ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

புரிதல்.!

"இது நல்லாருக்கில்லப்பா.?"
அந்த நாய் பொம்மை நன்றாகத்தான் இருந்தது.பையனின் ரசனையை ரசித்தாலும் வாங்கித்தர தன்னிடம பணம் இல்லை என்று நினைக்கும் போது ஆயாசமாக இருந்தது.வெயில் தாங்க முடியாமல் இந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் நுழைந்தது முதல் தவறென்று அவனுக்குத் தோன்றியது.

"நல்ல பொம்மை சார்! சாவி கொடுத்தால் குரைக்கும்."விற்பனையாளன் சாவி கொடுக்க நாய் "லொள்! "லொள் "என்று குரைக்க ஆரம்பித்தது.விற்பதற்கென்றே பயிற்சி தரப்பட்ட அவனை குற்றம் சொல்ல எதுவுமில்லை.பக்கத்தில் வேறு யாரோ அழைக்க அந்த மனித இயந்திரம் "ஒரு நிமிசம் சார்!"என்று நகர்ந்தது பெரும் நிம்மதியளித்தது.

"போலாம்."

"இது வாங்கிக் கொடுப்பா! போலாம்."

"அப்பாக்கு சம்பளம் வந்தவுடன் வாங்கித்தருகிறேன்!"

"நீ வாங்கித்தர மாட்டாய்.!பொய் சொல்கிறாய்.!"

"இல்லை.!சத்தியமா வாங்கித் தருகிறேன்.!"

பொம்மையை வைத்து விட்டு வாசல்வரை வந்தவன் திரும்பவும் ஒடி பொம்மையை எடுத்துக்கொண்டு விட்டான்.அவனுக்கு சங்கடமும் எரிச்சலும்,கோபமும் கலந்துகட்டி எழுந்தது.

"வை அதை.!போலாம் வா.!"

"எனக்கு  இப்பவே வேணும்.!வாங்கித்தாப்பா.!"

"எனக்கு  இப்பவே வேணும்.!"பையன் அழத்துவங்கி விட்டான்.அவனது உரத்த குரல் அங்கிருந்த அமைதியை குலைத்தது.எல்லோரும் தன்னையே கவனிக்கத்துவங்க அவனை கூச்சம் பிடுங்கித்தின்றது.மனித இயந்திரம் இவனை திரும்பிப் பார்த்தது.அவனது கண்களில் நாய் பொம்மை விற்றுவிடும் என்ற நம்பிக்கை ஒளிந்திருந்தது.

"பாத்ரூமுக்கு வா.!வாங்கித்தருகிறேன்.!"

"நெஜமா.?"

"நெஜமா.!"
நெருங்கிய விற்பனையாளனிடம் பாத்ரூம் இருக்கும் இடத்தை கேட்டு விட்டு பையனை பிடித்து இழுத்தான்.வேண்டா வெறுப்பாக நாய் பொம்மையை வைத்துவிட்டு முகத்தில் மெல்லிய சிரிப்போடு தகப்பனைத் தொடர்ந்தான் மகன்.தனக்கான ஏமாற்றம் பாத்ரூமில் காத்திருப்பது அவனுக்குத் தெரியாது.மனித இயந்திரத்தின் முகத்திலும் மெல்லிய சந்தோஷம் பரவியது.நாய் பொம்மையை வைத்துக் கொண்டு காத்திருக்கத் துவங்கினான்.
நல்லவேளை கழிவரையில் யாரும் இல்லை.
பையனை அடிக்கவும் அவனுக்கு மனம் வரவில்லை.வாங்கித்தர இயலாத தன் மீதான கழிவிரக்கம்.,சுய பச்சாதாபம் எல்லாமும் கண்ணீராய் வழியலாயிற்று.தகப்பனின் முதுகு குலுங்கலும்,கண்ணீரும் பையனை ஏதோ செய்திருக்க வேண்டும்.பையனுக்கும் கண்ணீர் வரும் போல் இருந்தது.
"ஏம்பா அழுவுற.?"
பையனின் குரல் கம்மத் தொடங்கியது.தன் கஸ்டத்தை பையனிடம் சொல்லிப் புரிய வைக்க முடியுமா என்று அவனுக்குத் தெரியவில்லை.அவன் தலையை கோதியபடி
"அப்பாக்கு வேலை இல்லை.!ரொம்ப கஷ்டத்துல இருக்கேன்.நீ கேட்டதை வாங்கித்தர்ர அளவுக்கு அப்பாக்கிட்ட பணம் இல்லை.!என் நிலமை புரியாம நீ அடம் பிடிக்கிறாய்.?"எப்படியோ பேசி முடித்தான்.
"அழுவாதப்பா.!எனக்கும் கண்ணீர் வருது.!இந்த நாய் பொம்மை எனக்கு வேண்டாம்பா.!வேலைக்கு போய் வாங்கிக் கொடுப்பா.!நான் வெயிட் பண்றேன்."!

"இந்த நாய் பக்கத்து வீட்டு வாசு நாய் மாதிரி வருமா.?"

"ஆமா! அது திருடனையெல்லாம் பிடிக்குமே.இந்த நாய் பிடிக்காது இல்லப்பா."!
அவர்கள் பேசிக்கொண்டு மறுபடியும் கடைக்குள் வந்த போது விற்பனையாளன் நாய் பொம்மையோடு காத்திருந்தான்.
பையன் "நாளைக்கு வாங்கிக்கிறோம்.!"என்றான்.மனித இயந்திரம் தன் தோல்வியை நம்பமுடியாமல் நின்று கொண்டிருந்தது.கடையை விட்டு வெளியேறும்வரை அவன் நாய் பொம்மையை திரும்பிக் கூட பார்க்கவில்லை.இருவரும் கை கோர்த்துக் கொண்டு வெளியே வந்த போது வெம்மை தணிந்து தென்றல் வீச ஆரம்பித்தது.கிடைக்கிற வேலைக்கு போகனும் என்று அவன் நினைத்துக் கொண்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக