செவ்வாய், 10 ஜனவரி, 2017

வீரம்

அசோகன் அந்த குகையின் முன்பு புரவியிலிருந்து இறங்கினான்.அது ஒரு புத்த துறவியின் வாழிடமாகவும், வழிபாட்டு தலமாகவும் இருந்திருக்க வேண்டும் என்பதை வெளியேயிருந்த புத்தர் சிலை பறை சாற்றியது.அசோகனின் குதிரைக்கு முன்பாகவே ஒரு குதிரை நெடும்பயணத்தின் விளைவாக வாயில் நுரை தள்ள நின்றிருந்தது.அது திஸ்ஸாவுடையது என்பதை அசோகன் அறிவான்.தன் நூறு சகோதரர்களில் எஞ்சியவன் அவன் ஒருவனே.அசோகன் தன் வாளை உருவினான்.99 சகோதரர்களின் குருதி குடித்த வாள் வெய்யிலில் மின்னியது.

"திஸ்ஸா! கோழையே வெளியே வா! நீ நிராயுதபாணி என்பதை நான் அறிவேன்.வீரனாக போரிட்டு மரணத்தை ஏற்றுக் கொள்! "

அசோகன் தூக்கி எறிந்த மற்றோரு வாள் குகையின் மவுனத்தை உடைத்தபடி விழுந்தது.சற்று நேரத்தில் அந்த வாள் வெளியே வந்து விழுந்தது.அசோகன் துணுக்குற்று நிமிர்ந்தான்.எதிரே கருணை நிறைந்த முகத்துடன் அந்த புத்த துறவி நின்றிருந்தார்.

"அன்பிருக்கும் இடத்தில் ஆயுதத்திற்கு இடமில்லை மகனே! "ஸ்பஷ்டமான அவரின் குரல் அவனை என்னவோ செய்தது.

"நான் பிம்புசாரனின் மகன் அசோகன்.அரச பதவிக்கு இடையூறு செய்த என் சகோதரர்களை கொன்றிருக்கிறேன்.மிஞ்சியவனுக்கு எமனாக வந்திருக்கிறேன்.அவனையும் கொன்றால் மகதம் எனது.மௌரிய வம்சாவழியின் ஒரே வேர் நான்! "

"அரச பதவி மிகப்பெரிதோ? "

"உம் ஆண்டி பதவியை விடப் பெரிதுதான்.!"

"என்னிடம் அடைக்கலமானவனை கொன்றால்தான் அந்த பதவி கிட்டுமா? "

"ஆம்! இனி எல்லாம் நானே! மகதத்தின் அரசன் நான்.!"

"அரசனுக்கு சாமான்யனின் வேண்டுகோள்.அவனை விட்டு விடுங்கள்! "

"ஒரு நிபந்தனைக்கு உட்பட்டால் அவனை உயிருடன் விடுகிறேன்.!"

"என்ன நிபந்தனை? "

"என் மனைவி தேவியும் உம் மதமே.அதை நான் கிண்டல் செய்திருக்கிறேன்.கோழைகளின் மதமென்று.இப்போது குயுக்தியான ஒரு எண்ணம் தோன்றுகிறது.!"

"சொல்லுங்கள்! வினாச காலே விபரீத புத்தி! "

"அருகரே! அவனை உயிருடன் விடுகிறேன்.அவனுக்கு பதில் உம் உயிரை கொடுப்பீரா? "

"எடுத்து கொள்ளும் இந்த கணமே! என் இடத்தில் நீ இருந்தால் இதை செய்வாயா? "

அசோகனிடம் அவர் கேள்விக்கு பதில் இல்லை.வீரம் என்பதென்ன? புதிதாக ஒரு கேள்வி அவனுள் முளைத்து கிளர்ந்தது.

அவர் மண்டியிட்டு அமர்ந்து கண்களை மூடினார்.
"அரசே! நான் தயார்.என் அடைக்கல பொருளுக்காக இறக்க சித்தமாகிவிட்டேன்.!"

அசோகனின் வாள் உறையிலிருந்து உருவப்பட்டது.சத்தத்திலும் சலனமின்றி இருந்தது அவர் முகம்.காற்றை கிழித்து கொண்டு விரைந்த வாள் அவரது கழுத்தருகே தயங்கி நின்றது.அசோகனின் கை நடுங்கியது.இது என்ன தியாகம் என்று அறிவு குழம்பியது.அவர் கண் திறந்து பார்த்த போது அசோகன் குதிரையின் மீதமர்ந்திருந்தான்."துறவியே உண்மையான வீரத்தை நான் உம்மூலம்  தரிசித்து விட்டேன்! "அவனது வாள் குகையின் இருண்ட பகுதியில் விழுந்தது.சற்று தூரம் சென்று அசோகன் திரும்பி பார்த்த போது திஸ்ஸா அந்த துறவியின் காலில் விழுந்து கொண்டிருந்தான்.கலிங்க போருக்கு பின் தானும் புத்தரின் காலில் விழப்போவதை அறியாமல் அசோகன் கிளம்பினான்.தொலை தூரத்தில் ரத்த சகதி படிந்த மகதத்தின் சிம்மாசனம் அவனுக்காக காத்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக