செவ்வாய், 7 மார்ச், 2023

அஷ்டவக்கிரன்17

"இது மாயான்னு சொன்னா நான் நம்புவேனா?" என்று சிரித்தான் வாசு. அவனது சிரிப்பை பார்த்த தம்பிக்கு குழப்பம் ஆரம்பித்தது.அவன் பரமேஸ்வரியை ஒருமுறை திரும்பி பார்த்தான். அவள் ஒன்றும் புரியாமல் உதட்டை பிதுக்கினாள். ஒருவேளை இவன் மாயாவை ஏற்கனவே போட்டோவிலோ இல்லை நேரிலோ பார்த்து தொலைந்திருப்பானோ என்ற சந்தேகம் அவனுக்குள் எழுந்தது தன்னுடைய பதட்டத்தை வெளியே காட்டிகொள்ளாமல்" இது தான் மாயா. நம்பு" என்றான் சகஜமாக.

" இது மாயா இல்லை, ,என்றான் உறுதியான குரலில் வாசு.

நடப்பது என்னவென்று புரியாமல் சதாமும் குற்றாலமும் இருவரையும் மாறிமாறி பார்த்து கொண்டிருந்தனர். சதாமுக்கு பரமேஸ்வரியை ஏற்கனவே தெரியும் தம்பி அவளை மாயா என்று குறிப்பிட்டதும் காரணம் இன்றி காரியம் இல்லை என்று புரிந்துகொண்டு அமைதியாகிவிட்டான்.

" ஏம்பா அவரு தான் அந்த பொண்ணு தான் மாயான்னு சொல்றாரே. அப்புறம் என்ன?" என்றான் குற்றாலம்.

"இவ மாயா இல்லைன்னு எத வைச்சு சொல்ற?" என்றான் சதாம்.

"அதை நான் வெளியே சொல்லமுடியாது. அதை சொன்னா அதை வைச்சே இன்னொரு பொண்ணை ரெடி பண்ணிருவீங்க?"

"குழப்பாதே." என்றான் தம்பி. ஒருவேளை பரமேஸ்வரியின் முழு ஐடெண்டி வாசுவுக்கு தெரிந்திருக்குமோ என்ற சந்தேகம் அவனுக்குள் எழுந்தது.

பரமேஸ்வரியின் காதில் மட்டும் விழும்படி மெதுவான குரலில் "இவனை இதுக்கு முன்னாடி பார்த்திருக்கியா?" என்றான் தம்பி.

" இல்லை. இவனை இங்கேதான் முதல்முறையாகப் பார்க்கிறேன்" என்று பதில் சொன்னாள் அவள்.

" இவ தான் மாயா. இதுல உனக்கு என்ன சந்தேகம்?" என்றான் தம்பி கடுமையான குரலில்.

"இது மாயா இல்லை. நீ வேற பொண்ணை கொண்டுவந்து நிறுத்தி மாயா என்று பொய் சொல்லி என்னை ஏமாற்ற பார்க்கிறாய்"

தம்பி ஒருமுறை அவனை கூர்மையாகப் பார்த்தான். இவனுக்கு அந்த பெண்ணை பற்றி ஏதோ ஒரு விசயம் தெரிந்திருக்கிறது. அதை சொல்ல மறுக்கிறான். ஆடுற மாட்டை ஆடித்தான் கறக்க வேண்டும் என்று நினைத்தவன் "ஆல் ரைட். நீ புத்திசாலிதான். இது மாயா இல்லை என்பது உண்மைதான்."

"அப்படியென்றால் மாயா எங்கே?" என்றான் வாசு.

"என்னோட கஸ்டடியில்தான் இத்தனை நாளாக இருந்தாள். நீ ஜெயில்ல ருந்து ரிலீசான அன்று இரவு தான் அவள் என்னிடமிருந்து தப்பித்து போனாள்.அவளைத்தான் உனக்காக தேடிக்கொண்டிருக்கிறேன்."

"மாயாவை நேரில் பார்க்காமல் நான் உனக்காக எந்த வேலையும் செய்வதாக இல்லை" என்றான் வாசு.

"பைத்தியமாடா நீ? அந்த துரைபாண்டியன் உன்னை வசமாக சிக்க வைத்திருக்கிறான் என்பது இன்னுமா உனக்கு புரியவில்லை" என்றான் தம்பி கோபத்துடன்.

"நீ சொல்வது எனக்கு புரியவில்லை"

"நல்லா கேளு. நடந்ததை நான் மறைக்காம சொல்றேன். அந்த துரைபாண்டியன் என்கிட்டருந்து தப்பிக்க ஒரு கேம் செட் பண்ணியிருக்கான். அதுல நீவெறும் டீரிக்கர்தான்.அவன் ரெட் அண்ட்டாலோ போட்டுட்டான். நீ நினைப்பதுபோல் துரைபாண்டியன் இப்போது மனநல விடுதியில் இல்லை."

வாசு நிமிர்ந்து அவனை பார்த்தான்.

"அங்கே அவன் பெயரில் இருப்பது வேறு ஆள்.நான் கண்ணால் பார்த்து செக் பண்ணிட்டேன்" என்றான் சதாம்.

"இப்போது அவன் மகளையும் காணோம்.எங்கே போனாள்னு யாருக்கும் தெரியாது. ஆனா டிரக் டேஸ்ட்டராக உன்னை என்னிடம் சிக்கவைத்துவிட்டான். அப்பாவும் மகளும் எப்படியோ சேப்பாக தப்பித்துவிட்டார்கள். நீ பாவம் - வீணாக என்னிடம் மாட்டிகொண்டுவிட்டாய்.உனக்கு வேறுவழியில்லை. நான் சொன்னதை செய்து தானாகவேண்டும்"

"இவனிடம் கெஞ்சாதே தம்பி.கேவலமா இருக்கு. ரூம்ல அடைச்சுவைச்சு ரெண்டுநாள் சோறு தண்ணி போடாம வாயிலியே மிதிச்சா வழிக்கு வந்துருவானுக" என்றான் சதாம்.

"அவனுக்கு சூழ்நிலையை சொல்லிட்டேன். இனி அவன்தான் யோசிக்கனும். எப்படி யோசிச்சாலும் உயிரோட இருக்க ஒரே வழி என்னிடம் வேலை செய்வதுதான்." என்ற தம்பி தன் துப்பாக்கியை கையில் எடுத்தான்.

" நான் பத்து எண்ணுவேன். அதுக்குள்ள…."

" பழைய டெக்னிக். நீ என்னை எதுவும் பண்ணமாட்டேன்னு எனக்கு நல்லா தெரியும்" என்றான் வாசு.

" நீ என்னை தப்பா நினைச்சுட்ட. நான் சுடுவேன்னு சொன்னது உன்னையல்ல.உன் நண்பனை" என்று துப்பாக்கியை குற்றாலத்தை நோக்கி திருப்பினான் அவன்.

"பொறு. அதுக்கு முன்னால ஒரு சின்ன மேஜிக் அதை பார்த்துட்டு ஆரம்பிக்கலாம்." என்ற வாசு "சதாம். மேட்ச் பாக்ஸ் கொடு" என்றான்.

" எதற்கு?" என்றான் சதாம் புரியாமல்.

"கொடு. சொல்கிறேன்." என்றான் வாசு.
சதாம் குழப்பத்துடன் தீப்பெட்டியை கொடுத்தான்.

வாசு அதை திறந்து பார்த்தான் ஒரே ஒரு தீக்குச்சி உள்ளே தூங்கிகொண்டு இருந்தது.

அதை கையில் எடுத்தவன் "வேற வழியில்லை. ரொம்ப கவனமாத்தான் இந்த மேஜிக்கை செய்யனும்" என்றவன் தக்கையில் சும்மா குச்சியை உரசினான்.

" என்ன பண்ணுற?" என்றான் தம்பி.

"நாம் வந்த காரை பத்த வைச்சிட்டேன். டவுட்டுன்னா எட்டி பாரேன்" என்றான் வாசு.

சதாம் அவசரமாக சன்னல் வழியாக எட்டி பார்த்தான்.அவனது கார் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது.

"நான் சம்மதிக்காமல் என்னை வேலை செய்ய வைக்க முடியாது" என்றான் வாசு.

தம்பி ரிவால்வரை வாசுவை நோக்கி திருப்பினான்.

"இப்போ ரியல் மேஜிக்" என்ற வாசு அந்த ஒற்றை தீக்குச்சியை பற்றவைத்து டேபிளில் எறிந்தான். ஏற்கனவே அங்கே தம்பி குடித்துவிட்டு வைத்திருந்த பிராந்தி விஸ்கி பாட்டில்கள் ஆல்கஹாலின் உதவியோடு பற்றி கொண்டன.

தம்பி, பரமேஸ்வரி, சதாம் மூவரும் நெருப்பை அணைத்து விட்டு பார்த்தபோது குற்றாலமும் வாசுவும் காணாமல் போயிருந்தனர்.

"தப்பிச்சு போயிட்டானுக .இப்ப மூணு பேரையும் தேடிபிடிக்கனும்" என்றான் சதாம்.

"மாயா, துரைபாண்டியன், வாசு, இவங்க மூணு பேர்ல யாராவது ஒருத்தராவது நமக்கு வேணும்" என்ற தம்பியின் கண்ணில்பட்டது அந்த செல்போன்.

" இது யாருது?"

"என்னுடையதில்லை. இது வாசுவுடையது"

"லோக்கேசனை சர்ச் பண்ணி பிடிச்சுருவோம்னு விட்டுட்டு போயிட்டான் போல " என்றான் தம்பி.

"அந்த கார் எப்படி எரிஞ்சுதுன்னு எனக்கு புரியலை" என்றான் தம்பி.

" எனக்கும்தான்" என்றான் சதாம்.

"இனி மேல ஓட முடியாது. நடந்தே போவோம்" என்றான் குற்றாலம். அவன் உடல் வேர்வை நதியில் நனைந்திருந்தது.

"அங்கே ஒரு பெட்டி கடை இருக்கு. போய் சோடா சாப்பிடலாம்." என்றான் வாசு..

"சாப்பிடலாம். முதல்ல அந்த கார் எப்படி எரிஞ்சுதுன்னு சொல்லு. ஒரே குழப்பமா இருக்கு"

"நான் குடிச்சவாட்டர் பாட்டிலை கிடைமட்டமா டாஷ்போர்டுல வைச்சுட்டு வந்தேன். அதுலருந்த நீர் குமிழி லென்சாக மாறிவிட்டது. அதற்கு முன்பாகவே கார்பிரெஸ்னரை சீட் மேல் லேசாக தெளித்து வைத்துவிட்டேன். அதிலிருந்த ஆல்கஹாலால் தீப்பிடித்துவிட்டது."

"இப்படி துப்பாக்கி முனையில் மிரட்டுவான்னு முதல்லயே உனக்கு தெரிஞ்சுதான் இப்படி செஞ்சியா?"

"இல்லை. அவனை இம்ப்ரஸ் பண்றதுக்காக அப்படி பண்ணி வைச்சேன். வெளியே நின்ன கார் உள்ளிருந்த கண்ணாடில ரிப்ளெக்ட் ஆகிகொண்டிருந்தது. புகை வருவதை பார்த்துட்டுத்தான் மேஜிக்னு ஆரம்பிச்சேன்"

"அந்த பொண்ணுமாயா இல்லைன்னு எதை வைச்சு சொல்கிறாய்?"

"துரை பாண்டியனோட பொண்ணை சின்ன வயசுலயே ஸ்கூல்லருந்து கடத்த டிரை பண்ணியிருக்காங்க. அதனால அப்பாவும் மகளும் ஒரு கோடுவோர்ட் வைச்சுகிட்டாங்க. அந்த கோட் வோர்டதான் கூகுள். இதை துரைபாண்டியனே பேச்சுவாக்குல என்கிட்ட சொல்லி இருக்காரு. கூகுள்னு சொன்னா அப்பா அனுப்புன ஆள்னு மாயா அடையாளம் கண்டுகொள்வாள். அதனால்தான் அந்த பாட்டை பாடினேன் ஆனால் அவள் முகத்துல எந்த ரியாக்சனும் இல்லை. அதான் டவுட்.அவள் முகத்துல ஒரு தழும்பு இருக்கும்னுதுரை சொல்லியிருந்தார் .அந்த தழும்பும் மிஸ்ஸிங்"

"பேச்சுவாக்குல சொன்னதையெல்லாம் நினைவில் வைத்திருக்கிறாய். நீ பெரிய ஆளுப்பா"

"எங்கண்ணனை தூக்கிட்டு போனவன் முகம்கூட இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு.அவனைத்தான் நான் தேடிட்டே இருக்கேன்"

"ஊமையனுக்கு மூக்கை சொரிஞ்ச மாதிரி பண்ணிட்ட. இனி இது சேப்பான இடமில்லை. நாம எங்கியாவது தலைமறைவாகனும். ஆமா உன்னோட செல்போன் எங்கே?"

"அங்கியே விட்டுட்டு வந்துட்டேன்"

"லோகேசனா?"

"இல்லை. அந்த செல்போன்  ஒரு டிராப். அதை வேணும்னு தான் விட்டுட்டு வந்தேன்."

"எதை வச்சு சொல்ற?"

" எனக்கே தெரியாது"

"அது சரி. இப்ப நாம எங்கே போவது?"

"சொல்றேன். முதல்ல நம்ம பசங்களுக்கு போன் போட்டு அப்ஸ்காண்ட் ஆக சொல்லு"

குற்றாலம் அனைவருக்கும் தகவல் சொல்லி முடித்ததும்" இப்பவாவது சொல்லுப்பா. எங்கே போறோம்?" என்றான்

"கிருஷ்ணாபுரம். என்னோட சொந்த ஊருக்கு" என்ற வாசு சிம்கார்டை உருவி எடுத்து கொண்டு செல்போனை தூர வீசினான்.