வியாழன், 14 ஜூலை, 2016

பலிபீடம்

“இந்த இடம் உனக்கெப்படிப்பா தெரியும்? “என்றான் கிழவன்.
“எங்கப்பாவும் தாத்தாவும் இங்கதான் ஒளிஞ்சு வாழ்ந்தாங்களாம்.அதிகாரிகள் பிடிச்சுட்டு போய் அடிமையாக்கி வீட்டு வேலை செய்ய வைச்சே கொன்னுட்டாங்க! உயிரோடு இருந்தப்ப இந்த இடத்தை பத்தி சொல்லியிருக்காங்க! “

“ஒளிந்து வாழலாம்.ஆனா உணவு இல்லாமல் எப்படி வாழ்வது? அதுக்கு இங்கே வழி இல்லையே? “என்றான் மோகன்.
“ரொம்ப குளிருது! நெருப்பாவது பத்த வைக்கலாம்! “என்று லைட்டரை எடுத்த ரவியை பாய்ந்து தடுத்தான் கிழவன்.
“வேணாம்! புகை வெளியே போய் நம் இருப்பிடத்தை காட்டி கொடுத்து விடும்! வேற எதாவது பேசுவோம்!குளிர் தெரியாது “என்றான் கிழவன்.

அவர்கள் நால்வரும் நகரத்திலிருந்து தப்பி ஒடி வந்திருந்தார்கள்.அருணின் வழிகாட்டுதலில் இந்த குகையில் அடைக்கலமாகியிருந்தார்கள்.எப்போது வேண்டுமானாலும் அதிகாரிகள் அவர்களை தேடி வரலாம் என்பதையும் அறிந்திருந்தார்கள்.

“பெரிசு! நம்மள ஏன் துரத்துராங்கன்னு ஒரு ப்ளாஷ்பேக் சொல்லேன்! “என்றான் ரவி.

“சொல்கிறேன் “என்று பெருமூச்சு விட்டான் கிழவன்.
“இதெல்லாம் 2070ல் ஆரம்பிச்சுது.ஜீன்ஸ்னு ஒரு டைட்டான டிரஸ்ஸை போட்டும் ரசாயன உணவுகளை சாப்பிட்டும் விந்தனுக்களின் எண்ணிக்கை குறைந்துஆண்கள் கொஞ்சம் கொஞ்சமாக மலடாகி கொண்டிருந்தார்கள்.மக்கள்தொகை குறைந்ததால் ஒரு விஞ்ஞானி “இருபால் உயிரி “ன்னு ஒரு கான்செப்டை கண்டு பிடிச்சான்.உதாரணத்துக்கு மண்புழுவில் ஆண்புழு, பெண் புழுன்னு தனித்தனியா கிடையாது.ஒரே புழு ஆணாகவும் பெண்ணாகவும் மாறி குட்டி போடும்.ஆண்துணை தேவையேயில்லை! இன்னொரு ஸ்பெசாலிட்டி என்னன்னா மண்புழுவை ரெண்டா வெட்டுனா தனித்தனி உயிராகி விடும்.இதே மாதிரி உலகத்துல 50உயிரினம் இருக்கு.இந்த டெக்னாலாஜியும், குளோனிங்கும் ஒன்னு சேர்ந்துருச்சு.பொண்ணுங்க எல்லாம் அவங்களை மாதிரியே குளோனிங் குழந்தைகளை பெத்துக்க ஆரம்பிச்சாங்க! ஆண்கள் துணையே தேவைப்படலை.அம்மாவுக்கு ராதா 1,மகளுக்கு ராதா 2,பேத்திக்கு ராதா 3ன்னு பேர் வைச்சுகிட்டாங்க! எல்லோரும் பெண்குழந்தைகளா பெத்துகிட்டாங்க! ஆண்களிடம் திருமணம்கிற பேர்ல அடிமையா இருக்க விரும்பாம லெஸ்பியனா மாறிட்டாங்க! தேவையில்லாத ஆண்களை அடிமையாக்கிட்டாங்க! ஆட்சி அதிகாரமெல்லாம் அவங்க கைக்கு போயிருச்சு.இப்ப கடைசியா உலகத்துல மிஞ்சியிருக்கிற ஆம்பளைக நாம நாலு பேருதான் “

“அப்ப முன்னாடி நம்ம மூலமாத்தான் அவங்களுக்கு குழந்தை பொறந்திருக்கு?”

“ஆமா! செக்ஸ்ன்னு ஒன்ன பண்ணினா குழந்தை பொறக்குமாம்.எங்கப்பா சொல்லுவாரு! நானும் கேள்விப்பட்டதோட சரி! அனுபவிச்சதில்லை! “

“இதெல்லாம் எப்படி தெரியும் பெரிசு! “என்றான் ரவி!
“கொஞ்ச நாள் லைப்ரரில வேல செஞ்சேன்.அங்க படிச்சேன்! “
“நான் அருங்காட்சியகத்துல கூட்டி பெருக்கிட்டு இருந்தேன்.வேல ஒழுங்கா செய்யலைன்னு எங்க அதிகாரியம்மா எட்டி உதைச்சதுல ஒரு பல்லு விழுந்துருச்சு! “என்றான் அருண்.
“நாலாவது தோசை கருகிருச்சுன்னு எங்க ஆபிசரம்மா அப்புன அப்புல வலது காது லைட்டா கேட்க மாட்டேங்குது! “என்றான் மோகன்.

“வேடிக்கையை பாரு! தசரதன்னு ஒரு ராஜா அறுபதாயிரம்பொண்ணுகளை கல்யாணம் பண்ணியிருக்கான்! “என்றான் கிழவன்.

“முத பொண்டாட்டி ஓங்கி அப்பியிருந்தா அடுத்த கல்யாணத்த பண்ணியிருக்க மாட்டான்! “என்றான் அருண்.

“பெரிய வீரனா இருப்பானோ? “என்றான் மோகன்.

“எங்க ஆபிசரம்மா உத்து பார்த்தாவே எனக்கு ஒன்னுக்கு வந்துரும்.!குடிச்சுட்டு வந்துட்டா கொஞ்சுவா! தெளிவா இருந்தா பெல்டுலதான் பேசுவா! “என்றான் ரவி.!
அதே நேரம் வெளியே ஜீப் வரும் ஓசையும் மைக் சவுண்டும் கேட்டது.

“அடிமைகளே! ஒழுங்காக சரணடைந்து விடுங்கள்.!இல்லையென்றால் குகைக்கு பாம் வைத்து விடுவோம்! கூண்டோடு கைலாசம்.எப்படி வசதி! “

“சரணடைந்து விடலாம்! நமக்கு வேறு வழியில்லை! “என்றான் கிழவன்.
அவர்கள் கைகளை தூக்கியபடி தயக்கமாக வெளி வந்தார்கள்.வெளியே நின்றிருந்த யூனிபார்ம் அணிந்த பெண்களின் படை கிழவனை விட்டு விட்டு மற்ற மூவரையும் அடித்து துவைத்தது.

அடுத்த நாள் அவர்கள் அருங்காட்சியகத்தின் கம்பி உள்ள அறை ஒன்றினுள் அடைபட்டிருந்தார்கள்.வெளியே கூட்டம் கியூ கட்டி நின்றிருந்தது.
சில்லரைகளும், நோட்டுகளும் அவர்களின் மேல் எரியப்பட்டன.பாப்கார்னும் கூட விழுந்தது.”இன்னும் ரெண்டு நாளில் கொல்லப்படப் போகும் உலகின் கடைசி ஆண்கள் இவர்கள்தான்! “என்றவாறு ஒருத்தி “ஸ்மைல் பிளிஸ்! “என்றாள்.
“சிரிங்கப்பா! கடைசி போட்டோவுலயாவது வீரமா சிரிச்ச மாதிரி போஸ் கொடுப்போம்! “என்றான் கிழவன்.
“இதென்ன மூஞ்சில முடியெல்லாம் இருக்கு? “என்றாள் ஒருத்தி!

“அதுக்கு பேரு தாடி “என்றாள் இன்னொருத்தி.

“நல்லவேளை நமக்கெல்லாம் அந்த கருமம் வராது! “என்றாள் ஒருவள்.

“உயிரே போகப் போகுது! மசுரப்பத்தி பேசராளுக! “என்றான் வெறுப்போடு கிழவன்.

இரண்டு நாட்களுக்கு பிறகு பலி பீடம் நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள்.ஸ்பீக்கரில் குரல் கசிந்தது.
“தப்பி சென்ற குற்றத்திற்காகவும், இந்த பூமியில் ஆண்களுக்கான தேவை முடிந்து விட்டதாலும் இந்த அரசாங்கம் உங்களுக்கு மரண தண்டனை விதிக்கிறது! “

“ஒரு நிமிடம்! “என்றான் அருண்.

“அருங்காட்சியகத்தில் வேலை செய்த இரண்டு பெண்கள் இப்போது கர்ப்பமாக இருக்கிறார்கள்.அதற்கு காரணம் நான்! “என்றான் அருண்.

“இந்த வேலைய எப்படா பார்த்த?”என்றான் கிழவன்.

“சும்மா அடிச்சு விடுரதுதான்.அவங்களுக்குள்ளியே குழப்பம் வந்து துரோகின்னு அந்த பொண்ணுகளை விசாரிப்பாங்க! அது முடியற வரை உசுரோட இருக்கலாமே! “
“தப்பான காயை மூவ் பண்ணிட்ட! “என்றான் கிழவன்.

சிறிது நேர அமைதிக்கு பிறகு ஸ்பீக்கரில் குரல் கசிந்தது.

“அரிதான இனமாக மாறிவிட்ட உங்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்த விஞ்ஞானிகள் முடிவு செய்திருப்பதால் மரண தண்டனை ரத்து செய்யப்படுகிறது.!”

“எப்படி? பிளான் ஒர்க் அவுட் ஆயிருச்சு! “என்றான் அருண்.

ஸ்பீக்கரில் மேலும் குரல் கசிந்தது.
“எங்கள் இனத்து பெண்களின் கற்பு மேல் அபாண்டமாக பழி சுமத்தியதற்காகவும், விஞ்ஞானிகளுக்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாகவும் குற்றவாளிகளின் ஆண் உறுப்பை வெட்டி நீக்க இந்த கோர்ட் உத்தரவிடுகிறது! “

“ஏதோ ஒரு பத்து நிமிசம் பாத்ரூமில் ஆசுவாசம் பண்ணிட்டிருந்தேன்.அதுக்கும் ஆப்பு வைச்சாச்சா? இதுக்கு பேசாம செத்திருக்கலாம்!நீ சொன்ன பொய்யுக்கு எங்களுதை ஏண்டா வெட்டனும்? ஒரு லாஜிக் வேணாம் “என்றான் கிழவன்.
அவர்கள் பலி பீடம் நோக்கி பேண்டை அவிழ்த்தபடி நடந்தார்கள்.

திங்கள், 11 ஜூலை, 2016

பேய் படம்!

"அஞ்சு லட்சம்! அஞ்சே கண்டீசன்தான்! ஆனா யாராலயும் முடியலையே? "என்றான் சிவா.

"அப்படி என்ன படம்டா அது? "என்றான் ராஜ்.

"பேய்படம் ஒன்னு எடுத்திருக்காங்க! அஞ்சு கண்டீசன் போட்ருக்காங்க.அஞ்சு லட்சம் பரிசாம்! "

"பாடாவதி படத்தை எடுத்துட்டு ஒட வைக்க என்னென்னமோ பண்ரீங்க! இதே மாதிரிதான் ஈவிள்டெட் படத்துக்கும் சொன்னாங்க! அந்த ஐந்து கண்டீசனை சொல்லு! கேப்போம்!"

"படத்தை தனியாத்தான் பார்க்கனும்.அதுவும் செகண்ட் ஷோ! கண்ணை மூடி தூங்க கூடாது! இமைக்கலாம்.அங்கிருக்கிற கேமரா உன்னை வாட்ச் பண்ணும். எது நடந்தாலும் டைரக்டருக்கு பொறுப்பில்லைன்னு எழுதி கொடுக்கனும்.அதே மாதிரி உனக்கு எது நடந்தாலும் பொறுப்பில்லைன்னு எழுதி கொடுக்கனும்! "

"இதையெல்லாம் பண்ணிணா பணம் கொடுப்பாங்களா? "

"கதைய சொன்னாத்தான் பணம் தருவாங்க! என் லேப்டாப்பில் கூட அந்த படம் இருக்கு! பாரேன்! "

லேப்டாப்பில் படம் பார்த்தவன் "பயங்கர மொக்கையா இருக்கே? "என்றான்.

"மியூசிக்கில்தான் பயமுறுத்தரானுக! "

"ஒருவேளை உள்ளே பேய் வேஷத்துல ஆள வைச்சு பயமுறுத்துவாங்களோ? "

"சேச்சே! அதெல்லாம் எதுவும் இல்லப்பா! இதுவரைக்கும் படம் பார்த்த நாலு பேரு பாதியில வெளில வந்துட்டாங்க! .நீயெல்லாம் மூஞ்சில துண்டை போட்டுட்டு தூங்கரவன்.உனக்கெதுக்கு இது? "என்றான்.

நான் தூங்கும்போது கண்ணத் தொறந்துட்டுதான்டா இருப்பேன்.அதை பார்த்து நீ பயப்படாம இருக்கனும்னுதான் மூஞ்சில துண்ட போட்டுட்டு தூங்கரேன் என்று நினைத்துக் கொண்டவன் கிளம்பினான்.

"பாருப்பா! இண்டர்வெல் கிடையாது.தூங்கீர கூடாது.கண்ணை இமைக்கலாம்.கதைய சொல்லனும் சரியா? "என்றார் டைரக்டர்.

"இதென்ன பேய்படம்! கண்ணு இமைக்காமயே முழு படமும் பார்ப்பேன்! "என்றவன் தூங்கிக் கொண்டே ஐந்து லட்சத்தை வாங்க தயாரானான

சனி, 9 ஜூலை, 2016

தண்டனை!

“டாக்டர்! நாம பண்ரது தப்பில்லையா? “என்றான் டாக்டர் கதிர்.

“என்ன பண்ண சொல்ரீங்க? நமக்கு வேற வழியில்லை! “என்றார் டீன்.

“யோசிங்க சார்! பிளாட்பாரத்துல படுத்திருந்த நாலு ஏழைகள் மேல் குடி போதையில் காரை ஏத்தி கொன்னுட்டு நெஞ்சுவலி, சுகர், பிரஷர்னு பொய் சொல்லி இங்கே அட்மிட் ஆயிருக்கிற கிளாமர் ஸ்டார் ரவி கிஷனுக்கு அட்மிட் போட்டது தப்பில்லையா? நம்ம தொழிலுக்கு விரோதமாக அநியாயத்திற்கு துணை போகலாமா? “

“என்ன பண்ணலாம் கதிர்? நாம அட்மிட் பண்ணலைன்னா வேற ஹாஸ்பிடல்ல பண்ணுவாங்க. கோர்டுக்கு போனாலும் பணத்தை வாரி இறைச்சு வெளிய வந்துருவான். சட்டம் அவ்வளவு பலவீனமா இருக்கு! “

“சட்டம்தான் அவனை தண்டிக்க முடியும்னு இல்லை.நாமளும் தண்டிக்க முடியும்.நீங்க ஒத்துழைத்தால்! “

“நாம என்ன பண்ண முடியும்னு நினைக்கிறீங்க? “

“என்ன வேணா! “என்று குரலில் அழுத்தம் கொடுத்தவன் “ரவிக்கு எங்க அடிபட்டிருக்கு? “என்றான்.

“ரெண்டு கையிலும் லைட்டா பிராக்சர்.சுகர், பிரஷர் நார்மலாத்தான் இருக்கு! “

“ரைட்! ஆபரேஷன் தியேட்டரை ரெடி பண்ண சொல்லுங்க! “

“எதுக்கு கதிர்? “

“இன்னும் ஒரு மணி நேரத்தில் தெரியும் “என்று புன்னகைத்தான்.

ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு கண் விழித்த ரவி கிஷன் பெட்டில் ஊன்றி எழ கைகள் இன்றி திடுக்கிட்டான்.

“ஸாரி ரவிகிஷன்! மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்.விபத்துல கைல பிராக்சர் ஆகி சுகர், பிரசர் எல்லாம் எக்கச்சக்கமாக ஏறி விட்டது.உங்க உயிரை காப்பாற்ற வேறு வழியில்லாமல் கைகள் இரண்டையும் ரிமூவ் பண்ண வேண்டியதாக போச்சு! இனி இப்படியே வாழப் பழகுவதுதான் பெட்டர்.”

ரவி கிஷன் பெரும் குரலோடு அழத்துவங்கினான்.கதிர் இறுக்கமான முகத்தோடு வெளியே வந்த போது அடித்த காற்றில் மனம் இலேசானது.தூரத்தில் டீன் கட்டை விரலை தூக்கி காட்டினார்.தன் விரலால் தம்ஸ் அப் காட்டியவன் “தண்டிப்பதற்கு தனியாக கடவுள்னு ஒருத்தன் வருவான்னு காத்திருப்பதை விட நாமே தண்டனை கொடுத்து கடவுளாகி விடலாம்! “என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

ராஸ்வெல் ஏலியனும், வீல்சேர் விஞ்ஞானியும்

வீல் சேரில் உட்கார்ந்தபடி வானத்து நிலவையும் நட்சத்திரங்களையும் ரசித்துக் கொண்டிருந்தார் புரபஸர் ஜான்.ஏரியா 51 ல் வேலை செய்து மூன்று நாட்களுக்கு முன்பு ரிட்டயர்டு ஆனவர்.பிரியா விடை கொடுத்த ஏரியா 51ன் நிர்வாகம் பரிசாக கொடுத்த பெட்டியை மடியில் வைத்திருந்தார்.மனைவியை இழந்தவர்.ஒரே துணையான டிடோவுடன் ஒதுக்குப்புற பண்ணை வீட்டில் வசிக்கிறார்.டிடோ அவரது வேலைக்காரன்.கேரட் பீன்ஸ் என்று பச்சை காய்கறிகளை தின்னும் விநோதன்.நள்ளிரவில் யூரின் போக வேண்டும் என்று நினைத்தாலே உடனே கதவை திறந்து உள்ளே வந்து உதவுபவன்.டெலிபதி எதாவது தெரியுமோ என்று டிடோவின் மீது ஜானுக்கு மெல்லிய சந்தேகமும் உண்டு.அவரின் தேவைகளை சொல்லாமலே நிறைவேற்றும் தேவதூதன்.

மகன் திருமணமாகி மனைவியுடன் வெளிநாடு போனபின்பேரஸிஸால் பாதிக்கப்பட்ட ஜானுக்கு டிடோ முழுநேர துணையாகிப் போனான்.ஜானுக்கு காபி குடிக்க வேண்டும் என்று தோன்றியது.

“மாஸ்டர்! இந்தாருங்கள் காபி! “என்று காபியோடு வந்த டிடோவை பார்த்து அதிசயித்தார்.மனதில் நினைப்பதை செய்யும் மாந்திரீகனோ?

“மடியில் என்ன மாஸ்டர் பெட்டி? “

“என் வேலைக்கான நினைவுப்பரிசு! “என்றவர் காபியை வாங்கிக் கொண்டார்.

“ஏரியா 51 ல் அப்படி என்ன மாதிரி வேலை செஞ்சீங்க மாஸ்டர்.?பொழுது போகலை.அரசியல், சினிமா விசயமெல்லாம் எனக்குத் தெரியாது.உங்க வேலையைப்பத்தி

.கொஞ்சம் சொல்லுங்களேன்! “

“அதெல்லாம் அரசு ரகசியங்கள்.உனக்காக சொல்கிறேன்.வெளியே சொல்லக்கூடாது. சரியா? “

“ஒகே மாஸ்டர்! நான் யாரிடம் சொல்ல போகிறேன்.உங்களை நம்பி வாழும் அனாதை நான்.!”

“இந்த கதை 1947ல் ராஸ்வெல் கிராமத்தில் விழுந்த பறக்கும் தட்டிலிருந்து துவங்குகிறது.அதில் பயணம் செய்த ஏலியன்கள் மூவரில் இரண்டு பேர் அப்போதே இறந்து போனார்கள்.ஒருவன் குற்றுயிராக இருந்தான்.ஆஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்ட அவன் குணப்படுத்த முடியாமல் ஏரியா 51 க்கு கொண்டு செல்லப்பட்டான்.என்னைப் போன்ற விஞ்ஞானிகள் அவன் சாகும் போது உடன் இருந்தோம்.அப்போது எனக்கு இளம் வயது.அவன் சாகும் போது வெறுப்பும் துன்பமும் எங்களின் மனதை நிறைத்தது.ஏனென்று தெரியாமல் துக்கத்தால் பாதிக்கப்பட்டோம்.வானிலை பலூன் விபத்து என்று அரசு விஷயத்தை மூடி மறைத்தது.அந்த கலம் ஏரியாவிற்குள் கொண்டு வரப்பட்டது.”

“ஆஸ்பிட்டலில் சிகிச்சை தந்தவர்கள் விசயத்தை வெளி உலகிற்கு சொல்லியிருப்பார்களே? “

“அரசால் அவர்கள் காணாமலடிக்கப்பட்டார்கள்.பூமியில் இல்லாத உலோகத்தால் வடிவமைக்கப்பட்ட கலம் அது.மெல்லிய வளையக்கூடிய வலுவான உலோகம் அது.நவீன டெக்னாலாஜிகளை அதிலிருந்து கண்டு பிடிக்க பிளாக் பிராஜக்ட் என்ற ஆய்வுக் குழுக்கள் உருவானது.அவர்கள் அதிலிருந்து லேசர், கண்விழி அடையாளம், பைபர் ஆப்டிகல்னு நிறைய விசயத்தை கண்டு பிடித்தார்கள்.”

“அப்ப இதெல்லாம் நாம கண்டுபிடிக்கலையா? “

“ம்ஹிம்! அந்த கலத்தை ஆராய்ந்த போது அங்கே உணவுப் பொருட்களேஸ்டாக் இல்லை.அதாவது சூரிய சக்தியையே உணவாக மாத்தியிருக்காங்க! அதை விட பயங்கர விஷயம் கலத்தை செலுத்த ஸ்டியரிங்கோ ஜாய் ஸ்டிக் மாதிரியோ எதுவுமே இல்லை.தலையிலிருந்த ஹேட் போன் மாதிரியான ஒரு பொருளால் மன வேகத்தில் கலத்தை செலுத்தியிருக்கிறார்கள்.அதை காப்பியடிச்சு ஜேம்ஸ் கேமரூன் அவதார் படத்தில் பறவைகளோடு தங்களை மனரீதியாக இணைப்பதாக காட்டியிருப்பார்.”

“எல்லாம் சரி! மாஸ்டர்! நாம விண்வெளிக்கு போன தனியாக உடை அணிவது போல் ஏன் அவர்கள் அணியவில்லை! “

“அதீதமான அழுத்தத்தை அவர்களால் தாங்க முடியும்படியாக உடல் அமைப்பு இருப்பதாக பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் சொன்னார்கள்.அந்த ஹேட் போனை நாங்கள் பயன்படுத்த முயற்சித்த போது அது தலைக்கு பொருந்தலை.மேலும் கடுமையான தலைவலி வேறு வந்தது.அந்த கலத்தின் என்ஜின் மனித மன உணர்வுகளுக்கு ஏற்ப கலர் மாறுது.பச்சோந்தி மாதிரி.மகிழ்ச்சியாக இருந்தால் மஞ்சள்.கோபமாக இருந்தால் சிவப்பு.அது எப்படி வேலை செய்யுதுன்னு இன்னும் விளங்கலை! “

“உங்க மடியில் இருப்பது அந்த ஹேட் போனில் ஒன்றுதானே? “

“அது எப்படி உனக்கு தெரியும்? “

“ஒரு யூகம்தான்.அதை கொடுங்களேன் பார்க்கலாம்! “

ஜானிடமிருந்து வாங்கிய ஹேட் போன் போன்ற அமைப்பை வாங்கிய டிடோ அதை தலையில் மாட்டினான்.உடனே அதிலிருந்து பல வெளிச்சங்கள் கிளம்பின.

“அது உன் தலையில வேலை செய்யுது! “என்று பரபரப்பானார் ஜான்.

“ஆமாம் மாஸ்டர்! வேலை செய்யுது.ஏனென்றால் இது கிரிப்டான் கிரகவாசிகளுடையது.!”

அடுத்த விநாடி டிடோவின் தோல் கழட்டி போட்ட சட்டையாக கழன்று விழ விநோத உருவத்தில் நின்றது அது.ஜான் சில படங்களில் அந்த மாதிரியான உருவங்களை ஏலியன் என்ற பெயரில் பார்த்திருக்கிறார்.

“அந்த கலத்தில் வந்தது மூவரல்ல மாஸ்டர்.நால்வர்.அதில் தூக்கி வீசப்பட்ட நான்காவது ஆள் நான்.இந்த ஹேட் போன் இல்லாததால் என் சக்தியையும் தகவல் தொடர்பையும் இழந்தேன்.ஏரியா 51 ல் நுழைய முடியாமல் அதில் வேலை செய்யும் உங்கள் வீட்டில் வேலைக்காரனாக உருவம் மாறி நுழைந்தேன்.அதுதான் இந்த டிடோ.!உங்கள் உருவில் மாறிஏரியாவிற்குள் நுழைந்து இதை கைப்பற்ற நினைத்தேன்.ஆனால் நீங்கள் இங்கே வரவேயில்லை.வந்த போதெல்லாம் அருகே ஆட்கள் இருந்ததால் என்னால் உங்களின் உடலில் புக முடியவில்லை.உங்களின் நினைவு பரிசு இதுதான் என்று ஈ மெயில் மூலம் தெரிந்து காத்திருந்தேன்.நேற்று இரவேஹேட் போனை பயன்படுத்தி கிரிப்டானுக்கு நான் இருக்கும் இடத்தை பற்றி தகவல் அனுப்பி விட்டேன்.என்னை மீட்டுப் போக வந்து கொண்டிருப்பார்கள்.!”

“எங்களை விட நீங்கள் அறிவில் முன்னேறியவர்களா இல்லையா என்று மட்டும் சொல்லேன்.?”

“தப்பான அறிவியல் விதிகளை நம்புகிறீர்கள் மாஸ்டர்.காலம் காலமாக சொல்லப்படுவதை கேள்வி கேட்காமல் நம்புகிறீர்கள்! “

“புரியவில்லையே? “

“செலவிடப்படும் ஆற்றலும் சக்தியும் தீர்ந்து போக வேண்டும்.இல்லை வடிவம் மாற வேண்டும்.இந்த விதிக்கு புறம்பாக சூரியன் எரிந்து கொண்டேயிருக்கிறது.தீராத அந்த எரி பொருள் எங்கிருந்து வருகிறது மாஸ்டர்? எல்லா விசைக்கும் எதிர் விசை உண்டென்றால் கிரகங்களிடையிலான ஈர்ப்பு விசைக்கு எதிர்விசை எங்கிருந்து வருகிறது?”

“குழப்பமாக இருக்கிறது உன் கேள்விகள்! “

“யோசியுங்கள் மாஸ்டர்! முடிவுகளை ஆரம்பமாக்குங்கள்.புதிய உண்மைகள் தெரியும்.!”

வானத்திலிருந்து மிதந்த ஒரு வினோத கலத்தின் நீண்ட ஒரு வெளிச்சப்புள்ளி அவன் மீது விழ மெல்ல எழுந்துஅந்தரத்தில் மிதந்தவன் “இதுவரை ஆதரித்ததற்கு நன்றி மாஸ்டர்.இனி உங்களை பார்த்துக் கொள்ள இந்த டிடோ இருக்க மாட்டான்.உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்.உங்களின் முடமான கால்களை சரியாக்கி விட்டேன்! “

அவன் வானத்தில் சிறு புள்ளியாய் மறைந்து காணாமல் போனான்.புரபஸர் எழுந்து நின்ற போது கைத்தடி கீழே விழுந்து உருண்டது.”டிடோ! “என்ற போது ஒரு துளி கண்ணீர் கன்னத்தில் உருண்டது.