ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

எதிர்பாராதது!

அவன் தனக்கான இரை இவள்தான் என்று முடிவு செய்து விட்டான்.அவள் நல்ல சிவந்த நிறம்.பின்பக்கம்வரைநீண்டிருந்த கருத்த முடி.கேரளாவாக இருக்கலாம் என்று அவள் ஊரை யூகம் செய்ய வைத்தது.நெற்றியில் சிறிய திருநீர் கீற்று.அவள் ஹேண்ட்பேக்கை  மாட்டிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.அவன் தன் பேண்ட் பாக்கெட்டை தொட்டுப்பார்த்துக்கொண்டான்.ஜெர்மன் தயாரிப்பான ஸ்டில்லடோ கத்தி பத்திரமாக இருந்தது.பொறு.!சற்று நேரத்தில் உனக்கான இரை கிடைத்து விடும்.நேற்று கத்திக்கு கொஞ்சம் வேலை அதிகம்தான்.தெருவில் சோடியம் விளக்குகள் சோகையாய் ஒளிவீச ஆரம்பித்திருந்தன.மெல்ல இருள் கவிய ஆரம்பித்திருந்தது.காலையிலேயே அவள் வரும்பாதையை பார்த்து வைத்திருந்தான்.அவளுக்கு முன்பாக அவன் ஆள் அரவமற்ற இடத்தில் காத்திருக்க வேண்டும்.அவன் வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

தனக்கான தேர்ந்தெடுத்த இடத்தில் காத்திருக்க ஆரம்பித்தான்.தன்னுடைய செயலை நினைத்து அவனுக்கே பயமாக இருந்தது.சீக்கிரமாக இதிலிருந்து விடுபட வேண்டுமென நினைத்துக் கொண்டான்.அவள் நடந்து வரும் ஒசை அருகாமையில் கேட்டது.ஸ்டில்லடோவை கையில் தயாராக வைத்துக்கொண்டு வேட்டைக்குத் தயாரானான். வழியை மறித்துக் கொண்டு இருளில் அவன் வெளிப்பட்டதை அவள் எதிர் பார்த்திருக்கவில்லை.அலற நினைத்தவளின் திறந்த வாயில் கொண்டு வந்திருந்த துணியை அடைத்தவன் கழுத்தில் கத்தியை வைத்து "கத்தாதே.!"என்றபடி இருட்டுக்குள் அவளை இழுத்தான்.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் அழுது கொண்டிருந்த அவளை விட்டுவிட்டு அவன் இருளில் கரைந்தான்.

விக்,டோபா தயாரிக்கும் கடையை சாத்த ஆரம்பிக்கும்போது அவன் சரியாக வந்து விட்டான்."இன்னைக்கு எவ்வளவு.?"என்றான் கடைக்காரன்.
"நீங்கதான் சொல்லனும்.!"என்று கையிலிருந்த முடி நிறைந்த பையை நீட்டினான்.தராசில் எடையை போட்டவன் "ஒரு கிலோ இருக்கு.!இந்தா மூவாயிரம்."என்று ரூபாய்களை கொடுத்தவன்,"இன்னும் எத்தனை பொண்ணுககிட்ட முடிய கட் பண்ணி விக்கப் போகிறாய்.!சீக்கிரமா எதாவது வேலய தேடிக்கோ.!"என்றான்.

"போய்த்தான் ஆகனும்.!இன்னைக்கு கேரளாக்காரின்னு நெனச்சு ஒருத்தி சடைய அறுத்தேன்.அப்புறம்தான் அது சவுரின்னு தெரிஞ்சது.அதுக்கே அழுது தீர்த்துட்டா."
அவன் நாளைக்கு ஏதாவது வேலைக்குப் போகனும் என்று நினைத்தவனாக நடக்க ஆரம்பித்தான்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக