை கொஞ்சி முத்தமிட்டான் இப்பாலஸ்.

"நல்ல நேரத்தில் உன் பறவை நமக்கு உதவியாக வந்து சேர்ந்தது. அதற்கு என்னுடைய நன்றியை சொல்லி விடு" என்றான் ஆதித்தன்.

" என்னுடைய நன்றியையும்" என்றான் கடோத்கஜன்.

"கண்டிப்பாக சொல்லிவிடுகிறேன்" என்ற யவனன் அதனுடன் கிரேக்க மொழியில் எதையோ பேசி உரையாடினான்.

"இப்போது நாம் எங்கே போகப் போகிறோம்.?" என்றான் கடோத்கஜன்.

"துறைமுகத்திற்கு. அங்கே என்னுடைய படகு கழுகு நிற்கிறது. அதை எப்படியாவது மீட்டு வர வேண்டும்"

"வந்து?"

" உன் குழுவினரை அதில் ஏற்றிக் கொண்டு நாம் கிளம்ப வேண்டும்"

"எங்கே?"

"மதிமாறனின் பார்வை படாத இடத்திற்கு "

"அப்படி ஒரு இடம் இந்த தீவில் இருக்கிறதா?"

"ஏன் இல்லை ? " என்றான் யவனன் எதிர் கேள்வியோடு.

"அப்படி ஒரு இடம் இருக்கிறதா என்ன?" என்றான் ஆதித்தன் வியப்போடு

"மதிமாறனின் பார்வை மட்டுமல்ல. காலடிபடாத இடம் கூட இந்த தீவில் இருக்கிறது. அந்த இடத்தில் மதிமாறன் கால் வைக்கவே அஞ்சுவான்"

"அப்படி பயங்கரமான ஒரு இடமா?"

"ஆமாம். நீ அசைவமா?சைவமா?"

"இதென்ன சம்மந்தம் இல்லாத கேள்வி. "

"சம்பந்தம் இருக்கிறது. என் கேள்விக்கு பதில் சொல் "

"அசைவம்"

"இது வரை நீ ஆடு, கோழி போன்றவற்றை தின்றிருப்பாய். நான் சொல்லும் இடத்தில் இருப்பவர்கள் சுத்தமான அசைவம். அவர்கள் நம்மை உயிரோடு தின்று விடுவார்கள் .நர மாமிச பட்சிணிகள் உலாவும் காடுகள் நிறைந்த தெற்கு பகுதி தான் நான் சொல்வது." என்றான் யவனன்.

கடோத்கஜனின் உடல் சில்லிட்டது.

"எமனின் திசை தெற்கு " என்று முணுமுணுத்தன அவனது உதடுகள்.

"இந்த விசயம் உனக்கு எப்படி தெரியும்?" என்றான் ஆதித்தன்.

" எல்லாம் செவி வழி செய்தியாக கேள்விப்பட்டது தான். இப்போதைக்கு நாம் பதுங்கி கொள்ள இதை விட சிறந்த இடம் கிடைக்காது" என்றான் யவனன்.

"சரி. உன்னுடைய யோசனையை பரிசீலனை செய்வோம். இப்போதைக்கு துறைமுகத்திற்கு சென்று கழுகை மீட்டு வரும் வழியை பார்ப்போம்" என்றான் ஆதித்தன்.

அதே நேரம் தீவின் வேறு ஒரு இடத்தில் இருந்த கைவிடப்பட்ட பாழடைந்த கட்டிடம் ஒன்றின் இருளடர்ந்த பகுதி ஓன்றில் கை கால்கள் கட்டப்பட்டு நாற்காலியில் அமர வைக்கப்பட்டி ருந்தான் நஞ்சுண்டன் அவனது முகம் அடி வாங்கி வீங்கியிருந்தது. அவனுக்கு எதிரே நின்று கொண்டிருந்தவன் தனது வலது கையில் துணி ஓன்றை சுற்றி கட்டியிருந்தான். அதில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

"இது வரை பல முறை உன்னை கேட்டு விட்டேன். உண்மையை சொல்ல மறுக்கிறாய்" என்றான் அவன்.

"நான் உண்மையைத்தான் சொல்கிறேன். நீ தான் என் வார்த்தைகளை நம்ப மறுக்கிறாய்" என்றான் நஞ்சுண்டன் தன் வாயிலிருந்த சிவப்பு திரவத்தை துப்பியபடி.

"யார் நீ? எதற்காக சிகப்பு முகமூடியை தேடிக் கொண்டிருந்தாய்?" என்றான் அவன்.

நஞ்சுண்டன் ஜாக்கிரதையடைந்தான். தன்னை தூக்கி வந்தவர்கள் அரசாங்க ஓற்றர்களா இல்லைதான் தேடி திரியும் சிவப்பு முகமூடியின் ஆட்களா என்று அவனுக்கு உறுதியாக தெரியவில்லை. அதனால் இரண்டு பேருக்குமே நடு வாந்தரமாக பதில் சொல்ல வேண்டும் என்று மனதிற்குள் நினைத்து கொண்டான் அவன்.

"நான் தான் முன்பே பல முறை கூறி விட்டேனே? என் பெயர் நஞ்சுண்டன் நான் ஒரு கப்பல் மாலுமி "

" கேட்டு சலித்த பதில் தான். ஆனாலும் பதிலில் எந்த மாற்றமும் இல்லாமல் அதையே கிளிப்பிள்ளை போல் சொல்கிறாய். ஆனால் சிகப்பு முகமூடியை ஏன் தேடினாய் என்பதற்கு மட்டும் பதில் சொல்ல மறுக்கிறாய்"

"நான் அவனை சந்திக்க வேண்டும் என்று நெடுநாளாக ஆசைப்படுகிறேன். அதை எப்படி சாத்தியப்படுத்தி கொள்வது என்று தெரியாமல் முட்டாள் தனமாக கடைவீதியில் விசாரித்து விட்டேன். தயவு செய்து என்னை மன்னித்து விட்டு விடுங்கள்"

"அப்படியெல்லாம் எளிதாக உன்னை மன்னித்து விட்டு விட முடியாது."

"என்னை இப்படி தூக்கி வந்து அடித்து துன்புறுத்துகிறீர்களே? நீங்கள் யார்? சிகப்பு முகமூடியை பற்றி விசாரிப்பது அவ்வளவு பெரிய குற்றமா?"

" குற்றம் தான். ஒரு தேடப்படும் குற்றவாளியை தேடி திரியும் உன்னை நாங்கள் சந்தேகிப்பது நியாயம்தானே?"

"அப்படியானால் நீங்கள் சிகப்பு முகமூடியை பிடிக்க நினைக்கும் அரசாங்க ஆட்கள் இல்லையா?"

"இல்லை. நாங்கள் சிகப்பு முகமூடியின் ஆட்கள் ."

"பயப்படாதீர்கள். நான் நீங்கள் நினைப்பதுபோல் அரசாங்கத்தின் உளவாளியோ ஒற்றனோ இல்லை."

"அது சரி. நீ ஏன் சிகப்பு முகமூடியை சந்திக்க நினைக்கிறாய்?"

"அதை நான் சிகப்பு முகமூடியிடம் தான் சொல்வேன். நிச்சயமாக சொல்கிறேன். நான் உங்களின் நண்பன் தான்.எதிரியல்ல. என்னை நம்புங்கள்"

"இன்னும் சிறிது நேரத்தில் தலைவர் இங்கே வருவார்."

"முதலில் என் கை கால் கட்டை அவிழ்த்து விட்டு விட்டு குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள். நான் வெகுவாக களைத்து போயிருக்கிறேன்."

கட்டுகள் களையப்பட்டு கொடுக்கப்பட்ட தண்ணீரை கடகடவென்று குடித்து முடித்தான் நஞ்சுண்டன் .

சற்று நேரத்தில் சிகப்பு நிறமுகமூடி அணிந்த ஒரு மனிதன் அந்த அறைக்குள் பிரவேசித்தான்.

அவனைப் பார்த்ததும் எழுந்து நின்ற நஞ்சுண்டனைப் பார்த்து "யார் நீ? எதற்காக என்னைப் பார்க்க விரும்புகிறாய்?" என்றான் அவன் கணீர் குரலில்.

"நான் ஒரு மீகாமன். என் பெயர் நஞ்சுண்டன் .நான் உங்களுக்கு தேவையான சில பொருட்களை விற்க வந்திருக்கிறேன். அது தெரியாமல் உங்கள் ஆட்கள் என்னைப் பிடித்து அடித்து சித்ரவதைகள் செய்து விட்டார்கள்."

அதற்காக நான் உன்னிடம் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. இது எதிரிகள் யார் நண்பர்கள் யார் என்று தெரிந்து கொள்ள வழக்கமாக நடக்கும் சோதனை தான்.இதில் என் நண்பர்களை குற்றம் சொல்ல ஓன்று மில்லை."

"iஉங்கள் சூழ்நிலை எனக்கு புரிகிறது"

" நல்லது. எங்களிடம் விற்க நீ எதைக் கொண்டு வந்திருக்கிறாய்?"

"உங்களுக்கு மிகவும் தேவையான பொருட்கள் தான். அவற்றை நீங்கள் மறுக்கவே மாட்டீர்கள்"

"முதலில் விசயத்தை சொல். பிறகு அவற்றை வாங்குவதா வேண்டாமா என்று நான் சொல்கிறேன்."

"நீங்கள் செய்ய போகும் புரட்சிக்கு ஏராளமான ஆயுதங்கள் தேவை. அவற்றை நீங்கள் அரசாங்க காவல் படைகளை தாக்கி அவர்களிடம் இருந்து எடுத்து கொள்கிறீர்கள். இனி அந்த மாதிரி கொள்ளையடிக்க வேண்டிய சூழ்நிலை இராது. ஏனென்றால் என்னிடம் ஏராளமான ஆயுதங்கள் இருக்கின்றன. நான் அவற்றை உங்களிடம் விற்க விரும்புகிறேன்."

"அந்த ஆயுதங்கள் உனக்கு எப்படி கிடைத்தது?"

"அது வந்து .. அது எப்படியோ கிடைத்தது. அதைப் பற்றி உங்களுக்கு என்ன கவலை?" என்றான் நஞ்சுண்டன் .

"நீ சொன்னதை பற்றி நான் யோசித்து முடிவெடுக்க வேண்டும். இவனை நன்றாக கவனித்து கொள்ளுங்கள். நாளை காலை இவனை மீண்டும் சந்திக்கிறேன்" என்ற சிகப்பு முகமூடி அங்கிருந்து வெளியே வந்தான். வெளியே காத்திருந்தவன் " வில்லவா.! இது என்ன விளையாட்டு. சிகப்பு முகமூடியை அணிந்து கொண்டு நீ ஏன் பார்த்திபனைப்போல் நடிக்கிறாய்? பார்த்திபன் எங்கே போனான்?" என்றான் படபடப்புடன்.

" எல்லாம் காரணமாகத் தான். நாம் பிடித்து வந்தவன் நல்லவனா கெட்டவனா என்று நமக்கு தெரியாது. அவனை ஆழம் காணவே இந்த ஆள் மாறாட்டம் .இரவின் முதல் சாமம் துவங்கி விட்டது.பார்த்திபன் எங்கிருப்பான் என்று நமக்கு நன்றாக தெரியும். நான் அவனை சந்திக்க செல்கிறேன். இவனை கவனமாக பார்த்து கொள்ளுங்கள். இவனிடம் ஏதோ ஒரு தப்பு உள்ளதாக என் உள்ளுணர்வு சொல்கிறது " என்ற வில்லவன் குதிரையை அங்கிருந்து விரட்டினான்.