வேலாயுதம் குனிந்து தன் ஷுவை கட்டிக் கொண்டிருந்தார்.டிரைவர் காரை எடுக்க தயாராக இருந்தான்.அடித்த போனை வெறுப்பாக எடுத்து "ஹலோ! "என்றார்.மறுமுனை "தலைவரே! நான் செல்வராஜ் பேசரேன்.வாக்கிங்குக்கு கிளம்பீட்டிங்களா? "என்றது.செல்வராஜ் உளவுத்துறையின் முக்கிய புள்ளி.வேலாயுதம் பற்றிய எந்த விசயமாக இருந்தாலும் முதலில் தகவல் கொடுத்து விடுவான்.வேலை வாங்கி கொடுத்த விசுவாசம்."சொல்லு செல்வம்.கரெக்டா கிளம்பர நேரத்துல பிடிச்சிட்ட! என்ன விசயம்? "என்றார் ஆர்வமாக.
"ஐயா! இன்னைக்கு வாக்கிங் போனா உங்க சோலிய முடிக்க பிளான் பண்ணியிருப்பதாக தகவல்! "
"இப்பத்தான் டாய்லெட் போயிட்டு வந்தேன்.மறுபடியும் போக வைச்சிருவ போலிருக்கே? பிளான் பண்றது யாரு? எதாவது தெரியுமா? "
"வேற யாருங்க? உங்ககூட மா.செ.ஆகனும்னு போட்டி போட்டு தோத்தவருதான்."
"நினைச்சேன்.சரி நான் பாத்துக்கிறேன்.மத்யானம் வீட்டு பக்கம் வந்துட்டு போ! "என்று போனை அணைத்தார்.எம்.எல்.ஏவாவும் மாவட்ட செயலாளராகவும் இருப்பது ஒரு தப்பா என்று நினைத்துக் கொண்டார்.உடம்பில் சுகர் அதிகமாக இருப்பதால் பீச்சில் நடந்து கொண்டிருந்தார்.அதற்கும் ஆப்பு வைத்து விட்டார்கள்.சுகரா? உயிரா என்றால் உயிர்தான் பெரிது என்ற கட்டத்தில் இருந்தார்."ஐயா! போலாங்களா? "என்ற டிரைவரை "வேணாம்பா! ஆமா வேணி எங்க? "என்றார்."அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க! "
"இவ வேற! நேரந்தெரியாம! "என்று சலித்து கொண்டபோது வாசலில் வந்து நின்ற காரிலிருந்து இறங்கினாள் வேணி.அவரது மனைவி.
"இன்னும் குளிக்கலையா? போய் குளிங்க.தின்னூறு கூட வைக்க முடியலை.!"என்றவளின் முழு உருவத்தை இமைக்காமல் பார்த்தவரை "என்னாச்சுங்க! இப்படி பாக்கரீங்க? "என்றாள்.
"நான் செத்துட்டா என்ன பண்ணுவ வேணி? "என்றார்.
"காலங்காத்தால பேசர பேச்சா இது.!
"அட சொல்ரி! வாக்கிங் போனா என்னை வெட்ட பிளான் பண்ணிட்டானுக.!எப்ப சாவேன்னு எனக்கே தெரியாது.நடக்காம எப்படி சுகர் குறையும்.?"
"இது ஒரு பிரச்சனையா? நின்னுகிட்டே ஓடுர மாதிரி மிஷினு இருக்கே? ஒன்னு வாங்கிக்கிறது? "
"அதுல ஸ்பீட் அட்ஜெஸ்மெண்ட் இருக்காமே? ஸ்பீடா வைச்சு விழுந்து தொலைச்சிட்டா? "
"போய் குளிச்சிட்டு வாங்க! பேசிக்கலாம்.!"
அவர் குளித்துவிட்டு வந்த போது பந்தல்ரவி மொட்டை மாடிக்கு தன் ஆட்களுடன் மூங்கில் கழிகளை ஏற்றிக் கொண்டிருந்தான்.பார்த்தவுடன் "வணக்கம் தலைவரே! "என்றவனை "என்னடா பண்ரீங்க இங்க? "என்றார்."அக்காதான் வரச் சொன்னாங்க! அவங்களையே கேளுங்க! "என்றான்.
தோசை சுட்டு கொண்டிருந்தவளை "என்னம்மா இது? "என்றார்.
அடுப்பை அணைத்தவள் "மேல வந்து பாருங்கள்! "என்றாள்.
மேலே போய் பார்த்த போது கொட்டைமாடியின் ஒரு கிரவுண்ட் காலி இடத்தில் பாம்பு போல் மூங்கில்கழிகள் கட்டப்பட்டிருந்தன."கோயில்ல கியூவுக்கு இப்படித்தான் மடிச்சு மடிச்சு மூங்கிலால் கட்டி வைச்சிருப்பாங்க.இதுக்குள்ள நடந்து போயிட்டு வாங்க.இந்த ஏரியாவுலயே பெரிய பில்டிங் நம்மளுடையதுதான்.துப்பாக்கில கூட சுட முடியாது! "என்றவளை காதலுடன் பார்த்தவர் "எம்மேல இம்புட்டு பிரியமா? "என்றார்.
"பீரோவில் இருக்கும் நூறு பட்டுப்புடவையும் நீங்க செத்துட்டா வீணா போயிராது? அதுக்குத்தான் இதெல்லாம்! "என்றாள் வேணி.அவர் ஙே என்று விழித்துக் கொண்டிருந்தார்.