"இன்னைக்கு உனக்கு கடைசி நாள்.!"என்றவனின் கையில் லேசர் துப்பாக்கி இருந்தது.
மரத்தின் வேர் தடுக்கி விழுந்து கிடந்த கிழவன் தன் கையிலிருந்த பையை பற்றிக் கொண்டு புன்னகைத்தான்.
"அரசின் அடிமையே.!எதற்காக இந்த கிழவனை கொல்ல விரும்புகிறாய்.?"
"எனக்கு காரணம் தெரியாது.!மேலிடத்தின் கட்டளை.ஏதோ ஒரு அரசாங்க ரகசியத்தை திருடி விட்டாய் என்பது எனக்கு கிடைத்த தகவல்.!"
"சாகப் போகும் கிழவனுக்கு எதற்கு ரகசியம்.?"
அவன் பதில் சொல்ல முற்பட்ட போது கலோரி மீட்டர் கீ என்றது.
"என்னுடைய சாப்பாட்டு வேளை நெருங்கி விட்டது.!"
அவன் தன் பாக்கெட்டிலிருந்த மாத்திரையை விழுங்கப் போனான்.
"பொறு.!இதை சாப்பிடு.!"
கிழவனின் கையில் பச்சை நிறத்தில் ஒரு உருண்டை மின்னியது.அவன் அதைப் போன்ற பொருளை பார்த்ததில்லை.
"என்ன இது.?"
"சாப்பிட்டுப் பார்.தெரியும்.!"என்று புன்னகைத்த கிழவன் சந்தேகம் தீர்க்க தானும் ஒரு உருண்டையை தின்றான்.புளிப்பும்,உவர்ப்பும்,இனிப்புமான சுவையில் முகம் அஷ்ட கோணலானது.
மீதமுள்ள கொட்டையை துப்பிய போது கிழவன் அதை எடுத்து பத்திரப்படுத்தினான்.
அருகே ஒடிய அருவி தண்ணீரை காட்டி "குடித்துப்பார் "என்றான்.
அவன் துப்பாக்கியின் குறியை மாற்றாமல் நீரை அள்ளிக் குடித்து முகம் மாறினான்.
"தண்ணீர் இனிக்கிறது.இது என்ன.?"
"நெல்லிக்காய்.2000வருடங்களுக்கு முன் விதை பண்ணையில் பாதுகாக்கப்பட்டது.இன்னும் பல கனிகளின் விதைகளை திருடி வந்து விட்டேன்.இதுவெல்லாம் மக்களின் சொத்து.!"
"எதற்கு திருடினாய்.?"
"ருசியாக உண்பதற்கு.!உன் அரசு பசிக்கு மாத்திரை கொடுத்து விவசாயத்தையும்,உணவையும் அழித்து விட்டது.மக்கள் இப்போதுகார்பரேட் கம்பெனிகளின் கலர் கலரான கலோரி மாத்திரைகளை தின்று கொண்டிருக்கிறார்கள்.நாங்கள் ரகசியமாக விவசாயம் செய்ய இதெல்லாம் தேவை.அதனால் பாதுகாக்கப்பட்ட விதைகளை திருடினேன்.!"
"நாங்கள் என்கிறாயே.!யார் அந்த நாங்கள்.!"
"அரசின் எதிரிகள்.எல்லா காலத்திலும் அரசின் எதிரிகள் இருப்பார்கள்.இல்லையெனில் அரசே உருவாக்கும்.திரும்பி பார்.!"
அவன் திரும்பி பார்த்த போது மரங்களில் நிறைய பேர் ஆயுதத்துடன் நின்று கொண்டிருந்தனர்.
"என்னுடைய ஆட்கள்.!விவசாயிகள்.இந்த காட்டை விட்டு வெளியேறு.இல்லை பிணமாவாய்.!"
அவன் துப்பாக்கியை மடக்கிக் கொண்டு கிளம்பினான்.அவன் வாய் இனித்துக் கொண்டிருந்தது.
அவன் திரும்பி பார்த்த போது கிழவன் தன் ஆட்களுடன் இருளில் மறைந்தான்.#மீள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக