இந்தியா பாகிஸ்தானின் பெயர்தெரியாத ஒரு எல்லை பகுதி.கம்பி வேலியிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் பாக்கின் ராணுவ முகாம் இயங்கி கொண்டிருந்தது.வந்து நின்ற மிலிட்டரி வேனிலிருந்து அந்த பதினைந்து பேர் இறங்கினார்கள்.அவர்களின் முகமே அவ்வளவு நல்லவர்கள் இல்லை என்று சொல்லியது.தோளில் தொங்கிய துப்பாக்கியும் இடுப்பிலிருந்த கிரானைடுகளும் எதற்கும் துணிந்தவர்கள் என்று அப்பட்டமாக அறிவித்தது.கேப்டன் அகமது அவர்களை பார்த்து கொண்டிருந்தான்.பதினைந்து பேரை வழி நடத்தி வந்தவன் “லஷ்கர் இ தோய்பா போராளிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ வந்திருக்கிறார்கள் கேப்டன்! “என்றான்.
தலையசைத்த அகமது” ஒவ்வொருவரும் உங்களை அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள்! “என்றான்.
அவர்கள் ஒவ்வொருவராக கேப்டனுடன் கை குலுக்கி தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர்.நீண்ட தாடியுடன் வந்தவன் கை குலுக்கி விட்டு எதுவும் பேசாமல் நின்றான்.கேள்விக்குறியோடு நிமிர்ந்த கேப்டனை “அவன் பெயர் ரெகமத்துல்லா! பிறவி ஊமை.!வாயசைத்தால் புரிந்து கொள்வான்! “என்று அறிமுகம் செய்தான் தலைமை.
பதினைந்து பேரும் வரிசையாக அமர வைக்கப்பட்டனர்.கேப்டன் தொண்டையை கனைத்து கொண்டு ஆரம்பித்தான்.
“நண்பர்களே! இந்தியாவிற்கு எதிரான போரை ஆரம்பித்திருக்கிறோம்.இது புனித போர்.இதில் இறந்தால் சொர்க்கம் கிடைக்கும்.வரலாற்றில் உங்கள் பெயர் நிலைக்கும்.இன்று இரவு எல்லையில் தயாராக இருக்கும் சுரங்க வழி மூலம் நீங்கள் இந்திய எல்லையை கடக்க போகிறீர்கள்.எத்தனை பேர் உயிருடன் இருப்பீர்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி! அங்கே இருக்கும் நம் ஸ்லிப்பர் செல்கள் உங்களுக்கு உதவுவார்கள்.”
“நல்லது கேப்டன்.!வரும் வழியில் ஒரு இந்திய விமானம் விழுந்து கிடப்பதை பார்த்தோமே? அதை நாம்தான் வீழ்த்தினோமோ? “என்றான் தலைமை.
கேப்டனின் முகம் கோபத்தில் சிவந்தது.
“இல்லை! தொழில்நுட்ப கோளாறு காரணமாக எல்லை தாண்டி விழுந்து நொறுங்கிய இந்திய போர் விமானம் அது.அதிலிருந்த இரண்டு பைலட்டுகளில் ஒருவன் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டான்.இன்னொருவன் தப்பித்து விட்டான்.!”
“என்ன சொல்ரீங்க கேப்டன்? “
“அந்த பைலட் பேர் ராம்சரண்.பயமே இல்லாம சாவை எதிர் கொண்டவனை கதற வைக்க நினைத்தேன்.அவன் விட்டு விடுங்கள் என்று கெஞ்சுவதை பார்க்க நினைத்தேன்.முடிந்தால் இந்திய எல்லையை தாண்டி பிழைத்து கொள்.இல்லைன்னா துரத்தி தேடி வந்து கொல்லுவோம்னு ஒரு மனித வேட்டையை நடத்தினோம்.ஒரு பட்டாளியனும் ஒத்தை ஆளும்! இந்திய எல்லையில் அவனை தேட துவங்கியிருப்பார்கள்.அவர்களின் கண் முன்பாக இவனை கொல்ல வேண்டும் என்பது பிளான்.ஆனால் எல்லாமே தப்பாயிருச்சு.!”
“என்னாச்சு கேப்டன்? “
“அவன் எங்க சிப்பாய் அகமதுவை கொன்னு யூனிபார்மை மாத்திட்டான்.கல்லை தலையில் போட்டு செத்தது ராம்சரண்ணு நம்ப வைச்சிட்டான்.அகமதுவோட யூனிபார்மில் முகமெல்லாம் காயமாகி ரத்தத்தோட நின்னவனை அகமதுன்னு தப்பா நினைச்சு மிலிட்டரி ஹாஸ்பிடலுக்கு அனுப்பிட்டோம்.அவன் அங்கிருந்து தப்பிச்சு போயிட்டான்.!”
“அவனை பிடிக்க முடியலையா? “
“நாடு முழுக்க சைலண்டா ரெட் அலர்ட் போட்ருக்கோம்.இந்திய தூதரகம், ஏர்போர்ட் எல்லாம் தீவிர கண்காணிப்பில் இருக்கு.மூணு மாசமாச்சுஆள் இன்னும் சிக்கலை! “
“ஒரு இந்திய நாய் தண்ணி காட்டிருச்சு! “
“ஆமாம்! உடலை சிதைச்சிடலாம்னு டிரஸ்ஸை கழட்டும் போதுதான் சுன்னத் செய்யப்பட்டிருப்பதை பார்த்து ஆள் மாறி போனதை கண்டு பிடித்தோம்.கடைசியா ஹாஸ்பிடல்ல இருந்த லேடி டாக்டரோட பர்தாவை போட்டுட்டு தப்பிச்சிட்டான்! “
“அவனுககிட்ட எச்சரிக்கையா இருக்கனும்.!ஸ்லிப்பர் செல்களின் காண்டெக்ட் டைரிகளை நான் யாரிடம் கொடுப்பது? “
“ரெகமத்துல்லாகிட்ட கொடுங்க! வாய் பேச முடியலைன்னாலும் ரொம்ப திறமைசாலி.புதுவகையான ஆயுதங்களில் நிபுணன்! “
கேப்டன் ரெகமத்துல்லாவிடம் டைரியை கொடுத்தான். தலைமை போராளி விடை பெற்று கிளம்பினான்.அவர்கள் ஒய்வெடுக்க துவங்கினார்கள்.
அன்று இரவு அவர்கள் ஒசையின்றி நடந்து கொண்டிருந்தார்கள்.கேப்டன் அவர்களை வழி நடத்தி கொண்டிருந்தான்.ரகசிய சுரங்க வழியை திறந்த கேப்டன் பதினைந்து பேரை வரிசையாக உள்ளே அனுப்பினான்.முதலில் போய் கொண்டிருந்த ரகமத்துல்லா தன் இடுப்பிலிருந்த கிரானைட்டின் சேப்டி பின்னை உருவிவிட்டு பின்னால் எறிந்தான்.உருண்டு ஓடியது வெடிகுண்டு என்று அவதானித்து சுதாரிக்கும் முன் அவர்கள் கொத்து கறியாக வீசப்பட்டனர்.பாம் ஆக்ரோசமாக வெடித்தது.மறு முனையில் நின்ற கேப்டன் சுதாரித்து துப்பாக்கியை உருவினான்.”அந்த பக்கம் யாராவது இருக்கீங்களா? “என்ற கேப்டனின் கேள்வி காற்றில் அலைந்தது.நிலவின் ஒளியில் ரெகமத்துல்லா நிற்பது மங்கலாக தெரிந்தது.”என்ன ஆச்சு ரெகமத்துல்லா? “என்ற கேப்டன் பதில் வராத கேள்வியின் அபத்தத்தை உணர்ந்த போதுதான் அது நடந்தது.ரெகமத்துல்லாவின் கையிலிருந்து அந்த பூமாரங் பறந்தது.இரும்பால் செய்யப்பட்டு கத்தி போல் தீட்டப்பட்டிருந்த ஆதி கால வேட்டை ஆயுதம்.மின்னலை போல் கிளம்பிய அது கேப்டனின் கழுத்து நரம்புகளை அறுத்து விட்டு ரெகமத்துல்லாவின் கைகளில் அடைக்கலமானது.வலியில் கேப்டனின் கையிலிருந்த துப்பாக்கி வெடித்தது.ரெகமத்துல்லா ஏன் இப்படி துரோகம் செய்தான் என்று கேப்டன் யோசிக்கும் போது சிதைந்த கம்பிவேலிக்கு அப்பால் ரெகமத்துல்லாவை இந்தியவீரர்கள் துப்பாக்கியுடன் சூழ்ந்திருந்தனர்.
துப்பாக்கியை போட்டு விட்டு மண்டியிட்டவனிடம் கேள்விகள் துவங்கியது.
“யார் நீ? “
“காணாமல் போன இந்திய பைலட் ராம் சரண் நான்தான்! இந்தியாவிற்குள் நுழைய வேறு வழி தெரியவில்லை!"என்றான் ராம் சரண்.
கேப்டனின் உயிர் பிரியும் போது நினைத்தார்.இதுதான் இந்தியாவுக்கு சார்ட் கட் என்பதை எப்படி மறந்தேன்? இந்தியனின் புத்திசாலித்தனத்தை நினைத்தபடி இறந்து கொண்டிருந்தான் கேப்டன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக