நான் மறுபடியும் அவனைப் பார்ப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை.ஆனால் அவன் அதை எதிர்பார்த்திருந்தான்.அதை தண்டனை அறிவிப்பின் போது என்னிடம் சொல்லவும் செய்தான்.தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டால் கதறி அழும்,முகம் இறுகும் குற்றவாளிகளை என் போலீஸ் வாழ்க்கையில் பலமுறை கண்டிருக்கிறேன்.இவன் முகத்தில் எந்த சலனத்தையும் பார்க்க முடியாதது எனக்கு குழப்பத்தைதான் தந்தது.!
ஒன்றல்ல.!ஏழு கொலைகள்! அதற்கு தூக்கென்பது குறைந்த பட்ச தண்டனைதான்.அவனால் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் விலை மாதர்கள்.சமூகத்தின் பணம் பொருந்திய பெரிய மனிதர்களில் ஒருவனான அவன் இந்த குற்றங்களை செய்திருப்பான் என்பதை யாராலும் நம்ப முடியவில்லை.எல்லா குற்றவாளிகளையும் போல் கழிசடையான ஒரு ப்ளாஷ் பேக் அவனுக்கும் இருக்கத்தான் செய்தது.ஆனால் சாட்சியங்கள் அவனுக்கு எதிராக இருந்து தூக்கு மேடைக்குக் கொண்டுவந்து நிறுத்தி விட்டது.
கொலை செய்யப்பட்ட பிணங்களின் அருகே ரோஜா வை வைப்பது அவன் வழக்கம்.!என்னுடைய டிபார்ட்மெண்ட் அதனால் அவனுக்கு ரெட்ரோஸ் கில்லர் என்று பெயரிட்டிருந்தது.நகரத்தின் தோல்வி காணாத வக்கீல் இவனுக்காக வாதாடி தோற்றுப் போனான்.இவனது ஒரிணச்சேர்க்கை ஆண் நண்பன் இவனை காப்பாற்ற பணத்தை தண்ணீராக செலவு செய்து கொண்டிருந்தான்.ரெட்ரோஸ்கில்லர் பிடிபட்டு தண்டனை அறிவிக்கப்பட்டு நகர மக்களும்,நானும் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தோம்.அதை குலைப்பதைப் போல் இன்று காலையில் நடந்தது ஒரு கொலை.இறந்தது ஒரு விலைமாது.அருகே மறக்காமல் ஒரு ரோஜா பூ.!
பிடிபட்ட இவன் நிரபராதியாக இருந்து உண்மைக்குற்றவாளி வெளியே சுதந்திரமாக சுற்றுகிறானோ என்ற சந்தேகம் எனக்கு வந்தது.மனம் லேசாக சலனமடைந்தது.அதை தீர்த்துக்கொள்ளவே இவனைப் பார்க்க வந்திருக்கிறேன்.!
"வாங்க கமிசனர் சார்.!உங்களை நான் எதிர்பார்த்தேன்.!"
"என்னை எதிர் பார்த்தேன் என்று எதை வைத்து சொல்கிறாய்.?"
"முதலில் என் கேள்விக்கு பதில்.!மைக்,கேமரா எதையாவது ஒளித்து வைத்துள்ளீர்களா.?"
"இல்லையே.!"
"இந்நேரம் இன்னோரு கொலை விழுந்திருக்க வேண்டுமே.?"
"அதை எப்படி நிச்சயமாக சொல்கிறாய்.?"
"என்னோட ஐடியா அதுதான்.!இதுவரை எல்லா கொலைகளையும் ரோஜாபூ அடையாளம் வைத்து நான்தான் செய்தேன்.என்றாவது ஒருநாள் நான் போலிசில் மாட்டினாலும் அதே அடையாளத்துடன் கொலை தொடர்ந்தால் நான் நிரபராதி என்றே கருதப்பட்டு விடுவிக்கப்படுவேன்.மாறாக என் கைதுக்குப் பின்னால் கொலை நடக்கவில்லையென்றால் கொலைகாரன் நான்தான் என்று உறுதியாகும்.!"
"அப்படியானால் இந்த கொலையை செய்தது யார் என்று உனக்குத் தெரியும்.!"
"உறுதியாகத் தெரியாது.!குத்து மதிப்பாக சொல்லவா.?"
"சொல்.!கேட்போம்.!"
"கேஸில் தோற்க விரும்பாத என் பிடிவாத வக்கீலாக இருக்கலாம்.இல்லை என் கே நண்பனாக இருக்கலாம்.!என்னால் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிகொலைகாரனாக கூட இருக்கலாம்.!"
"நன்றி.!"
"எதற்கு.?"
"உண்மையை ஒப்புக்கொண்டதற்கு.!இன்றிலிருந்து உன் வக்கீலையும்,நண்பனையும் கண்காணிக்க ஆட்களை நியமிக்கப் போகிறேன்.அவர்களின் போன் பேச்சு ரிகார்ட் செய்யப்படும்.!எந்த வாடகை கொலையாளியையும் அவர்களில் தொடர்பு கொள்ள முடியாது.!இன்று நடந்த கொலை பத்திரிக்கையில் எப்படி வந்திருக்கிறது பார்.!"
நான் பேப்பரை அவனிடம் கம்பிகள் வழியே நீட்டினேன்.அவன் பிரித்தான்."கள்ளக்காதலனால் பெண் குத்திக்கொலை.!"
அவன் அதிர்ந்து கொண்டிருந்தான்.என் அதிகாரத்தை பயன்படுத்தி நான் மாற்றிய செய்தி.நான் சிரித்தபடி அந்த ரோஜாவை நீட்டினேன்.
"உன் கொலைகாரனின் கடைசி ரோஜா."!
அவன் முகம் இருளடைய ஆரம்பித்தது.நான் விசிலடித்தபடி வெளியேறினேன்.!
வெள்ளி, 4 செப்டம்பர், 2015
கடைசி ரோஜா.!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக