சனி, 14 ஜனவரி, 2017

பீட்டா

பீட்டாவில் ஒருநாள்!

"யோவ்! என்னய்யா நாய வளர்ந்துன.!தின்னுட்டு கழிஞ்சுட்டே இருக்கு.!"

"நாயின்னு சொல்லாதீங்க அது பேரு ஜிம்மி.!"

"இன்னையோட 15நாள் முடிஞ்சுது கூட்டிட்டு போ.!"

"இன்னைக்கு ஜிம்மிய கூட்டிட்டு போக நான் வரலைன்னா என்ன பண்ணுவீங்க.?"

"ஊசி போட்டு கொன்ருவோம்.!அதுக்கு கோர்ட் பர்மிசன் கொடுத்திருக்கு.!"

"நம்ம ஜிம்மி ஏதாச்சும் தொந்தரவு பண்ணுச்சா.?"

"தின்னுட்டு,தின்னுட்டு கழியுது.நைட்டு ஒரே ஊளைசத்தம். தூங்க முடியல.!இதுக்கே ஒரு ஆளு வேணும்.!"

"தொந்தரவுக்கு மன்னிச்சுக்குங்க.!"

பீட்டாவிலிருந்து வெளியே வந்தவன் பத்தடி தூரத்தில் நின்றவனை பார்த்து சிரித்து விட்டு நாயை கை மாற்றினான்."பேரு டைகர்னு சொல்லு.!"என்றான்.நாயை வாங்கியவன் மறுபடியும் பீட்டாவினுள் புதிதாக நுழைந்து "இது தெருவில் திரிஞ்சது.!பாத்துக்குங்க.!பாத்துக்குவீங்கன்னு சொன்னாங்க"என்றான்.

"பாத்துக்குவோம்.இதை பாத்த மாதிரியே இருக்கே !இது பேரு ஜிம்மிதானே.!"

"தெரியலீங்க.!நான் டைகர்னு பேரு வச்சிருக்கேன்.!"

"இந்த நாய இப்பதான அனுப்பினோம்.?"

"ரெண்டு நாயும் டுவின்ஸா இருக்குமோ.?மனுசன் மட்டும்தான் டுவின்ஸா இருக்கனுமா? "

"அப்படி சொல்லலை!15 நாளில் நாயத்தேடி யாரும் வரலைன்னா ஊசி போட்டு கொன்ருவோம்.!பாத்துக்குங்க.!"

"அப்ப சாகரவரைக்கும் எந்த மிருகத்தையும் பாத்துக்க மாட்டிங்களா.?"

"நாங்க பிச்சைதான் எடுக்கனும்.!"

.அப்ளிகேசனை பில் பண்ணி நாயை உள்ளே கொண்டு போய் விட்டு விட்டு திரும்பிய போது வேறோருவன் கையில் வட்டக்கூடையுடன் நின்றிருந்தான்.
"என்னப்பா இது? "

"பாம்புங்க.!ராஜநாகம்.!"

"அது கூலிங்கான இடத்துலதான் வாழும்.ஏசிலதான் வைக்கனும்.இங்க ஏசி வசதி இல்லையே.!"

"ஏங்க இல்லை.?உங்க ஆபிஸ்ரூம் புல்லா ஏசிதானே.?அங்க வைச்சி பாத்துக்குங்க.மனுசன விட மிருகங்கள்தானே உங்களுக்கு முக்கியம்.!" .என்றவன் ஆபிஸ் டேபிளில் பாம்பை விட்டான்.

"யோவ்.!என்னய்யா பண்ரே.!"

"பேரு ருத்ரன்.தினக்கி ஒரு லிட்டர் பாலும் 5முட்டையும் சாப்பிடுவாரு.அப்ளிகேஷனை பில் பண்ணிக்குங்க.அவசரப்பட்டு கைல பிடிச்சிராதீங்க.!பல்லு இன்னும் புடுங்கலை.!"

அவன் சிரித்தபடி வெளியேறினான்.#இப்படி சாவடிக்கனும்!

செவ்வாய், 10 ஜனவரி, 2017

வீரம்

அசோகன் அந்த குகையின் முன்பு புரவியிலிருந்து இறங்கினான்.அது ஒரு புத்த துறவியின் வாழிடமாகவும், வழிபாட்டு தலமாகவும் இருந்திருக்க வேண்டும் என்பதை வெளியேயிருந்த புத்தர் சிலை பறை சாற்றியது.அசோகனின் குதிரைக்கு முன்பாகவே ஒரு குதிரை நெடும்பயணத்தின் விளைவாக வாயில் நுரை தள்ள நின்றிருந்தது.அது திஸ்ஸாவுடையது என்பதை அசோகன் அறிவான்.தன் நூறு சகோதரர்களில் எஞ்சியவன் அவன் ஒருவனே.அசோகன் தன் வாளை உருவினான்.99 சகோதரர்களின் குருதி குடித்த வாள் வெய்யிலில் மின்னியது.

"திஸ்ஸா! கோழையே வெளியே வா! நீ நிராயுதபாணி என்பதை நான் அறிவேன்.வீரனாக போரிட்டு மரணத்தை ஏற்றுக் கொள்! "

அசோகன் தூக்கி எறிந்த மற்றோரு வாள் குகையின் மவுனத்தை உடைத்தபடி விழுந்தது.சற்று நேரத்தில் அந்த வாள் வெளியே வந்து விழுந்தது.அசோகன் துணுக்குற்று நிமிர்ந்தான்.எதிரே கருணை நிறைந்த முகத்துடன் அந்த புத்த துறவி நின்றிருந்தார்.

"அன்பிருக்கும் இடத்தில் ஆயுதத்திற்கு இடமில்லை மகனே! "ஸ்பஷ்டமான அவரின் குரல் அவனை என்னவோ செய்தது.

"நான் பிம்புசாரனின் மகன் அசோகன்.அரச பதவிக்கு இடையூறு செய்த என் சகோதரர்களை கொன்றிருக்கிறேன்.மிஞ்சியவனுக்கு எமனாக வந்திருக்கிறேன்.அவனையும் கொன்றால் மகதம் எனது.மௌரிய வம்சாவழியின் ஒரே வேர் நான்! "

"அரச பதவி மிகப்பெரிதோ? "

"உம் ஆண்டி பதவியை விடப் பெரிதுதான்.!"

"என்னிடம் அடைக்கலமானவனை கொன்றால்தான் அந்த பதவி கிட்டுமா? "

"ஆம்! இனி எல்லாம் நானே! மகதத்தின் அரசன் நான்.!"

"அரசனுக்கு சாமான்யனின் வேண்டுகோள்.அவனை விட்டு விடுங்கள்! "

"ஒரு நிபந்தனைக்கு உட்பட்டால் அவனை உயிருடன் விடுகிறேன்.!"

"என்ன நிபந்தனை? "

"என் மனைவி தேவியும் உம் மதமே.அதை நான் கிண்டல் செய்திருக்கிறேன்.கோழைகளின் மதமென்று.இப்போது குயுக்தியான ஒரு எண்ணம் தோன்றுகிறது.!"

"சொல்லுங்கள்! வினாச காலே விபரீத புத்தி! "

"அருகரே! அவனை உயிருடன் விடுகிறேன்.அவனுக்கு பதில் உம் உயிரை கொடுப்பீரா? "

"எடுத்து கொள்ளும் இந்த கணமே! என் இடத்தில் நீ இருந்தால் இதை செய்வாயா? "

அசோகனிடம் அவர் கேள்விக்கு பதில் இல்லை.வீரம் என்பதென்ன? புதிதாக ஒரு கேள்வி அவனுள் முளைத்து கிளர்ந்தது.

அவர் மண்டியிட்டு அமர்ந்து கண்களை மூடினார்.
"அரசே! நான் தயார்.என் அடைக்கல பொருளுக்காக இறக்க சித்தமாகிவிட்டேன்.!"

அசோகனின் வாள் உறையிலிருந்து உருவப்பட்டது.சத்தத்திலும் சலனமின்றி இருந்தது அவர் முகம்.காற்றை கிழித்து கொண்டு விரைந்த வாள் அவரது கழுத்தருகே தயங்கி நின்றது.அசோகனின் கை நடுங்கியது.இது என்ன தியாகம் என்று அறிவு குழம்பியது.அவர் கண் திறந்து பார்த்த போது அசோகன் குதிரையின் மீதமர்ந்திருந்தான்."துறவியே உண்மையான வீரத்தை நான் உம்மூலம்  தரிசித்து விட்டேன்! "அவனது வாள் குகையின் இருண்ட பகுதியில் விழுந்தது.சற்று தூரம் சென்று அசோகன் திரும்பி பார்த்த போது திஸ்ஸா அந்த துறவியின் காலில் விழுந்து கொண்டிருந்தான்.கலிங்க போருக்கு பின் தானும் புத்தரின் காலில் விழப்போவதை அறியாமல் அசோகன் கிளம்பினான்.தொலை தூரத்தில் ரத்த சகதி படிந்த மகதத்தின் சிம்மாசனம் அவனுக்காக காத்திருந்தது.

செவ்வாய், 3 ஜனவரி, 2017

பாசம்

தினேஷ் வேலையில் ஆழ்ந்திருந்த போது போன் மணி அடித்தது.எடுத்து "ஹலோ! "என்றவன் எதிர்முனையில் கேட்ட ஸ்வேதாவின் குரலில் எரிச்சலானான்.""நீ கேட்ட டைவர்ஸுக்குத்தான் ஒத்துகிட்டேனே? இன்னும் எதுக்கு போன் பண்ணி இம்சை பண்ற? "என்றான்.
"நடிக்காதடா! டைவர்ஸுக்கு ஒத்துக்கற மாதிரி நடிச்சுட்டு எம்புள்ளைய எதுக்கு கடத்திட்டு போன? "என்றாள் ஸ்வேதா கோபமாய்.

"என்னடி சொல்ர? தேவிய காணோமா? "என்றான் அதிர்ச்சியாய்.

"அப்ப நீ அவளை ஸ்கூல்லருந்து கூட்டிட்டு போகலியா? "

"இல்லியே! என்னாச்சுடி அவளுக்கு! என்ன பண்ணித் தொலைஞ்ச? "

"ஸ்கூல்லருந்து அவளை காணோங்க! யாரோ கூட்டிட்டு போயிட்டாங்க! நீங்க கூட்டிட்டு போகலியா? "

"அவளுக்கு எதாவது ஆச்சு.செத்தடி நீ! இரு வீட்டுக்கு இப்பவே வர்ரேன்! "

தினேஷ் வண்டியில் கிளம்பும்போது தேவியின் குரல் காதில் கேட்டது."ஏம்ப்பா! எப்ப பார்த்தாலும் ரெண்டு பேரும் சண்டை போடுரீங்க! எனக்கு பிடிக்கவேயில்லை! "எங்கடா இருக்க என் கண்ணு! உனக்காகத்தானே அவளோட இம்சையை பொறுத்துக்கிட்டேன்.டைவர்ஸுக்கு கூட சம்மதிச்சேனே!

அவன் வீட்டிற்குள் நுழைந்த போது வக்கீல் உட்கார்ந்திருந்தார்."என்ன தினேஷ்! நீங்க எதுவும் டிராமா பண்ணலையே? "என்றவரை முறைத்தவன் "கிளம்பு! போலீஷ் ஸ்டேசன்ல கம்ளைண்ட் பண்ணலாம்! "என்றான்.அழுது கொண்டிருந்தவள் "சரி வாங்க! போலாம்! "என்று எழுந்தாள்."வெயிட் பண்ணுங்க! ரெண்டு நாள் பார்ப்போம்.அப்புறம் கம்ளைண்ட் கொடுக்கலாம்.முதல்ல நாம விசாரிச்சு கண்டு பிடிக்க டிரை பண்ணலாம்! "என்றார் வக்கீல்.

"எல்லாம் இவளால! பெண்ணுரிமை பேசி புள்ளைய தனியா விட்டுட்டு வேலைக்கு போறேன்னு! பாவம்டி அவ.ஸ்கூல் விட்டு வந்து தனியா டிவி பார்த்து கூட விளையாட யாரும் இல்லாம.!உனக்கு உம் படிப்பும் அதுல வந்த திறமையும் வேலையும்தான முக்கியம்.அதை வைச்சுகிட்டு இப்ப அழு! "

"எனக்கு இப்ப புரியுது.!'

"புரிஞ்சு என்ன பண்ண.தேவி இல்லையே! "

தினேஸிம் அவளும் தெரிந்தவர்களுக்கெல்லாம் போன் பண்ணி விசாரிக்க ஆரம்பித்தனர்.வக்கீல் அங்கிருந்து கிளம்பினார்.

அவர் தன் வீட்டையடைந்து காலிங்பெல்லை அடித்த போது அவரது மனைவி கதவை திறந்தாள்.உள்ளே நுழைந்த போது மகனுடன் விளையாடிக் கொண்டிருந்த தேவி ஓடி வந்து "என்னாச்சு அங்கிள்? "என்றாள்.

"இப்பத்தான் உன்னைப்பற்றி யோசிக்க ஆரம்பிச்சிருக்காங்க! இன்னும் ஒருநாள்ல தங்களோட தப்பையெல்லாம் உணர்ந்து திருந்திருவாங்க.!"

"நீங்க ஏன் அங்கிள் என்னோட அப்பா அம்மாவை பிரிச்சு வைக்காம சேர்த்து வைக்க டிரை பண்ரீங்க? "

"என்னோட அப்பா அம்மாவும் டைவர்ஸ் பண்ணிட்டு வெவ்வேறு ஆட்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னை அனாதையாக்கிட்டாங்க.அம்மாவோ, அப்பாவோ இல்லாம வாழரது எவ்வளவு கஷ்டம்னு எனக்கு தெரியும்.சாப்பிட்டியான்னு கேட்ககூட யாரும் இல்லாத ஒரு வாழ்க்கைய வாழ்ந்தேன்.அடிச்சு புடிச்சு படிச்சு வக்கீலாயிட்டேன்.அன்னைக்கு முடிவு பண்ணினேன்.டைவர்ஸ் வாங்கித்தந்து எந்த குழந்தையையும் அனாதையாக்கிவிடக்கூடாதுன்னு.!அதைத்தான் உன்னோட ஒத்துழைப்போடு செய்து கொண்டிருக்கிறேன்.எல்லாகுழந்தைகளும் அம்மாஅப்பா ஒன்னா சேர இதுக்கு ஒத்துழைப்பதுதான் ஆச்சரியம்.!"

"என்னோட உலகம் அவங்கதானே? "

"அவங்களோட உலகமும் நீதான்.நாளைக்கு நீ வீட்டுக்கு போயிரலாம்.!"என்ற போது போன் அடித்தது.மறுமுனையில் ஸ்வேதாவின் குரல் "மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங் டைவர்ஸ் பேப்பரை கிழிச்சுருங்க சார்.!நாளைக்கு ஸ்டேசனுக்கு கம்ளைண்ட் கொடுக்க போகிறோம்.என் பொண்ணுதான் எனக்கு முக்கியம்! "என்றது.அவர் தேவியை நோக்கி கட்டைவிரலை உயர்த்தினார்.அவளது முகத்தில் நிரந்தரமான ஒரு புன்னகை உருவானது.

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

நடந்தால்?

ரெட்டி தன் வேலையில் மூழ்கியிருந்த போது போன் அடித்தது.எடுத்து "ஹலோ! "என்றவன் மறுமுனையில் கேட்ட "என்ன ரெட்டி சவுக்கியமா? "என்ற பரிச்சயமான குரலில் அதிர்ந்தான்.
"தலைவரே நீங்களா? எங்கிருந்து பேசரீங்க? "என்றான் பரவசமாக!

"இப்ப சொல்ல முடியாது.என்ன நடக்குது அங்கே? "

"நீங்க சொன்ன மாதிரிதான் நடக்குது தலைவரே! கட்சி தலைவராயிட்டான் தினேஷ்! அடுத்து சி எம் சேர்தான்! "

"வீட்டு வேலைக்கு வந்தவனுடைய வாழ்வை பார்த்தியா ரெட்டி? "

"அதுகூட சகிச்சுக்கலாம் தலைவரே.!அவன் சொல்லித்தான் எல்லாமே செஞ்சீங்கன்னு சொல்ரானுக! அதைத்தான் தாங்க முடியலை! "

"அது பாதி உண்மை.பாதி பொய்! "

"எப்படி தலைவரே! இவங்கிட்ட சிக்கினீங்க? "

"அது ஒரு கதை! நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னாடி ஒரு தெலுங்கு நடிகையோட கொஞ்சநாள் லிவிங் டுகெதரா வாழ்ந்தேன்.ஒரு பொண்ணை பெத்துகொடுத்துட்டு பிரசவத்துல அவ செத்துட்டா! யாருக்கும் தெரியாம ரகசியமா அதை வளர்த்துட்டு வந்தேன்.அப்ப வீட்டு வேலைக்கு வந்த தினேஷ்கிட்ட குடிச்சுட்டு உளறிட்டேன்.என் பொண்ணை கஸ்டடியில் வைச்சுகிட்டு மிரட்ட ஆரம்பிச்சானுக.போதாததற்கு சுயநினைவு இல்லாத போது ஒரு பொண்ணோட என்னை நிர்வாணமா போட்டோ புடுச்சு வைச்சிட்டானுக.அதை காட்டித்தான் என்னை மிரட்டி அரசியலுக்கே கொண்டு வந்தானுக.பொண்ணுக்காகவும், இமேஜிக்காகவும் சொன்னதையெல்லாம் செய்தேன்.கடைசியா வெறுத்து போய் எனக்கு விடுதலையே கிடையாதான்னு கேட்டப்ப செத்தாத்தான் விடுதலைன்னு சொன்னான்.அப்பத்தான் சாக முடிவு பண்ணிணேன்.!"

"அதனாலதான் என் ஆஸ்பிட்டலுக்கு வந்தீங்களா?"

"ஆமா! நான் தப்பிச்சு ஓடிருவேன்கிற பயத்துல என் காலை வெட்ட சொன்னான் தினேஷ்.சுகர் அதிகம்னு சொல்லிடலாம்னு சொன்னான்.ஆனா நீ அதை எங்கிட்ட சொல்லிட்ட! "

"அப்புறம்தானே உங்க மாதிரியான மெழுகு சிலையை
உள்ளே கொண்டுவந்தேன்."

"அதுக்கு மாஸ்க் போட்டு எம்பாமிங் ஓட்டைய போட்டு காலை வெட்டி செத்துட்டதா நம்ப வைத்தாய்.நான் வேற வழியா தப்பிச்சு போலி பாஸ்போர்ட் வழியா என் பொண்ணை தேடி கண்டு பிடிச்சிட்டேன்."

"தினேஷ் சிஎம் ஆயிருவானா தலைவரே?

"அவன் நான் நின்ன தொகுதியில் நிற்க மாட்டான்.அவன் சாதிக்காரர்கள் அதிகமுள்ள தொகுதியில்தான் நிற்ப்பான்.சாதி பாசம் ஜெயிக்க வைக்கும்.அவன் ஜெயிக்கட்டும்."

"இங்க வேற சமாதிய தோண்டனும்னு பிரச்சனை பண்றாங்க.உள்ள இருப்பது மெழுகு சிலைன்னு தெரிஞ்சிராது.?"

"தெரியட்டும்.அப்ப தலைவர் எங்கேன்னு எவனாவது கேள்வி கேட்பானான்னு பார்ப்போம்.அவன் சிஎம் ஆன பிறகுதான் என் சம்மந்தப்பட்ட ஆதாரங்களை அழிப்பான்.அதற்குள் என் பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணி வைச்சிருவேன்.எஸ்டேட்டில் மட்டும்தான் என் பொண்ணை கூட்டிட்டு வந்து காட்டுவானுக.இப்ப அரசியல் பிஸியில் இருந்ததால் என் பொண்ணோட பாதுகாப்பை குறைச்சுட்டானுக.கண்டுக்கவேயில்லை.அதனால் எம் பொண்ணை ஈஸியா மீட்டுட்டேன்.என் பொண்ணு கல்யாணம் முடிஞ்சதும் மறுபடியும் வருவேன்.எனக்கு துரோகம் செய்தவர்களின் முகத்தை பார்க்க! "

"தமிழ்நாடு காத்திருக்கிறது தலைவரே "என்றான் ரெட்டி.
#இது அரசியல் கதையல்ல!

#இதில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே!

விபரீதமாய் ஒரு கொலை!

விக்னேஷும் அருணும் உள்ளே நுழைந்த போது இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தன் வலது கையை உதறிக் கொண்டு சல்யூட் வைத்தார்."எவ்வளவு அடிச்சாலும் அந்த போட்டோகிராபர் உண்மைய சொல்ல மாட்டேங்குறான்! "என்றான்.
"இப்ப சொல்ல வைக்கலாம்.!தண்ணீர் தொட்டி எதாவது இங்க இருக்கா? "என்றான் விக்னேஷ்.

"ஸ்டேசனுக்கு பின்னாடி இருக்கு.அது எதுக்கு? "என்றார் பொன்ராஜ்.

"அருண்! அதை டிரிட்மெண்டுக்கு ரெடி பண்ணு! "என்றதும் அருண் தண்ணீர் தொட்டியை நோக்கி இரண்டு பொட்டலங்களுடன் நடந்தான்.

"இதுவரைக்கும் என்னதான் நடந்திருக்கு.!"

"பங்சனுக்கு வந்த செண்ட்ரல் மினிஸ்டரை மைதானத்துக்கு நடுவுலயே சுட்டு கொன்னுட்டாங்க.அந்த டைம்ல எடுத்த போட்டோவுல சுட்டது ஒரு பொண்ணுண்னு தெரியுது.அந்த பொண்ணை போஸ்ட் அடிச்சு ஒட்டி நாடெல்லாம் தேடியும் கண்டு பிடிக்க முடியலை.அந்த பொண்ணு தங்கியிருந்த பிளாட்டை கண்டு பிடிச்சாச்சு.அங்க ஒன்னும் கிடைக்கலை.அந்த பொண்ணு பேரு ஸ்வாதி.!"

"ஒரு பொண்ணு பைனாகுலர் பொருத்திய துப்பாக்கியில் சுடுறதுன்னா அதுக்கு ட்ரெய்னிங் எங்க எடுத்துருப்பா? "

"இப்ப பொண்ணுங்களும் கொலை பண்றாங்க போல! "

"அவளோட ரூம்ல இருந்துதானே சுட்ருக்கா? "

"ஆமா! அந்த கிரவுண்டுல பேசரத்துக்கு வருவாருன்னு தெரிஞ்சு மூணுமாசமா அந்த பிளாட்ல குடியிருந்து போட்டுத்தள்ளியிருக்கு அந்த பொண்ணு.பக்கத்து பிளாட்டுல கூட அதிகம் பேசறதில்லையாம்.!ஆமா இந்த போட்டோகாரனை எதுக்கு அடிக்க சொல்ரீங்க?"

"எல்லோரும் கூட்டத்தை போட்டோ எடுக்கும் போது இவன் எப்படி ஸ்வேதா நாலாவது மாடியிலிருந்து சுட்டதை போட்டோ எடுத்திருக்க முடியும்? அப்ப அங்கிருந்து சுடறது இவனுக்கு முன்னாடியேதெரிஞ்சிருக்கனும்.அந்த போட்டோ வெளியே வரணும்னு கொலையாளி விரும்பியிருக்கிறான்.! "

"எதுக்கு? "

"நம்மை குழப்ப.அதை இனிமேல்தான் கண்டு பிடிக்கனும்."

பொன்ராஜ் ரத்த காயத்தோடிருந்தவனை கூட்டி வந்தார்."ஏதேச்சையா ஒரு போட்டோ எடுத்தது தப்பா? அதுக்கு அடிப்பீங்களா? "என்றான் ஈனஸ்வரத்தில்.

"இதேதான் சொல்ரான்.!"என்றார் பொன்ராஜ்.

தொட்டியருகே அழைத்து வந்த விக்னேஷ் தன் ஷு லேஸை உருவி அவன் கையையும், காலையும் கட்டினான்.அருணோடு சேர்த்து தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்தவன் திமிறி எழுந்தவனை நெஞ்சில் கால் வைத்து மிதித்தான்."ஏங்க! செத்துரப் போறான்? "என்ற பொன்ராஜை பார்த்து "பயப்படாதீங்க.இது லேட்டஸ்ட் டெக்னிக்.மூளை நீ சாகப் போறேன்னு சொல்லும்.தண்ணீரில் உள்ள எப்சம் உப்பு அவனை மூழ்க விடாது.நுரையீரலில் கால்வாசி தண்ணீரில் மூழ்கி செத்த உணர்வு வந்து விடும்.எதுக்கு அடிச்சுகிட்டு.கையெல்லாம் வலிக்கும்.!"என்றான்.இரண்டு நிமிட மூச்சு திணறலில் உண்மையை கக்கினான்."ஆமா! எனக்கு தெரியும்.எனக்கு பணம் கொடுத்து அந்த போட்டோவை எடுக்க சொல்லி போலீஸ்கிட்ட கொடுக்க சொன்னாங்க! "

"சொன்னது யாரு? "

"அவனோட போன் காண்டாக்ட் மட்டும்தான்.நெம்பர் மட்டும்தான் இருக்கு."

அவன் கொடுத்த நெம்பருக்கு டயல் செய்த போது சுவிட்ச் ஆப் என்றது.

"இப்ப என்ன பண்றது "?

"அந்த நெம்பர் அட்ரஸ் புரூப், கடைசியா வேலை செய்த டவரை கண்டு பிடிச்சு சொல்லுங்க.!நாங்க ஸ்வேதா பிளாட்டுக்கு போறோம்.!"

அவர்கள் ஸ்வேதா  இருந்த அப்பார்ட்மெண்டுக்கு கிளம்பினார்கள். ஸ்வேதாவின் பிளாட்டை திறந்த போது பக்கத்து பிளாட்டிலிருந்து எட்டி பார்த்த ஒரு பெண் "நீங்க போலீசா? "என்றாள்.

"அதுல என்ன டவுட்டு? "என்றான் அருண்.

"தொப்பை இல்லாம இருக்கீங்க? அதான் டவுட்டா இருக்கு! "

"பிட்டா இருந்தா போலீஸ் இல்லையா? என்னம்மா நியாயம் இது? ஆமா உம் பேரு என்ன? "என்றான் அருண்.

"தம்பி நாம விசாரணைக்கு வந்திருக்கோம்.பொண்ணு பாக்க இல்லை."என்றான் விக்னேஷ்.

"இதுவும் விசாரணைதான்.!சொல்லும்மா! "

"எம்பேரு ஜெயா! "

"யார் பேச்சையும் கேட்கமாட்டியே! ஆமா இந்தாக்காவோட பேசி பழகியிருக்கியா? "

"ம்ஹிம்! அதிகம் பேச மாட்டாங்க.சின்ன ஸ்மைலோட சரி! "

"அங்கென்ன பேச்சு? உள்ள வா ஜெயா? "என்றகுரலில் காணாமல் போனாள்.

இருவரும் உள்ளே நுழைந்த போது சொற்ப சாமான்களுடன் காட்சியளித்தது அந்த அறை.பெண்களுக்கான எல்லா ஆடைகளும் தொங்கி கொண்டிருந்தன.அருண் உதட்டை பிதுக்கினான்."எல்லாமே அவுட் ஆப் பேசனா இருக்கு பாஸ்.ரசனையில்லாத பொண்ணு போல.லேட்டஸ்ட் பாஷனா எதுவும் இல்லை.!"

பைல் செய்யப்பட்டிருந்த மளிகை லிஸ்டை பார்த்து கொண்டிருந்தான்.டேபிளின் மீதிருந்த இரண்டு ஸ்மைலி பந்துகளை பார்த்து "இது எதுக்கு ரெண்டு பந்து? கைல எதுவும் பிரச்சனையா பொண்ணுக்கு? நமக்குத்தானே ரேகை தேயும்? "என்றவனை "சரி வா போலாம்! "என்றான் விக்னேஷ்.

கதவை பூட்டும்போது அந்த ஜெயா எட்டி பார்த்து "மாவரைக்கனும்.உளுந்து இல்லை.கடை வரைக்கும் டிராப் பண்ண முடியுமா? "

"நீங்க சொன்னா சொர்க்கத்துக்கே டிராப் பண்ணுவோமே! "என்று வாயெல்லாம் பல்லான அருணை விக்னேஷின் "வீட்ல அப்பளம் இருக்கா? "என்ற குரல் கட்டையை போட்டது."இருக்கு "

"ஒரு அப்பளக்கட்டை தண்ணியில ஊற வைச்சு மாவுல போட்டு அரை.அப்பளத்தை உளுந்துலதான் செய்யராங்க! "

"இது புதுசா இருக்கே! "என்றவள் உள்ளே மறைய தலைகுனிந்த அருண் "பொறாமை! "என்றான்.

அவர்கள் ஜீப்பிற்கு வந்த போது போன் அடித்தது.மறு முனையில் பொன்ராஜ் சொன்ன அட்ரஸை குறித்து கொண்டு "இங்க வண்டியை விடு! "என்றான் விக்னேஷ்.
"அங்க யார் பாஸ் இருக்கா? "

"ஸ்வேதா! " "ஸ்வேதாவா! என்ன பாஸ் சொல்ரீங்க? "

"அவ சுட்டப்ப எடுத்த போட்டோவை நல்லா பாரு! அவளுக்கு ஆறு விரல் இருக்கு! "

"சரி! அதை வைச்சு எப்படி பிடிப்பீங்க? "

"விளக்கமா சொல்ரேன் கேளு.செண்ட்ரல் மினிஸ்டர் தேர்தல் பிரசாரத்துக்கு இங்க வரப்போறார்னு நல்லா தெரிஞ்சிருக்கு.அவரை போட்டுத்தள்ள பிளான் பண்ணித்தான் அந்த கிரவுண்ட்டுக்கு எதிரே உள்ள அப்பார்ட்மெண்டுல பிளாட்டை வாடகைக்கு எடுத்து மூணு மாசமா தங்கியிருக்கா ஸ்வேதா! "

"மீட்டிங் வேற பக்கம் நடந்திருந்தா மினிஸ்டர் தப்பிச்சிருப்பாருல்ல? "

"நல்ல கேள்வி! பொன்ராஜ் கொடுத்த அட்ரஸை பாரு.அந்த டவரும் இன்னோரு கிரவுண்டுக்கு பக்கத்துலதான் இருக்கு.!அது நாலு மாடி அபார்ட்மெண்ட்! "

"அப்ப அங்கே பேசினாலும் கொன்ருப்பாங்க! "

"ஆமா! இந்த ஊர்ல இருக்கிற பெரிய மீட்டிங் பிளேஷ் இது இரண்டும்தான்.இரண்டு இடத்துலயுமே கொலையாளிகள் தயாரா இருந்திருக்கனும்."

"அப்ப அந்த இன்னோரு கொலைகாரி யாரு? "

"அதுவும் ஸ்வேதாதான்.!"

"என்ன பாஸ் குழப்புரீங்க? "

"குழப்பலை.முதல்ல ஒரு உண்மைய சொல்ரேன்.ஸ்வேதா ஒரு பொண்ணே கிடையாது.ஆண்.!"

"என்ன பாஸ் சொல்ரீங்க? "

"ஆமா! ரெண்டு பிளாட்டுலயும் ஒரே ஆள் தங்கியிருக்கான்.ஒன்னுல ஆணாவும், இன்னொன்னுல பொண்ணாவும்.!பொண்ணா கொலை பண்ணி போட்டோவை போலீசுக்கு கிடைக்க வைச்சுட்டு அவன் ஆணாக மாறி இந்த பிளாட்டுல இருப்பான்.மந்திரி இந்த கிரவுண்டுக்கு வந்திருந்தா ஆணா கொலை பண்ணிட்டு பெண்ணா அந்த பிளாட்டுல ஸ்டே பண்ணியிருப்பான்.!"

"பயங்கர ஐடியாவா இருக்கே! பொண்ணுன்னு எப்படி கண்டு பிடிச்சீங்க? "

"மளிகை லிஸ்டுல கேர்ப்ரீ, விஸ்பர்னு மூணு நாள் சமாச்சாரம் எதையுமே காணோம்.நீ வேற அவுட் ஆப் பேசன்னு சொன்னியா? அந்த பந்து மாருக்கு வைச்சிருப்பானோன்னு டவுட்டு! "

அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டியிடம் பேப்பரிலிருந்த ஸ்வேதாவின் போட்டோவிற்கு தாடி, மீசை வரைந்து காட்டிய போது "அட நம்ம கிருஷ்ணமூர்த்தி! நாலாவது ப்ளோர்ல மூணாவது பிளாட்! "என்றார்.

"நம்மகிட்ட துப்பாக்கி இல்லை.எப்படி சமாளிக்கிறது? "என்றான் அருண்.

"பாத்துக்கலாம்! "

அவர்கள் கிருஷ்ணமூர்த்தியின் பிளாட்கதவை திறந்த போது துப்பாக்கியோடு கதவை திறந்தவன் "கைய மேல தூக்குங்க! "என்றான்.
கையை நெஞ்சுவரை தூக்கிய விக்னேஷ் கிருஷ்ணமூர்த்தியின் துப்பாக்கி ஏந்திய கையை பற்றி வானத்திற்கு உயர்த்தி பிடித்தான்.சீலிங்கில் ஒரு தோட்டா வெடித்து சிதறியது.வீழ்த்தப்பட்டவனின் கையிலிருந்த ஆறாவது விரலை அருண் பார்த்தான்.