சனி, 15 ஆகஸ்ட், 2015

தமிழில் தெலுங்கு சினிமாவின் இரண்டாவது இன்னிங்ஸ்.!

ஆந்திராவும்,தமிழகமும் பிளவுபடாத மெட்ராஸ் ஸ்டேட்டாக இருந்த போது தேவதாஸ் படத்தில் நாகேஸ்வரராவ்,வண்ணக்கிளியில் பிரேம் நசிர் போன்ற மற்ற மொழி நடிகர்கள் தமிழில் நடிப்பது வழமையாக இருந்தது.!அதையும் ஏற்றுக் கொள்ளும் பெரிய மனம் கொண்டவர்கள் தமிழ் ரசிகர்கள்! ஆந்திரா என்கிற மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்ட பின்பும்கூட தெலுங்கு பட ஷிட்டிங்குகள் சென்னையிலேயே நடந்து வந்தன.!அடுத்தடுத்து ராமோஜிராவ்,அன்னபூர்ணா ஸ்டுடியோக்கள் உருவான பின் தெலுங்கு  ஷிட்டிங்குகள் அங்கு இடம் மாறின.!ஏவிஎம் ஸ்டுடியோவின் வீழ்ச்சிக்கு மறைமுக காரணமாக இது அமைந்தது.!

ஆந்திராவில் மாஸ் ஹீரோவாக உருவாகிக் கொண்டிருந்த சிரஞ்சீவியின் டப்பிங் படங்கள் தொடர்ச்சியாக வெளியானாலும் தமிழ் படங்களை பெரிதாக பாதிக்கவில்லை.!ஆறு பைட்,ஆறு பாடல்கள்,நடுவே கொஞ்சமாய் கதை,மின்னல்வேக நடனம் என்று சிரஞ்சீவி தமிழ் ரசிகர்களை நன்றாகவே திருப்திபடுத்தினார்.ஸ்டேட் ரவுடி,சென்ட்ரல் ரவுடி,அசெம்பிளி ரவுடி என்று படத்தின் பெயர் மட்டும் ஒரு மார்க்கமாக இருப்பது அப்போதைய படங்களின் டிரேட்மார்க்காக இருந்தது.!நடுநடுவே விட்டாலாச்சார்யாவின் மாயமோதிரம்,ஜெகன்மோகினி போன்ற படங்கள் பேய்களுக்காகவும்,ஜெயமாலினியின் கவர்ச்சிக்காகவும்,மாயாஜாலகாட்சிகளுக்காகவும் ரசிக்கப்பட்டன.!குளத்தில் எரிந்த கல்லென சிறு சலனத்தை உருவாக்கியது ஆருர்தாஸ் வசனத்தில் விஜயசாந்தி நடித்த பூஒன்று புயலானது.!அது பெரிதான பாதிப்புகளை ஏற்படுத்தாத நிலையில் குளத்தில் மலையை எரிந்த அதிர்வை உருவாக்கியது ராஜசேகரின் இதுதாண்டா போலீஸ்.!

பாரதிராஜாவின் புதுமைபெண்ணில் வில்லனாக அறிமுகமாகி தோற்றுப்போன ராஜசேகர் இந்த படத்தில் அந்த குறையை தீர்த்துக்கொண்டார்.அரசியல்,ஆக்சன் என்ற புது காம்பினேசனில் ஆந்திராவில் அதிரிபுதிரி ஹிட்டடித்த இந்தபடம் அதற்கும் குறையாமல் தமிழிலும் ஹிட்டடித்தது.!அடுத்தடுத்து டப்பான எங்கடா உங்க எம்எல்ஏ.!ஆம்பிளை போன்ற ராஜசேகரின் அத்தனை படங்களும் நேரடி தமிழ்பட வசூலை மீறின.அடா,புடா என்ற. மரியாதையற்ற டைட்டில்கள்  இந்த படங்களுக்கு சூட்டப்பட்டு ரசிகர்களை வசிகரித்தன.!ஆக்ரோஷமான காட்சியமைப்புகளும்,சரளமான கெட்டவார்த்தைகளும் அரங்கில் ஆரவார வரவேற்பை பெற்றன.!இந்த ஜோதியில் கலக்க வந்த வைஜெயந்தி ஐபிஎஸ் தன் பங்குக்கு ஜுரத்தை அதிகரித்தது.ராஜசேகரும்,விஜயசாந்தியும் இரட்டை குழல் துப்பாக்கியென தமிழ்திரையில் முழங்கினர்.சுவர் முழுவதும் இருவரும் துப்பாக்கியோடு காட்சிதந்தனர்.!இந்த படங்களின் பாடல்களுக்கு தமிழில் போதுமான வாய்ப்புக் கிடைக்காத தமிழ் கவிஞர்கள் பாட்டெழுதி கல்லாவை நிரப்பியது தனிக்கதை!இது சென்னையா,ஹைதராபாத்தா என்ற குழப்பம் பலருக்கு ஏற்பட்ட காலகட்டமது.!

அரசியல் +ஆக்ஸன் என்ற பார்முலாவை விஜயகாந்த் கையிலெடுத்தவுடன் ராஜசேகர் படங்களுக்கான தேவை குறைந்தது.!ஆனால் நேர்எதிராக கேப்டனின் படங்கள் தெலுங்கில் டப்பாகி  வசூலை குவித்தன.வரலாறு ரிவர்ஸானது.!இது கேப்டனின் முறை.ஆந்திரர்கள் அள்ளிச்சென்ற பணத்தை கேப்டன் வெற்றிகரமாக மீட்டார்.கோபத்தில் கண் சிவப்பதும்,குட்டிச்சுவறின் மீது கால் வைத்து உதைக்கும் லெக் பைட்டும் எதையும் மிகைப்படுத்தி ரசிக்கும் தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்துப் போனதில் ஆச்சரியமில்லை.!படங்களின் வெற்றி தெலுங்கில் நேரடியாக நடிக்க கேப்டனை அழைக்கும் அளவுக்குப் போனது.!பச்சைதமிழன் என்று காட்டிக்கொள்ளவோ,பின்னாளில் அரசியலில் பிரச்சனை வரலாம் என்றோ ஏதோ ஒரு காரணத்தால் கேப்டன் நடிக்க மறுத்துவிட்டார்.கேப்டனின் தாய்மொழி தெலுங்கு என்பது கவனிக்க வேண்டிய விசயம்.!

நாகார்ஜுன்,வெங்கடேஷ் போன்றவர்களின் ஒன்றிரண்டு படங்கள் டப்பாகிக் கொண்டிருந்தபோது தெலுங்கு சினிமா தன் இரண்டாவது இன்னிங்ஸை அருந்ததி என்ற படத்தின் மூலம் தொடங்கியது.கவர்ச்சி கதாநாயகியாக இருந்த அனுஸ்காவின் இன்னொரு முகமான ஆக்ஸனை இந்தப்படம் வெளிக்கொண்டு வந்தது.கதாநாயகியை மையமாக கொண்ட படங்களை தொலைத்த சினிமா அதை இப்போது தேட ஆரம்பித்தது.இரண்டாவது இன்னிங்ஸின் தவிர்க்க முடியாத சிக்ஸரை ராஜ்மவுலி தன் பாகுபலியில் தொடங்கி வைத்துள்ளார்.அடுத்த சிக்ஸராக பாகுபலி 2 தயாராகிக் கொண்டிருக்கிறது.அடுத்த போர் அனுஷ்காவின் ருத்ரமாதேவி காத்திருக்கிறது.பிரின்ஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் மகேஸ்பாபு வின் சமீபத்திய சிரிசம்முடு படம் தமிழில் செல்வந்தன் என்று டப்பாகி கவனம் ஈர்த்துள்ளது.மகேஸ்பாபு நேரடி தமிழ்படத்தில் தலைகாட்ட இருப்பது அவரின் டூப்ளிகேட்டான புலிக்கு(விஜய்.) கிலியை ஏற்படுத்தியுள்ளது இங்கே குறிப்பிட வேண்டிய விசயம்.!இந்தமுறை தெலுங்கு சினிமா தமிழ் திரையில் நீண்ட இன்னிங்ஸை விளையாடும் போல் தெரிகிறது.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக