கோட் சூட் அணிந்து காரில் உட்கார்ந்திருந்த ரகுவுக்கு பதட்டமாக இருந்தது.எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தார்.
"இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்.?"என்றார் டிரைவரிடம்.
"இன்னும் அரைமணி நேரம் ஆகும் சார்.இண்டர்வியூவுக்கா வந்திருக்கீங்க.?"என்று பதில் கேள்வி எழுப்பினார் டிரைவர்.
"ஆமாம்.!"
"இந்த டிரஸ்ல வந்திருக்கீங்க.?"
"வேற டிரஸ் போடனுமா.?"
"அவங்களே சொல்லுவாங்க.!ஆமா எவ்வளவு நிலம் வைச்சிருக்கீங்க.?"
"பத்து ஏக்கரா.!"
"ரொம்ப கம்மியா இருக்கே.?குறைந்த பட்சம் 20ஏக்கரா இருக்கனும்னு அப்ளிகேசன்ல படிச்ச மாதிரி ஞாபகம்.!"
"அப்பாகிட்ட பத்து ஏக்கரா இருக்கு.!"
"என்ன சார் படிச்சிருக்கீங்க.?"
"சாப்ட்வேர் இன்ஜினியர்.!"
"நானும்தான்.வேலை கிடைக்கலைன்னு டிரைவராயிட்டேன்.!"
அவன் காரை நிறுத்தினான்.அவர் பணத்தை கொடுத்து விட்டு இறங்கி நடந்தார்.பசுமையான அந்த வளாகத்தில் நீண்டு நின்ற கியூவில் நின்றார்.
நால்வர் இருந்த அறையில் அவர் நுழைந்தார்.சட்டை இல்லாமல் உட்கார்ந்திருந்த நால்வரில் ஒருவர் "இதை ஏன் செலக்ட் பண்ணுணீங்க.?"என்றார்.".
"பணம் சம்பாதிக்கலாம்.வயிறு நிறைய சாப்பிடலாம்னுதான்.!"
அவர்கள் சிரித்தார்கள்.கொண்டு போன இடத்து பத்திரத்தை பார்த்தார்கள்.வரைபடத்தை ஆராய்ந்தார்கள்.கையோடு கொண்டு போயிருந்த மண் பரிசோதனை அறிக்கையை படித்தார்கள்.
"நல்லது ரகு.விவசாயம் பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கீங்க.!உங்க இடத்து லேப் ரிப்போர்ட் படி உங்க இடத்துல குச்சி கிழங்கு போடலாம்.முதல்ல நம்ம இடத்துல விவசாயம் பழகுங்க.நாங்க மேற்பார்வை பண்ணுவோம்.ஒரு மூணு மாசம் இங்கேயே தங்கனும்.பீஸ் பத்து லட்சத்தை கட்டிருங்க.!"
சந்தோஷமாக தலையாட்டிவிட்டு நகர்ந்தவரை "நாளையிலிருந்து உங்க யூனிபார்ம் கோமணம்.!கட்டி பழகிக்குங்க.!"என்றார் விவசாயிகளின் தலைவர்.