செவ்வாய், 8 செப்டம்பர், 2015

இறவாத மனிதன்.!

"அப்பாடா என்ன வெய்யிலு.!"உள்ளே வந்த அனிதா டேபிள் மேல் இருந்த தண்ணீர் டம்ளரை மடமடவென குடித்தாள்.
அனிதா.!என்னுடைய செக்ரட்ரி.தனியாகவே துப்பறியும் திறமை பெற்ற திறமைசாலி.இப்போதுகூட ஒரு கேஸை பைனல் பண்ணிவிட்டுத்தான் வந்திருக்கிறாள்.
"ஆமாம்.!இன்னைக்கு வெயில் கொஞ்சம் அதிகம்தான்.!"

"உங்களுக்கு என்ன பாஸ்.!ஏசில உக்காந்துகிட்டு ஜாலியா இருக்கீங்க.!"

"சவாலான கேஸ் ஏதாவது வேணும்னா சொல்லு.!ரெடி பண்றேன்.!"

"நான் பர்சனலா ஒரு கேஸை டீல் பண்ணீட்டு இருக்கேன்.கேட்டா அதிர்ச்சியாயிருவீங்க.!"

"அப்படியா.!சொல்லு கேட்போம்.!"

"காளிப்பட்டி ஜமீன் நினைவிருக்கா பாஸ்.!"

"ம்.ஞாபகம் இருக்கு.!அவங்க குடும்ப நகை ஒன்னை காணோம்னு ஒரு கேஸ் வந்துச்சே.!அதைக்கூட நீதான் டீல் பண்ணியதாக நினைவு.!"

"எக்ஸாக்ட்லி.!நான்தான் அந்த கேஸை டீல் பண்ணேன்.அப்பதான் இந்த கேஸை பர்சனல் இண்ரஸ்ட்ல கண்டு பிடிக்க ஆரம்பிச்சேன்.!ஒரு மனிதனால் அதிகபட்சம் எத்தனை வருசம் உயிரோட வாழ முடியும்.?சொல்லுங்க பாஸ்.!"

"அதிகபட்சமா நூற்றிஇருபது வருடம் வாழ முடியும்."

"இருநூத்தி ஐம்பது வருசமா ஒரு மனிதன் வாழ்ந்துகிட்டு இருக்கான்னு சொன்னா நம்புவீங்களா.?

"ரிடிகுலஸ்! சான்ஸே இல்லை.!"

"உண்மை பாஸ்.!"

கையிலிருந்த பைலை எடுத்து விரித்தாள்.
"கள்ளிப்பட்டி ஜமீனோட முப்பாட்டனார் மகேந்திர பூபதியோட குடும்ப ஒவியத்துல கடைசியா நிக்குற ஆளை பாருங்க! அவன்பேரு கபாலி.ஜமீனோட ஆஸ்தான மந்திரவாதி.இந்த ஒவியம் வரையப்பட்ட வருசம் 1850,அப்பவே அவனுக்கு 35வயசிருக்கனும்.அதற்கடுத்த போட்டோவுல பாருங்க! ஜமீனோட அடுத்த வாரிசுகூட கபாலி இருக்கிற போட்டோ.இதை எடுத்த வருசம்1917.இப்பவும் அதே 35வயசுலயே இருக்கான்.அவருகூட சண்டை போட்டுட்டு வெளிய போனவன் கலெக்டர் வில்லியத்துக்கு துபாஸியா வேலை செய்த போது எடுத்த படம்.!இதை எடுத்த வருசம் 1942,இப்பயும் அதே 35 வயசுல மாறாத இளமையோடு இருக்கிறான்."

"இது சாத்தியமே இல்லை.இந்த டீடெய்ல் உனக்கு எப்படி கிடைச்சுது.?"
"ஜமீனோட இரண்டாவது வாரிசு கபாலியப் பத்தி நிறைய விசயத்தை தன் டைரில எழுதியிருக்காரு.அவன் ரொம்ப நாள் இளமையா,சாகாம இருப்பதைப் பற்றி அவருக்கு சந்தேகம் வந்துருச்சு.கலெக்டர் மூலமா அவன் ஜமீனுக்கு நெருக்கடி கொடுத்ததையெல்லாம் டைரில எழுதியிருக்காரு.அதை வைச்சுத்தான் துபாஸ் போட்டோவ கண்டு பிடிச்சேன்.!
இன்னொரு பயங்கரமான விசயம் இருக்கு.!"

"இதை விடவா.?"

"ஆமாம்.!நாலு வருசத்துக்கு ஒருமுறை வருகிற பஞ்சமி திதியில் ஒரு கன்னிப்பெண்ணை காளி சிலைக்கு பலி கொடுத்து அவளுடைய ரத்தத்தோடு சில மூலிகைகளை கலந்து சாப்பிட்டுத்தான் கபாலி இளமையாக இருப்பதாக ஜமீன் சந்தேகப்பட்டு எழுதியிருக்காரு.அந்த உண்மைதான் ஜமீனை கபாலிகிட்டயிருந்து காப்பாத்தியிருக்கு.!நாலு வருசத்துக்கு ஒருமுறை பலி விழுவதையும் அவர் கன்பார்ம் பண்ணியிருக்காரு.!"

"இப்ப நாம என்ன பண்ணப் போகிறோம்.?"

"ஜமீனோட மலைக்கோயில்ல வருகிற பஞ்சமிதிதியில் ஒரு பலி விழும்னு எதிர்பார்க்கிறேன்.அன்னைக்கு அந்த சாவே இல்லாத மனிதனை அங்கே பார்க்கலாம்.அவனை பிடிக்கிறோம்.சாவே இல்லாத மருந்தை அவனிடமிருந்து தெரிஞ்சுக்கிறோம்."

"ஒ.கே.டன்."
அனிதா வெளியேறிய பின் கண்ணாடியில் என்னை நானே பார்த்துக் கொண்டேன்.
எப்படி.?எப்படிக் கண்டு பிடித்தாள் என்னை? அந்த சாவே இல்லாத மனிதன் நான்தான் என்று அவளுக்குத் தெரியுமா.?என் மூளை விறுவிறுவென வேலை செய்தது.பஞ்சமி திதிக்கு பலி தேடி அலைய வேண்டிய வேலை மிச்சம்.!அனிதாவையே பலியாக்கி விட வேண்டியதுதான்.ஏதேனும் காரணம் சொல்லி அவள் மறுத்தால் என்ன செய்வது.?
அடுத்தடுத்த நாட்களில் அனிதாவின் "சார்.!பஞ்சமி திதி மறந்துராதீங்க."என்ற நினைவூட்டல் வேறு பெண்ணை தேடுவதை நிறுத்த வைத்தது.

பஞ்சமி திதியில் மலைக்கோயிலில் காத்திருந்தோம்.பாழடைந்த கோயில் ஆள் அரவமற்றுக் கிடந்தது.ஒன்பது டூ பத்துவரை திதி.அப்போதுதான் பலி கொடுக்க வேண்டும்.இருள் கவிழ்ந்து கொண்டு வந்தது.எட்டு மணி.
அனிதா "பாஸ்.!பாத்ரூம் போயிட்டு வந்துடுரேன்."என்ற போது என்னால் மறுக்க முடியவில்லை.போனவள் வெகுநேரம் ஆளைக்காணவில்லை.ஏதோ சத்தம் கேட்டு மலையடிவாரத்தைப் பார்த்தபோது என்னுடைய காரை அனிதா ஒட்டிக்கொண்டு போவது தெரிந்தது.டூப்ளிகேட் சாவி.!
நான் யார் என்று தெரிந்துதான் வந்திருக்கிறாள்.
போன் அடித்தது.!"சார்.!நான் அனிதா பேசுகிறேன்.நீங்கதான் கபாலின்னு எனக்குத் தெரியும் சார்.பேரு,ஊரு,தொழிலை மாத்த தெரிஞ்ச உங்களுக்கு கையிலுள்ள மண்டையோட்டு பச்சையை மாத்த தெரியலையே.!1942க்குப் பிறகு நீங்க என்னென்ன பேருல வாழ்ந்தீங்கன்னு நான் கண்டு பிடிக்காமயா இருந்திருப்பேன்.நீங்க உயிரோட இருக்க எத்தனை பொண்ணுகளை கொன்னுருப்பீங்க.!இந்த ஒரு தடவை நிஜமாவே செத்துப் போயிருங்க சார்.!குட்பை.!"
செல்லை தூக்கி எரிந்தேன்.திதி ஆரம்பித்திருந்தது.மையிருட்டு என்னை சூழ இத்தனை நாட்களாக ஏமாற்றி வந்த மரணத்தை சந்திக்க தனியனாக தயாரானேன்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக