ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

புரிதல்.!

"இது நல்லாருக்கில்லப்பா.?"
அந்த நாய் பொம்மை நன்றாகத்தான் இருந்தது.பையனின் ரசனையை ரசித்தாலும் வாங்கித்தர தன்னிடம பணம் இல்லை என்று நினைக்கும் போது ஆயாசமாக இருந்தது.வெயில் தாங்க முடியாமல் இந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் நுழைந்தது முதல் தவறென்று அவனுக்குத் தோன்றியது.

"நல்ல பொம்மை சார்! சாவி கொடுத்தால் குரைக்கும்."விற்பனையாளன் சாவி கொடுக்க நாய் "லொள்! "லொள் "என்று குரைக்க ஆரம்பித்தது.விற்பதற்கென்றே பயிற்சி தரப்பட்ட அவனை குற்றம் சொல்ல எதுவுமில்லை.பக்கத்தில் வேறு யாரோ அழைக்க அந்த மனித இயந்திரம் "ஒரு நிமிசம் சார்!"என்று நகர்ந்தது பெரும் நிம்மதியளித்தது.

"போலாம்."

"இது வாங்கிக் கொடுப்பா! போலாம்."

"அப்பாக்கு சம்பளம் வந்தவுடன் வாங்கித்தருகிறேன்!"

"நீ வாங்கித்தர மாட்டாய்.!பொய் சொல்கிறாய்.!"

"இல்லை.!சத்தியமா வாங்கித் தருகிறேன்.!"

பொம்மையை வைத்து விட்டு வாசல்வரை வந்தவன் திரும்பவும் ஒடி பொம்மையை எடுத்துக்கொண்டு விட்டான்.அவனுக்கு சங்கடமும் எரிச்சலும்,கோபமும் கலந்துகட்டி எழுந்தது.

"வை அதை.!போலாம் வா.!"

"எனக்கு  இப்பவே வேணும்.!வாங்கித்தாப்பா.!"

"எனக்கு  இப்பவே வேணும்.!"பையன் அழத்துவங்கி விட்டான்.அவனது உரத்த குரல் அங்கிருந்த அமைதியை குலைத்தது.எல்லோரும் தன்னையே கவனிக்கத்துவங்க அவனை கூச்சம் பிடுங்கித்தின்றது.மனித இயந்திரம் இவனை திரும்பிப் பார்த்தது.அவனது கண்களில் நாய் பொம்மை விற்றுவிடும் என்ற நம்பிக்கை ஒளிந்திருந்தது.

"பாத்ரூமுக்கு வா.!வாங்கித்தருகிறேன்.!"

"நெஜமா.?"

"நெஜமா.!"
நெருங்கிய விற்பனையாளனிடம் பாத்ரூம் இருக்கும் இடத்தை கேட்டு விட்டு பையனை பிடித்து இழுத்தான்.வேண்டா வெறுப்பாக நாய் பொம்மையை வைத்துவிட்டு முகத்தில் மெல்லிய சிரிப்போடு தகப்பனைத் தொடர்ந்தான் மகன்.தனக்கான ஏமாற்றம் பாத்ரூமில் காத்திருப்பது அவனுக்குத் தெரியாது.மனித இயந்திரத்தின் முகத்திலும் மெல்லிய சந்தோஷம் பரவியது.நாய் பொம்மையை வைத்துக் கொண்டு காத்திருக்கத் துவங்கினான்.
நல்லவேளை கழிவரையில் யாரும் இல்லை.
பையனை அடிக்கவும் அவனுக்கு மனம் வரவில்லை.வாங்கித்தர இயலாத தன் மீதான கழிவிரக்கம்.,சுய பச்சாதாபம் எல்லாமும் கண்ணீராய் வழியலாயிற்று.தகப்பனின் முதுகு குலுங்கலும்,கண்ணீரும் பையனை ஏதோ செய்திருக்க வேண்டும்.பையனுக்கும் கண்ணீர் வரும் போல் இருந்தது.
"ஏம்பா அழுவுற.?"
பையனின் குரல் கம்மத் தொடங்கியது.தன் கஸ்டத்தை பையனிடம் சொல்லிப் புரிய வைக்க முடியுமா என்று அவனுக்குத் தெரியவில்லை.அவன் தலையை கோதியபடி
"அப்பாக்கு வேலை இல்லை.!ரொம்ப கஷ்டத்துல இருக்கேன்.நீ கேட்டதை வாங்கித்தர்ர அளவுக்கு அப்பாக்கிட்ட பணம் இல்லை.!என் நிலமை புரியாம நீ அடம் பிடிக்கிறாய்.?"எப்படியோ பேசி முடித்தான்.
"அழுவாதப்பா.!எனக்கும் கண்ணீர் வருது.!இந்த நாய் பொம்மை எனக்கு வேண்டாம்பா.!வேலைக்கு போய் வாங்கிக் கொடுப்பா.!நான் வெயிட் பண்றேன்."!

"இந்த நாய் பக்கத்து வீட்டு வாசு நாய் மாதிரி வருமா.?"

"ஆமா! அது திருடனையெல்லாம் பிடிக்குமே.இந்த நாய் பிடிக்காது இல்லப்பா."!
அவர்கள் பேசிக்கொண்டு மறுபடியும் கடைக்குள் வந்த போது விற்பனையாளன் நாய் பொம்மையோடு காத்திருந்தான்.
பையன் "நாளைக்கு வாங்கிக்கிறோம்.!"என்றான்.மனித இயந்திரம் தன் தோல்வியை நம்பமுடியாமல் நின்று கொண்டிருந்தது.கடையை விட்டு வெளியேறும்வரை அவன் நாய் பொம்மையை திரும்பிக் கூட பார்க்கவில்லை.இருவரும் கை கோர்த்துக் கொண்டு வெளியே வந்த போது வெம்மை தணிந்து தென்றல் வீச ஆரம்பித்தது.கிடைக்கிற வேலைக்கு போகனும் என்று அவன் நினைத்துக் கொண்டான்.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

தவற விடக்கூடாத லூஸி.!

சமீபத்தில் பார்த்த லூசி திரைப்படம் பலமான அதிர்வை என்னுள் ஏற்படுத்தியது.
மனிதன் தன் மூளையின் மொத்த திறனில் பத்து சதவீதத்தை பயன்படுத்தியே இன்றைய முன்னேற்றத்தை அடைந்திருக்கிறான்.தன் மூளையில் இருபது சதவீதத்தை பயன்படுத்தி வரும் இன்னொரு உயிரினம் டால்பின்.
மனிதன் தன் மூளையின் மொத்த நூறு சதவீதத்தை பயன்படுத்தினால் என்ன நடக்கும் என்ற விபரீத கற்பனையே லூசி திரைப்படம்.

தைபேயில் படிக்கும் ஸ்கார்லேட் ஜாக்சன் தன் போதை பொருள் கடத்தும் நண்பனின் வற்புறுத்தலால் விபரீத மருந்தடங்கிய பெட்டியை ஒரு போதை கும்பலிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறாள்.அந்த மருந்தை லூசியின் உடலில் செலுத்துகிறது அந்தக் கும்பல்.அதன் விளைவாக லூசியின் மூளை அதீதமாக சிந்திக்கிறது.எல்லா விசயங்களையும் அவளால் சீக்கிரம் கற்றுக்கொள்ள முடிகிறது.உடலையும்,மனதையும் கட்டுப்படுத்தும் சக்தி பெறும் லூசி அந்தக்கும்பலை எப்படி அழிக்கிறாள்.அவளதுமூளை நூறு சதவீதத்தில் வேலை செய்யும்போது அவளுக்கு என்ன நடக்கிறது என்பதையும் ஆக்ஸன் கலந்து அதகளமாய் சொல்லியிருக்கிறார்கள்.தமிழ் ரசிகர்கள் தவறவிடக்கூடாத படங்களின் பட்டியலில் இடம் பிடிக்கிறாள் இந்த லூஸி.!

கொலைகள் தொடரும்.!

கொலைகள் தொடரும்.!

"இதுதான் ஹியூமன் ஜெராக்ஸ் மிஷின்.!"விஞ்ஞானி ஆத்மா கொஞ்சம் படபடப்புடன் இருந்தார்.அரசின் முக்கிய அதிகாரிகள் சுற்றிலும் உட்கார்ந்திருந்தது அவருக்கு மிரட்சியை தந்திருந்தது.
"கூல் புரபசர்.!தண்ணீரை குடித்துவிட்டு பேசுங்கள்."யாரோ ஒருவரின் வேண்டுகோள் கோட்டின்மீது நீர் சிதற குடிக்க வைத்தது.
"இது ஜெராக்ஸ் மற்றும் பேக்ஸ் இணைந்த தொழில்நுட்பம்.இதில் பேப்பர்களுக்கு பதில் மனிதர்களை நியூட்ரான்,எலக்ட்ரான்,புரோட்டான் என்று மூன்றுஅணுத்துகள்களாகப் பிரித்து வேறோரு இடத்தில் மறுகட்டுமானம் செய்து உயிர்பிக்க போகிறோம்.பழைய விக்ரமாதித்தனின் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையைப்போல.!இங்கிருந்து மிஸின் மூலமாகவே மனிதனை அமெரிக்காவுக்கும் உலகின் எந்த மூலைக்கும் அனுப்பலாம்.அங்கும் இன்னொரு மிஷின் இருந்தால்
பயணநேரம்,செலவுகள் மிச்சம்.ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு எண்ணை எஸ்.டி.டி.போல் கொடுத்தால் போதும்."

"புரபசர் வேறு கிரகத்துக்கு மனிதனை இதே முறையில் அனுப்ப முடியுமா.?"

"நிச்சயமாக.!"

"புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட கேத்தம் கிரகத்துக்கு மனிதர்களை செலவில்லாமல் அனுப்ப முடியுமா.?"

"முடியும்."சிறிது நேர சலசலப்பை தாங்க முடியாமல் ஆத்மா வெளியேறி இளைப்பாறினார்.அவர் மறுபடியும் உள்ளே நுழைந்த போது
ஆத்மாவின் கண்டுபிடிப்புக்கான நிதி ஆதாரத்தை அனுமதித்துவிட்டு கூட்டம் முடிந்திருந்தது.
அதற்கடுத்த நாள் ஆராய்சிக்கூடத்திற்கு பலத்த காவலுடன் கொண்டு வரப்பட்டான் சீரியல் கில்லரான மதி.சற்றே மனநிலை பாதித்த கொலை செய்யும் இயல்பு கொண்ட அவனிடம் பேச புரபஸருக்கு எதுவும் இருக்கவில்லை.!

ஆனால் அவனை எதற்கு அனுப்பினார்கள் என்ற சந்தேகத்தை தலமை செயலரிடம் கேட்டார்.புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கேத்தம் கிரகத்தில் மனிதர்களை குடியேற்ற முயற்சி செய்வதாகவும் வசதி நிறைந்த பூமியை விட்டு அங்கு செல்ல யாரும் விரும்பாததால் ,கொடும் குற்றவாளிகளை அங்கு குடியமர்த்த முடிவு செய்துள்ளதாகவும் பதில் வந்தது.இருபதாம் நூற்றாண்டில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்கா கண்டத்தில் குடியேற இங்கிலாந்தின் கொடும் குற்றவாளிகள் கப்பலில் அனுப்பப்பட்டது அவருக்கு நினைவு வந்தது.அது கண்டம்.!இது கிரகம்.வரலாறு திரும்புகிறது.!மதி இருபது கொலைகளைச் செய்த கொலைகாரன்.சுத்தியால் அடித்து மண்டையை உடைப்பது.அவனது ஸ்டைல்.


்முதல் மிஷினில் அவனை அடைத்து சுவிட்சை ஆன் செய்தவர் இரண்டாவது மிஷினில் அவனை தேடி ஏமாந்தார்.டெக்னிக்கல் பிராபளத்தால் மூன்று அணுவாகப்பிரிந்து முதல் மிஷினிலேயே தேங்கி விட்டான் மதி.என்னென்னவோ முயற்சி செய்து தவறை கண்டு பிடித்து சரி செய்தார் ஆத்மா.ஆனாலும் மதி வெளி வரவேயில்லை.!சாக வேண்டியவன் ஆய்வுக்கு பலியானதில்அரசுக்கு மகிழ்ச்சி.

அடுத்த முறை அரசால் அனுப்பப்பட்டவன் அருள்.சுய சிந்தனையற்ற, சகோதரியால் பராமரிக்கப்பட்ட மங்கோலாயிடு ஜீவன்.சகோதரியின் மரணத்திற்கு பின் அவனை பராமரிக்க இஸ்டப்படாத அரசு செலவை கட்டுப்படுத்த ஆய்வுக்கு அனுப்பி விட்டது.தன் பெயரை திக்கி,திக்கி அவன் சொல்லி முடிப்பதற்குள் புரபஸர் ஒரு பிறந்த நாளை கொண்டாடி முடித்திருப்பார்.இந்த முறை வெகு கவனமாக மிஷினை பரிசோதித்து விட்டு அவனை உள்ளே அனுமதித்து ஆன் செய்தார்.ஏராள சத்தத்துடனும்,வெளிச்சத்துடனும் மிஷின் இயங்கத் தொடங்கியது.படபடப்புடன் காத்திருந்தார் ஆத்மா.!
இந்த முறை மற்றோரு மிஷினின் வழியாக அருள் வெற்றிகரமாக வெளிவந்தான்.
ஆத்மா சந்தோஷத்தில் திக்குமுக்காடிய போது வெளிவந்த அருள்சுற்றும் முற்றும்தேடி இரும்பு சுத்தியை எடுத்தான்.சுயமாக நடக்க முடியாதவன் நடப்பதால் துணுக்குற்ற ஆத்மா "ஏய் என்ன செய்கிறாய்?"என்று கேட்டகேள்விக்கு "என்பெயர் மதி "என்று திக்காமல் திணறாமல்பதில் வந்தது.அதுதான் புரபஸர் கேட்ட கடைசி வார்த்தைகள்.அவனது கையிலிருந்த சுத்தி ஒருமுறை உயர்ந்து தாழ்ந்தது.கையில் சுத்தியோடு அவன் வெளியேறுவதை அவரது கண்கள் கடைசியாகப் பார்த்தது.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

கடவுள்.!

தன் முன் உட்கார்ந்திருந்த ஜெகனை குறுகுறுவென பார்த்தார் விஞ்ஞானி ஆத்மா.!இந்த முறை எந்த வில்லங்கத்தை வைத்திருக்கிறானோ கிழவன் என்ற பதைபதைப்பிலிருந்தான் ஜெகன்.இப்போது ஜெகனைபற்றி.!யாருமற்ற அனாதை.போதைக்கு அடிமையானவன்.உழைக்க விரும்பாத சோம்பேறி.ஆய்வக சுண்டெலிகளுக்குபிறகு மனிதனுக்கான சோதனைக்கு தன் உடலை கொடுத்து போதை வளர்ப்பவன்.!

"கடவுளைபற்றி என்ன நினைக்கிறாய்.?"
எப்போதும் மாத்திரை,ஊசி என்று போடும் கிழவன் திடிரென கடவுளைப்பற்றிப் பேசியது ஜெகனுக்கு வித்தியாசமாக இருந்தது.
"செத்த பின்னாடிதானே அவர பாக்க முடியும்.?"

"நோ பையா.!உயிரோடு இருக்கும்போதே கடவுளை பார்க்கும் கருவியை கண்டு பிடித்துள்ளேன்."

"தியானம்,யோகா பண்ணித்தான் அவர பார்க்க முடியும்னு சொல்ராங்க.!
"ஆம்.!நீண்ட கால தேடலான யோகா,தவம்,எல்லாத்தையும் சுருக்கி விட்டேன்.!"
மேஜையின் மீதிருந்த புத்தகத்தை எடுத்தவர் அதன் நடுப்பக்கத்திலுள்ள இரண்டு பேப்பர்களின் நுனியை பிடித்துக் கொண்டு "இரண்டுக்கும் நடுவே எவ்வளவு இடைவெளியிருக்கும்.?"என்றார்.
"அரை அடி இருக்கும்.!
"குட்.!ரெண்டு பேப்பரையும் ஒண்ணா சேர்த்தா நடுவில் இடைவெளி காணாம போயி பேப்பர் ஒன்னா இருக்குமா.?"
"ஆமாம்.!"
"பக்கத்துக்கு இடையிலான தூரத்தை குறைத்தமாதிரி கடவுளை காண்பதற்கான நேரத்தை குறைத்திருக்கிறேன்.!என்னுடைய கடவுளைக் கண்டறியும் கருவி ரெண்டு மணி நேரத்தில் கடவுளை காட்டிவிடும்.!"
"கடவுளை பார்த்து என்ன பயன்.?"
"E-mc2 சார்பியல் கோட்பாட்டை கண்டுபிடிச்ச பின்னாடி ஐன்ஸ்டின் இதை நான் கண்டு பிடிச்சேன்னா யாரு ஒளிய வச்சான்னு கேட்டாரு.நிச்சயமா கடவுள்தான் ஒளித்து வைத்திருப்பார்.அந்த மாதிரி ஒளிய வைத்ததையெல்லாம் தெரிந்து கொள்ளலாம்.நாம எப்ப,எப்படி சாகப் போறோம்னு தெரிஞ்சுக்கலாம்,வரம்,சாபம் உண்மையான்னு தெரிஞ்சுக்கலாம்.!"
ஜெகனின் மனசு கிழவனும் டோப்பு போட்டுவிட்டு உளறுகிறானோ என்று நினைத்தது.

அவனுடைய நினைப்பை பொய்யாக்கும் வகையில் ஆத்மா அந்த பெட்டியை எடுத்து மேஜைமீது வைத்தார்.ஹேல்மெட்,வாக்மேன் போன்றதெல்லாம் இணைத்து வினோதமாக இருந்தது அந்த பெட்டி.!
"இப்போது கடவுளைப்பார்க்க போகிறாய்.!"
ஹேல்மெட் தலையில் மாட்டப்பட்டு ஹேட்செட் காதில் மாட்டப்பட்டது.
"கண்களை மூடு."!
ஜெகன் கண்களை மூடியதும் சிவப்பு நிறம் பரவி கருப்பானது.எண்ணங்கள் அற்ற ஸ்தூலமானான்.ஏகாந்த அமைதி நிலவி முதுகெலும்பிலிருந்து எதுவோ உருண்டு நெற்றியில் நின்றது.
"இதுதான் குண்டலினி."என்றது ஆத்மாவின் குரல்.நீண்ட கரும் பயணத்தின் முடிவில் ஒரு பேரொலி விட்டு விட்டு தெரிந்தது."அதுதான் கடவுள்.கடவுளை நாம் இருவரும் பார்த்து விட்டோம்.!நாளை பேசப் போகிறோம்.!"
ஜெகனை இயந்திரத்திடமிருந்து அகற்றியவர் ,கொஞ்சம் பணத்தை கொடுத்து நாளைக்கு வா என்று அனுப்பினார்.!தான் கஞ்சா அடித்ததன் குளறுபடிகள் என்று நினைத்தபடி டோப்பு விற்கும் வியாபாரியை தேடி ஜெகன் கிளம்பி விட்டான்.!

இரண்டு மணி நேர ஆராய்ச்சியில் கடவுளுடன் பேசும் வழியை கண்டறிந்த ஆத்மா ஹேல்மெட்டையும்,ஹேட் செட்டையும் மாட்டிக்கொண்டு தியானத்தின் வழியே பயணமானார்.!
பிரமாண்ட பேரொளியை கடைசியில் கண்டவர் "நீங்கதான் கடவுளா.!செத்த பின்னாடிதான் உங்களை பாக்க முடியும்னு சொல்ராங்க.!உண்மையா.?"என்றார்.
"உண்மைதான்! நீ கூட செத்து போய்தான் இங்கு வந்திருக்கிறாய்.!"
"என்ன சொல்ரீங்க.?"ஆத்மாவிற்கு வியர்த்தது.!
"நீ தியான பகுதியில் சஞ்சாரம் செய்யும்போதே இறந்து விட்டாய்.!சந்தேகம்னா பார்.!"
கடவுள் மறைய மேஜையின் மீது இன்னொரு ஆத்மா ஹேல்மெட் மாட்டிய நிலையில் செத்துக் கிடந்தார்.!

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

இறவாத வரம்.!

"நாளைக்கு அப்பாவை பார்க்க அனுமதி கிடைத்திருக்கிறது."அம்மாவின் தகவல் என்னை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.
அப்பா.!
பிறந்ததிலிருந்து நான் பார்க்காத இந்த நகரமே கொண்டாடும் அப்பா.!
வருடம் ஒருமுறை டி.வியில் உரையாற்றும் அப்பா.!
மூன்றாம் உலகப்போரில் தப்பிப் பிழைத்த பத்தாயிரம் மனிதர்களை கொண்டு கண்ணாடி சூழ்ந்த இந்த நகரத்தை நிர்மாணித்து வழிகாட்டும் அப்பா.!அவர் விஞ்ஞானிதான்.ஆனால் கடவுளுக்கு நிகராகத்தான் நகர மனிதர்கள் நினைத்தனர்.கருத்த சூரியனும்,அமில மழையும் எப்போதாவது கண்ணாடி கூரையை பொசுக்கிவிட்டு நகர்வார்கள்.!ப்ளூம் பாக்ஸ்கள் தீராத மின்சாரத்தை உற்பத்தி செய்து நகரத்தை வெளிச்சமாக்கின.!நான் அப்பாவைப்பற்றிய ஏராள கனவுகளுடன் தூங்கிப்போனேன்.!

காலையில் அப்பா இருக்கும் தலைமை செயலகத்திற்கு பயணப்பட்டோம்.அண்டர்கிரவுண்டின் பாதுகாப்பு மிகுந்த இருண்ட அறையில் செலுத்தப்பட்டோம்.!உற்பத்தியான மெல்லிய வெளிச்சத்தில் காற்றில் உற்பத்தியான அப்பா ஹல்லோகிராமின் த்ரிடீ டைமென்சனில் நடந்து வந்தார்.!"வெல்கம் மை பாய்.!இத்தனை நாள் உன்னை பார்க்காமல் இருந்ததற்கு மன்னி.!"என்றார்.அப்பாவின் கைகளை தொட முயன்றேன்."நான் பேசுவதை கேட்க முடியும்.ஆனால் என்னை தொட முடியாது.!அங்கே பார்."அப்பாவின் விரல் காட்டிய திசையில் ஒரு மனித மூளை ஏராள ஓயர்கள் இணைக்கப்பட்டு கம்யூட்டருடன் காணப்பட்டது."அதுதான் உண்மையான நான்.!இது விஞ்ஞானத்தின் விளையாட்டு"
"இறப்பில்லா பெரு வாழ்வு."என் உதடுகள் முணுமுணுத்த போது கண்களில் கண்ணீர் வழிந்தது."என் அறிவுக்கான சாபம்.மைபாய்.!"அப்பாவின் கைகள் என் கண்ணீரை துடைக்க முயன்று தோற்றன.!அப்பாவின்ஹல்லோகிராம் உருவிலிருந்து இரண்டு சொட்டு கண்ணீர் வழிந்தது.!

சனி, 15 ஆகஸ்ட், 2015

தமிழில் தெலுங்கு சினிமாவின் இரண்டாவது இன்னிங்ஸ்.!

ஆந்திராவும்,தமிழகமும் பிளவுபடாத மெட்ராஸ் ஸ்டேட்டாக இருந்த போது தேவதாஸ் படத்தில் நாகேஸ்வரராவ்,வண்ணக்கிளியில் பிரேம் நசிர் போன்ற மற்ற மொழி நடிகர்கள் தமிழில் நடிப்பது வழமையாக இருந்தது.!அதையும் ஏற்றுக் கொள்ளும் பெரிய மனம் கொண்டவர்கள் தமிழ் ரசிகர்கள்! ஆந்திரா என்கிற மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்ட பின்பும்கூட தெலுங்கு பட ஷிட்டிங்குகள் சென்னையிலேயே நடந்து வந்தன.!அடுத்தடுத்து ராமோஜிராவ்,அன்னபூர்ணா ஸ்டுடியோக்கள் உருவான பின் தெலுங்கு  ஷிட்டிங்குகள் அங்கு இடம் மாறின.!ஏவிஎம் ஸ்டுடியோவின் வீழ்ச்சிக்கு மறைமுக காரணமாக இது அமைந்தது.!

ஆந்திராவில் மாஸ் ஹீரோவாக உருவாகிக் கொண்டிருந்த சிரஞ்சீவியின் டப்பிங் படங்கள் தொடர்ச்சியாக வெளியானாலும் தமிழ் படங்களை பெரிதாக பாதிக்கவில்லை.!ஆறு பைட்,ஆறு பாடல்கள்,நடுவே கொஞ்சமாய் கதை,மின்னல்வேக நடனம் என்று சிரஞ்சீவி தமிழ் ரசிகர்களை நன்றாகவே திருப்திபடுத்தினார்.ஸ்டேட் ரவுடி,சென்ட்ரல் ரவுடி,அசெம்பிளி ரவுடி என்று படத்தின் பெயர் மட்டும் ஒரு மார்க்கமாக இருப்பது அப்போதைய படங்களின் டிரேட்மார்க்காக இருந்தது.!நடுநடுவே விட்டாலாச்சார்யாவின் மாயமோதிரம்,ஜெகன்மோகினி போன்ற படங்கள் பேய்களுக்காகவும்,ஜெயமாலினியின் கவர்ச்சிக்காகவும்,மாயாஜாலகாட்சிகளுக்காகவும் ரசிக்கப்பட்டன.!குளத்தில் எரிந்த கல்லென சிறு சலனத்தை உருவாக்கியது ஆருர்தாஸ் வசனத்தில் விஜயசாந்தி நடித்த பூஒன்று புயலானது.!அது பெரிதான பாதிப்புகளை ஏற்படுத்தாத நிலையில் குளத்தில் மலையை எரிந்த அதிர்வை உருவாக்கியது ராஜசேகரின் இதுதாண்டா போலீஸ்.!

பாரதிராஜாவின் புதுமைபெண்ணில் வில்லனாக அறிமுகமாகி தோற்றுப்போன ராஜசேகர் இந்த படத்தில் அந்த குறையை தீர்த்துக்கொண்டார்.அரசியல்,ஆக்சன் என்ற புது காம்பினேசனில் ஆந்திராவில் அதிரிபுதிரி ஹிட்டடித்த இந்தபடம் அதற்கும் குறையாமல் தமிழிலும் ஹிட்டடித்தது.!அடுத்தடுத்து டப்பான எங்கடா உங்க எம்எல்ஏ.!ஆம்பிளை போன்ற ராஜசேகரின் அத்தனை படங்களும் நேரடி தமிழ்பட வசூலை மீறின.அடா,புடா என்ற. மரியாதையற்ற டைட்டில்கள்  இந்த படங்களுக்கு சூட்டப்பட்டு ரசிகர்களை வசிகரித்தன.!ஆக்ரோஷமான காட்சியமைப்புகளும்,சரளமான கெட்டவார்த்தைகளும் அரங்கில் ஆரவார வரவேற்பை பெற்றன.!இந்த ஜோதியில் கலக்க வந்த வைஜெயந்தி ஐபிஎஸ் தன் பங்குக்கு ஜுரத்தை அதிகரித்தது.ராஜசேகரும்,விஜயசாந்தியும் இரட்டை குழல் துப்பாக்கியென தமிழ்திரையில் முழங்கினர்.சுவர் முழுவதும் இருவரும் துப்பாக்கியோடு காட்சிதந்தனர்.!இந்த படங்களின் பாடல்களுக்கு தமிழில் போதுமான வாய்ப்புக் கிடைக்காத தமிழ் கவிஞர்கள் பாட்டெழுதி கல்லாவை நிரப்பியது தனிக்கதை!இது சென்னையா,ஹைதராபாத்தா என்ற குழப்பம் பலருக்கு ஏற்பட்ட காலகட்டமது.!

அரசியல் +ஆக்ஸன் என்ற பார்முலாவை விஜயகாந்த் கையிலெடுத்தவுடன் ராஜசேகர் படங்களுக்கான தேவை குறைந்தது.!ஆனால் நேர்எதிராக கேப்டனின் படங்கள் தெலுங்கில் டப்பாகி  வசூலை குவித்தன.வரலாறு ரிவர்ஸானது.!இது கேப்டனின் முறை.ஆந்திரர்கள் அள்ளிச்சென்ற பணத்தை கேப்டன் வெற்றிகரமாக மீட்டார்.கோபத்தில் கண் சிவப்பதும்,குட்டிச்சுவறின் மீது கால் வைத்து உதைக்கும் லெக் பைட்டும் எதையும் மிகைப்படுத்தி ரசிக்கும் தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்துப் போனதில் ஆச்சரியமில்லை.!படங்களின் வெற்றி தெலுங்கில் நேரடியாக நடிக்க கேப்டனை அழைக்கும் அளவுக்குப் போனது.!பச்சைதமிழன் என்று காட்டிக்கொள்ளவோ,பின்னாளில் அரசியலில் பிரச்சனை வரலாம் என்றோ ஏதோ ஒரு காரணத்தால் கேப்டன் நடிக்க மறுத்துவிட்டார்.கேப்டனின் தாய்மொழி தெலுங்கு என்பது கவனிக்க வேண்டிய விசயம்.!

நாகார்ஜுன்,வெங்கடேஷ் போன்றவர்களின் ஒன்றிரண்டு படங்கள் டப்பாகிக் கொண்டிருந்தபோது தெலுங்கு சினிமா தன் இரண்டாவது இன்னிங்ஸை அருந்ததி என்ற படத்தின் மூலம் தொடங்கியது.கவர்ச்சி கதாநாயகியாக இருந்த அனுஸ்காவின் இன்னொரு முகமான ஆக்ஸனை இந்தப்படம் வெளிக்கொண்டு வந்தது.கதாநாயகியை மையமாக கொண்ட படங்களை தொலைத்த சினிமா அதை இப்போது தேட ஆரம்பித்தது.இரண்டாவது இன்னிங்ஸின் தவிர்க்க முடியாத சிக்ஸரை ராஜ்மவுலி தன் பாகுபலியில் தொடங்கி வைத்துள்ளார்.அடுத்த சிக்ஸராக பாகுபலி 2 தயாராகிக் கொண்டிருக்கிறது.அடுத்த போர் அனுஷ்காவின் ருத்ரமாதேவி காத்திருக்கிறது.பிரின்ஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் மகேஸ்பாபு வின் சமீபத்திய சிரிசம்முடு படம் தமிழில் செல்வந்தன் என்று டப்பாகி கவனம் ஈர்த்துள்ளது.மகேஸ்பாபு நேரடி தமிழ்படத்தில் தலைகாட்ட இருப்பது அவரின் டூப்ளிகேட்டான புலிக்கு(விஜய்.) கிலியை ஏற்படுத்தியுள்ளது இங்கே குறிப்பிட வேண்டிய விசயம்.!இந்தமுறை தெலுங்கு சினிமா தமிழ் திரையில் நீண்ட இன்னிங்ஸை விளையாடும் போல் தெரிகிறது.!

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

தசாவதானியும்,ஒரு ஆக்ஸன் ஹீரோவும்.!

ஒரு ஆக்ஸன் படத்தின் ஹீரோவை எப்படி சித்தரிப்பது என்று நம் தமிழ்பட இயக்குநர்கள் பல படிமங்களை உருவாக்கி அதை உடைத்தும் இருக்கிறார்கள்.நல்லவன் என்கிற எம்.ஜி.ஆரின் பிம்பத்தை உடைத்து ரஜினி என்கிற லாகிரி வஸ்துகளை துணையாக கொண்ட ஆனால் மனதளவில் நல்லவனாக இருக்கும் சூப்பர்ஸ்டாரை உருவாக்கும் சூழ்நிலைகளும்,அதை ஏற்றுக்கொள்ளும் சமுதாய நிர்பந்தங்களும் ஏற்பட்டு விட்டன.கதாநாயகனுக்கான தனித்த குணங்கள் இன்று காணாமல் போய் பொறுக்கிகளும்,ரவுடிகளும்,மாபியா டான்களும் கதாநாயக அந்தஸ்தை எட்டி விட்டார்கள்.கஜினியின் மெமரிலாஸ்,நான் சிகப்பு மனிதனில் விஷாலின் விநோத வியாதிபோன்ற அரிதான வியாதி தாக்கிய கதாநாயகர்களை உருவாக்கி உலாவ விட்ட கதாசிரியர்கள் இன்னமும் கதையை தேடாமல் மருத்துவ புத்தகங்களில் வினோத வியாதிகளை வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள்.வியாதியை கண்டறிந்த பின் கதையை கண்டறிந்து விடலாம் என்பது இப்போதைய தியரியாகி விட்டது.!

தமிழகத்தில் தொன்று தொட்டு இருந்துவரும் பொதுவெளியில் அதிகம் கவனம் பெறாத தசாவதானி,சதாவதானி என்ற வித்தைகளை ஒரு ஆக்ஸன் ஹீரோவுக்கு ஏற்றிப்பார்த்தால் எப்படி இருக்கும்.?
ஒரே நேரத்தில் எட்டு செயல்களை கவனிக்கும் திறமை பெற்றவன் எண்கவனகர் என்றும்,பத்து செயல்களை கவனிப்பவன் தசாவதானி என்றும்,நூறு செயல்களை கவனிப்பவன் சதாவதானி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.தியானம்,யோகா,மனக்கட்டுப்பாட்டின் மூலமும் தீவிர பயிற்சியின் மூலமும் இந்த ஆற்றல்களை பெற்று விட முடியும்.இதற்கான பயிற்சி முறைகள் மிகக் கடுமையானவை.தன் சதாவதானி தாத்தாவிடமிருந்து எண்கவனகர் வித்தையை கற்றுக்கொள்ளும் ஹீரோ ராணுவத்தில் பணி புரிகிறான்.எதிரிகளின் காலடி ஒசை,புல்லட் மேகசீனில் காலியாகும் எண்ணிக்கை,டைம் பாம் வெடிக்கும் கால அளவு,என்று பல கவனிப்புகளின் வழியாக வியூகம் வகுத்து செயல்பட்டு அசாதாரணமான போர் வீரனாக இருக்கிறான்.அவனது வித்தை அவனையும்,அவன் டீமின் உயிரையும் காப்பாற்றுகிறது.

ஒரு தீவிரவாத கும்பலின் தலைவனை சுற்றி வளைத்து தன் வித்தையை பயன்படுத்தி கைது செய்கிறான்.பின்பு விடுமுறையில் தன் சொந்த ஊருக்கு வருகிறான்.தன் காதலியை பார்க்க ஒரு மாலிற்கு வருகிறான்.அவள் மாலில் ஒரு பொக்கே ஷாப் வைத்திருக்கிறாள்.தங்கள் தலைவனை மீட்க விரும்பும் தீவிரவாத கும்பல் அந்த மாலை தங்கள் கஸ்டடிக்குள் கொண்டு வருகிறது.அவர்களிடமிருந்து பணயக்கைதிகளை மீட்க ஹீரோ தனியாகப் போராடுகிறான்.பணயக்கைதி போல் நடிக்கும் வில்லன் இவனது வித்தையை தெரிந்து கொள்கிறான்.தன் ஆட்கள் பத்து பேருடன் ஹீரோ பணயக்கைதிகள் இருவரை மீட்டு வரும்போது சுற்றி வளைக்கிறான்.வில்லனுக்கு நன்றாகத்தெரியும்.எட்டுக்கு மேற்பட்ட விசயங்களை ஹீரோவால் கவனிக்க முடியாது என்று.முதலில் வில்லனின் சூழ்ச்சியில் விழும் ஹீரோ,பின்பு சுதாரிக்கிறான்.எட்டு விசயங்களை தான் கவனித்துக்கொண்டு அதிகப்படியான இரண்டு விசயங்களை பணயக்கைதிகளுக்கு பகிர்ந்தளிக்கிறான்.இந்தமுறை சூழ்ச்சிவலையில் விழும் வில்லன் தன் கும்பலுடன் பலியாகிறான்.!